Pages

Monday, 16 June 2014

My 37th Article In The Tamil Hindu Dated on 16th June 2014, About Is It A Right Time To Enter Into Stock Market Related Investments?

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஏற்ற தருணமா? - பா. பத்மநாபன்

 

எந்த ஒரு வாய்ப்புமே நம் வீட்டுக் கதவை தானாக வந்து தட்டாது. நம் கண்களையும் காதுகளையும் எப்போதும் அலர்ட்டாக வைத்திருந்தால் அந்த வாய்ப்பை உணர்ந்து நாம் பயன் பெற முடியும். இந்த ஆண்டு தொடங்குவதற்கு முன்பு, நம்முடைய பங்குச் சந்தை கடந்த 6 வருடங்களாக எந்த ஒரு ஏற்றத்தையும் சந்திக்கவில்லை. அதனால் பெரும்பாலோருக்கு இந்த முதலீட்டில் நம்பிக்கை இல்லை.
அதேசமயம் நாம் தேர்தலை சந்திக்கும் தருணம், நிறைய எதிர்பார்ப்புகள், அதனால் வரக்கூடிய வாய்ப்புகளைப் பற்றி ஒரு தடவை யோசித்திருந்தால், இந்த 6 மாதங்களில் 30% ரிடர்ன்ஸ் வரை எளிதாகப் பயன் பெற்றிருக்கலாம்.
இது, பங்குச் சந்தை வரும் காலங்களில் மேலே செல்லப் போவதற்கான ஒரு முன்னோட்டம்தான். ஆனால் பலருக்கு இது முன்னோட்டமாகத் தோன்றாமல் இதுதான் முடிவோ என பயந்து பணத்தை வெளியில் எடுத்தும் இன்னும் சிலர் சந்தை பழைய நிலைக்குத் திரும்ப வரும், அப்போது முதலீடு செய்து கொள்ளலாம் என்றும் நினைக்கிறார்கள்!
சந்தை கரடியின் பிடியிலிருந்து இப்போது காளையின் சீற்றத்துக்கு வந்துள்ளது. ஏப்ரல் 1, 2003 ல் மும்பை சந்தையின் குறியீட்டு எண் 3,081, ஜனவரி 7, 2008 ல் 20,813. 5 வருடத்திற்கும் குறைவான கால அவகாசத்திலேயே 6.75 மடங்கு அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் 3 முதல் 4 மடங்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
பலர் ஒரு பங்கை வாங்கும் போதோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டத்தை வாங்கும்போதோ குறைந்த NAV இருந்தால் ரிஸ்க் குறைவு என்று நினைக்கிறார்கள். இதை விற்ற முகவர்களும் முன்பு உங்களுக்கு நிறைய யூனிட்ஸ் அல்லது பங்கு கிடைக்கும் என்று கூறியே விற்று விட்டார்கள். நாம் யூனிட்டையோ அல்லது பங்கையோ வைத்து எதுவும் செய்யப் போவதில்லை, அதனால் அது அதிகமாக இருக்கிறது என்று சொல்லிப் பயனில்லை. ஒருவர் கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருப்பதைவிட, ஒரு கிரவுண்ட் வீட்டு மனை நகரத்தில் வைத்திருப்பது எவ்வளவோ பெரியது!
நம் எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு நிறுவனம் MRF டயர்ஸ். இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ஏறக்குறைய 5 வருடம் முன்பாக அதாவது ஜூலை 13ம் தேதி 2009ம் ஆண்டு ரூபாய் 3,120. 12 ஜூன் 2014 அன்று 23,851. அதாவது 7.65 மடங்கு உயர்ந்துள்ளது. பலர் 3000 ரூபாய் பங்கை விலை கொடுத்து வாங்கத் தயங்குவார்கள், ஆனால் இன்று 23,000 ரூபாய் கொடுத்து வாங்குபவர்கள் மிகக் குறைவு.
கடந்த 5 வருடங்களில் சந்தை சிறப்பாகச் செயல்படவில்லை, அப்படி இருந்தும் இத்தனை விலை உயர்ந்த பங்கு எப்படி 7 மடங்கிற்குப் போகும்? ஒரு நிறுவனம் அவர்களுடைய பிரிவில் முதன்மையாக, மேலும் சிறப்பாகவும் செயல்பட்டால் எத்தனை விலை வேண்டுமானாலும் கொடுத்து வாங்குபவர்கள் உண்டு.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமான ரிலையன்ஸ் குரோத் பண்ட் தற்போது NAV 652 ரூபாய். இது 1995ல் 10 ரூபாய்க்கு ஆரம்பிக்கப்பட்டது, 18.5 வருடத்தில் 65 மடங்கு. இது ஒன்றும் நாம் நினைப்பதை போல காஸ்ட்லி இல்லை. நாம் எவ்வளவு சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று பார்க்க வேண்டுமே தவிர அது எவ்வளவு ரூபாய் என்று பார்க்கத் தேவையில்லை.
