நிதி நிர்வாகம் தந்த நிம்மதி !
சறுக்கலை சரிசெய்த சவாலான நிதித் திட்டமிடல்!
''மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு டாக்டர் என்னிடம் நிதி ஆலோசனைக் கேட்டு வந்தார். அவர் பெயர் நரசிம்மன் (40 வயது), மிகவும் பிரபலமான டாக்டர். அவர் மனைவியின் பெயர் ரஞ்சனி (35 வயது). அவர்களுக்கு அகிலா
(8 வயது), கண்ணன் (6 வயது) என இரண்டு குழந்தைகள்.
நரசிம்மனுக்கு கிளினிக்கில் மாதம் 1 லட்சம் ரூபாய் வரை வருமானம் வரும். தவிர, ஆபரேஷன் செய்வதன் மூலம் 50,000 ரூபாய் வரை கிடைக்கும். அவருக்கு தெரிந்த முதலீடு என்றால் ரியல் எஸ்டேட் ஒன்றுதான். நகரின் பல பகுதிகளில் நிறைய இடங்களை வாங்கிப்போட்டிருக்கிறார். கொஞ்ச பணம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளிலும், கொஞ்ச பணம் பேங்க் டெபாசிட்டிலும் போட்டு வருகிறார்.
நிதி ஆலோசகரை அணுகுதல்!
சரியான நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளாமல், அவராகவே தனக்கு தெரிந்த அளவில் சேமிப்பு, முதலீடு என்பவற்றை செய்து வந்துள்ளார். பின்னர் அது சரிவராது என்று தோன்றவே என்னைத் தேடி வந்திருக்கிறார். 'நான் சொல்லும் ஆலோசனை களை நீங்கள் பின்பற்றுவதில் சீரியஸாக இருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். ''ஆமாம்'' என்ற பிறகே அவருக்கு ஆலோசனை தர முடிவெடுத்தேன். ''உங்கள் நிதி தொடர்பான தகவல்களைத் தரமுடியுமா? என்று கேட்டேன். அதற்கு அவர், ''அந்த டீடெய்ல்ஸ் எல்லாம் என் அசிஸ்டென்ட் உங்களுக்குத் தருவார்'' என்றார். இப்படித்தான் பலரும் அவர்களின் மிக முக்கியமான விஷயங்களைக்கூட கவனிக்க நேரமில்லாமல் வருமானம் ஈட்டுவதிலேயே காலத்தைக் கடத்துகிறார்கள். பணத்தை சரியாக நிர்வகிக்கத் தெரியாமலும், முடியாமலும் போவதற்கு இந்தக் குணநலன்களும் காரணமாக அமைந்து விடுகின்றன.
''உங்கள் மனைவிக்கும் சில கனவுகள் இருக்கும். அதேபோல, உங்கள் குழந்தைகளுக்கும் சில ஆசைகள் இருக்கும். நிதித் திட்டமிடல் என்பது குடும்பத்தில் உள்ள எல்லோருடைய தேவைகள் மற்றும் அவரவர்களின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றும் எதிர்காலத் திட்டம்தான். அதனால்தான் உங்கள் மனைவி யையும் குழந்தையையும் வீட்டில் இருக்கச் சொல்கிறேன்!'' என்று விளக்கம் தந்தேன். அவருடைய நிதி சார்ந்த விவரங்களையும் எதிர்காலத் தேவைகளையும் என்னிடம் கொடுக்க கிட்டத்தட்ட ஒரு மாத காலம் எடுத்துக்கொண்டார் அவர்.
பாதுகாப்பு!
''நான் இன்ஷூரன்ஸுக்கு மட்டும் ஆண்டுக்கு 4.8 லட்சம் ரூபாய் பிரீமியம் கட்டுகிறேன். அதுல நான் எந்தக் குறையும் வைக்கவில்லை'' என்று பெருமையாகச் சொன்னார். ''எவ்வளவு பணம் கட்டுகிறீர்கள் என்பது முக்கியமில்லை, எவ்வளவு கவரேஜ், அதாவது நாம் நாளை இல்லாமல் போனால் நம்முடைய குடும்பத்துக்கு என்ன பணம் கிடைக்கும் என்பதே முக்கியம். நீங்கள் மாதம் 1.5 லட்சம் சம்பாதிக்கிறீர்கள். உங்கள் மனைவி ஓர் இல்லத்தரசி. அவர்கள் வேலைக்குச் செல்லவில்லை. உங்களுடைய பாலிசியில் வெறும் 20 லட்சம்தான் கிடைக்கும். அதை வங்கியில் போட்டால் மாதம் வட்டி வருமானம் அதிகபட்சமாக 20,000 ரூபாய்தான் கிடைக்கும். எனவே, தேவையற்ற பாலிசியைத் தவிர்த்து, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால் நல்லது'' என்று விளக்கிச் சொன்னவுடன் டேர்ம் இன்ஷூரன்ஸின் அவசியம் பற்றி புரிந்துகொண்டார். கையில் இருக்கும் சேமிப்பைப் பயன்படுத்தி தேவையான அளவுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் எடுத்துக்கொண்டார்.
மெடிக்ளைம் பாலிசி!
எவ்வளவு லட்சம் ரூபாய்க்கு மெடிக்ளைம் பாலிசி எடுத்துள்ளீர்கள் என்றதற்கு, ''நான் டாக்டர். நான் எதற்கு மெடிக்ளைம் பாலிசி எடுக்க வேண்டும்?'' என்று கேட்டார். உடனே, ''நீங்கள் டாக்டர் என்றால் உங்களுக்கு நோய் எதுவும் வராதா?'' என்று கேட்டேன். ''வரும், வந்தால் நான் பார்த்துக்கொள்வேன்'' என்றார். ''சின்னச் சின்ன வியாதி என்றால் ஓகே; பெரிய நோய் என்றால் நிறைய பணம் தேவைப்படுமே!'' என்று விளக்கமாக நான் எடுத்துச் சொன்னபிறகே, மெடிக்ளைம் பாலிசியை எடுக்க ஒப்புக்கொண்டார்.
நீண்ட கால இலக்குகள்!
சுமார் நான்கு மணி நேரம் அவரோடு பேசி முடித்த பிறகு அவர்களுடைய இலக்குகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொண்டேன்.
* சொந்தமாக கிளினிக் ஒன்று அவர் வசிக்கும் நகரத்தில் இன்னும் 5 வருடத்தில் தொடங்க வேண்டும். அதை முதலில் சில உள்ளூர் டாக்டர்களை வைத்து நடத்த வேண்டும். தனது 60 வயதில் அங்கு செட்டில் ஆகி அங்குதான் சர்வீஸ் செய்ய வேண்டும்.
60 வயதில் ரிட்டையர் ஆகவேண்டும், அப்பொழுது கையில் குறைந்தது 3 கோடி ரூபாய் வேண்டும்,
ரஞ்சனி இன்னும் 6 வருடத்தில் ஏழை குழந்தை களுக்கு கட்டணம் வாங்காமல் பாட்டு சொல்லித் தரவேண்டும், அதற்கு வீட்டின் மாடியில் ஒரு பெரிய அறை ஒன்று கட்ட வேண்டும்.
அகிலாவுக்கு பாட்டில் ஈடுபாடு இருப்பதால் அவளை பெரிய கர்நாடகப் பாடகியாக ஆக்க வேண்டும்.
கண்ணனை ஒரு சிறந்த கிரிக்கெட் அகாடமியில் சேர்த்து அவனை இந்தியாவுக்கு விளையாட வைக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக செலவை எப்படி கட்டுப்படுத்துவது என்று கேட்டார். வருகிற வருமானத்தை வீணாகச் செலவழிக்காமல் முறையாக முதலீடு செய்ய கற்றுத் தந்தேன். முதலீடுகளை ஆரம்பித்து அதைத் தொடர்ந்து செய்யச் சொன்னேன்.
சீரான வாழ்க்கை, சிறப்பான முதலீடு!
உங்களுடைய இலக்குகளில் உங்களுடைய பெண் பெரிய பாடகி ஆகவும், உங்கள் மகன் பெரிய கிரிக்கெட்டர் ஆகவும் நாம் முயற்சிக்க லாம். இருப்பினும் அவர்களுக்கு கண்டிப்பாக ஒரு டிகிரி படிப்பு தேவை என்பதால், அதற்காக முதலீட்டை மேற்கொள்வதும், அவர்களின் திருமணத்துக்கான முதலீட்டை செய்வதும் அவசியமல்லவா என்பதை அவரிடம் கேட்டதற்கு ''ஆமாம்'' என்றார். ஆக, அதற்காக முதலீட்டையும் நீங்கள் செய்ய வேண்டும் என்றால், செய்கிற முதலீட்டில் ஒழுக்கம் அவசியம் என்றேன்.
அதேபோல, உங்களுடைய கிளினிக், ரிட்டையர்மென்ட் பணம் மற்றும் உங்களுடைய மனைவியின் சங்கீதப் பள்ளி ஆகியவையும் கண்டிப்பாக நிறைவேறும் வகையில் முதலீடுகளைச் செய்யுங்கள் என்று அனைத்து தேவைகளுக்குமான முதலீட்டை ஏற்படுத்தித் தந்தேன்.
இன்றைய நிலையில் சிறப்பாக முதலீடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் செய்தி ருக்கும் முதலீட்டுத் திட்டங்களும் அவர்களுக்கு நல்ல வருமானத்தை வழங்கி வருகிறது. வருடா வருடம் போர்ட்ஃபோலியோ ரிவியூவிற்கு ஜூன் மாதம் ஒன்றாம் தேதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இன்று அவர்களுடைய வாழ்க்கைத் தரம் கூடியுள்ளது. குடும்பத்துக்காக நிறைய நேரம் ஒதுக்குகிறார்கள். நேரம் கிடைக்கும்போது நரசிம்மனே தன் மகனை கிரிக்கெட் பயிற்சிக்கும், பெண்ணை பாட்டு வகுப்புக்கும் அழைத்துச் செல்கிறார். ஓய்வு நேரத்தில் மனைவியைப் பாடச் சொல்லி கேட்கிறார். பெண் நன்றாகப் பாடுகிறாள், நிறைய போட்டியில் கலந்துகொண்டு பரிசுகளை வெல்கிறாள். அடுத்த வருடம் பெண்ணுக்கு பாட்டு அரங்கேற்றம் செய்ய போகிறார்கள். முதலீடுகளை இலக்கிற்கேற்ப மியூச்சுவல் ஃபண்டு, ஷேர், வங்கி டெபாசிட் என பிரித்து முதலீடு செய்து, நிம்மதியாக இருக்கிறார்கள். அதுதானே அவர்களின் தேவை!
No comments:
Post a Comment