Pages

Monday, 18 November 2013

What Do You Expect From Your Investments? - My 8th Article on Tamil Hindu dated on 18th November 2013



உங்களின் தேவைக்கு ஏற்ற முதலீடு எது? - பி.பத்மநாபன்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/01656/shares_1656834h.jpg

இன்று எல்லோருக்கும் பணத்தைப் பெருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அதைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டிய எண்ணம் இல்லை. தங்களுடைய பணத்திற்குத் தாம் பொறுப்பெடுத்து கொள்ளாமல் அடுத்தவரை பழி சொல்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள்.
முதலீட்டைப் பற்றி அறிந்து கொள்வது மிக மிக எளிது. ஆனால் கண்டிப்பாக அதற்கு கொஞ்சம் ஆர்வமும் வேண்டும். வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டமான விஷய ங்களை பிடித்தோ பிடிக்காமலோ கற்றுக்கொள்கிறோம். ஆனால் நமக்குப் பெரிதும் உதவக் கூடிய நாம் ஈட்டிய பொருளை முதலீடு செய்வதில் மட்டும் ஏனோ ஓர் அலட்சியம் பெரும்பாலோருக்கு இருக்கிறது.
ரியல் எஸ்டேட் முதலீடு இன்று பல மடங்காக அதிகரித்திருக்கிறது, சில பங்குகள் மற்றும் அல்லது மியூச்சுவல் பண்டு முதலீடுகளும் நல்ல வருமானத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் பலர் இந்த முதலீடுகளை பற்றி மறந்துவிட்டார்கள்அல்லது அதனுடைய வளர்ச்சியை பார்க்காமலோ, கணிக்காமலோ விட்டுவிட்டார்கள்.
இன்று நாம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அடிக்கடிச் செல்ல வேண்டி இருக்கிறது. அதற்கு நமக்குப் பலவிதமான வாகனங்கள் தேவைப்படுகிறது.
இந்த வாகனங்கள், தூரம் மற்றும் அதற்கு ஆகக்கூடிய செலவுகளை பொறுத்தே பெரும்பாலும் தேர்ந்தெடு க்கப்படுகின்றன.
உதாரணமாக நடக்கும் தொலைவில் இருந்தால் நடப்பது அல்லது சைக்கிளில் செல்வது. இதுவே 5 முதல் 10 கிமீ என்றால் இரு சக்கர வாகனம்/ஆட்டோ/ கார்/ மற்றும் பேருந்தை பெரும்பாலும் உபயோகப்படுத்துகிறோம். இந்த தூரம் அதிகரிக்கும் போது நாம் ரயில் மற்றும் விமானத்தைத் தேர்வு செய்கிறோம்.
நாம் வெளிநாட்டிற்கு செல்வதற்கு சைக்கிளோ அல்லது காரிலோ செல்ல முடியாது. அதே போல பக்கத்துக்கு தெருவில் உள்ள மார்க்கெட்டிற்கு விமானத்தைத் தேர்வு செய்ய முடியாது.
இதே போன்று நம்முடைய வாழ்க்கையில் பல இலக்குகள் (குழந்தையின் கல்வி, திருமணம், வெளிநாட்டு பயணம், தொழில் தொடங்குதல், ஓய்வு கால திட்டம்) நாம் ஈட்டக்கூடிய பொருளைச் சார்ந்து உள்ளது.
அது குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளைப் பொருத்தது. அதற்கு வங்கி டெபாசிட், போஸ்ட் ஆபீஸ் டெபாசிட், தொடர் சேமிப்பு(ஆர்.டி.), மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை முதலீடு, தங்கம், ரியல் எஸ்டேட் முதலியவை. இன்ஷூரன்ஸ் ஒரு போதும் முதலீடு கிடையாது. நம்முடைய ரிஸ்க்கை குறைப்பதற்கான வழிதான் இன்ஷூரன்ஸ்.
இதில் முறைபடுத்தாதது தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடு. இன்று நிறைய பேருக்கு பங்குச் சந்தை முதலீடு என்பது ஒரு சூதாட்டம் அதில் நாம் பணத்தை இழந்து விடுவோம் என்ற நினைப்பு உள்ளது. அது மிகப்பெரிய தவறான கருத்தாகும். அதைப்பற்றி சிறிது பார்ப்போம்.
அன்றாட வாழ்வில் நமக்கு பல பிசினஸ் லாபகரமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
மேலும் சில பிசினஸ் நாம் பார்க்கும் போதே பல மடங்கு பெரிதாகிறது. நாமும் அதைத் தொடங்க வேண்டுமானால் நமக்கு பணம் மற்றும் அதைப் பற்றிய நீக்கு போக்கு தெரிய வேண்டும். அதோடு நம்முடைய நேரத்தையும் அதற்காக ஒதுக்கவேண்டும். எந்த ஒரு பிசினசிலும் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை. பங்குச்சந்தை முதலீடு என்பதும் நாம் ஒரு பிசினஸ் வாங்குவது போன்றதுதான்.
