Pages

Sunday 25 November 2012

My 12th Financial Planning Article in Naanayam Vikatan on 25th November 2012

இனி எல்லாம் வளமே!
ந்த வாரம் பெரம்பூரிலிருந்து நிதி ஆலோசனைக் கேட்டு வந்திருந்தார் 29 வயதான பாலமுருகன். தனியார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மாதச் சம்பளம் 17,300 ரூபாய். இவரது மனைவி நர்மதா (வயது 24), தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். பிடித்தம் போக மாதச் சம்பளம் 13,500 ரூபாய். இவர்களின் ஒரு வயதான செல்ல மகன் ஸ்ரீஜேஷ்.
இன்ஷூரன்ஸ் விவரம்:
மகன் பெயரில் இரண்டு இன்ஷூரன்ஸ் பாலிசி மற்றும் தன் பெயரில் ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி என எட்டு லட்சம் கவரேஜுடன் மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வைத்திருக்கிறார். இதற்காக மாதம் 2,500 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார்.  
சொத்து விவரம்:
சொந்த ஊரான அரியலூரில் இருக்கும் மூன்று காலி மனைகள்.
1. 2,500 சதுர அடி - தற்போதைய மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய்.
2. 1,040 சதுர அடி - தற்போதைய மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய்.
3. 1,540 சதுர அடி - தற்போதைய மதிப்பு ஆறு லட்சம் ரூபாய்.
தேவைகள்:
மகனின் படிப்பிற்கு இன்றைய நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் சேமித்து வைக்க வேண்டும். இன்னும் 17 வருடம் பாக்கி இருக்கிறது.
25 வயதில் மகனுக்குத் திருமணம் செய்ய திருமண செலவிற்கு இன்றைய நிலையில் மூன்று லட்சம் ரூபாய் சேமித்து வைக்க வேண்டும். இன்னும் 24 வருடம் பாக்கி இருக்கிறது.
ஓய்வுக்காலத்திற்கு இன்றைய நிலையில் 10,000 ரூபாய் மாத வருமானம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
சில ஆண்டுகளுக்குள் வீடு கட்ட வேண்டும்.
மேலே சொன்ன பாலமுருகன் குடும்ப பொருளாதார விவரங்களின்படி நிதி ஆலோசனை சொல்லத் தயாரானார் பி.பத்மநாபன்.

