Pages

Monday, 23 December 2013

"Equity Investment is a Magical Key"! - My 13th Article in The Hindu Tamil Dated 23rd December 2013



ஈக்விட்டி என்னும் மந்திர சாவி! -  பா. பத்மநாபன்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/01695/equity_1695477h.jpg
இன்று பெரும்பாலோருக்கு ஈக்விட்டி என்றாலே பயம். எப்பொழுதுமே நமக்கு பயமான ஒரு விஷயம் என்றா​​ல் ,அதற்கு பலதரப்பட்ட உருவம் கொடுத்து அதை இன்னும் பயங்கரமாக மாற்றுவது நம்முடைய வழக்கம்!

ஈக்விட்டி என்பது ஒரு நிறுவனத்தின் பங்கிற்கு நாம் பகுதி சொந்தக்காரர், இதை ஆங்கிலத்தில் (PART OWNER) என்று சொல்வார்கள். இன்று நமக்கு எத்தனையோ பிசினஸ் பிடித்துள்ளது, நம் கண் முன்பே அந்த பிசினஸ் செய்பவர்கள் பெரிதாக வளர்ந்தார்கள், மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள், நாம் கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு என்னையும் சேர்த்துக்கொள் என்றால் யாரும் நம்மை எவ்வளவு பணம் கொடுத்தாலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நாம் அந்த நிறுவனத்தின் பங்கை வாங்கும்போது நாம் அவர்களுடன் இணைகிறோம்.

நம் எல்லோருக்கும் தெரியும், பிசினஸ் என்பது ரிஸ்கான விஷயம் என்று, இருந்தாலும் அதில் கிடைக்கம் பணம் நாம் ஒருவரிடத்தில் வேலை செய்தால் நிச்சயம் கிடைக்காது. அதற்கு பல தகுதிகள் வேண்டும், நிறைய பேர் பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் அதில் இறங்குவதில்லை. நாம் தெரியாமல் ஒரு பிசினசில் இறங்கி பிசினசைக் குறை சொல்வது நியாயமாகாது. அதே சமயம் பிசினஸ் நேற்று ஆரம்பித்தவுடன் மறுநாளே வெற்றி அடையாது. நாம் பலதரப்பட்ட சோதனைகளைச் சந்திக்க நேரிடும். இது எல்லாவற்றிலும் வெற்றி கொள்பவனே பெரிய பிசினஸ்மேன் ஆகிறான். மற்றவர்கள் பொறுமை இல்லாமல், அதில் உள்ள நெளிவு சுளிவு தெரியாமல் இறங்கி அவதிப்படுகிறார்கள்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டுவது என்னவென்றால், பிசினஸ் நன்கு அறிந்து, பொறுமையுடன் இருந்தால் கண்டிப்பாக ஓரளவிற்காவது நாம் வெற்றி காண முடியும். வெற்றி பெற்றவர்கள் சொல்லக்கூடிய ஒரு விஷயம், நான் பணம் சம்பாதித்தது போக என்னால் 100 பேருக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க முடிந்ததை பெரிய விஷயமாக கருதுகிறேன், அதில் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது.

சுமார் 20 முதல் 25 வருடங்களுக்கு முன்பு சினிமாக்களிலும், பத்திரிகையிலும் வேலை இல்லா திண்டாட்டத்தை பற்றி நிறைய செய்திகள் இருக்கும். இன்று நிறைய பிசினஸ்மேன் தனக்கு தகுந்த ஆள் கிடைக்கவில்லை என்று சொல்கிறார்களே தவிர யாரும் வேலை கிடைக்கவில்லை என்று சொல்லவில்லை. ஒரு ஆய்வில் சொல்கிறார்கள்இன்று படிக்கும் பலர் இதுவரை இல்லாத ஒரு வகையான வேலை வாய்ப்பிற்கு தங்களை தயார் செய்துகொண்டிருக்கிறார்கள்”. இது எல்லாவற்றிற்கும் காரணம் நிறைய தொழில் அதிபர்களை நாம் மீண்டும் மீண்டும் உருவாக்கி கொண்டே இருப்பதுதான்.

இந்த மாதிரி நிறுவனங்கள் முதலீட்டாருக்கு இரண்டு வாய்ப்புகளை எப்பொழுதும் தருகிறார்கள். ஒன்று என்னிடம் பணம் கொடுங்கள் நான் உங்களுக்கு வட்டி தருகிறேன். இன்னொன்று என்னுடைய பங்கை வாங்கி நீங்களும் பகுதி சொந்தக்காரர் ஆகுங்கள் என்று. நமக்கு அது நன்றாக வளரும், நல்ல கம்பெனி என்ற எண்ணம் உள்ளது, ஆனாலும் அதில் முதலீடு செய்ய விருப்பமில்லை.

ஏன் நிறுவனங்கள் வங்கியில் அதிகம் கடன் வாங்குவதில்லை, பொது மக்களிடம் பங்கை விற்று பணம் வாங்கி கொள்கிறார்கள், அவர்கள் நம்மை ஒரு பார்ட்னராக அங்கீகரிப்பதால்தான். அந்த பிசினசில் கிடைக்கும் ஒரு தொகையை நமக்கு டிவிடெண்ட் என்று தருகிறார்கள் அதை தவிர அந்த பங்கு நாளடைவில் வளரவும் செய்கிறது. நீண்ட கால அடிப்படையில் ஒரு பிசினஸ் அதிகமாக வளருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

