இரண்டாவது அபிப்ராயம் -
இன்று நாம் பரவலாக உபயோகப்படுத்தும் ஒரு வார்த்தை இரண்டாவது அபிப்பிராயம் (SECOND OPINION). பெரும்பாலும் இந்த சொல் மருத்துவத்துறையில்தான் பயன்படுத்தக்கூடியது. ஒரு மருத்துவர் ஆபரேஷன் செய்யச் சொன்னால் இன்னொரு மருத்துவரிடம் அபிப்பிராயம் கேட்பது. ஒரு வேளை அவர் வேண்டாம் என்று சொல்வாரோ என்ற ஒரு நம்பிக்கையின் பெயரில் கேட்பது.
ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்கு எப்படி ஹெல்த் முக்கியமோ, அதே அளவு வெல்த்தும் முக்கியம். ஆனால் வெல்த்துக்கு மட்டும் யாரும் அபிப்ராயம் கேட்பது கிடையாது. எப்படி தகுந்த சமயத்தில் செய்யாத ஆபரேஷன் ஒருவரது உடல் நிலையைப் பாதிக்குமோ, அதேமாதிரி இரண்டாவது அபிப்ராயம் கேட்காத முதலீடும் நம் செல்வத்தை பெரிதளவு பாதிக்கும் என்று சொன்னால் மிகையாகாது.
இன்று தவறான இன்சூரன்ஸ் பாலிசி எடுக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பெரும்பாலான இன்சூரன்ஸ் பாலிசிகள் பலவந்தத்தில்தான் விற்கப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை. மேலும் இன்சூரன்சில் பாதியில் வெளியேறினால் நிறைய நஷ்டம் வரும். இதனால் நிறைய பேர் கடைசி வரை கட்டுவதற்குத் தள்ளப்படுகின்றனர். பணத்தில் நஷ்டம் இல்லையே தவிர பணவீக்கத்தை கணக்கிட்டால், மிகப்பெரிய நஷ்டம் வரும். நிறைய பேர் பாலிசி எதற்கு எடுத்திருக்கிறோம் அதனுடைய பலன்கள் என்ன, பாலிசியின் பெயர் என்ன என்று கூட தெரியாதவர்கள் அதிகம். இன்சூரன்ஸ் என்பது நமக்கு பயன்படுவதற்காக எடுக்கக் கூடியதில்லை. நாம் நேசிக்கும் நம் மனைவி மற்றும் குழந்தைகள், ஒரு வேளை நம் உயிருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் நம்முடைய குடும்பத்தை பணக் கஷ்டத்தில் இருந்து மீட்பதற்காக என்று பலருக்கும் இன்னும் புரியவில்லை.
ஒருவர் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து அதைத் தொடர விருப்பம் இல்லையென்றால், 15 நாட்களுக்குள் அந்த நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தினால் அதை ரத்து செய்யமுடியும். ஆனால் ஏதாவது பிரச்சினை என்றவுடன்தான் பாதி பேர் பாலிசியை பிரித்தே பார்க்கின்றனர். பின் எல்லோரும் கேட்கும் ஒரு கேள்வி, போட்ட பணம் கூட கிடைக்கலையே. நான் அந்த முகவரைப் பற்றி புகார் கூறலாமா? 15 நாட்கள் ப்ரீ லுக் (FREE LOOK) கொண்டு வந்ததே இதைத் தவிர்ப்பதற்குத்தான். பாலிசிதாரர்கள் அதைப் புரிந்து கொள்ளவே இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.
அதேபோல மியூச்சுவல் ஃபண்டில் 45 நிறுவனம், மற்றும் 1000 திட்டங்கள் உள்ளன. அதில் எதாவது தவறாக வாங்கி இருந்தால் அப்படியே அதை வைத்திருக்காமல் நாம் தகுந்த ஆலோசகரை அணுகி அதை அப்படியே வைத்திருக்கலாமா அல்லது வேறு திட்டத்திற்கு மாற்றவேண்டுமா என்று அறிய வேண்டும்.
வாய்ப்பு என்பது எல்லோருக்கும் தெரிவதில்லை. ரியல் எஸ்டேட் கடந்த 10 வருடம் நன்றாக ரிடன்ஸ் தந்திருக்கிறது என்று முதலீடு செய்யாமல்,வரும் காலங்களில் எவ்வாறு செயல்படும் என்று தெரிந்து முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனம். எல்லோரும் ஒரு செயலை செய்தால் எல்லோருக்கும் கிடைப்பதுதான் நமக்கும் கிடைக்கும்.
முதலீட்டை பரிந்துரை செய்பவர்களை முகவர் மற்றும் ஆலோசகர் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முகவர் என்பவர் பெரும்பாலும் ஒரு திட்டத்தை விற்பதிலேயே முனைப்பாகச் செயல்படுவர். ஆலோசகர் என்பவர், அந்தத் திட்டம் உங்களுக்குத் தேவையா அதில் என்ன ரிஸ்க் மற்றும் ரிடர்ன், மேலும் எவ்வளவு காலம் இணைந்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள். இன்று நிறைய முகவர்கள் ஆலோசகராக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு வரவேற்கதக்க நல்ல விஷயம். இரண்டாவது அபிப்ராயத்தின் பேரில், நாம் நல்ல ஆலோசகரிடம் கேட்டு நடந்தால், நம்முடைய நிதி நிலைமையை சீராக்கி கொள்ள முடியும்.
