நேற்று... இன்று... நாளை!
''எனக்கு
கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆச்சு. எங்களுக்கு குழந்தை இல்லை. நானும் என்
மனைவியும் குழந்தை பேறுக்காக மருத்துவம் பார்க்கலாம்னு இருக்கோம். ரெண்டு
வருஷ மருத்துவத்துக்கு மொத்தம் ரெண்டு லட்ச ரூபாய் (மாதம் 8,600 ரூபாய்)
தேவைப்படும். தங்கச்சி கல்யாணத்துக்காக வாங்கிய கடன், தனிநபர் கடன், நகைக்
கடன், கார் கடன்னு மொத்தம் 14.35 லட்சம் ரூபாய் வாங்கியிருக்கேன். இதுக்கு
மட்டுமே மாசம் 29,500 ரூபாய் இ.எம்.ஐ. கட்டிட்டு வர்றேன். அதனால்
சம்பாத்தியம் இ.எம்.ஐ. கட்டவும், குடும்பச் செலவுக்குமே சரியா போயிடுது.
வக்கீலாக இருக்கும் இவருக்கு 35 வயது. மாதச் சம்பளம்
55,000 ரூபாய்; பிடித்தம் போக 49,500 ரூபாய். இதுபோக பகுதி நேர வேலை மூலம்
15,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. மனைவி சங்கீதா விரிவுரையாளர். தற்போது
வீட்டில் இல்லத்தரசியாக இருந்து வருகிறார். அடுத்த மாதம் முதல் டியூஷன்
எடுக்கப் போவதாகச் சொல்கிறார். இதன் மூலம் 5,500 ரூபாய் வருமானம் வரக்
கூடும். ஆக, அடுத்த மாதத் திலிருந்து குடும்பத்தின் மொத்த வருமானம் 70,000
ரூபாய்.
எப்படி
திட்டமிட்டால் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்..? ஜன.நாராயண விக்னேஷ்வரன்
குடும்பத்துக்கு திட்டமிட்டுத் தருகிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.
''இவருடைய குடும்பச் செலவுகள் மொத்தம் 18,700 ரூபாய்.
ஒரு லட்சம், 1.5 லட்சம் என இரண்டு சீட்டு போட்டு வருகிறார். இதற்காக மாதம்
10,900 ரூபாய் சேமித்து வருகிறார். கடனுக்கான இ.எம்.ஐ. 29,500 ரூபாய்
போய்விடுகிறது. மீதம் இருக்கும் 10,900 ரூபாயில் இன்றிலிருந்து தொடர்ந்து
இரண்டு ஆண்டுகளுக்குத் தேவைப்படும் மருத்துவச் செலவுகளுக்கு மாதம் 8,600
ரூபாய் எடுத்து வைக்க வேண்டும். மீதியிருக்கும் 2,300 ரூபாயை புதிதாக
எடுக்கப் போகும் இன்ஷூரன்ஸ் பிரீமியத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதனால் எதிர்கால முதலீட்டுக்கென துளிகூட பணம் கிடையாது. அதற்காக
எதிர்காலத்துக்கு முதலீடு செய்யாமல் இருக்க முடியாது.
அதற்கான வழிகளை பார்ப்போம்.!’
இன்ஷூரன்ஸ்!
ஏற்கெனவே எடுத்திருந்த இன்ஷூரன்ஸ்கள் எல்லாம் லேப்ஸ்
ஆகிவிட்டதால், தற்போது இன்ஷூரன்ஸ் எதுவும் இல்லை. தன் பெயரில் ஒரு கோடி
ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொண்டு, இவருக்கும் , மனைவிக்கும்
சேர்த்து ஐந்து லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் ஹெல்த் பாலிசி எடுத்துக்
கொள்வது நல்லது. இருவருக்கும் வயது குறைவு என்பதால் இதற்கான பிரீமியமும்
குறைவாகத்தான் கட்ட வேண்டி இருக்கும். இரண்டு பாலிசிக்கும் சேர்த்து ஆண்டு
பிரீமியம் 27,600 ரூபாய்தான். மேலே சொன்னது போல மீதமிருக்கும் 2,300 ரூபாயை
மாதா மாதம் சேமித்து வந்தால் ஆண்டு கடைசியில் சுலபமாக பிரீமியத்தைக் கட்டி
விடலாம்.
இவருக்கான திட்டம்!
இவர்
போட்டுவரும் சீட்டை வருகிற மாதத்தில் எடுக்கப் போவதாகச் சொல்லியிருந்தார்.
அதிலிருந்து 60,000 ரூபாய் கிடைக்கும். இதனைக் கொண்டு, எந்தக் கடனை
அடைக்கலாம் என்று பார்ப்போம். 50,000 ரூபாய் வீதம் இரண்டு இடத்தில் கடன்
வாங்கியிருக்கிறார். ஒரு 50,000 ரூபாய்க்கு மாதம் 2,500 ரூபாய் வட்டி
மட்டுமே கட்டி வருகிறார். மற்றொரு 50,000 ரூபாய்க்கு வட்டி இல்லை. முதலில்
வட்டி கட்டி வரும் 50,000 ரூபாய் கடனை கட்டி விடுவது நல்லது. இதற்காக மாதம்
கட்டி வந்த 2,500 ரூபாய் வட்டி மிச்சமாகும். மீதி 10,000 ரூபாய்
இருக்கும்.
அடுத்த
8 மாதத்தில் மற்றொரு சீட்டை எடுக்கலாம் என்று திட்டமிட்டிருப்பதால், அந்த
சீட்டிலிருந்து கிடைக்கும் 1.10 லட்சம் ரூபாய், கையில் இருக்கும் 10,000
ரூபாய், முதலில் அடைத்த கடனுக்கான வட்டி 2,500 ரூபாயை 8 மாதம் சேமித்து
வந்தால் கிடைக்கும் 20,000 ரூபாய் போன்ற தொகைகளைக் கொண்டு பிற கடன்களை
அடைக்கலாம்.
இதிலிருந்து
50,000 ரூபாயை நண்பர்களிடம் வாங்கிய வட்டியில்லா கடனை அடைத்து விட்டால்
மீதி 90,000 ரூபாய் இருக்கும். இன்னும் எட்டு மாதம் கழித்து ஜனவரி
ஆரம்பத்தில் வங்கியில் வாங்கிய தனிநபர் கடன் 45,000 ரூபாயாக
குறைந்திருக்கும். இதனை அடைத்து விடலாம். மீதி இருக்கும் 45,000 ரூபாயைப்
பயன்படுத்தி நகைக் கடனை அடைத்தால் நகைக் கடன் 2.30 லட்சத்திலிருந்து 1.85
லட்ச ரூபாயாகக் குறையும். கடன் தொகை குறையும்போது அதற்காக கட்டி வந்த
வட்டித் தொகையும் 1,900 ரூபாயிலிருந்து 1,500 ஆகக் குறையும். அதனால் மாதம்
400 ரூபாய் நகைக் கடன் வட்டி மிச்சமாகும். ஆக, இப்போது எதிர்கால
முதலீட்டிற்கு 5,400 ரூபாய் இருக்கும்.
இந்த
5,400 ரூபாயைத் தொடர்ந்து 24 மாதங்கள் 12% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய
பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த
முதலீட்டின் மூலம் 1.47 லட்சம் ரூபாய் கிடைக் கும். அந்த சமயத்தில் பகுதி
நேர வேலையின் மூலம் 50,000 ரூபாய் போனஸாகக் கிடைக்கும் என்று
சொல்லியிருந்தார் விக்னேஷ் வரன். ஆக, போனஸ் தொகை 50,000 மற்றும்
முதலீட்டின் மூலம் கிடைக்கும் 1.47 லட்சம் ரூபாயையும் சேர்த்து நகைக் கடனை
அடைத்து விடலாம்.
