Pages

Sunday, 12 August 2012

My Article on Credit Card in Naanayam Vikatan 12th August 2012

கிரெடிட் கார்டு கட்டணம்: கவனமா இருந்தா காசு மிச்சம்!
''இன்றைக்கு கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பலருக்கு அதன் கட்டண முறை பற்றி சரியாகத் தெரியவில்லை. தெரிந்துகொள்ள கவனம் செலுத்துவதுமில்லை. இதனாலேயே பலவகையான மறைமுக கட்டணத்தைச் செலுத்தி, பின்பு புலம்புகிறார்கள். இந்த கட்டண விவரங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டால், கண்டிப்பாக காசை மிச்சப்படுத்தலாம்'' என்கிறார் நிதி ஆலோசகர் பத்மநாபன். கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வசூலிக்கும் பல வகையான கட்டணங்கள் பற்றி அவரே விளக்கிச் சொன்னார்.
   கட்டணங்களின் வகை!
சேர்க்கைக் (அறிமுகக்) கட்டணம், ஆண்டுக் கட்டணம், பணம் எடுத்தலுக்கான கட்டணம், வட்டி, நிதிக் கட்டணம், காலதாமதக் கட்டணம், சேவைக் கட்டணம் என பல கட்டணங்கள் உண்டு. இனி ஒவ்வொரு கட்டணத்தையும் பார்ப்போம்.
அறிமுகம் மற்றும் ஆண்டுக் கட்டணம்!
பெரும்பாலான வங்கிகள் இந்த இரண்டு கட்டணங்களும் இல்லாமல் கிரெடிட் கார்டுகளை தருகின்றன. ஆனால், சில கார்டுகளில் நாம் குறிப்பிட்ட அளவு செலவு செய்யாவிட்டால் அதற்கு அடுத்த ஆண்டில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த கட்டணத்தைத் தவிர்க்க கிரெடிட் கார்டு வாங்கியவுடன் கட்டணம் குறித்த விவரங்களை உறுதிபடுத்திக்கொள்வது நல்லது.
சில கார்டுகளுக்கு முதலில் நாம் 5,000 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும். அதற்கு தேவையான அளவு கூப்பன்கள் தருவார்கள். இது மாதிரியான விஷயங்கள் அதிக வருமானம் பெறுபவர்களுக்குத்தான் பொருந்தும் என்பதால் கூப்பன் தருகிறார்கள் என்பதற்காக எல்லோரும் இதில் ஈடுபாடு காட்டுவது நல்லதல்ல.

நகல் ஆவணக் கட்டணம்!
பெரும்பாலான கிரெடிட் கார்டுகளின் ஸ்டேட்மென்ட்கள் தபால் மற்றும் மின்னஞ்சலில் வரும். இதை பத்திரப்படுத்தாமல் தொலைத்துவிட்டால் தேவை என்கிறபோது வங்கியில் நகல் ஆவணம் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், இதை பெற 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

வட்டி மற்றும் சேவைக் கட்டணம்!
ஸ்டேட்மென்ட் வந்த இருபது நாட்களில் நாம் பணத்தைக் கட்ட வேண்டும். தவறினால் அதற்கு 2.5% முதல் 3.5% வரை மாதந்தோறும் தினசரி கூட்டு வட்டி முறையில் கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக. ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு பொருள் வாங்கியிருந்தால் அவருக்கு வருடத்திற்கு 35% முதல் 52% வரை வட்டி கட்ட வேண்டி இருக்கும். வட்டிகளிலேயே மிகவும் அதிகமான வட்டி என்றால் அது கிரெடிட் கார்டு வட்டிதான்.
தாமதக் கட்டணம்!
நாம் குறிப்பிட்ட தேதியில் பணத்தைச் செலுத்தாவிட்டால் தாமதக் கட்டணமாக 300-600 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, நீங்களும் உங்களது நண்பரும் உணவு விடுதியில் 200 ரூபாய் செலவழித்திருக்கிறீர்கள் என்றால் அதற்குகூட கட்டணமாக 300 ரூபாய் தாமதக் கட்டணமாகக் கட்ட வேண்டி இருக்கும். இதனால் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் முடிந்த மட்டில் தாமதமாகப் பணம் செலுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

பணம் எடுக்க கட்டணம்!
எக்காரணத்தைக் கொண்டும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கக் கூடாது. அதற்கு 2.55% வட்டி வசூலிக்கப்படுகிறது அல்லது 250 ரூபாய் மினிமம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். நமக்கு ஒதுக்கப்பட்ட தொகையைத் தாண்டி செலவு செய்ய சில கிரெடிட் கார்டுகள் உதவுகின்றன. ஆனால், இதற்கு 300 முதல் 600 வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
மறைமுகக் கட்டணம்!
ஒரு லட்சம் மதிப்பிலான கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களால் முழுமையாகப் பணம் செலுத்த முடியவில்லை என்றால் 80% உபயோகத்தை மற்ற கார்டுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். இதனால் கூடுதல் கால அவகாசம் கிடைப்பதுடன், சில கார்டுகளில் குறைந்த வட்டியுடன் அந்த பணத்தை தவணை முறையிலும் செலுத்தலாம். இதற்கு மறைமுக கட்டணங்கள் இருக்கும். அதை உறுதிப்படுத்திய பிறகு மாற்றுவது அவசியம்.
கிரெடிட் கார்டுகளை சரியாக பயன்படுத்தினால் அது எமன் அல்ல,  நண்பன்தான் என்பதை உணர்வீர்கள்!

No comments:

Post a Comment