நேற்று... இன்று... நாளை!
குடும்ப நிதி ஆலோசனை
''ஒரு
வழியாகப் பொண்ண படிக்க வச்சு ஆளாக்கியாச்சு. மகன் விருதுநகரில்
இன்ஜினீயரிங் இரண்டாம் வருஷம் படிச்சிட்டு இருக்கான். இனி என் தேவையெல்லாம்
என்னுடைய ரெண்டு புள்ளைங்களுக்கும் கல்யாணம் செஞ்சு கண் குளிர
பார்க்கணும்ங்கறதுதான். அதுக்குத் தேவைப்படும் பணத்துக்கு முதலீட்டை
ஆரம்பிக்கணும். எதிர்கால தேவைகளுக்கும் கொஞ்சமா பணத்தச் சேர்த்து
வைக்கணும். எதுல முதலீடு செஞ்சா அதிக வருமானம் கிடைக்கும்னு சொல்லுங்க''
என ஆலோசனைக் கேட்டு வந்திருந்தார் மதுரையில் அரசு நிறுவனமொன்றில் வேலை
பார்த்து வரும் வாசுதேவன்.
இவருக்கு
மாதச் சம்பளம் 59,000 ரூபாய். பிடித்தம் போக 42,000 ரூபாய் கையில்
கிடைக்கிறது. வீட்டு வாடகை மூலம் 12,000 ரூபாய் கிடைக்கிறது. மனைவி சாந்தி
குடும்பத்தலைவி. மகள் கார்த்திகாயினி எம்.பி.ஏ. முடித்துவிட்டு, தற்போது
10,000 ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர உள்ளார். ஆக, குடும்பத்தின் மொத்த
வருமானம் 64,000 ரூபாய்.
''எங்களோட மாதச் செலவு 17,000 ரூபாய். ஏற்கெனவே
எனக்கும், என் மனைவிக்கும் இரண்டு பாலிசிகளை (கவரேஜ் ரூ.5 லட்சம்) எடுத்து
வச்சிருக்கேன். இதுக்காக கட்டும் பிரீமியம் வருஷத்துக்கு 51,000 ரூபாய்.
பொண்ணு கல்யாணத்துக்காக நாலு லட்ச ரூபாய்க்கு சீட்டு போட்டிருக்கேன்.
இன்னும் 18 மாதத்துல சீட்டு முடிஞ்சிடும்.
இதுபோக எதிர்காலச் சேமிப்புக்கு மீதமிருக்கக்கூடிய
தொகைன்னு பார்த்தா 34,450 ரூபாய். இதை கொண்டு என்னுடைய எதிர்காலத் தேவைகளை
நிறைவேற்ற நீங்கதான் வழி காட்டணும்'' என்றவருக்கு ஆலோசனை சொல்கிறார் நிதி
ஆலோசகர் பி.பத்மநாபன்.
''பொறுப்புகளை ஓரளவுக்கு நிறைவேற்றி வரும் வாசுதேவன் தனது தேவைகளை சுலபமாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.
ஐந்து லட்சம் கவரேஜ் கொண்ட இரண்டு பாலிசிகளுக்கு இவர் கட்டும் பிரீமியம் அதிகம். எனவே, இவற்றை உடனே சரண்டர் செய்துவிடுவது நல்லது.
இன்னும் இரண்டு வருடத்தில் ஓய்வுபெறப் போவதால்,
இவருக்கு லைஃப் இன்ஷூரன்ஸ் தேவையிருக்காது. குடும்ப உறுப்பினர்கள்
அனைவருக்கும் சேர்த்து அலுவலகத்தில் ஹெல்த்கவர் இருக்கிறது என்றாலும்,
இன்னும் 3 லட்ச ரூபாய்க்கு ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க வேண்டும்.
மகளின் திருமணம்!
