முதலீடு : ரிஸ்க் எடுப்பதில் நீங்கள் எப்படி ?
பி.பத்மநாபன், இயக்குநர்,ஃபார்ச்சூன் பிளானர்
நாம் எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும் அதைச் செய்வதற்குமுன், நம்முடைய ரிஸ்க் எடுக்கும் திறனை பற்றித் தெளிவாகத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். இதைத் தெரிந்துவைத்திருந்தால்தான் சரியான முதலீட்டை நம்மால் தேர்வு செய்ய முடியும்.
இந்த ரிஸ்க் எடுக்கும் விஷயத்தில் நாம் எவ்வளவு தூரம் தயார்? அல்லது நமது ரிஸ்க் எடுக்கும் திறன் என்ன என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? இதற்கென ஏதாவது ஒரு டெஸ்ட் இருக்கிறதா என்று கேட்கிறீர்களா?
இருக்கவே இருக்கிறது ஓர் அற்புதமான டெஸ்ட். இந்த டெஸ்ட்டை நீங்கள் செய்துபார்த்தால், உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் எவ்வளவு என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிடும். இதன்பிறகு உங்களுக்கான முதலீட்டை எப்படி மாற்றியமைத்துக்கொள்வது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்.
இந்த டெஸ்ட் உங்களைப் பற்றி உங்களுக்கே எடுத்துச் சொல்வதற் காகத்தான் என்பதால், உங்கள் குணாதிசயத்தை மறைக்காமல் சொல்வது கட்டாயம்.
கேள்விகளைப் படிக்கத் தொடங்கும் முன், நமக்குக் கிடைக்கும் முதலீட்டு வகைகளில் உள்ள ரிஸ்க்கையும் வருமானத்தையும் சுருக்கமாகச் சொல்கிறேன்.
வங்கி, போஸ்ட் ஆபீஸ் முதலீடுகள்:
இது ரிஸ்க் இல்லாத முதலீடு. நீண்டகால அளவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாது. அதிகபட்சம் 10% மேல் வருமானம் கிடைக்காது.
லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி:
இன்ஷூரன்ஸ் என்பது பாதுகாப்பே தவிர, முதலீடல்ல. இதில் போடப்படும் பணத்துக்கு 6% வட்டிகூடக் கிடைக்காது. எனவே, நிச்சயமாகப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாது.
மியூச்சுவல் ஃபண்ட்:
ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானம் எதிர்பார்க்கலாம். சந்தையின் ஏற்ற இறக்கம் ரிஸ்க்குக்கு உட்பட்டது. செபி என்ற அரசாங்க அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது.
பங்குச் சந்தை முதலீடு:
இதில் ரிஸ்க் அதிகம்; அதேநேரத்தில் வருமானமும் அதிகம். இதுவும் செபியின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.
ரியல் எஸ்டேட்:
கடந்த பத்து வருடங்களாக நல்ல வருமானம் தந்துள்ளது. இதை நினைத்தவுடன் விற்று காசாக்க முடியாது. வரும் காலங்களில் பழைய வருமானத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிச்சம்.
தங்கம்:
கடந்த பத்து வருடங்களாக நல்ல வருமானம் தந்துள்ளது. கடந்த ஓராண்டாகச் சரியாகச் செயல்படவில்லை. வருங்காலத்தில் வருமானம் குறைய வாய்ப்பு அதிகம்.
இந்த விஷயங்களையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு இனி கேள்விக்கான பதிலை டிக் செய்ய ஆரம்பியுங்கள்.
1ரிஸ்க் எடுக்கும் விஷயத்தில் நீங்கள் எப்படி?
1. ரிஸ்க் எடுக்க விருப்பமில்லை.
2. கொஞ்சம் எடுக்கலாம்.
3. வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தால், கண்டிப்பாக எடுப்பேன்.
4. ரிஸ்க் எடுத்தால்தான் ரிட்டர்ன்ஸ் கிடைக்கும்; எனவே, ரிஸ்க்கை பற்றி கவலைப்படாமல் எவ்வளவு வேண்டுமானாலும் எடுப்பேன்.
2 நீங்கள் எடுத்த ஒரு முதலீட்டு ரிஸ்க் தவறாகப் போனால், எப்படி அதை எடுத்துக்கொள்வீர்கள்?
1. கண்டிப்பாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
2. கஷ்டப்பட்டு ஏற்றுக்கொள்வேன்.
3. ரிஸ்க்கை ஏற்றுக்கொண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பேன்.
4. ரிஸ்க்கை சகஜமான விஷயமாக எடுத்துக்கொள்வேன்.
3 உங்கள் பார்வையில் ரிஸ்க் என்பது என்ன?
1. பயம்.
2. கணிக்க முடியாது.
3. ஒரு வாய்ப்பு.
4. ஒரு சுவாரஸ்யமான மற்றும் த்ரில்லான விஷயம்.
4 அதிகப் பணத்தை த்ரில்லுக்காக எப்போதாவது முதலீடு செய்திருக்கிறீர்களா?
1. இல்லவே இல்லை.
