Pages

Sunday, 26 August 2012

Retirement Planning - Innovative Solution in Naanayam Vikatan 26th August 2012

ஓய்வுக்காலத் திட்டம்: இனி தேவை இல்லை பயம்!
ம்ம வீட்ல ஒரு மா மரத்த வெச்சு தினமும் தண்ணி ஊத்துறோம்... எதுக்காக? பின்னாளில் அது காய்ச்சு நமக்கு பழம் கொடுக்கும்ங்குற நம்பிக்கையிலதானே..? - கடைசி காலத்தில் பிள்ளைகளின் கவனிப்பு கிடைக்காமல் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் பெற்றோர்களுக்கு மிகவும் பிடித்த சினிமா வசனம் இது!

''ஆனால், ஓய்வுக்காலத்துக்காக முறையாகத் திட்டமிடாமல் இருந்துவிட்டு, பெற்றோர்கள் பிள்ளைகளை குறை சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. பிள்ளைகளின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றிய பெற்றோர்கள், தமது ஓய்வுக் காலத்திற்கென்று திட்டமிடாமல் இருந்தது அவர்களின் தவறே! தவிர, இன்றைக்கு இருக்கும் விலைவாசி நிலவரம் நாம் ஓய்வுபெறும்போது இருக்குமா என்றால் இருக்காது. நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்துதான் வருகிறது. எனவே, இன்று முதல் ஓய்வுக்காலத்திற்குத் திட்டமிடுவது அவசியம்'' என்கிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.  

அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பென்ஷன் கிடைப்பது போல, தனியார் நிறுவனங்களில் வேலை செய்கிறவர்களும் தமது ஓய்வுக்காலத்தில் தாமாகச் சேமித்து வைத்த தொகையிலிருந்து எப்படி பென்ஷன் பெறலாம்? அது போக அதிலிருந்து ஓய்வுக்காலத்தில் கிடைக்கும் மொத்த வருமானம் எவ்வளவு இருக்கும்? என்பதைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் அவர்.

''இந்திய அரசு சார்ந்த வேலைகளை செய்கிறவர்களுக்கு அவர்களின் மாதச் சம்பளத்தில் 10% தொகை பிடித்தம் செய்து சேமிக்கப்பட்டு அதிலிருந்து பென்ஷன் வழங்கப்படுகிறது. இந்த பென்ஷன் திட்டத்தில் இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று, சேமித்த மொத்தப் பணத்தில் மூன்றில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டு, மீதி இருக்கும் பணத்திலிருந்து மாதாமாதம் பென்ஷன் பெறலாம். அல்லது மொத்தப் பணத்திலிருந்தும் பென்ஷன் வாங்கலாம்.

பென்ஷன்தாரர் இறந்த பின்னர் அவருக்கு கிடைத்த மாத பென்ஷனிலிருந்து, மனைவியின் வாழ்க்கைக் காலம் வரை மாதாமாதம் 50% தொகை கிடைக்கும். அவருக்குப் பிறகு அவர்களின் பிள்ளைகளுக்கு பென்ஷன் தொகை எதுவும் கிடைக்காது. மறைமுகமாகச் சேமிக்கப்படும் இந்த தொகை அவர்களின் ஓய்வுக்காலத்தில் நிச்சயம் பேருதவியாக இருக்கிறது.

ஆனால், தனியார் நிறுவனங்களில் வேலை செய்கிறவர்களுக்கும், சொந்தமாகத் தொழில் செய்பவர்களுக்கும் இந்த வசதி இல்லை. இவர்கள் ஓய்வுக்கால நிதித் திட்டமிடலைச் செய்யாமல் விடும்போது, பிள்ளைகளின் தயவை எதிர்பார்த்து நிற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். அவர்களால் கைவிடப்படும்போது பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். எதிர்காலத்தில் வரப்போகிற இந்த சிக்கலைத் தவிர்க்க இப்போதே ஓய்வுக்கால வாழ்க்கைக்குத் திட்டமிடுவது அவசியம்.

இதற்கு ஒரேவழி, அரசு பணியாளர்களைப் போலவே தனியார் நிறுவன ஊழியர்களும் தங்களது மாதச் சம்பளத்திலிருந்து 10 சதவிகிதத் தொகையை ஓய்வுக்காலத்திற்காக ஒதுக்குவதே! இந்த முதலீட்டை ஓய்வுக்காலம் வரை தொடரவேண்டும். இதன்மூலம் கிடைக்கும் தொகையிலிருந்து அவரவர் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. உதாரணத்திற்கு ஒருவருக்கு இதுபோன்று வந்த முதலீட்டுத் தொகை 12 லட்சம்  ரூபாயை கீழே தரப்பட்டிருக்கும் திட்டத்தின் அடிப்படையில் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம்.

