Pages

Sunday 14 October 2012

My 11th Financial Planning Article in Naanayam Vikatan 14th October 2012

இனி எல்லாம் வளமே! 
ஃப்யூச்சர் பிளான் 
இந்த காலத்து இளைஞர்களுக்கு குடும்பத்தின் மீது அக்கறை இல்லை; ஜாலியாக இருக்க நினைத்து, ஊதாரித்தனமாக செலவு செய்வதில்தான் அவர்கள் கவனமாக இருப்பார்கள் என்று யார் சொன்னது. சேலத்திலிருந்து  27 வயதேயான நவநீதகிருஷ்ணன் தன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்கு நிதி ஆலோசனை கேட்டு வந்திருந்தார். அப்பா கந்தசாமி மற்றும் அம்மா மனோன்மணி இருவரும் சொந்த ஊரில் வசிக்க, இவர் சென்னையில் வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரின் மாதச் சம்பளம் 55,000 ரூபாய் (பிடித்தம் போக).
ங்கை பூரணி நாயகி பி.டெக் பட்டதாரி. இன்னும் ஓரிரு மாதங்களில் வேலை கிடைக்கும்பட்சத்தில் அவரது மாதச் சம்பளம் 30,000 ரூபாய் எதிர்பார்க்கலாம். தம்பி சொக்கலிங்கம் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். அவரின் மாதச் சம்பளம் 9,000 ரூபாய், அவரின் தேவைக்கு மட்டுமே சரியாக இருக்கிறது என்பதால், தம்பியின் வருமானத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஆக, இன்றைய நிலையில் குடும்பத்துக்கு கை கொடுப்பது நவநீதனின் மாதச் சம்பளம் மட்டுமே. இதில், அவரின் சென்னை வீட்டு வாடகை, உணவுச் செலவுகள் 10,000 ரூபாய்; வீட்டுக்குத் தருவது 8,000 ரூபாய்; இதுபோக எதிர்காலத் தேவைக்கு மீதமிருக்கும் தொகை 37,000 ரூபாய்.
சொத்து விவரம்!
தந்தையின் பெயரில் உள்ள சொந்த வீடு 20 லட்ச ரூபாய் மற்றும் மனை 1.30 லட்சம் ரூபாய்.
நவநீதகிருஷ்ணனின் பெயரில் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மனை.
தேவைகள்!
ஒரு வருடத்தில் நவநீதகிருஷ்ணன் திருமணம் செய்துகொள்ள ஐந்து லட்சம் ரூபாய் தேவை.
தங்கைக்கு மூன்று வருடத்திற்குள் திருமணம் செய்து வைக்க 14 லட்சம் ரூபாய் தேவை.
தம்பிக்கு திருமணம் செய்ய இன்னும் நான்கு ஆண்டுகள் கழித்து குறிப்பிட்ட தொகை தேவை.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் கார் வாங்க ஐந்து லட்சம் ரூபாய் தேவை.
இன்னும் ஐந்து ஆண்டுகளில் சென்னையில் ஃபிளாட் வாங்க 50 லட்சம் ரூபாய் சேர்க்க வேண்டும்.
ஓய்வுக் காலத்தில் இன்றைய நிலவரப்படி 20,000 ரூபாய் மாத வருமானம் தேவை.
நவநீதகிருஷ்ணன் தந்த விவரங்களை ஆராய்ந்து ஆலோசனை வழங்கினார் மை அசெட் கன்சாலிடேஷன் நிறுவனத்தின் இயக்குநரும், நிதி ஆலோசகருமான பி.பத்மநாபன்.
இன்ஷூரன்ஸ்!
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து வேலை செய்யும் அலுவலகத்திலேயே ஹெல்த் இன்ஷூரன்ஸ் இருக்கிறது. இது தவிர, 3.60 லட்சம் கவரேஜ் கொண்ட யூலிப் பாலிசி எடுத்து வைத்திருக்கிறார். இதற்கு பிரீமியம் கட்டும் காலம் முடிந்துவிட்டது. நவநீத கிருஷ்ணனின் வருமானத்தை மட்டுமே குடும்பம் நம்பியிருப்பதால், அவர் கண்டிப்பாக ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு வருட பிரீமியம் 15,000 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும்.
திருமணம்!
இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் செய்துகொள்ள ஐந்து லட்சம் ரூபாய் தேவை என்று கேட்டிருந்தார். ஏற்கெனவே வேலை செய்த நிறுவனத்தில் இருந்து விலகும்போது கிடைத்த பி.எஃப். தொகை 1.44 லட்ச ரூபாயுடன், எதிர்கால தேவைக்கு மீதமிருக்கும் தொகையிலிருந்து 6,000 ரூபாயை எடுத்து 1.5 லட்சம் ரூபாயாக ஒருமுறை மொத்தமாக தந்தையின் பெயரில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்ய வேண்டும். அப்பாவிற்கு வயது 60 என்பதால் மூத்த குடிமக்களுக்கான எஃப்.டி-ல் 10% வருமானம் கிடைக்கும். ஒரு வருடம் முதலீடு செய்தால் 1.65 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
அதற்கடுத்த மாதத்திலிருந்து எதிர்காலத் தேவைக்காக 37,000 ரூபாய் இருக்கும். அதிலிருந்து 27,000 ரூபாயை எடுத்து ஆர்.டி-ல் மாதாமாதம் ஒரு வருடத்திற்கு முதலீடு செய்து வந்தால், இதற்கு 9% வருமானம் கிடைக்கும்பட்சத்தில் 3.40 லட்சம் ரூபாய் கிடைக்கும். எஃப்.டி. வருமானம் 1.65 லட்சம், ஆர்.டி. வருமானம் 3.40 லட்சம் ரூபாய் என மொத்தம் 5.05 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதை பயன்படுத்தி திருமணத்தை முடிக்கலாம்.
தங்கையின் திருமணம்!
தங்கையின் திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகளில் 14 லட்ச ரூபாயை எதிர்பார்க்கிறார். எதிர்கால தேவைத் தொகை 37,000 ரூபாயிலிருந்து 27,000 ரூபாய் நவநீதகிருஷ்ணனின் திருமணத் தேவைக்கான முதலீடு போக மீதமிருக்கும் தொகை 10,000 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, இதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் 2.72 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.
இன்னும் ஓரிரு மாதங்களில் வேலை கிடைத்து அதன் மூலம் 30,000 ரூபாய் வருமானம் எதிர்பார்ப்பதால், அந்த வருமானத்தில் அவரின் தனிப்பட்ட செலவுகள் 10,000 ரூபாய் மற்றும் கல்விக் கடன் 1.2 லட்சம் இருப்பதாகச் சொல்லியிருந்தார். அதற்கு இ.எம்.ஐ. 5,000 ரூபாய் (இரண்டு ஆண்டுகளில் கல்விக் கடன் முடிந்து விடும்) போக மீதி இருக்கும் 15,000 ரூபாயை இரண்டு ஆண்டுகளுக்கு 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் கிடைக்கும் தொகை 4.08 லட்சம் ரூபாய். ஏற்கெனவே எடுத்து வைத்திருக்கும் யூலிப் பாலிசி இரண்டு ஆண்டுகளில் முதிர்வடைவதால் அதிலிருந்து
2 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆக, மொத்தம் 8.80 லட்சம் ரூபாய் கிடைத்துவிடும். மீதி தேவைப்படும் தொகைக்கு தனிநபர் கடன் எடுத்து தங்கையின் திருமணத்தை முடிக்கலாம். ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் 14% வட்டியில் நான்கு வருடங்களில் மாதம் 13,600 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும். தம்பியின் திருமணத்திற்கு அவர் சம்பாதிக்கும் பணத்தில் செய்யலாம் என்பதால் அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.
கார் வாங்க!
இன்னும் இரண்டு வருடத்தில் கார் வாங்க வேண்டும் என்றார். இன்றைய நிலையில் மற்ற தேவைகள் இருப்பதால் கார் வாங்கும் ஆசையை ஐந்து ஆண்டுகள் தள்ளிப்போடுவது நல்லது. இன்றைய நிலையில் 57,000 ரூபாய் சம்பளம் என்கிறபோது, இரண்டு ஆண்டுகள் கழித்து 10% சம்பளம் வருடத்திற்கு உயர்ந்திருந்தால் 65,000 ரூபாய் சம்பளம் வாங்குவார் நவநீத கிருஷ்ணன். நிகழ்கால செலவு 10,000 ரூபாய் என்பது அன்றைய நிலையில் அவரின் கல்யாணத்திற்கு பிறகு குடும்பத்தின் செலவு 25,000 ரூபாயாக இருக்கும். அம்மா அப்பாவின் செலவிற்கு 8,000 ரூபாய் கொடுத்தாலும் கையில் 32,000 ரூபாய் எதிர்கால சேமிப்பிற்கு மீதம் இருக்கும்.
இதிலிருந்து தனிநபர் கடனுக்கான இ.எம்.ஐ. 14,000 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். மீதமிருக்கும் 18,000 ரூபாயில் 7,000 ரூபாயை எடுத்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இதிலிருந்து கிடைக்கும் வருமானம் 3.19 லட்ச ரூபாய் மற்றும் 2 லட்ச ரூபாய் வாகனக் கடன் மூலம் கார் வாங்கிக் கொள்ளலாம். இதற்கு மாதம் 7,000 ரூபாய் வீதம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இ.எம்.ஐ. கட்ட வேண்டி இருக்கும். அதே நேரத்தில், மீதம் இருக்கும் 11,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்தால்
5.02 லட்ச ரூபாய் கிடைக்கும். இந்த தொகையை முன்பணமாகப் பயன்படுத்தி வங்கியில் வீட்டுக் கடன் 45 லட்ச ரூபாய் வாங்கிக்கொள்ளலாம். 18 வருடத்தில் 11% வட்டி விகிதத்தில் கடனை திரும்பக் கட்டினால் மாத தவணை 48,000 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும்.
ஓய்வுக் காலம்!
நவநீதனின் ஓய்வுக் காலத்துக்கு இன்னும் 18 ஆண்டுகள் இருக்கிறது. அன்றைய நிலையில் இவரின் மாதச் செலவுக்கு மாதம் 95,000 ரூபாய் தேவை. அதற்கு 1.10 கோடி ரூபாய் இவர் கையில் இருக்க வேண்டும். இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து 10% சம்பள உயர்வின்படி 90,000 ரூபாய் சம்பளம் பெறுவார். இதிலிருந்து குடும்பச் செலவுகள் போக, மாதம் இ.எம்.ஐ. போக மீதி இருக்கும் தொகையில் 10,000 ரூபாயை எடுத்து 18 ஆண்டுகள் 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். முதலீடு முதிர்வின்போது 1.10 கோடி ரூபாய் கையில் கிடைக்கும். இதுபோக ஓய்வுபெறும்போது பி.எஃப். மற்றும் பணிக் கொடையாக 70 லட்ச ரூபாய் கிடைக்கும்.
நவநீத கிருஷ்ணனின் வாழ்க்கை இனிதாக அமைய வாழ்த்துகள்!

No comments:

Post a Comment