2. கொஞ்சமாக முதலீடு செய்திருக்கிறேன்.
3. எப்போதாவது வாய்ப்பு எனக் கருதினால்.
4. அடிக்கடி செய்வதுண்டு.
5 அரசாங்க வேலை - அதில் சம்பளம் குறைவு, பாதுகாப்பு அதிகம். தனியார் நிறுவனத்தில் வேலை - அதில் பாதுகாப்புக் குறைவு, சம்பளம் அதிகம். நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள்?
1. அரசாங்க வேலை.
2. உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
3. ஓரளவுக்குப் பாதுகாப்பு, நல்ல சம்பளம்.
4. தனியார் வேலை.
6 ஒரு முதலீட்டை மேற்கொள்ளும்போது, நீங்கள் அதிகம் கவனிப்பது அதில் உள்ள ரிஸ்க்கையா அல்லது அதிலிருந்து கிடைக்கும் வருமானமா?
1. ரிஸ்குக்கே அதிக முக்கியத்துவம் தருவேன்.
2. சமஅளவு முக்கியத்துவம் தருவேன்.
3. எதில்தான் ரிஸ்க் இல்லை; வாய்ப்புகள் நிறைய இருந்தால் ரிட்டர்ன் முக்கியம்.
4. ரிட்டர்ன் மட்டுமே முக்கியம்; ரிஸ்க் பற்றிக் கவலை இல்லை.
7 உங்கள் வேலையில் சம்பளம் என்பது நிரந்தரச் சம்பளம், அல்லது வேலைக்கேற்ப ஊதியம் அல்லது இரண்டும் சேர்ந்தது?
1. நிரந்தரச் சம்பளத்தையே அதிகம் விரும்புவேன்.
2. என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
3. இரண்டும் சேர்ந்ததை அதிகம் விரும்புவேன்.
4. என் திறமை எனக்குத் தெரியும்; எனவே, வேலைக்கேற்ற ஊதியத்தையே அதிகம் விரும்புவேன்.
8 கடந்த காலத்தில் நீங்கள் முதலீட்டில் ரிஸ்க் எடுத்திருக்கிறீர்களா?
1. இல்லை.
2. கொஞ்சம் எடுத்துள்ளேன்.
3. எப்போதாவது எடுப்பதுண்டு.
4. ரிஸ்க் எனக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி; நிறைய எடுத்திருக்கிறேன்.
9 சிறந்த முதலீட்டை தேர்ந்தெடுப்பதில், உங்கள்மேல் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளீர்கள்?
1. எனக்குத் தெரியாது.
2. ஓரளவுக்கு.
3. நிறையப் படிக்கிறேன்; என்னால் சரியாகத் தேர்வு செய்ய முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது.
4. நான் இதில் தேர்ந்தவன்; எனக்கு இதில் முன்னனுபவம் உள்ளது.
10 ரிஸ்க்கும், ரிட்டர்ன்ஸும் ஒன்றோடு ஒன்று கைகோத்து செல்வது. அப்படி இருக்கும்போது, அதிக ரிட்டர்ன் வேண்டும் என்று உங்கள் முதலீட்டில் எத்தனை சதவிகிதம் ரிஸ்க் எடுக்கத் துணிவீர்கள்?
1. 10%.
2. 25%.
3. 40%.
4. 50%.
11 நீங்கள் 15 ஆண்டுக் காலம் முதலீடு வைத்திருக்க விரும்பினால் வங்கி வைப்பு நிதியைவிட எத்தனை மடங்கு அதிகம் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்?
1. வங்கி வைப்பு நிதி அளவே.
2. இரண்டு மடங்கு.
3. மூன்று மடங்கு.
4. நான்கு மடங்கு.
12 இன்று வருமான வரிவிலக்குப் பத்திரங்கள் மிகவும் பிரபலம். அதைக் கருத்தில்கொண்டு உங்கள் பணத்தை 15 - 20 ஆண்டு வரை பணவீக்கத்தை அறியாமல் முதலீடு செய்வீர்களா?
1. எனக்கு பணவீக்கம் பற்றிக் கவலை இல்லை.
2. 40% சதவிகிதம் முதலீடு செய்வேன்.
3. 10% முதலீடு செய்வேன்.
4. கண்டிப்பாக அதில் முதலீடு செய்ய மாட்டேன்.
13 இன்ஷூரன்ஸ் ஒரு சிறந்த முதலீடு. மேலும், அது பாதுகாப்பு. எனவே, வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ் டெபாசிட்களுக்கு அடுத்து அதில்தான் நான் முதலீடு செய்வேன். எனக்கு வருமானம் பற்றிக் கவலை இல்லை.
1. நிறைய முதலீடு செய்வேன்.
2. 40% முதலீடு செய்வேன்.
3. 25% யூலிப் திட்டத்தில் முதலீடு செய்வேன். அது நல்ல வருமானம் மற்றும் இன்ஷூரன்ஸ் கவரேஜையும் தரும்.
4. பாதுகாப்பையும், முதலீட்டையும் நான் குழப்பிக் கொள்ளமாட்டேன்; டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து, மீதமுள்ளவற்றைப் பிற முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யவே விரும்புவேன்.
