எது சிறந்த முதலீடு? -
எதில் நாம் முதலீடு செய்கிறோமோ அது நாளடைவில் வளரக் கூடியது அல்லது முன்னேறக் கூடியது. நம்முடைய நேரத்தை உடற்பயிற்சிக்கு ஒதுக்கினால் நமக்கு நல்ல ஆரோக்கியமான உடல் தகுதி கிடைக்கும். அதே போல படிப்பிற்கு ஒதுக்கினால் மற்றவர்களை விட நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் நாம் எதற்கு நேரம் ஒதுக்குகிறோமோ, நிச்சயம் அதில் நமக்கு வெற்றி கிடைக்கும்.
முதலீடு என்றவுடன் நம் கண்ணுக்கு தெரிவது ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள். மற்றவை யாவும் சேமிப்பு வகையைச் சார்ந்தது. இதில் ரிஸ்க் கிடையாது, நமக்கு கிடைக்கக்கூடிய வட்டி என்ன என்று நாம் பணத்தை போடும் போதே தெரியும். பெரும்பாலான சேமிப்பு பணவீக்கத்தைக் கட்டுப் படுத்துவதில்லை. எனவே நாம் முதலீட்டை தேர்ந்தெடுக்கிறோம்.
தங்கத்தில் முதலீடு சிறந்ததா?
முதலில் தங்கத்தை எடுத்துக் கொள்வோம். அது ஒரு உலோகம், அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது; ஆனால் எளிதில் பணமாக மாற்றிக் கொள்ள முடியும். அது ஒரு சந்ததியில் இருந்து மற்றொரு சந்ததிக்கு ரிலே ரேஸ் போல செல்கிறது. திருமணத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. அப்படிப்பட்ட உலோகம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தால் எப்படி சாமானிய மக்கள் வாழ்க்கை நடத்துவது? எனவே அது பணவீக்கத்தை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அது நீண்ட கால அடிப்படையில் ஒரு சிறந்த முதலீடாக இருக்க முடியாது. கடந்த காலங்களில் நடந்தது போல, சில சமயம் ஓரிரு வருடங்களில் நன்றாக செயல்பட வாய்ப்புள்ளது.
மேலும் தங்கத்தைப் பாதுகாப்பது என்பது கொஞ்சம் கடினம். நிறைய பேர் காகித தங்கத்தில் நாட்டம் காட்டுவதில்லை. உங்களுக்குப் பெண் குழந்தை இருந்தால் வேறு வகை முதலீடுகளில் சேமித்து தங்கத்தை அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் வாங்கிக் கொள்ளலாம். பாதுகாப்பும் அதிகம், வாங்கி விற்பதில் விரயமும் இல்லை.
பண்ணை நிலம்
அதே சமயம் பண்ணை நிலம் வாங்கினால் அதில் ஏதாவது விளைவிக்கலாம் அதில் நமக்கு ஒரு தொகை வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது பல முறையோ கிடைக்க வாய்ப்புள்ளது. அத்துடன் அந்த இடத்திற்கான மதிப்பும் நாளடைவில் அதிகரிக்கும். அத்தகைய நிலத்தை வாங்குவதற்கு பெரும்பாலோரிடம் கையில் பணம் இருப்பதில்லை. அதை வீட்டுக்கடன் மூலம் வாங்கினால் அதில் கிடைக்கக் கூடிய லாபம் ஓரளவிற்கு இருக்க வேண்டும், இல்லாவிட்டால் அதைத் தவிர்ப்பது நல்லது.
ஆனால் இன்று பலர் கண்காணாத இடத்தில் அரை கிரவுண்ட் அல்லது ஒரு கிரவுண்ட் வாங்கி அது இன்னும் சில காலங்களில் பல மடங்கு வரும் என எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். இது பலன் தராது. வீடாகக் கட்டிவிட்டால் அதற்கு வாடகை மற்றும் அதனுடைய மதிப்பும் கூடும், வெறும் காலி மனையாக இருந்தால் அதை விற்கும்போதுதான் அதன் மதிப்பை உணர முடியும்.
பங்குச் சந்தை
பங்குச் சந்தை என்பது ஒரு பிசினஸ். பிசினஸ் வளர்ந்தால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். அதனால் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் வரும். 1980 களின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இன்போசிஸ் நிறுவனத்தால் இந்திய நாட்டிற்கே பெருமை. அதனால் பலருக்கு நல்ல வேலை வாய்ப்புக் கிடைத்தது அன்று வெறும் 10,000 ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இன்று பல லட்சம் கோடிக்கு வளர்ந்துள்ளது. இன்னும் வளர்ந்து கொண்டு இருக்கிறது.
விப்ரோ பங்கு
நீண்ட கால முதலீட்டின் பெருமையை பறை சாற்றக்கூடிய ஒரு முதலீடு என்று சொன்னால் விப்ரோ நிறுவனத்தின் பங்கை பற்றி நம்மால் குறிப்பிடாமல் இருக்க முடியாது. 1980-ல் ஒருவர் 100 ரூபாய் உள்ள விப்ரோ பங்கு 100 வாங்கியிருந்தால் அவர்களுடைய முதலீடு 10,000 ரூபாய். அப்போது உள்ள 10,000 ரூபாய் 8% பணவீக்கத்தின்படி பார்த்தால் இன்றைய 1.37 லட்சம் ரூபாய்க்குச் சமம். இந்த நிறுவனம் 1981ம் ஆண்டில் 1:1 போனஸ் பங்கு வழங்கியது. அப்போது அவரிடம் உள்ள பங்கின் எண்ணிக்கை 200.
மீண்டும் 1985 ம் ஆண்டில் அந்த நிறுவனம் 1:1 போனஸ் கொடுத்ததில் 400 பங்குகள் ஆகிவிட்டன. 1986ல் 100 ரூபாய் பங்கானது 10 ரூபாய் முக மதிப்பாக மாற்றியதில் 400 பங்கு 4000 பங்காக மாறிவிட்டது.
1987ல் மீண்டும் ஒரு போனஸ் 1:1 இப்போது அது 8000. 1989ல் மீண்டும் ஒரு 1:1, மொத்தபங்கு அப்போது 16,000.
1992ல் மீண்டும் ஒரு போனஸ் 1:1 அப்போது அது 32,000. 1995ல் 1:1 அது 64,000. 1997ல் 2:1 போனஸ் அப்போது 1,92,000 பங்குகள். 1999 ல் 10 ரூபாய் மதிப்புள்ள பங்கு 2 ரூபாயாகக் குறைக்கப்பட்டவுடன் அது மொத்தம் 9,60,000 பங்காகி விட்டது.
2004ல் மீண்டும் 2:1 போனஸ் அப்போது அது 28,80,000. 2005ல் மீண்டும் ஒரு 1:1 போனஸ் அது 57,60,000 பங்கு.
கடந்த 2010 ல் 2:3 போனஸ் அதன்படி 96,00,000 பங்குகள். கடந்த வெள்ளிக் கிழமை அந்தப் பங்கின் விலை 546 ரூபாய். அதை 96 லட்சத்தோடு பெருக்கினால் கிடைக்கக் கூடியது 524 கோடி ரூபாய். இதில் நாம் எந்தவித டிவிடெண்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. பொதுவாக இரண்டு டிவிடெண்ட் இந்த நிறுவனம் தருகிறது.
இடைக்கால டிவிடெண்ட் ஜனவரி மாதம் 150% கொடுத்துள்ளது, அதாவது 2 ரூபாய் மதிப்பில் 150% கணக்கிட்டால் 3 ரூபாய் ஒவ்வொரு பங்கிற்கும் தரப்படும். 96 லட்சத்தை 3ல் பெருக்கினால் 2.88 கோடி ரூபாய் அதற்கு வருமான வரி கிடையாது. இறுதி டிவிடெண்ட் 5 ரூபாய் வரும் ஜூலை மாதம் தரவிருக்கிறார்கள். இந்த உதாரணம் பங்குச் சந்தை எவ்வளவு பெரியது நீண்ட கால அடிப்படையில் என்று சொல்வதற்காக விரிவாக கொடுக்கப்பட்டது.
பல நிறுவனங்கள் நன்றாக செயல் பட்டன. வாங்கியவருக்கு மட்டும் லாபம் இல்லை எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு, நாட்டின் பொருளாதரத்திற்கு இந்த நிறுவனங்கள் ஒத்துழைப்பு தந்திருக்கிறது முதலியவற்றைப் பார்க்க வேண்டும்.
முதலீடு என்பது சப்ளை மற்றும் டிமாண்ட் பொருத்து இருந்தால் அது மிகவும் ரிஸ்க். தங்கம் அந்த வகையைச் சார்ந்தது. காலி மனை விற்றால் தான் லாபம். பார்ம்லேன்ட் அதில் எதாவது ஒன்றைப் பயிரிடும்போது நமக்குக் கொஞ்சம் பணம் கிடைக்கும். அதேசமயம் வாடகைக்கு விடப்படும் வீடும் மாதா மாதம் கொஞ்சம் பணம் ஈட்டும். பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள், நீண்ட கால அடிப்படையில் நாம் அன்றாடம் பார்க்கக் கூடிய, உபயோகிக்கக்கூடிய பங்குகள் நீண்ட காலம் நிலைத்திருக்கும்.
வளராத எதுவும் முதலீடாக முடியாது. வளர்ச்சி என்பது அதிகம் காணப்படுவது தொழில் நிறுவனங்களில்தான். அதைப்பற்றிய அறிவுடன் அல்லது அதை பல ஆண்டு நிர்வகிக்கக் கூடிய நிறுவனங்களில் இணைவதன் மூலம் நிறைய பணம் பண்ண முடியும்.
No comments:
Post a Comment