மகளுக்கு இன்னும் ஓரிரு வருடங்களில் திருமணம் செய்ய
நினைக்கிறார். அதற்காக தங்க நகைகளை ஏற்கெனவே சேர்த்து வைத்துவிட்டதால்,
திருமணச் செலவுக்காக எட்டு லட்சம் தேவை என்றார். எதிர்கால முதலீட்டிற்காக
மீதமிருக்கும் 34,450 ரூபாயிலிருந்து 32,000 ரூபாயை எடுத்து 8% வருமானம்
எதிர்பார்க்கக்கூடிய லிக்விட் ஃபண்டுகளில் ஓராண்டுக்கு முதலீடு செய்யலாம்.
இதன் மூலம் கிடைக்கும் வருமானம் நான்கு லட்சம், சீட்டிலிருந்து கிடைக்கும்
நான்கு லட்சம் என எட்டு லட்சம் ரூபாயில் திருமணத்தை முடிக்கலாம்.
மகனின் திருமணம்!
மகன் விஸ்வநாத் கல்விக் கடன் மூலம் படிப்பதால் தனக்கு
பெரிய செலவு எதுவுமில்லை என்றார் வாசுதேவன். இன்னும் இரண்டு வருடத்தில்
மகன் வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கும்போது கிடைக்கும் வருமானத்தில் ஒரு
பகுதியை பயன்படுத்தி கல்விக் கடனை அடைத்துவிடலாம். அந்நேரத்தில் மகளுக்கு
திருமணம் நடந்திருக்கும் என்பதால், மகனுடைய வருமானம் குடும்பத்துக்கு கை
கொடுக்கும்.
மகனுக்கு 27 வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும்
என்பதால், கார்த்திகாயினியின் திருமணத்திற்கான முதலீடு முடிந்ததும் அந்த
32,000 ரூபாயிலிருந்து 7,000 ரூபாயை எடுத்து 15% வருமானம்
எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில்
தொடர்ந்து 76 மாதங்கள் முதலீடு செய்துவர வேண்டும். இதன் மூலம் 9 லட்ச
ரூபாய் கிடைக்கும். இதை பயன்படுத்தி மகனின் திருமணத்தை முடிக்கலாம்.
ஓய்வுகாலத்திற்கு..!
மகனின்
திருமணத்துக்கான முதலீடு 7,000 ரூபாய் போக மீதமிருக்கும் 25,000 ரூபாயை
ஓய்வுகாலத்திற்காக முதலீடு செய்ய வேண்டும். 12% வருமானம்
எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் 36 மாதங்கள் முதலீடு
செய்தால் 10.87 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்து விடுவதால் அதற்காக
கட்டி வந்த மாத பிரீமியம் 4,250 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய
பேலன்ஸ்டு ஃபண்டுகளில் 48 மாதங்கள் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம்
கிடைக்கும் வருமானம் 2.62 லட்சம் ரூபாய்.
இன்னும் 18 மாதங்களில் சீட்டு முடிந்த பிறகு 8,300
ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் 30
மாதங்கள் முதலீடு செய்வதன் மூலம் 2.91 லட்ச ரூபாய் கிடைக்கும். ஆக,
ஓய்வுகாலத்தின்போது ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் மொத்த வருமானம்
16.40 லட்சம் ரூபாய்.
இத்தொகையை பாதுகாப்பான இடத்தில் முதலீடு
செய்வதால் மாதம் 15,000 ரூபாய் கிடைத்துக் கொண்டிருக்கும். தவிர, மாதம்
பென்ஷனாக 30,000 ரூபாயும், வீட்டு வாடகை மூலம் 12,000 ரூபாயும் கிடைக்கும்.
இதை பயன்படுத்தி ஓய்வுகாலத்தை நிம்மதியாக கழிக்கலாம்.
ஓய்வுகாலத்திலும் மகனின் திருமணத்திற்காக முதலீடு செய்ய
வேண்டியிருப்பதால் முதலீடு செய்தது போக மீதமிருக்கும் தொகையில் செலவு
செய்து கொள்வது உத்தமம். வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment