போர்ட்போலியோ திறனாய்வின் அவசியம் -
நாம் பலதரப்பட்ட முதலீடுகளை செய்திருப்போம். சில முதலீடு களை அதன் பயனை உணர்ந்து செய்திருப்போம், பல முதலீடுகள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில் செய்யப்பட்டிருக்கும். இன்னும் சில கடைசி நிமிடத்தில் வருமான வரி விலக்கு தேவைக்காக செய்யப்பட்டிருக்கும்.
முதலீட்டுடன் பற்று வேண்டாம்
நான் சந்திக்கும் பலர் உணர்வு பெருக்கோடு வாழ்க்கையை கடத்து கிறார்கள். பலருக்கு தான் வாங்கிய முதல் வீடு, இன்ஷூரன்ஸ் பாலிசி முதலியவற்றில் தேவையில்லாமல் ஒரு பற்றுதல் இருக்கிறது. அதனால் இந்த கால கட்டத்தில் பலன் இல்லை என்று தெரிந்தாலும் அதை விட்டு விலகுவதில்லை. மேலும் தன்னுடைய போர்ட்போலியோ திறனாய்வுக்கு எடுத்து செல்லும்போதும் அதைப் பற்றி ஆலோசனை கூறும் ஆலோசகர் சிலவற்றை பற்றி கமெண்ட் செய்யும்போது அதை பர்சனலாக எடுத்துக்கொள்வதும் உண்டு. இவர் யார் என்னுடைய செலக்க்ஷன் பற்றி குறை கூறுவது, இந்த பாலிசிகளை தவிர்த்து புதியதாக வாங்குவதை பற்றி சொல்லுங்கள் என்று நிர்பந்தம் செய்பவர்கள் பலர்.
போர்ட்போலியோ திறனாய்வு செய்வதால் நம்மால் தேவை இல்லாத முதலீடுகளை தவிர்க்கவும், வாங்கியவற்றில் இருந்து வெளியே வரவும் இயலும். நம்மில் பலர் அதற்கென நேரம் ஒதுக்கி அதனுடைய செயல்பாடுகளை அறிவதற்கு விரும்புவதில்லை. திடீரென்று தேவைப்படும்போது அவற்றை பற்றி அறிவது, ஒரு நோயை பல நாட்கள் கண்டும் காணாமலும் இருந்து அது முற்றிய பின்பு பார்ப்பதற்கு சமம்.
மேலும் நம்முடைய தேவைகளும், விருப்பங்களும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. அதற்கு எல்லை என்பதே கிடையாது. அப்படி இருக்கும்போது முன்பு எப்போதோ வாங்கிய பணவீக்கத்தை கட்டுப்படுத்தாத முதலீடுகளை எப்படி தொடருவது? சிந்திக்க வேண்டிய விஷயம்.
அசல் மட்டுமே முக்கியம் அல்ல
எண்டோவ்மென்ட் மற்றும் மணி பேக் பாலிசி வாங்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். வாங்கியதில் தப்பில்லை, அது தற்போது உள்ள சூழலுக்கு உதவாது என உணர்ந்தால் அதிலிருந்து வெளியே வருவது நல்லது. எல்லோருக்கும் உள்ள மற்றொரு பழக்கம் எந்த முதலீடாக இருந்தாலும் அசலை இழந்து விடக்கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறார்கள். ஆனால் அந்த அசலுக்கு பர்ச்சேசிங் பவர் உள்ளதா இல்லையா என்ற கவலை எல்லாம் கிடையாது. இது மிகவும் தவறு.
பெரும்பாலான பென்ஷன் பாலிசிகளில் அவர்கள் வருடா வருடம் என்ன தொகை கொடுப்பார்கள் என்று தான் சொல்வார்கள். நம்மில் பலர் 1 லட்சம் என்றவுடன், ஆஹா எவ்வளவு பெரிய தொகை என்று ஆச்சரியப்படுவர், அதை மாதா மாதம் கணக்கிட்டால் வெறும் 8,333 ரூபாய் தான்.
காலத்துக்கேற்ற மாற்றம் தேவை
தொரடர்ந்து பரிசீலனை செய்யும்போது தேவையற்ற முதலீடுகளை மாற்றியும், ஒரு முதலீடு கடந்த வருடத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமான வருமானம் கொடுத்திருந்தால் அதில் கொஞ்சம் பணத்தை மற்றொரு முதலீட்டிற்கு மாற்றி மீண்டும் போர்ட்போலியோவை சமன் செய்து கொண்டே இருந்தால் முதலீட்டின் ஏற்ற இறக்கத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வரலாம். மேலும் காலத்திற்கேற்ப பல முதலீட்டு திட்டங்கள் வந்தவண்ணம் உள்ளன. அதைப்பற்றிய விஷயங்களை ஒரு நிதி ஆலோசகர் நிறைய தெரிந்து வைத்திருப்பார். இது போர்ட்போலியோ திறனாய்வின் போது மிகவும் உபயோகமுள்ளதாக இருக்கும்.
மற்றொரு தவறு என்னிடம் பணம் இல்லை, ஏற்கனவே எல்லா பணத்தையும் முதலீடு செய்துவிட்டேன் என்று சொல்வது. போர்ட்போலியோ திறனாய்வின் மூலம் தேவையற்ற முதலீட்டை மாற்றி அமைப்பதன் மூலம் நம்மால் கண்டிப்பாக சேமிக்கமுடியும். எந்த ஒரு முதலீடும் தொடர்ந்து கவனிக்க தவறினால் சிறந்த வருமானத்தை வெளிப்படுத்தமுடியாது, வருடா வருடம் திறனாய்வு செய்வது மிகவும் முக்கியம். 8 வருடம் முன்பு என்னுடைய நண்பர் ஒருவர் மாதம் ரூ. 20,000 சம்பாதித்து வந்தார், இப்போது அவருடைய சம்பளம் ரூ. 1.50 லட்சம், ஆனால் இன்றும் என்னால் சேமிக்க முடியவில்லை என்ற எண்ணமே வெளிப்படுகிறது.
குறைந்த அளவு எது என்று கூறுவது மிகவும் கடினம். இந்த மாதிரி பல பேர் உள்ளார்கள், இவர்கள் உடனடியாக தங்களுடைய போர்ட்போலியோவை மறு பரிசீலனை செய்வதற்கு இது சரியான நேரம்.
எந்த ஒரு இனஷூரன்ஸ் பாலிசியை நடுவில் எடுத்தாலும் கண்டிப்பாக பணத்தை இழப்பது உறுதி, யூலிஃப் பாலிசிகளை தவிர. அதே சமயம் அதை நீண்ட நாள் தொடரும்போது நாம் போட்ட பணத்தைவிட கூட கிடைக்கும். ஆனால் அதனுடைய மதிப்பு, கண்டிப்பாக பணவீக்கத்தை கட்டுப்படுத்தாது. திறனாய்வில் அதைப்பற்றி அலசுவதால், சரண்டர் செய்யும்போது வரக்கூடிய இழப்பை வேறு முதலீட்டிற்கு மாற்றும்போது கண்டிப்பாக அந்த இழப்பை சரி செய்வதுடன் அந்த ரிடர்ன்ஸ் அதிகமாக வளருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
முதலீடு செய்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அந்த முதலீட்டை வருடம் ஒருமுறையோ அல்லது எப்போதெல்லாம் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறதோ அப்போது திறனாய்வு செய்யவேண்டும்.
சாராம்சம்: இதனால் தேவை இல்லாத முதலீட்டிலிருந்து வெளியே வருவதுடன், வரும் காலத்தில் இந்த வகையான முதலீடுகளை இனம் கண்டு அதை தவிர்க்கவும் முடியும். வெளியே இருந்து பார்க்கும்போது நாம் நிறைய பணத்தை சேமிப்பதாக தோன்றும், ஆனால் அவற்றில் பல சரியான முதலீடாக இல்லாததால் நம்மால் நாம் நினைத்த மாதிரி இலக்குகளை அடைய முடியாது.
போர்ட்போலியோ திறனாய்வு செய்யவும், புதிய முதலீடுகளை தொடரவும் மிக சரியான தருணம் இது. கடந்த 6 ஆண்டுகளாக கொடுக்காத வருமானம் இன்னும் 5 வருடத்தில் சேர்ந்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். போர்ட்போலியோ திறனாய்வை தொடர்ந்து கவனிப்பது என்பது ஒவ்வொருவருடைய கடமை, இது உங்களுடைய பணம், அதற்கு நீங்களே பொறுப்பு, மற்றவர்களை குறை கூறுவதால் இழப்பு உங்களுக்குத் தான்.
No comments:
Post a Comment