முதலீட்டு வருவாய் முதலீட்டாளரின் வருவாயிலிருந்து வேறுபடுவது ஏன்? -
எப்போதாவது ஒருவர் சிறந்த முதலீட்டைப் பற்றிச் சொன்னால் உடனே சிலர், நான் அதில் நிறைய இழந்து விட்டேன், அது எல்லாம் ஏமாற்று வேலை என்ற பதில் உடனடியாக வந்து விடும். கொஞ்சம் உற்று நோக்கினால் சில திட்டங்கள் உண்மையாகவே ஏமாற்றுத் திட்டமாக இருக்கும். பல திட்டங்கள் நாம் அதனுடைய ரிஸ்க் மற்றும் அதனுடைய ஆற்றலை புரிந்து கொள்ளாமல் எடுத்த முடிவாகவே இருக்கும்.
நாம் புரிந்து முதலீடு செய்யவில்லை என்று சொல்வதற்கு நம்முடைய ஈகோ இடம் கொடுக்காது; உடனே பழியை மற்றவர் பேரில் திருப்பிவிடுவோம்.
மற்றொன்று சேவிங்க்ஸ் என்று சொல்லக்கூடிய முதலீடு, அதில் நமக்கு எவ்வளவு காலம் இணைந்திருக்கவேண்டும், அதற்கு என்ன ரிடர்ன்ஸ் என்பது முன்பே தெரியும். இது கண்டிப்பாகக் கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். மேலும் இதை ஒரு அரசாங்கம் நடத்துவதால் அல்லது ஒரு அரசாங்க கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் நமக்கு பாதுகாப்பானது.
அதே சமயம் முதலீடுகள் கால வரையறைக்கு அப்பாற் பட்டது, ரிடர்ன்ஸ் மிக அதிகமாகவோ அல்லது மிக குறைந்தோ கிடைக்கக்கூடியது. இதில் உத்திரவாத வட்டி தருகிறேன் என்று சொன்னால் ஏமாற வேண்டாம். அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் இருந்தால் உங்களுக்கு சந்தையின் ரிஸ்க் மட்டுமே, நிறுவனம் ஓடிப் போவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு.
நம்மில் பலருக்குப் பணத்தைக் கையாள்வதற்கான திறமைகள் குறைவு என்பது மறுக்கப்படாத உண்மை. அதற்கு மிக முக்கிய காரணம் நம்முடைய முன்னோர்களிடம் இவ்வளவு பணம் இருந்ததில்லை, எனவே அதை அவர்கள் நமக்கு சொல்லி தரவில்லை.
திடீரென்று பணம் வந்தவுடன் அதற்கு வேட்டு வைப்பதற்கு பல ரூபத்தில் வெளியில் காத்துக் கொண்டிருப்பதால் நாம் நிறைய சம்பாதித்தும் கஷ்டப்படுகிறோம். நாம் நினைத்தால் அடுத்த சந்ததியினருக்குப் பணத்தை எப்படி பாதுகாப்பது, அதை எவ்வாறு பெருக்குவது என்று சொல்லித்தரமுடியும்.
முதலீடு என்பது பெரும்பாலும் உணர்ச்சி மிகுந்தது, அதைக் கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இன்று பலர் நிறைய சம்பாதிக்கிறார்கள் அப்படி இருக்கும்போது ஏன் பலரும் கஷ்டப்படுகிறார்கள்? காரணம், நம்முடைய பெரும்பாலான முடிவுகள் சிந்திக்காமல் அந்த நொடியில் தோன்றக்கூடிய விருப்பத்திற்கேற்ப செயல் படுவதால்தான்.
சில செடிகள் மற்றும் மரங்கள் சில மாதங்களில் பலன் தரக் கூடியவை, இன்னும் சில வகைகள் வருடங்களில் பலன் தரும். சில அடுத்த தலை முறையில் தான் பலன்தரும். அதே போல பங்கு சார்ந்த முதலீடுகள் பெரும்பாலும் 5 முதல் 7 வருட முடிவில் கடந்த 35 வருடங்களில் நல்ல பலன் தந்திருக்கிறது.
நம்மில் பலர் அது சரியாக செயல்படாதபோது அதில் முதலீடு செய்யாமல், அது உச்சத்தில் வந்தபோது முதலீடு செய்து அது கடந்த மாதங்களில் செயல்பட்டது போல இருக்கும் என்று நினைத்து முதலீடு செய்வதால் உடனடியாக பணத்தை எடுத்து விடுகிறார்கள்.
பங்கு சார்ந்த முதலீடுகள் என்பது நீங்கள் ஒரு பிசினஸில் இணைந்திருப்பதுபோல, அவ்வாறு இருக்கும்போது காத்திருத்தல் அவசியம். நான் சொல்லக்கூடிய அனைத்து விதமான முதலீட்டு ரிடர்ன்ஸ் யாவும் நீண்ட காலம் இணைந்திருந்தது, ஆனால் முதலீட்டாளரின் ரிடர்ன்ஸ் அவர்களுடைய மனநிலைக்கேற்ப அடிக்கடி மாறுபடுவதால் பலர் பயன் பெறவில்லை. இதில் உள்ள பெரிய சவால் முதலீட்டின் திட்டங்களில் இல்லை. இவை, முதலீட்டாளரின் மன வேறுபாடே இந்த மாதிரியான வித்தியாசத்திற்கு காரணம்.
பெரும்பாலான முதலீட்டு திட்டங்களில் அதை பரிந்துரை செய்யக்கூடிய ஆலோ சகர்அவர்கள் சொன்ன முதலீட்டு ரிடர்ன்ஸ் வருகிறதா என்று நம்முடன் கடைசி வரை வருவதில்லை. அது பெரும்பாலும் பரிவர்த்தனை நிலையிலே உள்ளது. நீண்ட கால உறவுகள் / தொடர்புகள் இருப்பதில்லை எனவே அந்த முதலீட்டைக் கண்காணிப்பதில்லை.
பங்கு சார்ந்த முதலீட்டுத் திட்டமான மியூச்சுவல் பண்டில் இந்த வித்தியாசம் குறைவு. காரணம் ஆலோசகர் அதைத் தொடர்ந்து கண்காணிப்பதோடு, முதலீட்டாளருக்கு ஏற்படும் சந்தேகங்களும், பயங்களும் உடனுக்குடன் நிவர்த்தி செய்யபடுவதால் நல்ல ரிடர்ன்ஸ் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த கால ரிடர்ன்ஸ் என்பது ஒரு முதலீட்டு திட்டத்திற்கு உண்டான ஆற்றல் எவ்வளவு என்பதை பறை சாற்றுவது. அது வரக்கூடிய காலங்களில் அதே அளவோ, குறைந்தோ அதிகமோ வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இந்த மாதிரியான ரிடர்ன்ஸ் வருவதற்கான சாத்திய கூறுகள் நிறைய. அதே சமயம் மற்ற முதலீடுகளில் யாருடைய துணையும் இல்லாமல், மேலும் கடந்த காலங்களில் நிலையான ரிடர்ன்ஸ் தராத முதலீடுகளில் பலரும் ஒரு நம்பிக்கையின் பெயரில் முதலீடு செய்வது மிகப்பெரிய ரிஸ்க்.
சாராம்சம்: இன்றைய சூழலில் பலருக்கு நேரமும் இல்லை, அதில் ஈடுபாடும் இல்லை என்பது வருத்தப்படக்கூடிய ஒரு உண்மை. அவ்வாறு உள்ளவர்கள் ஒரு ஆலோசகரின் உதவியோடு இந்த மாதிரி முதலீடுகளில் இணைந்திருந்தால் கண்டிப்பாக நன்றாக பணம் செய்ய முடியும்.
நாம் இன்று சமூக வலை தளங்களில் நம்முடைய நேரங்களை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். அதில் செலவிடக்கூடிய நேரத்தில் வாரத்திற்கு ஒரு நாள் என்று ஒதுக்கினால் நாம் பல முதலீடுகளையும் அதன் பயன்களையும் நன்கு உணர முடியும். இது நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் செய்யக்கூடியது, அதுவே வரக் கூடிய காலங்களில் நம் சந்ததியினர் நன்றாக முதலீடு செய்து வாழ்வதற்கும் வித்திடும் என்று சொன்னால் மிகையாகாது. நேரம் ஒதுக்குங்கள்! முதலீடுகளை அறிந்து கொள்ளுங்கள்! நிறைய பணம் செய்யலாம்.
padmanaban@fortuneplanners.com
No comments:
Post a Comment