இன்ஷூரன்ஸ் அவசியம்!
ஏற்கெனவே இவர் எடுத்து வைத்திருக்கும் பாலிசிகள் அனைத்தும் குறைந்த கவரேஜ் கொண்ட பாலிசிக்கு அதிக பிரீமியம் செலுத்தும்படியாக இருப்பதால், இந்த மூன்று பாலிசிகளையும் சரண்டர் செய்துவிடுவது நல்லது. இதனால் மாதம் 2,500 ரூபாய் மிச்சமாகும். அதை எதிர்காலத் தேவைகளுக்கான முதலீட்டிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கெனவே முதலீட்டுக்காக மீதம் இருக்கும் தொகை  5,050 ரூபாயுடன் 2,500 ரூபாயையும் சேர்த்து மொத்தம் 7,550 ரூபாய் எதிர்கால முதலீட்டிற்கு மீதம் இருக்கும்.
முதலில் பாலமுருகன் 30 லட்சம் ரூபாய்க்கும் (வருட பிரீமியம் 6,200 ரூபாய்), நர்மதாவுக்கு 25 லட்சம் ரூபாய்க்கும் (வருட பிரீமியம் 4,600 ரூபாய்) டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். இருவருக்கும் சேர்த்து 10,800 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டி இருக்கும். தற்போது இவர்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எதுவும் கிடையாது என்பதால் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து மூன்று லட்சம் ரூபாய்க்கு ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது அவசியம். இதற்கு வருட பிரீமியம் 6,500 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும். ஆக மொத்தம் புதிதாக எடுக்க இருக்கும் பாலிசிகளுக்கு பிரீமியம் கட்ட மாத பட்ஜெட்டில் 1,500 ரூபாய் ஒதுக்கி வைத்தால் போதும்.
மகனின் கல்விக்கு!
மகனை ஒரு நல்ல பட்டதாரியாக்க இன்றைய நிலையில் மூன்று லட்சம் ரூபாய் தேவை என்று கேட்டிருந்தார் பாலமுருகன். இன்று மகனுக்கு வயது ஒன்றுதான் என்பதால் இன்னும் கல்லூரிப் படிப்பை ஆரம்பிக்க 17 வருடங்கள் பாக்கி இருக்கிறது. வருடத்திற்கு 7% பணவீக்க அடிப்படையில் கணக்கிட்டால் மகனின் கல்விக்கு 17 ஆண்டுகள் கழித்து
15.79 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்கு இன்றைய நிலையில் மாதம் 2,000 ரூபாயை ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி ஃபண்டில் 1.12.12 முதல் 31.12.29 வரை முதலீடு செய்துவர வேண்டும். இந்த ஃபண்டில் நாம் எதிர்பார்க்கும் வருமானம் 15% கிடைத்தால் முதலீடு முதிர்வின்போது 18.57 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதை மகனின் கல்விச் செலவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
மகனின் திருமணத்திற்கு!
மகனுக்கு 25 வயதில் திருமணம் செய்துவைக்க இன்றைய நிலையில் மூன்று லட்சம் ரூபாய் தேவை என்று கேட்டிருந்தார். இன்னும் 24 ஆண்டுகள் கழித்து 7% பணவீக்க அடிப்படையில் 25.36 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்கு இன்றிலிருந்து மாதம் 1,000 ரூபாயை முதலீடு செய்துவர வேண்டும். முதலீட்டுக் காலம் 1.12.12 முதல் 31.12.36 வரை. 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ. டிஸ்கவரி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். முதலீடு முதிர்வின்போது கிடைக்கும் தொகை 27.83 லட்சம் ரூபாயைப் பயன்படுத்தி மகனின் திருமணத்தை சிறப்பானதாக முடிக்கலாம்.
வீடு வாங்க!
''வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. காலி மனைகள் ஏற்கெனவே இருக்கிறது என்பதால் அதில் கட்டலாமா? நாங்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதால் பணியிடத்து மாற்றம் இருக்கும்பட்சத்தில் வாடகை வீட்டில் இருப்பதுதான் சரியா? அல்லது சொந்தமாக வீடு கட்டி வாடகைக்கு விட்டு வருமானம் பார்க்கலாமா? அல்லது இடத்தில் முதலீடு செய்வது சரியா?'' என்று பாலமுருகன் பல கேள்விகளைக் கேட்டார்.
சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதுதான் பலரின் கனவு. எனவே, பாலமுருகன் தாராளமாக வீடு வாங்கலாம். ஆனால், அதற்குண்டான பொருளாதாரம்தான் குறைவு. எதிர்காலச் சேமிப்பிற்கு மீதமிருக்கும் தொகை 7,550 ரூபாய் மகனின் கல்வி, திருமணம், ஓய்வுக்கால மற்றும் புதிதாக எடுக்கச் சொல்லி இருக்கும் டேர்ம் மற்றும் ஹெல்த் பாலிசிகளுக்கான பிரீமியம் என அனைத்திற்கும் சரியாக இருக்கும். வங்கியில் கடன்  வாங்கலாம் என்றாலும் இ.எம்.ஐ. கட்ட இன்றைய வருமானத்தில் போதுமான அளவிற்கு தொகை கிடையாது. அதனால் இன்னும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு எங்கு வேலை அமைகிறது என்பதைப் பொறுத்து வீடு வாங்கத் திட்டம் போடுவது நல்லது. அதற்குள் இருவருக்கும் சம்பளம் ஓரளவுக்கு உயர்ந்திருக்கும். நகைக் கடனும் ஓரளவுக்குக் குறைந்திருக்கும்.  
ஓய்வுக் காலம்!
பாலமுருகனுக்கு சம்பளத்தில் எந்தப் பிடித்தமும் இல்லை என்பதால் இவரது சம்பளத்திலிருந்து கண்டிப்பாக ஓய்வுக் காலத்திற்கென்று ஒரு தொகையை ஒதுக்கியே ஆகவேண்டும். இவரின் மனைவிக்கு சம்பளத்தில் பி.எஃப். பிடித்தம் இருப்பதால் ஓய்வுக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை கைக்கு வரும். இவர் இன்றைய நிலையில் மாதம் 10,000 ரூபாய் இருந்தால் போதும் என்று சொல்லியிருந்தார். இவரின் ஓய்வுக்காலத்திற்கு இன்னும் 26 ஆண்டுகள் பாக்கி இருப்பதால் அன்றைய காலகட்டத்தில் மாதம் 58,000 ரூபாய் தேவைப்படும். மாதம் 58,000 ரூபாய் வருமானம் வருவதற்கு இவர் கையில் 1.13 கோடி ரூபாய் இருக்க வேண்டும். இதற்கு இன்றிலிருந்து மாதம் 3,000 ரூபாயை ஃபிராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்டுகளில் 1.12.12 முதல் 31.12.38 வரை முதலீடு செய்ய வேண்டும். முதலீடு முதிர்வின்போது கிடைக்கும் 1.13 கோடி ரூபாய் மற்றும் மனைவியின் அலுவலகத்தில் கிடைக்கும் பி.எஃப். தொகையையும் வருமானம் தரும் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து வைக்க வேண்டும். முதலீட்டுக் காலம் அதிகம் என்பதால் ஃபண்ட் முதலீடுகளை ஆண்டுக்கு ஒருமுறை நிதி ஆலோசகரின் உதவியோடு மறுபரிசீலனை செய்து பார்ப்பது அவசியம். வளம் பெற வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment