Pages

Sunday 17 August 2014

My Article in Todays Naanayam Vikatan 24/8/14 dated, About The Importance of Husband and Wife Together To Decide About All The Finance

குடும்ப நிதித் திட்டமிடல்... கணவன் - மனைவி இணைந்தே செய்யலாமே! -
பி.பத்மநாபன் நிதி ஆலோசகர்
இன்று கணவன் மற்றும் மனைவி வேலைக்குச் செல்வது என்பது இன்றியமையாத ஒன்று. இன்றைய பொருளாதார நெருக்கடி உள்ள உலகில் ஓரளவுக்குத் தாக்குபிடிக்க இருவரது சம்பளமும் முக்கியம். மேலும், இன்று பெண்களும் ஆணுக்கு நிகராக எல்லா துறை களிலும் சிறந்து விளங்குகிறார்கள். அப்படி இருக்கும்போது அவர்களது படிப்பு மற்றும் திறமையை வீடு, குடும்பம் மற்றும் குழந்தைகளை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கச் சொல்வது சரியான செயலாக இருக்க முடியாது. வீட்டு பட்ஜெட் போடுவதிலிருந்து முதலீடு தொடர்பான எந்தவொரு முடிவை எடுப்பதுவரை பெண்களை இணைத்துக் கொண்டு செய்யும்போது குடும்பம் பணக்கஷ்டத்தில் சிக்காமல் குதூகலமாக இருக்கும்.
கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து நிதித் திட்டமிடலை செய்யும்போது, நிறைய நன்மைகள் கிடைக்கும். உதாரணமாக, பார்ப்பதை யெல்லாம் வாங்குவதை (இம்பல்சிவ் பையிங்கை) செய்வதிலிருந்து ஒருவர் நிச்சயம் தப்பிக்க முடியும். இம்பல்சிங் பையிங் என்பது ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு அந்த நிமிடம் எடுக்கக்கூடிய முடிவு. அய்யோ, இந்தப் பொருளை தேவை இல்லாமல் வாங்கிவிட்டேனே; இதை வாங்காமலே தவிர்த்திருக் கலாமே என பல சமயங்களில் நாம் நினைப்பது உண்டு. இந்த வருத்தம் உண்டாக்கும் பர்ச்சேஸிங்தான் இம்பல்சிவ் பையிங். கணவனும் மனைவியும் சேர்ந்து முடிவெடுக்கும்போது இந்தத் தவறு தவிர்க்கப்படுகிறது. தேவைக்கு மட்டுமே பொருட்கள் வாங்கப்படுகிறது. ஆசைகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதால், நியாயமான ஆசைகளே நிறை வேற்றப்படுகிறது. மற்ற ஆசைகள் நிராகரிக்கப்படுகிறது.

பொதுவாக, சேமிப்பு விஷயத்தில் நம் செயல்பாடு இப்படி இருக்கும்; 
வருமானம் - செலவு = சேமிப்பு. 
இதை, 
வருமானம் - சேமிப்பு = செலவு 
என மாற்றினால், உங்களுக்கு பணப்பிரச்னை என்றைக்கும் வராது. விரலுக்கேத்த வீக்கம் என்று சொல்வதுண்டு. யாராவது ஒருவர் கடன் கொடுக்கிறார் எனில், அது இலவசம் இல்லை; ஒவ்வொரு மாதமும் நாம்தான் அதை வட்டியுடன் திரும்பக் கட்ட வேண்டும். இப்படி எளிதாகக் கிடைக்கக்கூடிய பணம், நம்முடைய தேவைகளை வெகு விரைவாக அதிகரித்துவிடும்; பின்பு அதிலிருந்து மீள்வது கடினம்.
கணவன் - மனைவி இணைந்து செயல்பட கீழே தரப்பட்டுள்ள பிராக்டிகலான விஷயங்களை  கடைப்பிடிப்பது நல்லது.

1. பட்ஜெட் போட்டு செலவு செய்வது
2. வங்கியில் ஜாயின்ட் அக்கவுன்ட் தொடங்குவது
3. பெரிய செலவுகளை இருவரும் சேர்ந்து முடிவெடுப்பது
4. எந்தக் கடன் என்று கலந்தாலோசித்து முடிவெடுப்பது. வாங்குகிற கடனை ஒருவரது பெயரில் வாங்கினால் என்ன நன்மை, இருவரும் சேர்ந்து வாங்கினால் என்ன நன்மை என்று பார்த்து முடிவெடுப்பது.
5. முதலீட்டு முடிவுகளை இருவரும் சேர்ந்தே எடுப்பது.
6. யாருக்கு எந்தப் பொறுப்பு எளிதாக வருகிறதோ, அதை மனம் மகிழ்ந்து செய்வது.
7. நமக்கு என்ன தேவை, நம் இலக்கு என்ன என்பது போன்றவை எளிதில் கண்டுகொள்ளப்படுவதால், அதை நோக்கி பயணிக்க முடிகிறது.
 இதற்கான வழிமுறைகள் என்ன?
முதலில் எல்லாவிதமான வங்கிக் கணக்குகளையும் ஜாயின்ட் அக்கவுன்ட்டாக மாற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் ஒருவர் மேல் ஒருவர் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அடுத்து, பொறுப்புகள் பிரிக்கப்பட்டு எது ஒருவருக்கு எளிதாக வருகிறதோ, அதை அவரிடமே விட்டுவிட வேண்டும். உதாரணமாக, பட்ஜெட் போடுவது பெண்களுக்கு எளிதாக வரக்கூடிய ஒன்று. ஒவ்வொன்றையும் அவர்கள் யோசித்துச் செய்வார்கள். எனவே, அந்த வேலையை அவர்களிடம் தந்துவிட்டு, பின்பு அதை இருவரும் கலந்தாலோசிக் கலாம். அதேமாதிரி முதலீடுகள் பற்றி ஆண்கள் நிறையத் தெரிந்து வைத்திருப்பார்கள்; அந்த முதலீட்டு யோசனைகளை இருவரும் கலந்தாலோசித்துவிட்டு ஒரு நல்ல முடிவை எடுக்கலாம்.
இந்த விஷயத்தில் யார் எந்தப் பொறுப்பு எடுத்துகொண்டாலும் இருவரும் இணைந்துதான் முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லாவற்றையும் நானே பார்க்க வேண்டுமா என்ற சலிப்பான வார்த்தை கள் எழுந்து, குடும்ப அமைதி கெடுவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடும்.

