சேமிப்பு பல விதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்! - பா. பத்மநாபன்
கடந்த வாரம் நாம் SIP பற்றி பார்த்தோம். அதைப் படித்த பல பேர், மாத சம்பளம் வாங்குவோருக்கு ஒரு வழி சொன்னீர்கள், நான் பிசினஸ் செய்கிறேன் எனக்கு சில மாதம் நிறைய பணம் கிடைக்கும், சில மாதம் ஒன்றுமே கிடைக்காது, நான் எப்படி இந்த திட்டத்தில் பயன் பெறுவது? இன்னும் சிலர் நான் இப்பொழுது தான் ஓய்வு பெற்றேன் எனக்கு மாதா மாதம் சேமிக்க முடியாது, அதே சமயம் என்னிடம் மொத்தமாக பணம் உள்ளது, எனக்கு மாதா மாதம் வட்டி கிடைக்கும்படி ஏதாவது திட்டம் இருந்தால் சொல்லுங்கள் என்றார்கள்.
SIP என்பது நம்முடைய பேங்க் அக்கௌண்டில் இருந்து குறிப்பிட்ட தொகை மாதா மாதம் நாம் தேர்ந்தெடுத்த ஃபண்டிற்கு பணத்தை முதலீடு செய்வது. STP என்பது முன்பே ஒரு தொகையை மியூச்சுவல் ஃபண்டின் ஒரு குறிப்பிட்ட லிக்விட் ஃபண்டில் போட்டு விட்டு தினசரியோ, வாரா வாரமோ, அல்லது மாதா மாதமோ ஒரு குறிப்பிட்ட தொகையை தேர்ந்து எடுக்கப்பட்ட ஈக்விட்டி திட்டத்திற்கு மாற்றுவது.
ஒரு பிசினஸ்மேன் கிடைக்கும் பணத்தை இதில் போட்டால் பணம் இருக்கும் வரை அந்த பணம் லிக்விட் ஃபண்டில் இருந்து ஈக்விட்டி ஃபண்டிற்கு செல்லும். பணம் குறைய குறைய லிக்விட் ஃபண்டில் போட்டுக்கொள்ளலாம். ஒரு வேளை பணம் தீர்ந்துவிட்டால் அது நின்றுவிடும். பிறகு மீண்டும் அதை தொடரலாம். இதுவும் SIP போன்றது தான்.
SIP மற்றும் STP என்ற இரண்டு முறைகளும் நீண்ட கால அடிப்படையில் செல்வத்தை பெருக்குவதற்கு. அவ்வாறு பெருக்கிய செல்வத்தை நம்முடைய ஓய்வு காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கவேண்டும். சிலர் இந்த வகையில் பணத்தைப் பெருக்காமல், அவர்களுக்கு கிடைத்த ரிடையர்மென்ட் தொகையை வைத்திருந்தால் அவர்கள் கையாளவேண்டிய முறையே SWP (SystematicWithdrawl Plan).
தவறான அணுகுமுறை
இன்று ஓய்வு பெரும் பெரும்பாலோர் செய்யக்கூடிய மற்றும் செய்து கொண்டே இருக்கிற மிக பெரிய தவறு, தனக்கு கிடைக்கும் ரிடையர்மென்ட் தொகையை கொண்டு போய் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது. இருக்கும் அனைத்து முதலீட்டை விட ரியல் எஸ்டேட்டில் லிக்விடிட்டி (பணத்தை வேண்டும்பொழுது விற்று காசாக்க முடியாது) குறைவு. மேலும் அது ஒரு யூகம் அல்லது உத்தேச பேரம் (SPECULATIVE ASSET) வகையை சார்ந்தது. சில பேர் இன்னும் ஒரு படி மேலே போய் வீட்டை வாங்கி அதில் இருந்து நான் வாடகை வாங்கி கொள்வேன் என்று சொல்வது.
இன்று வீட்டின் விலையோடு ஒப்பிடும்பொழுது அதில் கிடைக்கும் வாடகை சொற்பமே. ஓய்வு பெற்றவர்கள் கண்டிப்பாக இந்தத் தவறைச் செய்யகூடாது.
கடந்த கால ஏற்றத்தை வைத்து இதில் முதலீடு செய்வது மிகப்பெரிய தவறான முறையாகும். ஒன்று இந்த மாதிரி பெரிய ரிஸ்க் எடுத்துக்கொண்டு, அதை ரிஸ்க் என்றே நினைக்காதவர்கள் நிறைய பேர்.
இன்னும் சிலர் எல்லா பணத்தையும் பாதுகாப்பாக வைக்கிறேன் என்று முதலீடு செய்வது. இதில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தமுடியாது. பிறகு என்ன வழி என்று கேட்கிறீர்களா? அதற்கான சிறந்த வழியைப் பார்ப்போம்.
தனி வழி மற்றும் மிகச்சிறந்த வழி!
