Pages

Sunday, 29 January 2012

My Fifth Article in Financial Planning Appeared in Naanayam Vikatan 29th January 2012

நேற்று... இன்று... நாளை! 
 
குடும்ப நிதி ஆலோசனை
''எங்கள் வீட்டில் நாங்கள் இருவருமே வேலைக்குப் போய் சம்பாதிக்கிறோம். எங்களுக்கு ஒரே மகன் ரித்திஸ்ராம். தனியார் பள்ளியில் ப்ரீ கேஜி படித்து வருகிறான். எங்களுக்கு குடும்ப நிதி ஆலோசனை சொல்லுங்களேன்'' என்று கேட்டார்கள் கோவை தினேஷ்-விஜி தம்பதியினர்.
கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தினேஷ§க்கு பிடித்தம் போக மாதச் சம்பளம் 40,000 ரூபாய். மனைவி விஜி அதே ஊரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து, மாதம் 20,000 ரூபாய் சம்பாதிக்கிறார். தவிர, வீட்டு வாடகை மூலம் 9,000 ரூபாய் வருகிறது.
''குடும்பச் செலவுகள், வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ., சேமிப்பு எல்லாம் சேர்த்து இன்றைய நிலையில் 25,100 ரூபாய் செலவாகிறது. மீதமிருக்கும் 43,900 ரூபாயிலிருந்து மகன் ரித்திஸ்ராமின் கல்விக்கும் கல்யாணத்துக்கும் தேவைப்படும் தொகையைச் சேர்க்க முதலீடு செய்ய வேண்டும். கோவையில் இன்னும் ஐந்து வருடத்தில் முப்பது லட்ச ரூபாயில் வீடு வாங்க வேண்டும். உறவினர்களிடம் வாங்கி இருக்கும் கடன்  (வட்டியில்லை) நான்கு லட்ச ரூபாயை ஐந்து வருடத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்திய கார் ஒன்றை வாங்க வேண்டும். இதுபோக ஓய்வு காலத்தில் மாதம் 20,000 ரூபாய் வருமானம் வருகிற மாதிரி முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும். இதற்கெல்லாம் நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும்'' என்றவர்களுக்கு, நிதி ஆலோசனை சொல்லத் தயாரானார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.
''எத்தனையோ கஷ்டங்களுக்கு இடையில் வேலைக்குச் சென்று உற்சாகமாக சம்பாதிக்கும் தினேஷ்-விஜி தம்பதியினர் சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்து வருவது சிறப்பான விஷயம். வருமானம் நிறையவே இருப்பதால் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள எந்த ஃபண்டில், எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதை விளக்கமாகப் பார்க்கலாம்...
இன்ஷூரன்ஸ்!
தம்பதிகள் இருவரும் வேலைக்குச் சென்று சம்பாதித்து வருவதால் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். தினேஷ் குமார் 60 லட்ச ரூபாய்க்கும், விஜி 26 லட்ச ரூபாய்க்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வது அவசியம். இருவருக்குமான பாலிசிக்கு வருட பிரீமியம் 18,000 ரூபாய்தான் கட்ட வேண்டிவரும்.
இந்த டேர்ம் இன்ஷூரன்ஸுக்கான பிரீமியத்தைக் கட்ட தேவைப்படும் பணத்திற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பட்சத்தில், இவர் ஏற்கெனவே இரண்டு எண்டோவ்மென்ட் பாலிசிகளை எடுத்து வைத்திருக்கிறார். இந்த பாலிசிகளினால் கிடைக்கக் கூடிய குறைவான கவரேஜுக்காக வருடம் ஒன்றிற்கு 17,600 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார். எனவே இந்த பாலிசிகளின் மூலம் எந்தவொரு பிரயோஜனமும் இவருக்கு இல்லை என்பதால் இதை உடனே சரண்டர் செய்வது நல்லது.
இதுவரை இதற்காக கட்டி வந்த பிரீமியம் தொகையை இனிமேல் டேர்ம் இன்ஷூரன்ஷூக்கான பிரீமியத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதேபோல் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து ஐந்து லட்ச ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் (ஃப்ளோட்டர் பாலிசி) எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதற்கு ஆண்டு பிரீமியம் 10,300 ரூபாய் கட்ட வேண்டிவரும்.  இதற்கான பிரீமியத்திற்கு எதிர்கால முதலீட்டிற்காக மீதமிருக்கும் தொகையிலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

கல்விக்கு..!
மகனை பி.இ. படிக்க வைக்க இன்னும் 14 வருடம் கழித்து 17 லட்சம் ரூபாய் தேவை.  இதற்காக மாதம் 3,000 ரூபாயை ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் இப்போதே முதலீடு செய்ய ஆரம்பித்துவிடலாம். கிடைக்கக்கூடிய 17 லட்ச ரூபாய் வருமானத்தை பயன்படுத்தி ரித்திஸ்ராமை நல்ல கல்லூரியில் படிக்க வைக்கலாம்.
கல்யாணத்துக்கு..!
மகனுக்கு 25 வயதில் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார். இன்னும் 22 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்ய குறைந்தது 25 லட்சம் ரூபாய் தேவை. அதனால் இப்போதே மாதம் 1,000 ரூபாயை
15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீடு 22 ஆண்டுகள் தொடர்ந்தால் சுமார் 20.45 லட்ச ரூபாய் கிடைக்கும்.
படிப்புக்கான முதலீடு 14 ஆண்டுகளில் முடிந்துவிடும். அதன்பிறகு அதற்காக செய்துவந்த 3,000 ரூபாயை தொடர்ந்து எட்டு ஆண்டுகள் கல்யாணத்துக்காக முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டிலிருந்து கிடைக்கக்கூடிய 5.58 லட்ச ரூபாயையும் சேர்த்து கிடைக்கும் 26 லட்ச ரூபாயை பயன்படுத்தி மகனின் திருமணத்தை அமர்க்களமாக நடத்தி முடிக்கலாம்.

கார் வாங்க..!
இன்னும் இரண்டு வருடத்தில் பழைய கார் ஒன்றை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்கு 1.5 லட்சம் ரூபாய் தேவை என்று சொன்னார்.
இன்றிலிருந்து மாதம் 6,000 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். கிடைக்கக்கூடிய 1.6 லட்ச ரூபாயை பயன்படுத்தி நல்ல தரமான பழைய காரை வாங்கிக் கொள்ளலாம்.
வீடு வாங்க..!
இன்னும் 5 வருடத்தில் 30 லட்ச ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றை வாங்க வேண்டும் என்கிறார். வீடு என்பது குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று. குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகையை ஈட்ட முடியாது என்பதால், மேலே சொன்ன எதிர்கால முதலீட்டிற்குப் போக மீதமிருக்கும் 22,000 ரூபாயை எடுத்து ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டின் மூலம் 19.73 லட்ச ரூபாய் கிடைக்கும். 
உறவினர்களிடமிருந்து வாங்கியிருக்கும் வட்டியில்லா கடன் நான்கு லட்ச ரூபாயை ஐந்து ஆண்டுகளுக்குள் திருப்பித் தரவேண்டும் என்கிறார். அதனால் இன்றிலிருந்து மாதம் 8,000 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்துவந்தால் 6.60 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆக, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கக் கூடிய மொத்த தொகை சுமார் 26.33 லட்ச ரூபாய்.
இன்றைய ரியல் எஸ்டேட் விலை நிலவரத்தை வைத்து பார்க்கும்போது கோவை நகரத்தில் இன்று 30 லட்சம் ரூபாய் விலை கொண்ட ஃபிளாட்கள் இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து 40 லட்சம் ரூபாய் அளவுக்கு உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதனால் மேலே சொன்ன மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கக்கூடிய 26.33 லட்சத்திலிருந்து நான்கு லட்சம் ரூபாயை எடுத்து உறவினர்களிடமிருந்து வாங்கியிருக்கும் கடனை அடைத்துவிட்டு மீதமிருக்கும் 22.33 லட்சம் ரூபாயை வீடு வாங்க முன்பணத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மீதி தேவைப்படும் 17.67 லட்சம் ரூபாய்க்கு வீட்டுக் கடன் வாங்கிக் கொள்ளலாம். இதற்காக மாதம் அதிகபட்சமாக 22,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்ட வேண்டியிருக்கும். இந்த பணத்திற்கு என்ன செய்வது என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை. இதுவரை வீடு வாங்க முன்பணத்துக்காக முதலீடு செய்து வந்த 22,000 ரூபாயை இ.எம்.ஐ. கட்ட பயன்படுத்திக் கொள்ளலாம்.  

ஓய்வுகாலத்திற்கு..!
தனது 55-வது வயதில் ஓய்வுபெற விரும்புகிறார் தினேஷ்.  ஓய்வு காலத்திற்குப் பிறகு மாதம் 80,000 வருமானம் இருந்தால்தான் இன்றுபோல் அன்றும் செலவு செய்து சிறப்பாக வாழ முடியும்.
அதற்காக மாதம் 6,000 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டை இரு ஆண்டுகள் கழித்து காருக்காகச் செய்து வந்த முதலீடு முடிந்ததும் ஆரம்பிக்கலாம். 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் 21 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் கிடைக்கக்கூடிய தொகை 1.05 கோடி ரூபாய். இதை ரிஸ்க் இல்லாத முதலீட்டில் போட்டு வைப்பதன் மூலம் மாதம் 80,000 ரூபாய் கிடைக்கும். இதை வைத்துக் கொண்டு ஓய்வுகாலத்தை மகிழ்ச்சியாக கழிக்கலாம்.
பங்குகளிலும் முதலீடு செய்யலாம்!
இவரது எல்லாத் தேவைகளையும் மேலே சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளின்படி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். அதனால் ஏற்கெனவே செய்து வரும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை நிறுத்திவிடலாம். பின்னர், அதில் முதலீடு செய்து வந்த 4,000 ரூபாயை பேங்க் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யலாம். இந்த முதலீடு நீண்ட காலம் தொடர்ந்தால் பிற்காலத்தில் அந்த பங்குகளின் மூலம் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. செழிப்புடன் வாழ வாழ்த்துகள்!

No comments:

Post a Comment