எஸ்.ஐ.பி. முதலீடு- ஓர் அட்சய பாத்திரம் -
பா.பத்மநாபன்
இன்று
எஸ்.ஐ.பி. பற்றி தெரியாதவர்கள் மிக மிக குறைவு. பரவலாக பேசப்படுகின்ற ஒரு
முதலீட்டு முறைதான் இந்த எஸ்.ஐ.பி. இது நம் எல்லோருக்கும் ஏற்கெனவே பழக்கமான
ஆர்.டி.யை போன்றது. ஒரே ஒரு வித்தியாசம் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யப்படும்
மியூச்சுவல் ஃபண்ட்களில் உத்திரவாத வருமானம் ஏதும் கிடையாது.
எல்லா
வகையான நீண்ட கால இலக்குகளுக்கும் எஸ்.ஐ.பி. உதவியாக இருக்கிறது. இந்த வகையான
முதலீட்டு அணுகுமுறை ஒரு மரத்தை வளர்ப்பது போன்றது. முதலில் மரம் வளருவதற்கு 7
முதல் 10 ஆண்டு வரை காத்திருத்தல் வேண்டும். அவ்வாறு செய்தால் வேண்டும் போது
நமக்கு தேவையான பழத்தை பறித்துகொள்ளலாம். அதுபோல நல்ல லாபத்தில் இருக்கும் போது,
நமக்கு தேவையான பணத்தை எடுத்து கொள்ளலாம். அதை விடுத்து அம்மரத்தை வெட்டினால் பொன்
முட்டையிடும் வாத்தின் வயிற்றை வெட்டி கொலை செய்வதற்கு சமம். இன்று பெரும்பாலோர்
மாத வருமானத்தை நம்பி இருப்பதால், கொஞ்சம் கொஞ்சம் பணம் எல்லோராலும் சேமிக்க
முடியும்.
பணம்
சேமிக்க முடியும் சரி, இவ்வளவு காலம் தொடங்காமல் இருந்துவிட்டேனே என்ன செய்வது
என்று யோசிக்க வேண்டாம். எஸ்.ஐ.பி. முறையீட்டை தொடங்குவதற்கு எல்லா நேரமும் சரியான
நேரமே. ஏனெனில் இன்று முதலீடு செய்யும்போது 20 ரூபாய் என்.ஏ.வி. (நிகர சொத்து
மதிப்பு) என எடுத்துக்கொண்டால் அடுத்த மாதம் அது 20.50 அல்லது 19.50 ஆக இருக்க
வாய்ப்புகள் அதிகம். அதிகமாக இருந்தால் நம்முடைய பணம் வளர்ச்சியடைந்திருக்கிறது,
குறைவாக இருந்தால் நம்மால் அதிக யூனிட்டுகள் வாங்க முடியும். நீண்ட கால
அடிப்படையில் என்.ஏ.வி. அதிகமாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உடனடியாக அது
குறைந்தாலோ அதிகரித்தாலோ நாம் கவலைப்பட வேண்டாம்.
சிறு
துளி பெருவெள்ளம் என்பது போல நாம் சேமிக்கும் சிறிய தொகை பெரிய விருட்ஷமாக மாறிவிடும்.
மாதா மாதம் ஒரு சிறிய தொகை முதலீடு செய்வதால் பெரிதாக பயப்படதேவை இல்லை. அதற்காக
ரிஸ்க்கே இல்லை என சொல்ல முடியாது. காரணம், மியூச்சுவல் ஃபண்டில் நாம் முதலீடு
செய்யும் பணம் பங்குச்சந்தையில்தான் முதலீடு செய்யப்படுகிறது. பங்குச்
சந்தையின்
ஏற்ற இறக்கத்தைப் பொறுத்தே மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானமும் இருக்கும்.
எஸ்.ஐ.பி.
மூலம் முதலீடு செய்ய நினைப்பவர்கள், ஒவ்வொரு மாதமும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு
நேரில் சென்று பணம் செலுத்த வேண்டுமே என்று கவலை கொள்ளத்தேவையில்லை. இ.சி.எஸ்.
(Electronic clearing scheme) மூலம் ஒவ்வொரு மாதமும் நமது வங்கிக்கணக்கில் இருந்து
பணத்தை எடுத்துக்கொள்வதால் நம் முதலீட்டு வேலை மிகசுலபமாக முடிந்துவிடும்.
நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!
இன்று
பலருக்கும் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது, ஆனால் அது சுலபமில்லை என
நினைக்கிறார்கள். அது மிகவும் எளிது, அவர்கள் ஒன்றே ஒன்றை பின்பற்றினாலே
போதுமானது. மாதம் 1,500 ரூபாய் நல்ல டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்டுகளில் போட்டு
வந்தாலே போதும். அது இன்னும் 30 வருட காலத்தில், 15% கூட்டு வட்டியில்,
1,05,14,730 (ஆம், ஒரு கோடியே 5 லட்சம்). 15 சதவிகித வருமானம் அதிகமாக இருப்பதாக
தோன்றினாலும், சில ஃபண்ட்கள் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதே சமயம் நீண்ட
கால அடிப்படையில் 6% பணவீக்கம் என எடுத்துக்கொண்டால் அதன் தற்போதய மதிப்பு 18.30
லட்சம் ரூபாய் தான்.
எஸ்.ஐ.பி.
முறையில் குறைந்தபட்சமாக 100 ரூபாய் கூட சேமிக்கலாம். இது சாமானியர் முதல் பெரிய
செல்வந்தர் வரை எல்லோருக்கும் பொதுவான ஒன்று.
இன்று
நிறைய பேருக்கு வரக்கூடிய பெரிய சந்தேகம், சந்தை மீண்டும் 21,000 புள்ளியை எட்டி
விட்டது. இது 6 வருடத்திற்கு முந்தைய உச்சம். தற்போது முதலீடு செய்வது சரியாக
இருக்குமா அல்லது கொஞ்சம் காலம் காத்திருக்கலாமா என்று? கடந்த 10 வருடங்களில் 8%
பணவீக்கத்தை சந்தித்துள்ளோம். அவ்வாறு எடுத்துக்கொண்டால் 6 வருட முன்பு வந்த
21,000 புள்ளிகள் இன்று வெறும் 13,235, இதைப்போல வாய்புகள் கிடைப்பது அரிது.
கடந்த
6 வருடங்களில் எஸ்.ஐ.பி. முறையில் 8% முதல் 15% வரை கூட்டு வட்டி கிடைத்துள்ளது.
உதாரணமாக ஒருவர் மாதம் தோறும் ரூ.1000 சேமித்தார் என எடுத்துக்கொண்டால் அந்த
ரூ.72,000 (6*12*1000) மேலும் அதன் வளர்ச்சி இவை யாவும் ஒன்றாகச் சேர்ந்து பலன்
கொடுக்கும். இன்று நிறைய பேர், அந்தப் பணம் போனதே தெரிவில்லை ஏனெனில் நிறைய EMI கட்டுகிறேன்;
ஆனால் இன்று என்னை அறியாமல் இவ்வளவு சேர்ந்துள்ளது இல்லாவிட்டால் இதற்கும் எதாவது
செலவு வைத்திருப்பேன் என்று சொல்கிறார்கள்.
முதலீட்டில்
எவ்வளவு பணம் சேமிக்கிறோம் என்பதை விட எவ்வளவு காலம் அதனுடன் இணைந்திருக்கிறோம்
என்பது மிக மிக அவசியம்.
உதாரணமாக
நண்பர்களான ரவி மற்றும் ராஜாவின் முதலீட்டை எடுத்துக்கொள்வோம். ரவி வேலைக்கு
சேர்ந்தவுடன் தனது 23 வயதில் மாதம் ரூ.1,000 முதலீடு செய்யத் தொடங்கினார்.
தன்னுடைய ஓய்வுக் காலத்திற்கு அதாவது 35 வருடம். கிடைத்த தொகை 1.48 கோடி. 1,000
ரூபாய் சேமித்தால் என்ன கிடைக்கப்போகிறது, நான் அதிக சம்பளம் வாங்கும்போது தான்
சேமிக்க தொடங்குவேன் என்று சொல்லிக்கொண்டு ராஜா சேமிக்கவில்லை.
ஒவ்வொரு
சமயம் சேமிக்க நினைக்கும்போதும் ஏதாவதொரு செலவு வந்து விடும். இப்படியே 10 வருடம்
ஓடி விட்டது. இனியும் தாமதித்தால் ஓய்வு காலத்திற்கு சேமிக்க முடியாது என
நினைத்து, ரவிக்கு கிடைக்கும் தொகை தனக்கும் வேண்டும் என்று நினைத்து சேமிக்க
தொடங்கினால் அவர் அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாதம் 4,525 ரூபாய் வீதம் முதலீடு செய்ய
அதை விடுத்து 1,000 ரூபாய் முதலீடு செய்தால் ராஜாவிற்கு கிடைக்கும் தொகை வெறும்
ரூ.32.84 லட்சம்.
முதல்
உதாரணத்தில் ரவி சேமிப்பது (35 வருடம்*12)420*1000=4,20,000)] இவ்வளவு தான், ஆனால்
ராஜா சேமிக்க வேண்டியது [(25 வருடம்*12) =300*4525=15,57,500).] இரண்டாவது
உதாரணத்தில் ராஜா சேமிப்பது [(25 வருடம்*12=300*1000=300000)]. வெறும் 1.20
லட்சத்தில் கிடைக்ககூடிய வித்தியாசம் சுமாராக ரூ.1.16 கோடி
(1,48,60,645-32,84,073). இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது
என்னவென்றால் குறைந்த பணமாக இருந்தாலும் நாம் முதலீட்டை வேலைக்கு சேர்ந்தவுடனே
தொடங்கவேண்டும்.
'சந்தையில்
அதிகபட்ச பயம் இருக்கும்போது முதலீடு செய்யுங்கள். சந்தையில் அதிக பேராசை
இருக்கும்போது முதலீட்டை திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள்’ என்ற வாரன் பஃபெட்டின்
வார்த்தைகளை யோசித்து பாருங்கள். சந்தை இப்போது அதிகபட்ச பயத்தில் இருக்கிறது.
உங்களது நீண்ட கால முதலீட்டை தொடங்குவதற்கு சரியான நேரம் இதுதான்!
No comments:
Post a Comment