இத்தனை வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்ட பல அரசாங்க முடிவுகள் முடிவுக்கு வரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. இவையாவும் அடுத்த ரவுண்டு சந்தை செல்வதற்கு உந்துதலான விஷயங்கள். மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 30 பங்குகளின் சராசரி. இதில் நன்றாக செயல்படாத நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டு நன்றாக செயல்படக்கூடிய நிறுவனங்கள் பங்கு பெறும்.
இதில் பங்கு பெற்றுள்ள பெரும்பாலான நிறுவனங்கள் நன்றாகச் செயல்படுவதால் அந்த நிறுவனத்தின் மதிப்பும் உயர்ந்த வண்ணம் உள்ளது. அவ்வாறு உயரும்போது பங்குச் சந்தை தானாக உயர்ந்து விடும்.
எல்லோருக்கும் பொதுவாக தெரிந்த குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிப்டிதான் அதைத் தவிர மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் என்று சொல்லக் கூடிய அடுத்த கட்டத்தில் உள்ள நிறுவனங்கள் பல மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. இந்தக் குறியீடுகள் 2008-ல் இருந்ததைவிட இன்னும் குறைவாகவே உள்ளன.
இவை வரும் காலங்களில் சென்செக்ஸை விட மிகச் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புள்ளன. முன்பு சொன்னது போல மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் 11 முதல் 16 மடங்கு வரை (2003-2008) 5 வருடத்தில் உயர்ந்து காணப்பட்டுள்ளது. இதை வாய்ப்பு எனக் கருதி முதலீடு செய்தால் நமக்கு, அதே அளவோ, கொஞ்சம் கம்மியாகவோ, கூடவோ கிடைக்க நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. அதைத் தவிர்த்து அது மாதிரி இனி நடக்காது என்று நீண்ட கால முதலீடுகளைக் கூட பாதுகாப்பு கருதி வங்கி வைப்பு நிதியில் வைத்திருந்தால் நஷ்டம் யாருக்கு? யோசிக்க வேண்டிய தருணமிது.
இது நடக்காது என்று உங்களுக்கு ஒரு வேளை தோன்றினால் ஒன்றை மட்டும் யோசித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய வசதிகளும், வாய்ப்புகளும் மற்றும் நம்முடைய அன்றாட தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்குமா, இல்லையா? அதிகரிக்கும் என்று நினைத்தால் முதலீடு செய்வதற்கு இது மிகச் சிறந்த தருணம். குறையும் என்று தோன்றினால் பணத்தை வங்கியிலே பூட்டி வைத்துக் கொள்ளலாம். முடிவு உங்கள் கையில்.
சாராம்சம்: வாய்ப்புகளை நாம்தான் உணர வேண்டும். வரும் 5 ஆண்டுகளில் நம்முடைய முதலீடுகள் பங்குச் சந்தையிலோ அல்லது மியூச்சுவல் ஃபண்டிலோ இருந்தால் நாம் கண்டிப்பாக நிறைய பணம் பண்ணும் வாய்ப்புகள் அதிகம். கடந்த காலங்களில் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்று சற்று உள்நோக்கி பார்த்தால் நமக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு மூடி கிடைக்கிறது என்பதை உணர முடியும்.
பங்கு சந்தை முதலீட்டை 10 முதல் 12 ஆண்டுகளாக (ஒவ்வொரு கட்டமாக) எடுத்துகொண்டால், குறைந்தது 3 மடங்கு முதல் 10 மடங்கு வரை பெருகி உள்ளது. கடந்த 6வருடமாக ஒன்றும் ரிடர்ன்ஸ் கிடைக்காததால் வரும் 4 முதல் 6 வருடங்களில் நல்ல ரிடர்ன்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதைத் தவிர்த்து பங்கு சந்தை என்பது ஒரு சூதாட்டம், அதில் எல்லா பணத்தையும் இழக்கவேண்டியதுதான் என்று குற்றம் சொல்லிக்கொண்டே இந்த வாய்ப்பையும் தவற விடலாம். முன்பு செய்த தவற்றினை திருத்திக் கொண்டு நீண்ட கால அடிப்படையில்முதலீடு செய்தால் வெற்றி நிச்சயம் நமக்குத்தான். இது உண்மையிலேயே நமக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய முதலீட்டு வாய்ப்பு, புரிந்து கொள்வோம், பணம் செய்வோம் வாருங்கள்!

No comments:

Post a Comment