ஒரு பிசினஸில் இரண்டு பார்ட்னர் ஒவ்வொரு செயல்களையும் கலந்தாலோசித்து முடிவு செய்கிற மாதிரி எல்லா விஷயத்திலும் மனைவி யையும் கலந்து முடிவு செய்யலாம். ஒருவர் முடிவைவிட இருவரது முடிவு பெரும்பாலான நேரத்தில் பிளஸ் மற்றும் மைனஸ்களை அலசுவதால் சரியாக அமைய வாய்ப்பு அதிகம். பொறுப்புப் பகிர்ந்தளிக்கப்படும்போது அவரவர் தங்களுடைய பொறுப்பை சரியாகவும் காலம் தவறாமலும் நிறைவேற்ற முடிகிறது. பல சமயங்களில் கணவன் - மனைவியிடையே ஏற்படும் சின்னச் சின்ன சச்சரவுகளுக்கு காரணம், ஒருவரை ஒருவர் கலந்தாலோசிக்காமல் சுயமாக முடிவெடுப்பது. இந்த முடிவு பிற்பாடு கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ தெரியவரும்போது அது பெரிய பிரச்னையாக மாறிவிடுகிறது.
நிதித் திட்டமிடல் மற்றும் முதலீடு சார்ந்த விஷயங்களில் கணவன் - மனைவி இருவரும் இணைந்து செயல்படுவதால் கிடைக்கும் நன்மைகள் பலப்பல. முதல் நன்மை ஒருவருக் கொருவர் தினசரி அல்லது வாரத்துக்கு ஒருமுறையோ மனம்விட்டுப் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைக்கிறது. இன்று பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம், நாம் கலந்து பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதே இல்லை. அடிக்கடி நேரம் ஒதுக்கி மனம்விட்டு பேசுவதால், உறவுகள் பலப்படுவதோடு ஒருவர் மீது ஒருவருக்குள்ள நம்பிக்கை அதிகரிக்கிறது. இந்த நம்பிக்கை அமைதியான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம். இரண்டு பேர் சேர்ந்து முடிவு எடுப்பதால் ஒருவருடைய விருப்பத்தைவிட அந்த முடிவினால் ஏற்படக்கூடிய விளைவு களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இது கண்டிப்பாக நல்ல பலனையே தரும்.
இருவர் இணைந்து கடன் வாங்குவதால் கிடைக்கும் வசதியும் சலுகைகளும் இருமடங்கு உயர்கிறது. அதேசமயம் பொறுப்பு என்று வரும்போது பகிரப்படுகிறது. இன்று நம்முடைய வாழ்க்கை தரம் உயர்ந்து காணப்படுவதற்கு மிகப் பெரிய காரணமே இருவரும் சேர்ந்து செயல்படுவதுதான். குழந்தைகளுக்கும் நல்ல கல்வி தரமுடிகிறது. இருவரும் இணைந்து இப்படி செயல்படுவதை ஆங்கிலத்தில் ‘சினர்ஜி’ என்று சொல்வார்கள். அதற்கு அர்த்தம், ஒன்று பிளஸ் ஒன்று, இரண்டு அல்ல. எப்போதுமே இரண்டுக்கும்மேல் என்று அர்த்தம். இங்கு ஒருவருடைய குறைகள் மற்றவரால் நிறையாக்கப்படுகிறது.
இதன் சாதக மற்றும் பாதகங்கள்?
சாதகங்கள்:
1. இதில் மிகப் பெரிய சாதகம் உறவுகள் மேம்படுவது. ஒருவர் மற்றொருவரின் பேரில் வைத்திருக்கும் மதிப்பும் கூடுகிறது.
2. கலந்தாலோசிக்கும்போது பிளஸ் மற்றும் மைனஸ் நன்றாக அலசப்படுகிறது. உணர்ச்சிமயமான முடிவுகள் தவிர்க்கப் படுகிறது.
3. மூலதனம் ஒரே இடத்தில் இருப்பதால், கண்காணிப்பது மிகவும் சுலபமாகிவிடுகிறது.
4. தனித்தனியாக வீட்டுக் கடன் வாங்குவதைவிட, இருவரது சம்பளமும் சேரும்போது நமக்குக் கூடுதல் பலம் கிடைப்பதால் பெரிய வீடு அல்லது கொஞ்சம் வசதி அதிகமானது கிடைப்பதற்கு சாத்தியம்.
5. பொறுப்புகள் பகிரப்படுவதால் சுமைகள் குறைகின்றன. அது மன அழுத்தத்தைப் பெருமளவு குறைப்பதால் தரமான வாழ்வு மேம்படுகிறது.
பாதகங்கள்:
1. இன்று யாருக்கும் பொறுமையோ மற்றவருக்கு விட்டுக்கொடுக்கும் குணமோ நாளுக்குநாள் குறைந்த வண்ணம் இருக்கிறது. இப்படிப்பட்ட இயந்திரத்தனமான வாழ்வில் பெரும்பாலான உறவுகள் சிறிய விஷயங்களுக்காகக்கூட முறிந்து விடுகிறது. அப்படி இருக்கும்போது நாம் வாங்கிய ஒரு வீட்டுக் கடனோ அல்லது மற்ற கடனோ மிகப் பெரிய கேள்விக்குள்ளாவது தவிர்க்க முடியாத ஒன்று.
2. இதில் புரிதல் மிகவும் அவசியம். வாழ்வின் நீண்ட கால கமிட்மென்ட்டான வீட்டுக் கடன் அல்லது வேறு சில கடன்கள் திருமணமான உடனே தொடங்காமல் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு முடிவு எடுத்தால் பல பாதகங்களில் இருந்து தப்பிவிட முடியும்.
3. இதனால் நாம் கருதக்கூடிய பாதகங்கள் நம்முடைய கட்டுக்குள் உள்ளது. இங்குப் பாதகம்  என்பது நம்பிக்கை இன்மை மற்றும் ஆதிக்கம் முதலியவற்றால்தான் வரும். நாம் நினைத்தால்  இதை எளிதில் சமாளிக்க முடியும்.
பெரும்பாலான பிசினஸ் பல மடங்கு பறந்து விரிந்து காணப்படுவது ஒருவரால் மட்டும் சாத்தியம் இல்லை. இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இணைந்து செய்வதால்தான். அதேபோல,  குடும்பத்தில் செல்வம் செழிக்கவேண்டு மானால் இருவரும் இணைந்து செயல்படும்போது மிகுந்த நன்மை பயக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கும்.
தொடர்ந்து முன்னேற வேண்டுமானால் இருவரும் சேர்ந்து யோசித்து முடிவு எடுக்க வேண்டும். நிறைய பிசினஸில் மனைவியிடமிருந்து ஒத்துழைப்புக் கிடைக்கும்போது மன அழுத்தம் குறைகிறது; உறவுகள் வலுப்படுகிறது. நல்ல தரமான வாழ்வும் கிடைக்கிறது.

No comments:

Post a Comment