ஒருவர் 1980ல் 10,000 விப்ரோ பங்கில் முதலீடு செய்திருந்தால் இன்றைய மதிப்பு ஏறக்குறைய 500 கோடி. இது மாதிரி நிறைய உதாரணங்கள், ஆனால் ஒருவருக்கும் பொறுமை கிடையாது. எய்சேர் மோட்டார் (EICHER MOTORS) என்பீல்டு புல்லட் தயாரிக்கும் நிறுவனம், அதனுடைய பங்கின் (8/4/2009ல்) மதிப்பு 184 ரூபாய், இன்னும் 5 வருடம் ஆகவில்லை அதனுடைய மதிப்பு Rs.5073. 5073/184=27.5 மடங்கு. இந்தப்பங்கை நாம் வாங்கி இருந்தால் கூட நாம் இவ்வளவு காலம் பொறுமையாக இருக்கமாட்டோம். ஈக்விட்டி முதலீடு ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும், அதை விடுத்தது பணத்தை ப்ராபர்டியில் முதலீடு செய்தால் பணமுடக்கம் ஏற்படும், நாடு முன்னேறாது.

நாம் ஒரே ஒரு கம்பெனியின் பங்கை வாங்கும்பொழுது அது கண்டிப்பாக ஒரு செக்டாரில் தான் இருக்கும். அது மிகவும் ரிஸ்க் அதற்கேற்ப ரிடர்னும் அதிகம். அதே பணத்தை மியூச்சுவல் ஃபண்டின் முதலீடு செய்யும் பொது பல துறையை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்வதால் ரிஸ்க் குறைவு, அதற்கு ஏற்ப ரிடர்னும் கொஞ்சம் குறைவு. இன்று நம் பலதரப்பட்ட வேலையில் மூழ்கி இருப்பதால் மியூச்சுவல் ஃபண்ட் நல்ல தேர்வு.

பெரும்பாலும் இந்த திட்டங்கள் யாவும் 5 முதல் 7 ஆண்டு இணைந்திருக்கவேண்டும். நிறைய பேர் 2008ல் சந்தை உச்சத்தில் இருக்கும்பொழுது தொடங்கி அதுவும் துறை சார்ந்த முதலீடான பவர், இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் முதலியவற்றில் முதலீடு செய்து இதன் மேல் குறை சொல்வது தவறு. இந்த முதலீட்டிற்கு ஒரு ட்ராக் ரிகார்ட் உள்ளது, நீண்ட கால அடிப்படையில் எப்போதுமே நல்ல ரிடர்ன் கொடுத்துள்ளது. ஆனால் கடந்த 6 வருட காலமாக சிறப்பாக செயல்படவில்லை என்பதால் முதலீட்டாளர்க்கும் இதன் பேரில் நம்பிக்கை இல்லை. இது முற்றிலும் தவறான அணுகுமுறை.

எந்த ஒரு முதலீட்டிலுமே நாம் அதிகம் சம்பாதிக்க வேண்டுமானால் எல்லோரும் செய்வதை நாம் செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் அந்த லாபத்தை நாம் நிறைய பேருடன் பங்கிட்டுக்கொள்ளவேண்டும். கடந்த 5 முதல் 6 வருடம் ரியல் எஸ்டேட் நல்ல ரிடர்ன் கொடுத்துள்ளது, வரும் 5 வருடங்களில் இதில் ரிடர்ன் எதிர்பார்ப்பது நல்லதில்லை. ஈக்விட்டி வரும் 5 வருடங்களில் நிறைய லாபம் தருவதற்கான வாய்ப்பு அதிகம்.

நான் ரியல் எஸ்டேட் குறைந்த வாடகை தான் தருகிறது என்றால் நிறைய பேர் அதனுடைய மதிப்பும் கூடுகிறது என்று சொல்கிறார்கள். உதாரணமாக நீங்கள் 5 வருடம் முன்பு ஒரு வீடு வாங்கினீர்கள் என எடுத்துகொண்டால் அதன் மதிப்பு 40 லட்சம். அதற்கு மாதம் 40,000 EMI கடந்த 5 ஆண்டுகளில் ஒருவர் 60*40=24 லட்சம் கட்டியிருப்பார்கள். அது பாதுகாப்பான வங்கி RD 8% வட்டியில் போட்டிருந்தால் அதன் மதிப்பு 29.50 லட்சம். சென்னையை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் எந்த வீடும் 50% உயரவில்லை. அப்படி உயர்ந்தது என எடுத்துக்கொண்டால் அதனுடைய மதிப்பு 60 லட்சம். நம்முடைய 29.5 லட்சம் வட்டியை சேர்த்தால் 69.5 லட்சம் ஆகிவிடும். இன்றைய கால கட்டத்தில் மிக அதிக விலை உள்ளதால் தவிர்க்கவும், முடிந்தால் நீங்கள் கம்மியாக வாங்கி இருந்தால் 2வது, 3ஆவது வீட்டை விற்பதற்கு சரியான தருணம்.

உதாரணமாக எல்லோரும் சனி கிரகத்தை இவ்வாறு சொல்வார்கள், சனியை போல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை. நீண்ட கால முதலீடு சந்தையிலோ அல்லது மியூச்சுவல் ஃபண்டிலோ போட்டால் நிறைய கொடுக்கும் அதைவிடுத்து தினசரி ட்ரேடிங் செய்தால் அல்லது குறைந்த கால முதலீடு நோக்கத்துடன் வந்தாலும் எல்லாவற்றையும் இழக்க வேண்டும். ஈக்விட்டி நமக்கு கிடைத்துள்ள மந்திர சாவி, அதை ஒழுங்காக பயன்படுத்தினால் நம்முடைய எல்லாவிதமான பணக்கஷ்டங்களையும் திறக்ககூடிய சாவி என்று சொன்னால் மிகையாகாது.

No comments:

Post a Comment