Pages

Sunday 17 August 2014

My 46th Article In The Hindu Dated 18th August, 2014, About How To Attain Financial Freedom, at The Earliest?

பொருளாதார சுதந்திரம் - பா. பத்மநாபன்

நம்முடைய 68 வது சுதந்திர தினத்தை எல்லோரும் மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறோம். ஆனால் பொருளாதார சுதந்திரத்தைப் பற்றி எத்தனை பேர் சிந்தித்திருக்கிறோம்.

அதில் எவ்வளவு பேர் பொருளாதார சுதந்திரத்தை அடைந்திருக்கிறார்கள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். அது என்ன பொருளாதார சுதந்திரம், இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே என்று சொல்பவர்களே மிக அதிகம்.

பொருளாதார சுதந்திரம் என்பது நம்முடைய குழந்தைகள் விரும்பிய மேற்படிப்பைப் படிக்க வைப்பது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கூட, அதற்குப் பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. அதே மாதிரி விமரிசையாக குழந்தைகளின் திருமணம், நம்முடைய ஓய்வு காலத்திற்குத் தேவையான பொருளாதாரம் மற்றும் விரும்பிய வெளி நாடுகளுக்கு சுற்றுலா பயணம் முதலியவை பொருளாதார சுதந்திரத்தின் வெளிப்பாடுகள்.

பலர் பொருளாதார சுதந்திரம் என்பது நாம் விரும்பிய எல்லாவற்றையும் வாங்கு வதற்கான செல்வம் என்று தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு முடிவே இல்லை. நம்முடைய வளர்ப்பு முறை இதைப் பற்றி என்றுமே சொல்லித் தந்ததில்லை. இன்று நான் சந்திக்கும் பலருக்கு தாங்கள் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அதற்கான முயற்சிகள் இல்லை. வெறும் எண்ணம் மட்டும் இருந்தால் போதாது. நம்முடைய எண்ணம் தீவிரமாக இருக்கும்போது நாம் அதை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம், அதுதான் வெற்றிக்கான முதல்படி.

இதை அடைவது மிகவும் சுலபம், அதற்குச் சில கட்டுப்பாடுகள் தேவை அவ்வளவுதான். நமக்கு கால அவகாசம் இல்லாவிட்டால் அதிகம் முதலீடு செய்ய வேண்டும். கால அவகாசம் இருந்தால் குறைந்த முதலீடு போதுமானது. உதாரணமாக ஒருவர் 23 வயதில் வேலைக்குச் சேர்ந்தவுடன் மாதம் ரூபாய் 2000 சேமித்தால் அவருடைய 50 ஆவது வயதில், 15% கூட்டு வட்டியில் ரூ.1 கோடி கிடைத்து விடும். வேலைக்குச் சேர்ந்த புதிதில் நன்றாக செலவு செய்து ஜாலியாக இருந்து விட்டு, 28 ஆவது வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால் அவர் மாதம் ரூபாய் 5,600 சேமிக்க வேண்டும்,
ஏனெனில் அவருக்கு 22 வருடமே கால அவகாசம். உதாரணமாக, உங்களுடைய வங்கி, FD, பங்குகள் மற்றும் மியுச்சுவல் பண்ட் யூனிட் என 50 லட்சம் ரூபாய் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இன்னொருவரிடம் காலி மனை அல்லது வீடு அதன் இன்றைய மதிப்பு 50 லட்சம் ரூபாய் என வைத்துக் கொள்வோம்.

இதில் எது உங்களுக்கு நம்பிக்கை தரும்? கண்டிப்பாக முதலில் சொன்னதுதான், காரணம் என்னை பொறுத்தவரை பணம் என்பது நமக்கு நம்பிக்கை தரக்கூடியது. நம்பிக்கை இழந்து விட்டால் நம்மால் எதிலும் வெற்றி கொள்ள முடியாது. அவ்வாறு இருக்கும் போது நாம் அசையாசொத்தில் அதிகம் நாட்டம் கொள்ளக் கூடாது.

நாம் படிக்கும் அறிவியல், கணக்கு மற்றும் ஆங்கிலம் நமக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பைத் தரவில்லை. அதைப் படித்து உணர்ந்து செயல்படுபவர்களே வெற்றி கொள்கிறார்கள். இது ஒன்றும் கடினம் இல்லை; ஆனால் அதற்கென நேரம் செலவிடவேண்டும்.

இந்த சம்பளத்தில் என்னால் எந்த முதலீடும் செய்ய முடியாது என்ற வாக்கியத்தை, முதலீடு செய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று மாற்றிக் கேட்டுப்பாருங்கள். உங்களுடைய வாக்கியம் மாறுபடும்போது உங்களுடைய வாழ்க்கையும் மேம்படும். நாம் என்றாவது ஒரு பெரிய பணக்காரன் நன்றாக படித்தான் அல்லது பெரும் பணக்காரன் ஆனான் என்று கேள்விப்பட்டதைவிட, தெரு விளக்கில் படித்தவன் மற்றும் மிகவும் ஏழை ஆகியோர்தான் வாழ்வில் முன்னேறினார்கள் என்று மீண்டும் மீண்டும் படிக்கிறோம். வெற்றி பெறவேண்டும் என்ற தாகம் இருக்கவேண்டும். இதைத்தான் ஆங்கிலத்தில் (FIRE IN A BELLY) என்று சொல்வார்கள்.

ஒருவர் கடந்த 10 ஆண்டுகளில் மிட்கேப் குறியீட்டு (2004-2014) பங்குச் சந்தையோடு இணைந்திருந்தால் அவருக்குக் கிடைத்திருக்கும் ரிடர்ன்ஸ் 18.09%. அவர் அந்த 10 வருடத்தில் சந்தையின் குறியீடு அதிகரித்த சிறந்த 5 நாட்களைத் தவற விட்டிருந்தால் கிடைத்திருப்பது 13.71%, அதுவே 10 நாட்களாக இருந்தால் அவருக்கு 10.54%, 15 நாட்களாக இருந்திருந்தால் 8.04%, மேலும் 20 நாட்களாக இருந்திருந்தால் வெறும் 5.90% தான். சந்தையைக் கணிக்க முயல்வது என்பது முடியாத ஒன்று என்பதற்கான உதாரணம் இது. அதனால் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு நீண்ட கால அடிப்படையில் இணைந்திருந்தால் நாம் பணம் செய்வதை யாராலும் தடுக்க முடியாது.

நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பதை விட அதில் எவ்வளவு நீங்கள் சேமித்து அதை முதலீடு செய்கிறீர்கள் என்பது முக்கியம். முறையாக முதலீடு செய்யாத எதுவும் ஓட்டை வாளியில் நீர் இறைப்பதற்குச் சமம்.

சாராம்சம்: பொருளாதார சுதந்திரத்தை பற்றித் தெரியாததாலும், அதை அடைவதற்கு நிறைய விஷயங்கள் கடை பிடிக்க வேண்டும் என்பதாலும் இதை அடைந்தவர்கள் மிகக்குறைவு.

நம்முடைய தேவைகள் அதிகரித்துக் கொண்டுவரும் இன்றைய சூழலில்​பொருளாதார சுதந்திரம்​ மிகவும் அவசியமாகிறது. சுதந்திரம் என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. எவ்வளோவோ பேர் செய்த தியாகங்கள், முயற்சிகள் ஆகியவற்றால்தான் இன்று நாம் சுதந்திரக் காற்றினை சுவாசித்துக் கொண்டி ருக்கிறோம்.

அதுபோல பொருளாதார சுதந்திரத்திற்கு நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். இங்கு அர்ப்பணிப்பு என்பது எல்லாவிதமான முதலீட்டைப் பற்றியும் உள்ள அடிப்படை அறிவு இதைத் தெரிந்து கொள்வது சுலபம். ஆனால் நாம் மனம் வைப்பதுதான் கடினம். அந்த அறிவு நம்மைத் தேவையற்ற முதலீட்டில் இருந்து காப்பாற்றுவதோடு சிறந்த முதலீட்டில் நம்பிக்கைகொண்டு நிறைய முதலீடு செய்யத் தூண்டும்.

ஒவ்வொருவரும் இந்த சுதந்திர தினத்தில் கூடிய விரைவில் நான் பொருளாதார சுதந்திரம் அடைவேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு செயல்பட்டோமேயானால் இன்னும் சில வருடங்களில் பொருளாதார சுதந்திரத்தை அடைவதில் எந்தத் தடங்கலும் இருக்காது. அனைவரும் பொருளாதார சுதந்திரத்திற்கு பாடுபடுவோம், பொருளாதார நெருக்கடி இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று உறுதி கொள்வோம், வாருங்கள்.​

No comments:

Post a Comment