ஒரு குடும்பத்தின் வரவு, செலவுக்
கணக்குகளை ஆராய்ந்து, நிதித் திட்டமிடல் செய்ய அதிகபட்சம் ஒரு வார
காலத்துக்கு மேல் எனக்கு தேவைப்படாது. ஆனால், ஓராண்டு காலம் உழைத்து ஒரு
குடும்பத்துக்கு நிதித் திட்டமிடல் செய்யவேண்டிய சவால் எனக்கும் வரவே
செய்தது.
மூன்று வருடங்களுக்கு முன்பு பரத் - சுசீலாவைச் சந்தித்தேன். இருவரும் ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளஞ்ஜோடிகள். ஹரிணி, துளசி என அவர் களுக்கு இரண்டு பெண்
குழந்தைகள். இருவரின் மாதச் சம்பளத்தையும் சேர்த்தால், சுமார் 2.60
லட்சம் ரூபாய். இவ்வளவு பணம் சம்பாதிக்கும் ஒரு குடும்பத்துக்கு நான் நிதி
ஆலோசனை தந்ததில்லை என்பது நான் அடைந்த முதல் இன்ப அதிர்ச்சி. இவ்வளவு
சம்பாதித்தும் அவர்களின் மொத்தச் சேமிப்பு வெறும் பத்தாயிரம் ரூபாய்தான்
என்று தெரிந்துகொண்டபோது, எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அவர்களின் செலவுப்
பட்டியலை விலாவாரியாகப் போட்டபோதுதான் தெரிந்தது, அவர்கள் ஓட்டை
பக்கெட்டில் தண்ணீர் நிரப்புகிறார்கள் என்று.
அவர்களின் குடும்பச் செலவை கொஞ்சம் பாருங்களேன். வீட்டு
வாடகை - ரூ.27,500; லைஃப் இன்ஷூரன்ஸ் (6 பாலிசிகள்) - ரூ.47,500; ஸ்கூல்
ஃபீஸ் - ரூ.8,000; குடும்பச் செலவுகள் - ரூ.22,000; குழந்தைகளுக்கான
பாட்டு, நடனப் பயிற்சிக்கு - ரூ.10,000; கார் லோன்(2) - ரூ.20,000;
வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ. (1) - ரூ.46,000; வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ.
(2) - ரூ. 22,000; டிரைவர் சம்பளம் - ரூ.10,000; சமையல்காரர் சம்பளம் -
ரூ.5,000; உடற்பயிற்சிக்கு - ரூ.3,000; உறவினர்களுக்கு - ரூ.10,000;
பெற்றோருக்கு - ரூ.12,000, பெட்ரோல் - ரூ.7,000; ஆக மொத்தம் - ரூ.2,50,000.
இந்தப் பட்டியலைப் போட்டு பார்த்த பிறகுதான், தான்
கணக்குவழக்கில்லாமல் செலவு செய்துவருவதை உணர்ந்தார் பரத். உங்கள் வருமானம்
பத்தாயிரமோ, பத்து லட்சமோ, பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்துங்கள். செலவு
நிச்சயம் கட்டுப்படும். பரத்தின் வீட்டு பட்ஜெட்டை போட்டபிறகு,
தேவையில்லாமல் பணம் விழுங்கும் திட்டங்களைக் கழித்துக்கட்ட ஆரம்பித்தேன்.
பாரமாக இருந்த இன்ஷூரன்ஸ்!
கொஞ்சநஞ்சம் அல்ல, ஆண்டுக்கு ஐந்து லட்சம்
ரூபாய்க்குமேல் பிரீமியம் கட்டி வந்தார் பரத். அதுவும், வெறும் 75 லட்சம்
லைஃப் கவரேஜுக்காக. இவ்வளவு பணம் கட்டுறீங்களே, இதனால் உங்களுக்கு எவ்வளவு
கிடைக்கும் என்று தெரியுமா?’ என்று கேட்டேன். 'தெரியாது’ என்றார். வரிச் சலுகைக்காக
ஆபீஸில் யாரோ ஒருவர் ஏதோ ஒரு பாலிசியை சிபாரிசு செய்ய, அதை அப்படியே
வாங்கி இருக்கிறார் பரத். அந்த பாலிசிகளை எல்லாம் சரண்டர் செய்ய
சொல்லிவிட்டு, இரண்டு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கச்
சொன்னேன். டேர்ம் இன்ஷூரன்ஸில் பணம் திரும்பக் கிடைக்காதே என்றார்.
''நீங்கள் கட்டும் சிறிய தொகை உங்களுக்கு திரும்பக் கிடைக்கவில்லை
என்றாலும் பரவாயில்லை. ஆனால், இப்போது கட்டும் பணத்துக்கு வெறும் 6
சதவிகிதம் மட்டுமே ரிட்டர்ன் கிடைக்கும். எஃப்.டி. போன்ற பாதுகாப்பான
முதலீட்டில்கூட
9 சதவிகிதம் ரிட்டர்ன் கிடைக்குமே'' எனச் சொல்லி
அவர்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸின் முக்கியத்துவத்தைப் புரிய வைப்பதற்குள்
முழுசாக மூன்று மணி நேரம் போராட வேண்டியிருந்தது.
வேண்டாத வீட்டுக் கடன்!
இரண்டு வீடு வாங்கிய பின்பும் அவர்கள் வாடகை வீட்டில் இருந்தார்கள். இரண்டு வீட்டிற்கும் அவர்கள் கட்டிய
இ.எம்.ஐ. 68,000 ரூபாய். தவிர, வீட்டு வாடகை 27,000 ரூபாய் என ஒரு
மாதத்துக்கு 95,000 ரூபாய் வீட்டுக்காக மட்டுமே செலவழித்தார்கள். ஆனால்,
அந்த இரண்டு வீட்டையும் வாடகைக்கு விட்டதன் மூலம் கிடைத்த வருமானம் வெறும்
23,000 ரூபாய்தான்.
ஆக, வாடகை வருமானத்தைவிட அதிகம் இ.எம்.ஐ. செலுத்தி
வந்தார்கள். இத்தனைக்கும், எதற்காக இரண்டு வீடு வாங்கினீர்கள் என்று
கேட்டதற்கு அவர்களிடமிருந்து தெளிவான எந்த பதிலும் இல்லை. வருமானம் வருது,
இ.எம்.ஐ. கட்ட முடியுமே என்றுதான் வாங்கினார்களாம்.
இன்னொரு முக்கியமான விஷயம், வீட்டுக் கடனுக்காக
கட்டிவந்த பணத்துக்கு வரிச் சலுகையையும் அவர்கள் க்ளைம் செய்யவில்லை.
இனியும் தாமதிக்காதீர்கள். ஒரு வீட்டையாவது விற்றுவிடுங்கள் என்றேன். 60
லட்சத்திற்கு வாங்கி 20 லட்சம் கட்டியபிறகும்கூட அந்த வீட்டை 70
லட்சத்திற்கு மேல் விற்க முடியவில்லை. நானும் எனக்குத் தெரிந்தவர்களிடம்
சொல்லி வைத்ததில் ஏழு மாதங்களுக்குப் பிறகு 75 லட்சம் ரூபாய்க்கே விற்க
முடிந்தது. தேவைக்காக வீடு வாங்காமல், பகட்டுக்காக வீடு வாங்கினால்,
இ.எம்.ஐ. கட்டியே ஓய்ந்து போய்விடுவோம் என்பதை எல்லோரும் உணரவேண்டும்.
குழந்தைகளுக்கான திட்டங்கள்!
குழந்தைகளின்
பள்ளிக் கட்டணம், பாட்டு மற்றும் நடனப் பயிற்சிக்கு மாதம் 18,000 ரூபாய்
செலவு செய்து வந்தார் பரத். ''ஏற்கெனவே நிறைய செலவு செய்வதால், அவர்களின்
எதிர்காலம் குறித்து எந்த யோசனையும் இல்லை'' என்றார் பரத். இன்றைய நிலையில்
நம்மூரில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கவே 10 லட்சம் ரூபாய் செலவாகிறது.
இன்னும் பத்து வருடங்களில் 22 லட்சம் ரூபாய் ஆகுமே! அப்போது பணத்துக்கு
எங்கு போவீர்கள் என்பதை எடுத்துச் சொல்லி, அந்த சேமிப்பை உடனடியாக தொடங்க
திட்டம் போட்டுத் தந்தேன். இன்ஷூரன்ஸ் பிரீமியம், இ.எம்.ஐ. பணம் மிச்சமானதை
வைத்து அதற்கான திட்டத்தை அமைத்துத் தந்தேன். கூடவே, அவர்களின்
ஓய்வுக்காலத்துக்குத் தேவையான பணத்தை எப்படி சேமிப்பது என்பதற்கான
திட்டத்தையும் போட்டுத் தந்தேன்.
ஒரு வருடம் தேவைப்பட்டது!
ஏறக்குறைய எனக்கு ஒரு வருடம் ஆனது இந்த நிதித்
திட்டமிடலை செய்து முடிக்க. நான் சந்தித்த நபர்களில் அதிகமாக சம்பாத்தியம்
கொண்டவரும், பொருளாதார விஷயங்கள் குறித்து துளி அளவுகூட தெரியாதவரும் இவரே.
ஆனால், இன்றைக்கு அந்த தம்பதிகள் பணத்தின் அருமையை சரியாகவே
உணர்ந்திருக்கிறார்கள். நான் அமைத்துத் தந்த நிதித் திட்டமிடலை சரியாகவே
பின்பற்றி வருகிறார்கள்.
No comments:
Post a Comment