வாருங்கள் தெரிந்துகொள்வோம்!
பல வாரங்களாக நாம் முதலீட்டைப் பற்றியும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றியும், மேலும் எத்தனை வகையான முதலீடு, அதன் ரிஸ்க் மற்றும் ரிடர்ன்ஸ் என்ன என்பது பற்றியும் பார்த்தோம். இந்த வாரம் அவ்வாறு முதலீடு செய்யப்பட்டவைகளில் நாம் என்னவெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று பார்க்கலாம்.
அதற்கு முன்பு நம் தினசரி வாழ்வில் தேவைப்படும் அடையாளச் சீட்டுகளான (DOCUMENTS) பான் கார்டு, வீட்டு முகவரி, வோட்டர்ஸ் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு முதலியவற்றிற்கு போதுமான நகல்களை எடுத்து வைத்திருக்கவேண்டும். இதில் ஏதாவது தொலைந்து போனால் நகலைவைத்து எளிதாக மீண்டும் விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் நம் பர்ஸில் எப்போதும் வைத்திருப்பது நல்லது.
இன்று எல்லாம் இன்டர்நெட் யுகமாக மாறிவிட்டதால், இவைகளை நம்முடைய ஈமெயிலில் அல்லது DROPBOX என்று சொல்லப்படும் ஒரு ப்ரோக்ராமில் நாம் பத்திரபடுத்தி வைத்து உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அதை எடுத்துக்கொள்ளலாம்.
நாம் எதையெல்லாம் அளக்கிறோமோ அது மட்டுமே கண்டிப்பாக வளரும். இன்று வாழ்க்கை இயந்திரத்தனமாக மாறிவிட்டதால் நமக்கு பல விஷயங்களைக் கவனிக்க நேரமுமில்லை, மனமுமில்லை. இதனால் எது மிகவும் அவசியமோ அதைக்கூட சரிவர செய்வதில்லை. நண்பர் ஒருவர் அவருக்கு வந்த டிவிடெண்ட் செக்கை கூட வங்கியில் போடுவதற்கு நேரமில்லாமல் இருக்கிறார்.
நாம் தேடிய ஒரு செல்வத்தை பாதுகாக்க நேரமில்லை என்றால் எதற்காக மீண்டும் மீண்டும் கஷ்டப்பட்டு வேலை செய்யவேண்டும். இன்று எல்லோரும் பிஸியாக, பொருளை தேடுவதால் அதை அனுபவிக்க யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை என்பது வருந்தக்கூடிய ஒரு விஷயம்.
எல்லோரும் சொல்லும் பொதுவான பதில் என்னிடம் பணம் இல்லை, அல்லது என்னிடம் பணம் தங்குவதில்லை. இதை சற்று உள்நோக்கி பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் பணத்தை மதிப்பதில்லை. தன்னை மதிக்காததால் பணம் அவர்களிடத்தை விட்டு உடனே ஓடிவிடுகிறது. இதை படிப்பதற்கு நகைச்சுவையாக தோன்றினாலும் இது முற்றிலும் உண்மை. முன்பு ஒவ்வொரு வருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருந்தது.
இன்று இல்லாததால் அலுவலகத்தில் செலவிடும் நேரம்தான் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நம் வாழ்வில் அடிக்கடி எதிர் நோக்கும் சில முதலீடுகளில் நாம் என்ன கவனிக்கவேண்டும் என்று பார்க்கலாம்.
கிரெடிட் கார்டு
இன்று கிரெடிட் கார்ட் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதை சரிவர உபயோகப்படுத்த தெரியாதவர்கள் 90 சதவீதத்துக்கு மேல். நாம் வாங்கும் பொருளுக்கு 30 முதல் 50 நாட்களுக்குள் பணம் செலுத்தினால் கிரெடிட் கார்ட் போல ஒரு உபயோகமானது எதுவும் இல்லை. ஆனால் பலருக்கும் இதை உபயோகிக்கத் தெரியாததால் இதை குறை கூறுகின்றனர்.
நாம் வாங்கிய பொருளில் 5% பணம் கொடுத்தாலே நாம் தொடர்ந்து உபயோகிக்கலாம், ஆனால் மீதமுள்ள பணத்திற்கு மாதம் 3% வரை வட்டி கட்ட வேண்டி இருக்கும். இதைப்புரிந்து கொள்ளவேண்டும். அதே போல ஏதாவது ஒரு இன்சூரன்ஸ் பாலிசியையும் நம் தலையில் கட்டி விட்டு மாதா மாதம் பணம் எடுப்பார்கள் பலர் இதை முதல் மாத பில்லிங்கிலே பார்க்காமல் விட்டுவிட்டால் ஒரு வருடம் கட்ட வேண்டி வரும்.
இன்சூரன்ஸ் பாலிஸி
பாலிஸி நம் கைக்கு வந்த தினத்திலிருந்து 15 நாட்களுக்குள் நமக்கு பிடிக்காவிட்டால் உடனே சரண்டர் செய்ய முடியும். பலர் ஏதாவது பிரச்சினை என்று வரும் போதுதான் அதைப் பிரித்துப் பார்ப்பார்கள். மேலும் அதில் நம்முடைய பெயர், வயது, ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர் மற்றும் வீட்டு முகவரி எல்லாம் சரியாக இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். நாமினியின் பெயர் சரியாக இருக்கிறதா, நம்முடைய முகவர் சொன்னதற்கும் பாலிசியின் வார்த்தைகளுக்கும் சம்பந்தம் உள்ளதா என்றும் பார்க்கவேண்டும்.