கடந்த 17 ஆண்டுகளில் ஏற்ற இறக்கத்திலும் லாபம் ஈட்டி தந்திருக்கும் இரண்டு பேலன்ஸ்டு ஃபண்டுகளை எடுத்துக்கொள்வோம். ஒன்று, ஹெச்.டி.எஃப்.சி. புரூடென்ஸ் ஃபண்ட், மற்றொன்று பிர்லா சன் லைஃப் 95. இந்த இரண்டு ஃபண்டுகளும் கடந்த பதினேழு ஆண்டுகளாக பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருந்தாலும், இறுதியில் இன்று நல்ல வருமானத்தைக் கொடுத்து வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு மேலே சொன்ன ஹெச்.டி.எஃப்.சி. புரூடென்ஸ் ஃபண்டுகளில் 12 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருந்தால், வருடத்திற்கு 10 சதவிகிதம் என்ற கணக்கில் மாதா மாதம் சிஸ்டமெட்டிக் வித்டிராயல் பிளான் (ஷிகீறி) முறையில் 10,000 ரூபாய் அதிலிருந்து பென்ஷன் தொகையாக (அனுமானம்) எடுத்தது போக, பத்தாண்டு இறுதியில் 79.72 லட்சம் ரூபாய் மொத்த வருமானம் கிடைத்திருக்கும்.
அதேபோல் பிர்லா சன் லைஃப் 95 ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தால், பென்ஷன் தொகையாக எடுத்ததுபோக 51.96 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். 

அதேபோல் 1995-2005, 1996-2006 என்கிற பத்தாண்டு அடிப்படையில் முதலீடு செய்திருந்தால் மாதா மாதம் 10,000 ரூபாய்  எடுத்தது போக, குறைந்தபட்சம் 40 லட்சம் ரூபாயும், அதிகபட்சம் ஒரு கோடி ரூபாயும் வருமானமாக கிடைத்திருக்கும். இந்த தொகை முதலீட்டாளருக்குப் பயன்படுவது மட்டுமல்லாமல் அவரின் மனைவி மற்றும் வாரிசுகளுக்கும் பயன்படும்.
பொதுவாக அனைவருக்குமான சமீபத்திய முதலீடு தங்கமும், ரியல் எஸ்டேட்டுமாகத்தான் இருக்கிறது. கண்ணுக்குத் தெரியும் பொருட்கள் என்பதால் அந்த இரண்டில் மட்டுமே காசை கொட்டி முதலீடு செய்கிறார்கள் மக்கள். பங்குச் சந்தையில் எப்படி ஏற்ற இறக்கம் சகஜமோ, அதேபோலத்தான் இதுபோன்ற முதலீடுகளிலும் ஏற்ற இறக்கம் உண்டு. அதற்காக அதில் முதலீடு செய்யக் கூடாது என்று சொல்லவில்லை. அதில் மட்டுமே முதலீடு செய்வது தவறு!

ஓய்வுக்காலத்தில் பெரும்பாலானவர்கள் ரிஸ்க் குறைவு என்பதால், அஞ்சலக ஆர்.டி, பேங்க் எஃப்.டி. போன்ற முதலீட்டு இடங்களையே தேர்வு செய்கிறார்கள். அதை மட்டுமே தேர்வு செய்யாமல் மேலே சொன்னதுபோல பேலன்ஸ்டு ஃபண்டுகளையும் தேர்வு செய்து நமது வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளலாம்.
ஓய்வுக்காலத் தொகையிலிருந்து  (பி.எஃப்., பணிக் கொடை) 50% தொகையை இதுபோன்று பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்துவிட்டு, மீதி தொகையை அஞ்சலக ஆர்.டி, ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற ரிஸ்க் குறைவானவற்றில் முதலீடு செய்யலாம்.

இன்னொரு விஷயம், நீண்ட கால முதலீடு (10-15 ஆண்டுகள்) என்கிறபோது ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்கள் தாராளமாக ரிஸ்க் எடுக்கலாம். என்னதான் பங்குச் சந்தை ஏறி இறங்கினாலும் நீண்ட கால அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் கிடைக்கிற லாபம் ஆர்.டி., எஃப்.டி. அளிக்கும் லாபத்தைவிட அதிகமாகவே இருக்கும்!

குறிப்பு: கடந்த 10, 15 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிலவரங்களின் அடிப்படையில் மேலே சொல்லப்பட்டிருக்கும் வருமானம் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் சந்தை நிலவரப்படி இந்த வருமானம் மாற்றத்துக்குட்பட்டது.

No comments:

Post a Comment