Pages

Sunday 25 March 2012

SIP - True Wealth Creation


எஸ்.ஐ.பி. முதலீடு; எக்கச்சக்க லாபம்!

இது மார்ச் மாதம் என்பதால் வரிச் சேமிப்புக்காகப் பலரும் பல வகையான முதலீடுகளைப் பற்றி  யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். எது பற்றியும் யோசிக்காமல் அவசர அவசரமாக ஏதோ ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பது அல்லது ஏதாவது ஒரு வரி சேமிப்பு தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் பணத்தைப் போட்டுவிட்டு, வேறு வேலையைப் பார்க்கச் செல்வதுதான் நம்மில் பலரது வழக்கம்.
ரிச் சேமிப்பு என்கிற விஷயத்தில் மட்டும்தான் நாம் இப்படி செய்கிறோம் என்றால்கூட பரவாயில்லை. நீண்டகால முதலீடுகளை செய்யும்போதும் இதேமாதிரி கோட்டைவிடுகிறோம்.  மிகச் சில முதலீட்டாளர்கள் மட்டுமே பலவகையான முதலீட்டுத் திட்டங்களை அலசி ஆராய்ந்து சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். அவர்களும் அந்த முதலீட்டை நீண்ட காலத்திற்குத் தொடர்கிறார்களா என்றால் இல்லை.
உதாரணமாக, 95-ம் ஆண்டு ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200 ஃபண்டில் சுமார் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், அந்த தொகை இந்த நேரம் 56 லட்சத்துக்கு மேல் வளர்ந்திருக்கும். ஆனால், இந்த லாபத்தினை எத்தனை பேர் அடைந்திருப்பார்கள்? பலர் பாதியிலேயே பணத்தை எடுத்து வெளியே வந்திருப்பார்கள். ஒரே ஃபண்டில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக யாரையும் நான் இருக்கச் சொல்லவில்லை. ஆனால், ஒரு சரியான ஃபண்டில் குறைந்தபட்சம் ஐந்து வருடங்களுக்காவது முதலீட்டை தொடர்ந்தால்தான் நல்ல லாபம் பார்க்க முடியும். சரி, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான முதலீடு எது?
100 ரூபாய் மதிப்புள்ள பொருள் 85 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதே ரூபாய் மதிப்புள்ள பொருள் 115 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றால், நாம் எந்தப் பொருளை வாங்குவோம்? 85 ரூபாய்க்கு விற்கும் பொருளைத்தான். அதேபோலதான் முதலீட்டுத் திட்டங்களில் சந்தை மதிப்பைவிட அதிகமான விலையில் இருக்கும் முதலீட்டுத் திட்டங்களிலே முதலீடு செய்கிறோம். தற்போதைய நிலையில் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளை தவிர, மற்ற முதலீட்டுத் திட்டங்கள் அனைத்தும் ஓவர் பிரைஸ்டு-ஆக இருக்கிறது. அதாவது, சமீப காலத்தில் இத்திட்டங்கள் அதிகமாக விலை ஏறி இருக்கிறது.
ஆனால், பங்குச் சந்தை தள்ளுபடி விலையிலேயே வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. 1979-ம் ஆண்டு சென்செக்ஸ் 100 புள்ளிகளுடன் ஆரம்பமானது. 1992-ல் சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்குச் செல்லும் என்று சொன்னால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். தற்போதைய நிலையில் கூட, அடுத்த சில வருடங்களில் சென்செக்ஸ் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்றாலும் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால், உண்மையில் அப்படி நடக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.
அடுத்த கேள்வி, பங்குச் சந்தையே நல்ல வருமானம் கொடுக்கும் என்றால், எதற்கு மியூச்சுவல் ஃபண்ட் பக்கம் வரவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இதுவும் சரிதான். ஆனால், அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பங்குச் சந்தை சரியான இடம் என்று சொல்ல முடியாது. குறிப்பாக, சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைவிட மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
சரியான ஃபண்டினை மட்டும் தேர்வு செய்துவிட்டால் போதும், முதலீட்டை பற்றி கவலைப்படாமல் இருக்கலாம். அதிலும், எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டால், வேறு எது பற்றியும் கவலைப்படத் தேவை இல்லை. சந்தை எப்போது உயரும், எப்போது குறையும் என்பதைக்கூட பார்க்க வேண்டியதில்லை.
சிறு முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்தான் சிறந்த முதலீடு என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. முன்பெல்லாம் மாதம் 10,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள் மிகவும் குறைவாக இருந்தார்கள். இப்போது அந்த எண்ணிக்கை அதிகமாகி விட்டது. மேலும், 4 சதவிகித இந்திய மக்கள் மட்டுமே மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்து வருகிறார்கள். இதன் மதிப்பு சுமார் 5-6 லட்சம் கோடி ரூபாய்.
அதிக எண்ணிக்கையிலான மக்கள், அதிக தொகையை முதலீடு செய்யும்போது இந்தத் தொகை சந்தைக்கு வந்து கொண்டிருக்கிறது. முதலீடாக சந்தைக்கு அதிக பணம் வரும்போது சந்தை உயருவதற்குதான் வாய்ப்பு இருக்கிறது. சந்தை உயரும்போது மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானமும் அதிகரிக்கும்.
(தற்போதைய நிலையில் மாதத்துக்கு 1,600 கோடி ரூபாய் மியூச்சுவல் ஃபண்ட் துறையால் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. அதாவது, சிறு முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி. மூலம் தரும் தொகை இது!)
'சந்தையில் அதிகபட்ச பயம் இருக்கும்போது முதலீடு செய்யுங்கள். சந்தையில் அதிக பேராசை இருக்கும்போது முதலீட்டை திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள்’ என்ற வாரன் பஃபெட்டின் வார்த்தைகளை யோசித்து பாருங்கள். சந்தை இப்போது அதிகபட்ச பயத்தில் இருக்கிறது. உங்களது நீண்ட கால முதலீட்டை தொடங்குவதற்கு சரியான நேரம் இதுதான்!

No comments:

Post a Comment