14 ஒருவேளை உங்களுக்கு வேலை போய்விடுகிறது எனில், உங்களால் எத்தனை மாதம் அடுத்த வேலை கிடைக்கும் வரை சமாளிக்க முடியும்?
1. ஒரு மாதம்.
2. மூன்று மாதம்.
3. ஆறு மாதம்.
4. நான் இந்த வேலையே மட்டுமே நம்பி இல்லை. என்னிடம் 3 மாதத்துக்கான பணம் உள்ளது. அதேசமயம் என்னால் மூன்று மாதத்தில் நல்ல வேலை தேடிகொள்ள முடியும் என்கிற தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ளது.
15 இதற்கு முன்னால் இந்தமாதிரி கேள்விகளைச் சந்தித்ததில்லை. எனவே, இப்போது நான் சொல்லும் பதிலும் நாளை சொல்லும் பதிலும்கூட வேறுபடலாம். எனவே, எனக்குக் கொஞ்சம் காலஅவகாசம் வேண்டும்?
1. முற்றிலும் சரியே.
2. நான் இதுமாதிரி சிலவற்றைச் சந்தித்த அனுபவம் உள்ளது.
3. இப்போது தோராயமாகவே பதில் சொல்கிறேன். உண்மையில் என் பதில் வேறுபட வாய்ப்புள்ளது.
4. நான் எப்போதும் தீர்க்கமாக யோசித்து முடிவு செய்பவன். இப்போது நான் என்ன சொல்கி றேனோ, அதையே நிதர்சனத்திலும் கடைப்பிடிப்பேன்.
எவ்வளவு மார்க்?
கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டீர்களா? இனி, நீங்கள் எவ்வளவு மார்க் எடுத்திருக்கிறீர்கள் என்று பார்ப்போம். முதலில் எந்தெந்த பதில்களுக்கு எவ்வளவு மார்க் என்று பார்த்துவிடுவோம்.
ஒவ்வொரு கேள்வியிலும் நம்பர் 1-ஐ நீங்கள் தேர்வு செய்திருந்தால், 2 மார்க்; நம்பர் 2-ஐ தேர்வு செய்திருந்தால்,
3 மார்க்; நம்பர் 3-ஐ தேர்வு செய்திருந்தால், 4 மார்க்; நம்பர் 4-ஐ தேர்வு செய்திருந்தால், 5 மார்க்.
ஒருவர் 15 கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருந்தால், அவரால் அதிகபட்சமாக 75 மார்க் வாங்க முடியும். குறைந்தபட்சமாக 30 மார்க் வாங்க முடியும்.
நீங்கள் எப்படி?
உங்களது மொத்த மார்க் 35-க்கு கீழே இருந்தால், நீங்கள் கொஞ்சம்கூட ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்; உங்களுக்கு வருமானம் பற்றி எந்தக் கவலையும் இல்லை என்று அர்த்தம்.
உங்களது மொத்த மார்க் 35-க்கு மேலேயும் 50-க்கு கீழேயும் இருந்தால், நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க விரும்புபவர்; உங்களுக்கு வருமானம் பற்றிய கவலை கொஞ்சம் இருக்கிறது.
உங்களது மொத்த மார்க் 50-க்கு மேலேயும் 65-க்கு கீழேயும் இருந்தால், நீங்கள் ரிஸ்க் மற்றும் வருமானத்தை நன்றாகப் புரிந்து, ரிஸ்க்கை அளந்து (சிணீறீநீuறீணீtமீபீ க்ஷீவீsளீ) எடுப்பவர்.
உங்களது மொத்த மார்க் 65-க்கு மேலே இருந்தால், நீங்கள் ரிஸ்க்கை அதிகம் விரும்புபவர். ரிஸ்க்கை மதிப்பிடாமல் வெறும் வருமானத்தை நோக்கமாகக் கொண்டிருப்பவர் என்று அர்த்தம்.
எது சரி?
35-க்கு கீழே மார்க் வாங்குவதும், 65-க்கு மேலே மார்க் வாங்குவதும் சரியானதல்ல. 50 - 65 வரை மார்க் வாங்குபவர்கள் மிகவும் பிராக்டிகலான மனிதர். 35 - 50 வரை மார்க் வாங்குபவர்கள் நடைமுறை வாழ்க்கையை ஏற்கமுடியாமல் கொஞ்சம் திணறுபவர்கள் என்று சொல்லலாம். இந்த இரண்டில் இருந்தால் பணவீக்கத்தையாவது இவர்கள் முதலீடு கண்டிப்பாகக் கட்டுப்படுத்தும்.
35-க்குக் கீழ் மற்றும் 65-க்கும் மேல் இருப்பவர்கள் இதை உணர்ந்து 35-க்குக் கீழ் உள்ளவர்கள் 50-க்கும், 65-க்கும் மேல் உள்ளவர்கள் கொஞ்சம் ரிஸ்க்கை குறைத்து 50 - 65-க்குள் இருந்தால் நிச்சயம் முதலீட்டில் வெற்றி பெற முடியும்.
No comments:
Post a Comment