இப்போது
நகைக் கடனுக்காக கட்டி வந்த வட்டித் தொகையும் சேர்த்து எதிர்கால
முதலீட்டிற்கு 6,900 ரூபாய் பாக்கி இருக்கும். இந்த சமயத்தில் குழந்தை
பெறுவதற்கான மருத்துவச் செலவுகளும் முடிந்திருக்கும் என்பதால் அதற்காக
செலவு செய்து வந்த 8,600 ரூபாயையும் எதிர்கால முதலீட்டிற்கு பயன்படுத்திக்
கொள்ளலாம். 6,900 ரூபாய் மற்றும் 8,600 சேர்த்து கையிலி ருக்கும் 15,500
ரூபாயை அடுத்த 21 மாதங்களுக்கு 9% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய
மியூச்சுவல் ஃபண்டுகளில் எம்.ஐ.பி. முறையில் முதலீடு செய்ய வேண்டும். இந்த
முதலீட்டின் மூலம் 3.54 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
முதல் கடன் அடைக்க ஆரம்பித்ததிலிருந்து 57 மாதங்கள்
கழித்து இந்த 3.54 லட்சம் கிடைப்பதால், இந்த இடைப்பட்ட காலத்தில் கார் கடன்
3.51 லட்சம் ரூபாயாகக் குறைந்திருக்கும். அதனால் இந்த 3.54 லட்சம்
ரூபாயைப் பயன்படுத்தி கார் கடனையும் அடைத்து விடலாம். இதற் கிடையில்
தங்கையின் கல்யாணத்துக்காக வாங்கிய 2.50 லட்சம் ரூபாய் கடனும் மூன்று
ஆண்டுகளிலேயே முடிந்திருக்கும் என்பதால் 2016 ஏப்ரலில் அனைத்து கடன்
தொல்லையிலிருந்தும் இவர் வெளியேறிவிடுவார்.
தங்கைக்காக
வாங்கிய கடன் முடிந்த கையுடன் அதற்காக கட்டி வந்த இ.எம்.ஐ. 7,000 ரூபாயை
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி
டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டின் மூலம்
கிடைக்கும் 6.25 லட்சம் ரூபாயைப் பயன்படுத்தி சென்னையில் விடுதி அமைக்கும்
ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதன் பிறகு இந்த தொகையை 12% வருமானம்
எதிர்பார்க்கக் கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் ஓய்வுக்
காலத்துக்கென்று 17 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால் முதிர்வின்
போது 46.75 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
கார்
கடனுக்காக கட்டி வந்த இ.எம்.ஐ. 15,500 மற்றும் கார் கடனை அடைக்க செய்த
முதலீட்டுத் தொகை 15,500 என மொத்தம் இவர் கையில் 31,000 ரூபாய் பாக்கி
இருக்கும். இதிலிருந்து 30,000 ரூபாயை எடுத்து 12% வருமானம் எதிர்பார்க்கக்
கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்து (அனைத்து
கடன்களும் முடிந்த பிறகு) வந்தால் கிடைக்கும் தொகை 24.74 லட்சம் ரூபாய்.
இந்த தொகையைப் பயன்படுத்தி நாமக்கல்லில் உள்ள இடத்தில் வாடகை குடியிருப்புகளை கட்டிக் கொள்ளலாம்.
அதன் பிறகு இந்த 30,000 ரூபாயை முழுக்க ஓய்வுக்
காலத்திற்காக 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட்
ஃபண்டுகளில் 16 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வர வேண்டும்.
முதிர்வின்போது 2.40 கோடி ரூபாய் கிடைக்கும். ஆக, ஓய்வுக் காலத்திற்காக
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் மொத்த தொகை 2.87 கோடி
ரூபாய். இதை பாதுகாப்பான முதலீட்டில் போட்டு
வைப்பதன் மூலம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வரும்.
குழந்தை
பெற்ற பிறகு சங்கீதா வேலைக்குச் செல்ல ஆரம்பித்தால் அவர் மூலம் கிடைக்கும்
வருமானம், விடுதி மற்றும் நாமக்கல்லில் கட்டியிருக்கும் வாடகை வீடுகளின்
மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து குழந்தையின் எதிர்காலத் தேவைகளுக்கு
முதலீட்டை ஆரம்பிக்கலாம். தற்போது இருக்கும் வருமானத்தைவிட வருமானம்
அதிகமாகும்போது இன்னொரு முறை நிதி ஆலோசனை பெறுவது நல்லது. அனைத்து
செல்வங்களும் பெற வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment