தனித்துவமே முதலீட்டின் சிறப்பு! பா. பத்மநாபன்
வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்று ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். அது முதலீட்டில் மிக அழகாகப் பொருந்தக்கூடிய ஒன்று.
எதை அறுக்க வேண்டும் என்பது அதை விதைப்பதற்கு முன்பு முடிவெடுக்க வேண்டும். இதில் ஒவ்வொரு தனி மனிதனும் அவரவர் விதைப்பதை பொறுத்துதான், அவருடைய பலன்! ஒரு தனி மனிதனின் வெற்றி பெரும்பாலும் அவன் எடுக்கக்கூடிய ரிஸ்க்குகளும், அதைப் பற்றி எவ்வளவு தெரிந்து கொண்டு இருக்கிறான் என்பதைப் பொறுத்ததோ, முதலீடும் அப்படித்தான்.
கடந்த 1 மாதமாக தங்கத்தின் விலை குறைந்த வண்ணம் இருக்கிறது. யாரும் தங்கத்தை விற்று விடலாமா என்று எப்போதுமே கேட்பதில்லை, மாறாக விலை உயர்ந்துவிட்டால் என்ன செய்வது அதனால் முடிந்தவரை வாங்க வேண்டும் என்ற எண்ணமே உள்ளது.
அதே சமயம் கடந்த ஆகஸ்ட் 2013 ல் பங்கு சந்தை 19,000 புள்ளிகளில் தத்தளித்துக் கொண் டிருந்தபோது, கடந்த 70 மாதங்களை விட 10% தள்ளுபடியில் இருந்தும் யாருக்கும் பங்குகளை வாங்க வேண்டும் என்ற எண்ணமில்லை. அப்போது வாங்கியவர்கள் யாவரும் இப்போது 40% லாபத்தில் உள்ளார்கள். அதைத் தவறவிட்ட பலர் இப்போது முதலீடு செய்யலாமா இல்லை கொஞ்சம் சந்தை கீழே இறங்கினால் வாங்கிக் கொள்ளலாமா என்று வாய்ப்பைத் தவற விடுகிறார்கள்.
பலர் முதலீட்டைப் புரிந்து முதலீடு செய்வதில்லை.முதலில் நாம் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதில் உள்ள ரிஸ்க் மற்றும் ரிடர்ன்ஸ் பற்றி தெரிந்த பின்னரே முதலீட்டைத் தொடங்கவேண்டும்.
நம் வாழ்க்கையைப் போல முதலீடும் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது. பலர் இதை புரிந்து கொள்ளமால் எப்போது உயர்ந்து கொண்டே போகவேண்டும் என்று நினைக்கிறார்கள் அது தவறான எதிர்பார்ப்பாகும். ஒவ்வொரு முதலீடும் ஒவ்வொரு கால கட்டத்தில் சிறப்பாகச் செயல்படும், அது எப்போது செயல்பட ஆரம்பிக்கிறது என்பதை உணர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.
நாம் வாங்கிய ஒரு வீடு அல்லது மனை வாங்கியதை விட இரு மடங்கோ அல்லது 3 மடங்கோ ஆனவுடன் நமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அது இவ்வளவு விரைவாக ஏறி விட்டதே அதை விற்று விடலாமா என்று யாரும் சிந்திப்பதில்லை. மாறாக அது மேலும் பல மடங்கு பெருகும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது.
அதே சமயம் பங்குச் சந்தை கடந்த சில மாத மாதங்களாக உயர்ந்த வண்ணம் இருக்கிறது. அதே சமயம் அதனுடைய உச்சமான 21,000 புள்ளிகள் 6 வருடங்களுக்கு முன்னரே எட்டியது. இப்போது 20% உயர்ந் துள்ளது. உடனே பெரும்பாலோர் பணத்தை எடுத்து விடலாமா, பின்பு குறைந்தவுடன் மீண்டும் முதலீடு செய்யலாமா என்று கேட்கின்றனர்., ஒரு வேளை குறையாமல் உயர்ந்து கொண்டே இருந்தால் உங்களுக்கு மீண்டும் முதலீடு செய்வதற்கு தைரியம் வருமா?
பங்குச் சந்தையில் செய்த முதலீட்டின் போக்கை நம்மால் ஓரளவு உணர முடியும், மேலும் நமக்கு வேண்டியவற்றை விற்க முடியும், ஆனால் ரியல் எஸ்டேட்டில் அப்படி விற்க முடியாது இருந்தும் அது மேலேதான் செல்லும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய ரிஸ்க்!
பலருக்கும் உள்ள மற்றொரு கெட்ட பழக்கம் தங்கள் முதலீடு செய்தவற்றில் இது சரியில்லை அது சரியில்லை என்று குறை கூறுவதே! அதே சமயம் ஒருவர் சொன்ன ஒரு முதலீட்டு ஆலோசனை, தன்னிடம் பணம் இருந்தும் தைரியம் இல்லாமல் தவற விட்ட வாய்ப்பைப் பற்றி என்றுமே நினைப்பதில்லை.
தவறவிட்ட முதலீடு வாய்ப்பும், ஒருவருக்கு மிகப்பெரிய பெரிய இழப்பே!
இதிலிருந்து ஒன்றை என்னால் உணர முடிகிறது, ரிஸ்கை விடப் பெரியது ஒருவருடைய நம்பிக்கை. ஒருவருக்கு நம்பிக்கை தானாகவோ, அல்லது மற்றவர்களைப் பார்த்தோ, கேட்டோ வருவது, மிகவும் பலம் வாய்ந்தது. இன்று நாம் எடுக்கக் கூடிய இஞ்சினியரிங்கின் ஒரு பிரிவு 4 ஆண்டுகளுக்குப் பின்பு எவ்வாறு இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது என்பது அதில் உள்ள ரிஸ்க், ஆனால் நம்முடைய நம்பிக்கை அது நன்றாக இருக்கும் அல்லது ஏதாவது ஒரு வேலை கண்டிப்பாக கிடைக்கும் என்பது! அந்த நம்பிக்கை வந்ததற்கு ஒரு காரணம் பொதுவாக அந்த படிப்பு படித்தவர்கள் வாழ்க்கை நன்றாக இருந்ததே.
சாராம்சம்: இன்று நம்மை அறியாமல், நாம் பல ரிஸ்க்குகளை அன்றாடம் எடுத்த வண்ணம் இருக்கிறோம். அது தவறாகப் போனவுடன்தான் எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தோம் என்று தெரிகிறது. அது சரியாக போகும்போது மற்றவர் எடுக்கத் தவறியதை, மேலும் அதன் மேல் நமக்கு இருந்த நம்பிக்கைதான் அதற்கான காரணம் என்று அதைப் பற்றி சிந்திப்பதில்லை.
நம்முடைய தேவைகளை அறிந்து ஒரு வேளை நம்முடைய வருமானத்தில் அந்த இலக்குகளை அடைய முடியாவிட்டால், முதலீட்டின் ரிஸ்க்கை அறிந்து செயல்பட்டால் நிச்சயமாகப் பணம் செய்யலாம்.
அதிர்ஷ்டம் என்பது தைரிய சாலிகளுக்கே என்று ஒரு சொல் என் நினைவிற்கு வருகிறது .அதனால் ஒருவரைப் போல் ஒருவர் இல்லை நம்முடைய வாழ்வு நம் கையில். அதற்குத் தேவையான ரிஸ்க்கை எடுப்போம், முதலீட்டில் வெற்றி பெறுவோம்.
No comments:
Post a Comment