இன்று ஓய்வு பெற்றவர்களை நாம் இரண்டு வகையாக பிரித்துக்கொள்ளலாம். ஒன்று ஓய்விற்கு பிறகும் எதாவது பகுதி நேர வேலை செய்வது மற்றொரு வகை நான் நிறைய உழைத்துவிட்டேன், இனி நான் கொஞ்சம் ரிலாக்சாக இருக்கவேண்டும் என நினைப்பது. இரண்டும் தவறில்லை அவரவர் விருப்பம்.
பகுதி நேர வேலையில் உள்ளவர் கொஞ்சம் கூடுதலாக ரிஸ்க் எடுக்கலாம், மற்றவர் கொஞ்சம் கம்மியாக. இங்கு நாம் ஒன்றை சரியாக புரிந்து கொள்ளவேண்டும். முன்பே சொன்ன மாதிரி ஒருவருக்கு ஆயுட்காலம் சராசரியாக இந்தியாவில் 80 வயது வரை. எனவே அந்த ஓய்வூதிய பணத்தை வைத்து 20 ஆண்டு காலம் ஓட்டவேண்டும். அதனால் ஒரு 30 முதல் 50 சதவீதம் வரை ஒருவர் பாலன்ஸ்டு (Balanced) திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
ரவி மற்றும் ராஜா இருவரும் ஒன்றாக அரசாங்க உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். ரவிக்கு கொஞ்சம் பயம், ஆனால் ராஜா ரொம்பவும் ப்ராக்டிகலான ஆள். ரவி தேர்ந்தெடுத்தது பாதுகாப்பான வட்டி, அதனால் அந்த முதலீடு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனவே கொஞ்சம் கொஞ்சமாக அசலில் இருந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார். ராஜா தான் எல்லா பணத்தையும் நாளையே சாப்பிடப்போவதிலை என்று எண்ணி தன்னுடைய 50% பணத்தை பாலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ததில் அவருக்கு கிடைத்த தொகை 5 முதல் 6 வருடங்களில் இரு மடங்கு, பிறகு அதில் இருந்து 60% பணத்தை பாதுகாப்பான முதலீட்டிற்கு மாற்றிவிட்டார் இப்படியே தன்னுடை ரிஸ்கை வயது ஆக, ஆக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி விட்டதால் அவரிடம் 80 வயதைத் தாண்டியும் பணம் கையில் இருந்தது. ரவி தன்னுடைய 72 வயதிலேயே எல்லா பணத்தையும் இழந்து இப்போது தன்னுடைய குழந்தைகளின் உதவியை எதிர் நோக்கி உள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு நான் ஒரு சின்ன ஃபண்ட் அலசல் செய்தேன். பாலன்ஸ்டு திட்டங்கள் கடந்த 1995 முதல் உள்ளது, நான் ஒருவர் பத்தாண்டு காலம் அதில் இணைந்திருந்தால் என்ன பயன் என்று பார்த்தேன், அதாவது 1995-2005,
96-2006 ... 2003-2013. உதாரணமாக ஒருவர் 12 லட்சம் இந்த திட்டத்தில் போட்டு, மாதம் 10 ஆயிரம் வீதம் கடந்த 10 ஆண்டுகளில், 120 மாதத்தில் அவர் போட்ட பணத்தை திரும்ப எடுத்திருப்பார், அது குறைந்த பட்சமாக 27 லட்சமும், அதிகபட்சமாக 1 கோடியும் கிடைத்திருக்கும்.
எடுத்துக்கொண்ட திட்டங்கள் பிர்லா சன் லைப் 95 ஃபண்ட் மற்றும் HDFC ப்ருடன்ஸ் ஃபண்ட். அதே சமயம் அவருடைய அசலை விட சில சமயம் இடைப்பட்ட காலத்தில் குறைவாக கூட இருக்கும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். இந்த முறைக்கு பெயர் SWP. ஓய்வு பெற்றவர்களுக்கான சிறந்த திட்டம். அவரவர் ரிஸ்க் எடுக்கும் தன்மைக்கென 30% முதல் 50% வரை எடுத்தால் அந்த ரிஸ்க் நீண்ட கால அடிப்படையில் காணாமல் போய்விடும்.
பணம் செய்வது எளிது அதை புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம், புரிந்து கொண்டவற்றை செயல் படுத்துவது மிக மிக கடினம். ஏனென்றால் எந்த ஒரு பள்ளியிலுமோ, கல்லூரியிலோ, பல்கலைக்கழகங்களிலோ யாரும் சொல்லி தந்ததில்லை, அதனால் கடினம் என்று சொன்னேன், இதை புரிந்து நடந்தால் பணத்தைப்பற்றியக் கவலை வேண்டாம்.
பா. பத்மநாபன் - padmanaban@fortuneplanners.com
No comments:
Post a Comment