எப்படி நாம் ஒரு பிசினஸ் தொடங்குவதற்கு முன்பு அது நீண்ட கால அடிப்படையில் இருக்குமா எந்த அளவிற்கு நாம் அதைப்பற்றி அன்றாடம் தெரிந்து கொள்ளவேண்டும் எனப் பார்க்கவேண்டும்.
மேலும் நமக்கு பிடித்த பிசினசில் பார்ட்னாராக யாரும் நம்மை ஏற்று கொள்ளமாட்டார்கள். அப்படி நம்மை ஏற்று கொண்டால் அதற்கு நிறைய முதலீடு தேவைப்படும். ஆனால் அந்த கம்பெனி பங்கை வாங்கும்போது ஒரு சில பங்காக இருந்தாலும் கூட நாம் பார்ட்னராக ஆக முடியும்.
உதாரணமாக, ஒவ்வொருவருக்கும் ஒரு சில வங்கியின் மீது நம்பிக்கை உள்ளது, அந்த வங்கி நமக்கு இரண்டு வாய்ப்பைத் தருகிறது. ஒன்று உங்களிடம் பணம் கொடு அதற்கு ஒரு குறிப்பிட்ட வட்டி தருகிறேன், மற்றொன்று என்னோடு பார்ட்னராக சேர்ந்து கொள், அதனுடைய பலனை எற்றுக்கொள்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக பலர் வட்டிக்காக மட்டுமே வங்கியிடம் பணத்தை கொடுக்கிறோம், அதில் ஒரு சில சதவிகிதத்தை ஒதுக்கினால் அந்த வங்கி பல கிளைகளை திறந்து விரிந்து பெரியதாகும் பொழுது நாமும் அதனுடன் சேர்ந்து பெரிதாக பணம் பண்ண முடியும்.
கடந்த 10 முதல் 11 வருடங்களில், பல வங்கியின் பங்குகள் 20 முதல் 45 மடங்கு வளர்ந்துள்ளது. வட்டிக்கு விட்டிருந்தால் 10% கூட்டு வட்டியில், அதனுடைய மதிப்பு 11 வருடங்களில் 2.85 மடங்கே. அவரவர் எடுக்கும் ரிஸ்க்-கிற்குத் தகுந்தாற்போல் சிறிய அளவாவது பங்குக்கென்று ஒதுக்கினால் நம்முடைய நாடும் பொருளாதாரத்தில் முன்னேறும் நமக்கும் நல்ல பணம் கிடைக்கும்.
பிசினஸ் ஆக இருக்கட்டும் அல்லது ஒரு பங்கை தேர்ந்தெடுப்பதாக இருக்கட்டும் அதற்கான ஹோம் வொர்க்கை நிறைய பேர் செய்வதில்லை, அதனால் தோல்வி ஏற்படுகிறது. இது ஒரு வேலை சூதாட்டமாக இருந்தால் எப்படி எல்லா நாட்டிலும் அதை ஒத்துக்கொள்வார்கள். மேலும் இது 'செபி' என்று சொல்லக்கூடிய பங்கு, நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்கு படுத்தும் கட்டுபாட்டு அமைப்புக்குள் உள்ளது.
ஒரு சில பங்குகளை வாங்கும் போது நமக்கு மிக அதிகமான ரிஸ்க் உள்ளது. எனவே முதன் முறையாக பங்கு சந்தைக்குள் வருபவர்கள், மியூச்சுவல் பண்டு மூலம் வந்தால் ரிஸ்க் குறைகிறது.
ஏனெனில் அதை ஒரு அனுபவம் வாய்ந்த ஃபண்ட் மேனெஜர் 50 முதல் 60 பங்குகளை நிர்வகிப்பதால் ரிஸ்க் கணிசமாகக் குறைகிறது.
இதில் உத்தரவாத வருமானம் கிடையாது என்பதால், பலர் இதை ’பொன்சி’ திட்டத்தோடு ஒப்பிடுகிறார்கள், அது பெரிய தவறு. உதாரணமாக பங்கு சந்தை 34 ஆண்டுகளுக்கு முன்பாக சென்செக்ஸ் குறியீடு எண் 100 என தொடங்கி இன்று 20,400 புள்ளியில் உள்ளது. அதாவது கூட்டு வட்டியின் படி 16.93%!
ஒரு பாதுகாப்பான முதலீடு 8% முதல் 10% கொடுக்கும்பொழுது, கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் அந்த முதலீடு 15% வருமானம் கிடைக்கும் சாத்தியமும் இருக்கிறது. ஆனால் ஓரிரு வருடங்களில் பணம் இரட்டிப்பாகும் என்று யாராவது உறுதி தந்தால் நம்ப வேண்டாம்.
மற்றொரு முக்கியமான விஷயம் லிக்விடிட்டி என்பது, அதாவது எவ்வளவு விரைவில் அந்த முதலீட்டை பணமாக மாற்றுவது, அந்த வகையில் ரியல் எஸ்டேட் மிகவும் ரிஸ்க். மேற்சொன்ன மற்ற இன்வெஸ்ட்மென்ட்டில் நாம் வேண்டிய போது பணத்தை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.
நீண்ட கால அடிப்படையில் மியூச்சுவல் பண்டு மற்றும் பங்குச் சந்தை முதலீடு லாபகரமாக இருக்கும், ரிஸ்கும் குறைவு.
குறைந்த கால அடிப்படையில் வங்கி டெபாசிட், போஸ்ட் ஆபீஸ் டெபாசிட், தொடர் சேமிப்பு மற்றும் தங்கம் ரிஸ்க் குறைவு.
ஆனால் நீண்ட காலம் வைத்திருக்கும்பொழுது பணவீக்கத்தை கட்டுபடுத்தாமால் போகக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இதைப் புரிந்து கொண்டு, உங்களின் தேவையையும் கருத்தில் கொண்டு முதலீடு செய்தால் தேவைக்கு ஏற்ப நிறைய பணம் பண்ணலாம்.

No comments:

Post a Comment