இரண்டாவது அபிப்பிராயம் என்பது நம்முடைய முதலீட்டு தவற்றை திருத்தி கொள்ள முயல்வது. அது முதல்படி. அடுத்த படி, நாம் ஒவ்வொரு வருடமும் வெல்த் செக் அப் செய்து கொள்ள வேண்டும். எப்படி நம்முடைய ஹெல்த்தை பாதிப்பதற்கு நாம் செய்யும் வேலை, உண்ணக்கூடிய உணவு, ஓய்வு முதலியவை முக்கியமோ அதேபோல் நம்முடைய இன்சூரன்ஸ், பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தை பற்றியும் அதனுடைய செயல்பாடு வரும் காலங்களில் எவ்வாறு இருக்கும் என்று நினைத்து செயல்படவேண்டும்.
மேலும் இரண்டாவது அபிப்ராயத்தில்தான் நாம் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் முதலீடு செய்துள்ளோமா அல்லது வெவ்வேறு இடத்திலா என்று தெரியும். இன்று பெரும்பாலோருடைய முதலீடு ரியல் எஸ்டேட்டில் தவறாக முடக்கப்பட்டுள்ளது என்றே தெரியாமல், மீண்டும் மீண்டும் அங்கே முதலீடு மேற்கொள்ளப்படுகிறது, இதை நாம் தகுந்த ஆலோசகரின் மூலம் தவிர்க்கலாம்.
சர் ஐசக் நியூட்டன் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய விஞ்ஞானி அவர் அறிவியலில் நிறைய கண்டுபிடித்துள்ளார். அவர் யாரிடமும் எந்த அபிப்ராயமும் கேட்காமல் எனக்கு எல்லாம் தெரியும் என்று பங்கு சந்தையில், SOUTH SEA COMPANY என்ற நிறுவனத்தின் பங்கை அதன் உச்ச மதிப்பில் வாங்கி தன்னுடைய எல்லா சொத்தையும் இழந்து விட்டார். பின்பு பங்கு சந்தை பற்றி கருத்து கூறுகையில், என்னால் நட்சத்திரத்தின் ஓட்டத்தை எளிதாக கணக்கிட முடிந்தது, ஆனால் மனிதனின் பைத்தியக்காரத்தனத்தின், அளவை ஒரு போதும் கணக்கிட முடியாது. இதிலிருந்து ஒரு விஷயம் தெரிவது என்னவென்றால் முதலீடு என்பது ஒரு ஆலோசகரின் பேரில் செய்தால், ஒருவருடைய உணர்ச்சிவயப்படுதலை கட்டுப்படுத்த முடியும். எல்லா மனிதரும் என்ன படித்திருந்தாலும் உணர்ச்சிக்கு பெரும்பாலும் அடிமைப்பட நேரிடுகிறது என்பதை ஒத்துக் கொள்ளவேண்டும்.
சாராம்சம்:
நம்முடைய முதலீடுகள் பெரும்பாலும் நிர்பந்தத்தின் பேரிலேயே செய்யப்படுகின்றன. நம் விருப்பத்திற்கு மாறாக செய்வதால் நாம் அதைப்பற்றிபெரும்பாலும் அறிந்து கொள்ள முயல்வதில்லை. லிருப்பமோ இல்லையோ பாதிப்பு நமக்குதான் என்று உணரும்போதுதான் ஆலோசகரை நாட வேண்டும் என்றஎண்ணம் வருகிறது.
நம்முடைய முந்தைய முதலீட்டிற்கு ஒரு வெல்த் செக் அப் செய்து பின்பு, அவற்றின் முடிவை இரண்டாவது அபிப்ராயத்தின்பேரில் வேறு ஒரு ஆலோசகரிடம் கேட்டால் நம்முடைய பணம் நம்மிடம் இருப்பதோடு நாளடைவில் பெருகுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. நாம் அபிப்ராயத்திற்கு தேடி செல்வதால், நாம் சிறந்தவரை தேர்ந்தெடுக்க முடியும். அதனால் நமக்கு நல்ல ரிசல்ட் வரும். ஒரு நிதி ஆலோசகர் உங்களுடைய முதலீட்டை நிர்வகிக்கிறார் என்று சொல்வதைவிட உங்களையும் மற்றும் உங்களுடைய உணர்ச்சிகளையும் நிர்வகிக்கிறார் என்று சொன்னால் மிகவும் சரியாக பொருந்தும். எந்த முதலீடும் ஒழுங்காக பராமரிக்காமல் விட்டுவிட்டால் பெரிய நஷ்டத்தில் தள்ளி விடும். இன்று சில பேர் முதலீட்டில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் யாவும் அதைக் கண்ணும் கருத்துமாக, வருடா வருடம் பராமரித்து அதை தேவைப்பட்டால் வேறு முதலீட்டிற்கு மாற்றியதால் கிடைத்த பலனே. கடைசியாக, எவ்வளவு முதலீடு செய்கிறோம் என்பதை விட அதை சரியாக செய்துள்ளோமா என்று வருடத்திற்கு ஒரு முறையாவது கண்காணிப்பது மிகவும் அவசியம்.
பி. பத்மநாபன் - padmanaban@fortuneplanners.com
No comments:
Post a Comment