பணவீக்கமும் முதலீடும்
பணவீக்கம் என்பது முன்பு 100 ரூபாய் கொடுத்து வாங்கிய பொருட்களின் விலை 108 ஆகிவிட்டால், பணவீக்கம் எட்டு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என்று அர்த்தம்.
பணவீக்கத்தை கணக்கிட இரண்டு முறைகள் உலகம் முழுவதும் பின்பற்றப்படுகின்றன,
1 . மொத்த விற்பனை விலைப் பட்டியல் பணவீக்கம் (Wholesale Price Index Inflation - சுருக்கமாக WPI)
2 . நுகர்வோர் விலைப் பட்டியல் பணவீக்கம் (Consumer Price Index Inflation - சுருக்கமாக CPI)
நமது இந்தியாவில் மொத்த விற்பனை விலைப் பட்டியல் பணவீக்கம் (WPI) முறையை உபயோகப்படுத்துகின்றனர். வளர்ந்த நாடுகளில் நுகர்வோர் விலைப் பட்டியல் பணவீக்கம் (CPI) முறையைப் பயன்படுத்துகின்றனர். நாம் பின்பற்றுவது தவறான முறையாகும்.
நாம் முதலீடு செய்யும் பொழுது முக்கியமாக கவனிக்கவேண்டியது, நம்முடைய முதலீடு பணவீக்கத்தை கட்டுப்படுத்துமா இல்லையா என்பதுதான்.
நம் நாட்டில் உள்ள பெரும்பாலான வைப்பு நிதித் திட்டங்கள் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில்லை. மேலும் பணவீக்கத்தின் தாக்கம் எவ்வளவு பெரியது என்பதையும் பெரும்பாலானவர்கள் உணர்வதில்லை. ஒரு வேளை நம்மவர்கள் உணர்ந்திருந்தால் அப்படி உணர்ந்தால் மேலும் மேலும் வைப்பு நிதித் திட்டத்தில் மக்கள் பணத்தை போட மாட்டார்கள். மார்ச் 31, 2012ல் வைப்பு நிதி இந்தியா முழுவதும் ரூ. 64 லட்சம், கோடி!
மாதம் ரூ.10,000 செலவு செய்யும் குடும்பத்திற்கு பணவீக்கம் 8% ஆனால், அடுத்த வருடம் செலவிற்கு ரூ.10,800 அதாவது ரூ. 800 கூடுதலாகத் தேவைப்படும். இது இல்லாதவர்கள் எப்படிச் சமாளிப்பது என்கிறீர்களா? இரண்டே வழிகள்தான். ஒன்று, வாங்கும் அளவைக் குறைத்துக்கொள்வது (கோபப்படாதீர்கள்). அல்லது கடன் வாங்குவது (இதற்கு மேல் யார் தருவார் என்கிறீர்களா!).
மேற்சொன்ன ஒரு குடும்பத்தின் மாதாந்திர செலவு 10,000 ரூபாய் என்பது ஒரு முப்பது வயதுடைய ஆண் என எடுத்து கொண்டால் அவருடைய 60 வயதில் (ஓய்வு காலத்தில்) அந்த 10,000 ரூபாய், 8% பணவீக்கத்தில் எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள், மூச்சை பிடித்து கொள்ளுங்கள், அதிகமில்லை வெறும் 1,00,626 ரூபாய்! மாதா மாதம் 1,00,626 ரூபாய் வேண்டும் என்றால் நம்முடைய கணக்கில் குறைந்தது ரூ. 1.5 கோடி நம்மிடம் இருக்க வேண்டும்.
அதே போல இன்று பொறியியல் படிப்பிற்கு வருடம் 1.5 லட்சம் வரை ஆகிறது. மொத்தமாக 6 லட்சம். இன்று குழந்தைக்கு 3 வயது என எடுத்துக்கொண்டால் இன்னும் 15 ஆண்டு கழித்து அதாவது குழந்தையின் 18 வயதில் தேவைப்படும் தொகை 19 லட்சம் ரூபாய். இதைக்கண்டு நாம் பயப்படத்தேவை இல்லை, நாம் இன்றே சேமிக்க தொடங்கினால். இதே மாதிரி இன்று ஒரு திருமனத்திற்கு ஆகும் செலவை 15 லட்சம் என்று எடுத்துக்கொண்டால் 8% பணவீக்கத்தில் இன்னும் 20 வருடங்களில் அதே தொகை 70 லட்சம் ரூபாய். இந்த உதாரணங்கள் உங்களை அச்சுறுத்துவதற்காக இல்லை, நீங்கள் அறிந்து கொள்வதற்கே!
நிறைய முதலீட்டாளர்கள் இதைப் புரிந்தது கொள்ளாமல் நான் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்துள்ளேன் அது எனக்கு கை கொடுக்கும் என்று நினைக்கிறார்கள். பெரும்பாலான எண்டோமென்ட் பாலிசி நாம் கட்டும் பிரீமியத்தை போல இன்னொரு மடங்கு தான் கொடுக்கிறார்கள். அது கொஞ்சம் கூட பத்தாது. உதாரணமாக 20 வருடங்களில் 2 முதல் 2.25 மடங்கு அதிகரிக்கும். ஒருவர் 5,000 ரூபாய், ஆண்டுதோறும் கட்டினால் அவருக்கு பாலிசியின் முதிர்வின் போது 2.25 லட்ச ரூபாய்தான் கிடைக்கும், அந்த தொகை 8% பணவீக்கமாக எடுத்துக்கொண்டால் அதனுடைய இன்றைய மதிப்பு வெறும் 48,273 ரூபாய் தான்.
எந்த ஒரு வைப்பு திட்டத்திலும் நமக்கு நிரந்தர வருமானம் தான் கிடைக்கிறது, ஆனால் நம்முடைய பணவீக்கமோ ஆண்டுக்கு ஆண்டு கூட்டு வட்டியில் ஏறுகிறது. 5 அல்லது 6 ஆண்டுகளில் நாம் நம்முடைய முதல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். மேலும் மருத்துவத்தின் வளர்ச்சியினால் நாம் 80 வயது வரை வாழக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
மேலும் ரிஸ்க் என்பது எவ்வளவு காலம் என்பதை பொருத்தது. ஒரு டம்ளர் கிளாஸ் கொஞ்ச நேரம் கையில் வைத்திருந்தால் கை வலிக்காது அதுவே ஒரு நாள் என்றால் கை வலி வந்துவிடும். அதே போல ஓரிரு வருடங்கள் என்றால் நாம் வைப்பு நிதி திட்டங்களை அணுகலாம். அதுவே 10 முதல் 15 வருடம் என்றால் கொஞ்சம் ரிஸ்க் இருக்கும் முதலீட்டு திட்டங்களை நோக்கிச் செல்லலாம்.
பணத்தை முதலீடு செய்யும் பொழுது நீங்கள் ஒரே ஒரு கேள்வியை மட்டும் உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள், இந்த முதலீடு நம்முடைய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துமா என்று கேட்டுக்கொள்ளுங்கள். பாதுகாப்பானது என்று நினைத்து மட்டும் முதலீடு செய்ய வேண்டாம்.
இன்று நாம் எல்லாவற்றையும் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள இணையம் இருக்கிறது. எந்த ஒரு முதலீடு என்றாலும் அதைப் பற்றி சிறிது அறிந்து கொண்டு செய்வது நல்லது. ஆனால் எல்லோரும் அந்த முகவர் இதைச் சொன்னார், இவர் அதைச் சொன்னார் என்றால் இழப்பு என்னவோ நமக்குத்தான். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யும் போது கொஞ்சம் பொறுப்போடு இருக்கவேண்டும்.
பி.பத்மநாபன் - தொடர்புக்கு: padmanaban@fortuneplanners.com
No comments:
Post a Comment