பாலிசி ஒரிஜினல் எப்போதும் வைத்திருக்கவேண்டும். அது தொலைந்தால் மீண்டும் வாங்க வேண்டும், இல்லாவிட்டால் நடுவில் நாம் கொஞ்சம் பணம் எடுப்பதாக இருந்தாலும் அல்லது சரண்டர் செய்வதாக இருந்தாலும் ஒரிஜினல் இல்லாவிட்டால் ஒன்றும் செய்யமுடியாது.
மியூச்சுவல் ஃபண்ட்
நாம் முதலீடு செய்தவுடன் நமக்கு ஒரு ஸ்டேட்மெண்ட் வரும். அதில் நம்முடைய பெயர், பான் நம்பர், பேங்க் கணக்கு எண், விலாசம் மற்றும் ஈமெயில், மொபைல் நம்பர், நாமினி எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்க்கவேண்டும். இதில் ஒரிஜினல் என்பது கிடையாது, நாம் ஒரு சாதாரண காகிதத்தில் நம்முடைய FOLIO NO –ஐ குறிப்பிட்டு பணத்தை எடுக்கவோ அல்லது வேறு ஃபண்டில் சுவிட்ச் செய்வதோ எளிது. நம்முடைய பான் நம்பர் அல்லது ஈமெயில் ஓர் மொபைல் நம்பரை வைத்து நம் அனைத்து முதலீட்டையும் நம்மால் எளிதாக எடுக்க முடியும். ஒவ்வொரு முதலீட்டிற்கும் (FOLIO NO) தருவார்கள் அதை ஒரு நோட்டில் குறித்து வைத்தாலே போதுமானது.
ஒருவர் எப்போது வேண்டுமானாலும் நாமினியின் பெயரை மாற்றிக் கொள்ள முடியும். முன்பு கொடுத்த பேங்க் கணக்கை நாம் க்ளோஸ் செய்தால் புது பேங்க் பற்றிய தகவலை உடனடியாக தர வேண்டும் இல்லாவிட்டால் அது பழைய வங்கிக் கணக்கிற்கு சென்று விடும்.
பங்குச் சந்தை முதலீடு
எப்படி பணத்திற்கு வங்கி கணக்கு எண் உள்ளதோ அதே மாதிரி பங்குகளுக்கு தரக்கூடியது டீமேட் கணக்கு எண். இதற்கு கண்டிப்பாக ஈமெயில் மற்றும் மொபைல் நம்பர் தர வேண்டும். அன்று ஏதாவது நம்முடைய கணக்கில் வர்த்தகம் நடந்திருந்தால் உடனடியாக அலெர்ட் மெசேஜ் வந்துவிடும். மறுநாள் டெலிவரி நோட் நம் மெயிலுக்கு வரும். இதில் என்ன சார்ஜ் செய்கிறார்கள் என்று பார்க்கவேண்டும். நாம் பவர் ஆப் அட்டார்னி (POWER OF ATTORNEY) கொடுத்திருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வீட்டுப் பத்திரம்
அதே போல வீட்டுப் பத்திரத்தில் நம்முடைய பெயர் சரியாக எழுதப்பட்டுள்ளதா, வில்லங்க சான்றிதழ் சரியாக பெறப்பட்டிருக்கிறதா அது ஏதாவது அடமானத்தில் உள்ளதா போன்றவற்றை சரியான நபரிடம் கொடுத்து சரிபார்க்க வேண்டும். வங்கிதான் கடன் கொடுக்கிறார்களே அவர்கள் பார்த்திருப்பார்கள் என்று அசட்டையாக இருக்க வேண்டாம். இன்றைய தொழில்நுட்பத்தில் யாரை வேண்டுமானாலும் எளிதாக ஏமாற்ற முடியும்.
பேங்க் ஸ்டேட்மென்ட்
ஒவ்வொரு காலாண்டு ஸ்டேட் மென்டும், நமக்கு வீட்டிற்கு தபாலிலும், மாதா மாதம் ஈமெயிலிலும் வரும். அதில் ஏதாவது தேவையற்ற சார்ஜ் செய்துள்ளார்களா என்று பார்க்க வேண்டும். முன்பு பேங்க் பாஸ்புக் ரெகுலராக அப்டேட் செய்வார்கள். இன்று நம் வீட்டைத் தேடி வருவதால் அதைப் பார்ப்பதற்கு சோம்பல் படுகிறோம். ஆனால் அது மிகவும் அவசியமானது.
சாராம்சம்
மேலே சொன்ன யாவும் ஒருவரால் எளிதாகக் கடைபிடிக்கக் கூடியதே. அதற்கு கொஞ்சம் நேரம் செலவிட வேண்டும், அவ்வளவுதான். இதைச் சரிவரசெய்தால் நம்மால் எங்கு ஓட்டை உள்ளது என்று கண்டறிய முடியும், அப்போதுதான் நம்மால் அதிலிருந்து வெளிவர முடியும். இப்படி செய்வதால் நாம் பல இடங்களில் கொஞ்சம் கொஞ்சம் சேமிக்க முடியும்.
ஒரு டாக்குமென்ட் நம் பெயருக்கு வந்தால் அதில் நாம் சொன்னவை எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்ப்பது நம்முடைய கடமை, அதை விட்டு இதைக் கூட தவறாக ஒருவர் செய்வாரா என்று குறை கூறினால் அவதிப்படுபவர் நம்மைத்தவிர வேறு யாரும் இல்லை.
இன்று எவ்வளவோ (APPS) நம்முடைய ஸ்மார்ட் போனில் வந்து நம் வாழ்வை எளிமைப் படுத்தினாலும் முந்தைய தலைமுறைபோல நிம்மதி யான வாழ்க்கை இல்லை, காரணம் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக எப்படி வாழ்வது என்பதை மறந்து கொண்டே இருக்கிறோம்.
No comments:
Post a Comment