Pages

Saturday, 29 March 2014

My Article in Today's Naanayam Vikatan (30th March 2014) about How To Assess Risk In Your Investment through Simple Questionnaire...


முதலீடு : ரிஸ்க் எடுப்பதில் நீங்கள் எப்படி ?
 
பி.பத்மநாபன், இயக்குநர்,ஃபார்ச்சூன் பிளானர்
நாம் எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும் அதைச் செய்வதற்குமுன், நம்முடைய ரிஸ்க் எடுக்கும் திறனை பற்றித் தெளிவாகத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். இதைத் தெரிந்துவைத்திருந்தால்தான் சரியான முதலீட்டை நம்மால் தேர்வு செய்ய முடியும்.
இந்த ரிஸ்க் எடுக்கும் விஷயத்தில் நாம் எவ்வளவு தூரம் தயார்? அல்லது நமது ரிஸ்க் எடுக்கும் திறன் என்ன என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? இதற்கென ஏதாவது ஒரு டெஸ்ட் இருக்கிறதா என்று கேட்கிறீர்களா?
இருக்கவே இருக்கிறது ஓர் அற்புதமான டெஸ்ட். இந்த டெஸ்ட்டை நீங்கள் செய்துபார்த்தால், உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் எவ்வளவு என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிடும். இதன்பிறகு உங்களுக்கான முதலீட்டை எப்படி மாற்றியமைத்துக்கொள்வது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்.
இந்த டெஸ்ட் உங்களைப் பற்றி உங்களுக்கே எடுத்துச் சொல்வதற் காகத்தான் என்பதால், உங்கள் குணாதிசயத்தை மறைக்காமல் சொல்வது கட்டாயம்.
கேள்விகளைப் படிக்கத் தொடங்கும் முன், நமக்குக் கிடைக்கும் முதலீட்டு வகைகளில் உள்ள ரிஸ்க்கையும் வருமானத்தையும் சுருக்கமாகச் சொல்கிறேன்.
வங்கி, போஸ்ட் ஆபீஸ் முதலீடுகள்:
இது ரிஸ்க் இல்லாத முதலீடு. நீண்டகால அளவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாது. அதிகபட்சம் 10% மேல் வருமானம் கிடைக்காது.
லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி:
இன்ஷூரன்ஸ் என்பது பாதுகாப்பே தவிர, முதலீடல்ல. இதில் போடப்படும் பணத்துக்கு 6% வட்டிகூடக் கிடைக்காது. எனவே, நிச்சயமாகப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாது.
மியூச்சுவல் ஃபண்ட்:
ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானம் எதிர்பார்க்கலாம். சந்தையின் ஏற்ற இறக்கம் ரிஸ்க்குக்கு உட்பட்டது. செபி என்ற அரசாங்க அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது.
பங்குச் சந்தை முதலீடு:
இதில் ரிஸ்க் அதிகம்; அதேநேரத்தில் வருமானமும் அதிகம். இதுவும் செபியின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.
ரியல் எஸ்டேட்:
கடந்த பத்து வருடங்களாக நல்ல வருமானம் தந்துள்ளது. இதை நினைத்தவுடன் விற்று காசாக்க முடியாது. வரும் காலங்களில் பழைய வருமானத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிச்சம்.
தங்கம்:
கடந்த பத்து வருடங்களாக நல்ல வருமானம் தந்துள்ளது. கடந்த ஓராண்டாகச் சரியாகச் செயல்படவில்லை. வருங்காலத்தில் வருமானம் குறைய வாய்ப்பு அதிகம்.
இந்த விஷயங்களையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு இனி கேள்விக்கான பதிலை டிக் செய்ய ஆரம்பியுங்கள்.
1ரிஸ்க் எடுக்கும் விஷயத்தில் நீங்கள் எப்படி?
 1. ரிஸ்க் எடுக்க விருப்பமில்லை.
 2. கொஞ்சம் எடுக்கலாம்.
 3. வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தால், கண்டிப்பாக எடுப்பேன்.
 4. ரிஸ்க் எடுத்தால்தான் ரிட்டர்ன்ஸ் கிடைக்கும்; எனவே, ரிஸ்க்கை பற்றி கவலைப்படாமல் எவ்வளவு வேண்டுமானாலும் எடுப்பேன்.
2 நீங்கள் எடுத்த ஒரு முதலீட்டு ரிஸ்க் தவறாகப் போனால், எப்படி அதை எடுத்துக்கொள்வீர்கள்?
 1. கண்டிப்பாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
 2. கஷ்டப்பட்டு ஏற்றுக்கொள்வேன்.
 3. ரிஸ்க்கை ஏற்றுக்கொண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பேன்.
 4. ரிஸ்க்கை சகஜமான விஷயமாக எடுத்துக்கொள்வேன்.
3 உங்கள் பார்வையில் ரிஸ்க் என்பது என்ன?
 1. பயம்.
 2. கணிக்க முடியாது.
 3. ஒரு வாய்ப்பு.
 4. ஒரு சுவாரஸ்யமான மற்றும் த்ரில்லான விஷயம்.
4 அதிகப் பணத்தை த்ரில்லுக்காக எப்போதாவது முதலீடு செய்திருக்கிறீர்களா?
 1. இல்லவே இல்லை.
 2. கொஞ்சமாக முதலீடு செய்திருக்கிறேன்.
 3. எப்போதாவது வாய்ப்பு எனக் கருதினால்.
 4. அடிக்கடி செய்வதுண்டு.
5 அரசாங்க வேலை - அதில் சம்பளம் குறைவு, பாதுகாப்பு அதிகம். தனியார் நிறுவனத்தில் வேலை - அதில் பாதுகாப்புக் குறைவு, சம்பளம் அதிகம். நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள்?
 1. அரசாங்க வேலை.
 2. உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
 3. ஓரளவுக்குப் பாதுகாப்பு, நல்ல சம்பளம்.
 4. தனியார் வேலை.
6 ஒரு முதலீட்டை மேற்கொள்ளும்போது, நீங்கள் அதிகம் கவனிப்பது அதில் உள்ள ரிஸ்க்கையா அல்லது அதிலிருந்து கிடைக்கும் வருமானமா?
 1. ரிஸ்குக்கே அதிக முக்கியத்துவம் தருவேன்.
 2. சமஅளவு முக்கியத்துவம் தருவேன்.
 3. எதில்தான் ரிஸ்க் இல்லை; வாய்ப்புகள் நிறைய இருந்தால் ரிட்டர்ன் முக்கியம்.
 4. ரிட்டர்ன் மட்டுமே முக்கியம்; ரிஸ்க் பற்றிக் கவலை இல்லை.
7 உங்கள் வேலையில் சம்பளம் என்பது நிரந்தரச் சம்பளம், அல்லது வேலைக்கேற்ப ஊதியம் அல்லது இரண்டும் சேர்ந்தது?
 1. நிரந்தரச் சம்பளத்தையே அதிகம் விரும்புவேன்.
 2. என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
 3. இரண்டும் சேர்ந்ததை அதிகம் விரும்புவேன்.
 4. என் திறமை எனக்குத் தெரியும்; எனவே, வேலைக்கேற்ற ஊதியத்தையே அதிகம் விரும்புவேன்.
8  கடந்த காலத்தில் நீங்கள் முதலீட்டில் ரிஸ்க் எடுத்திருக்கிறீர்களா?
 1. இல்லை.
 2. கொஞ்சம் எடுத்துள்ளேன்.
 3. எப்போதாவது எடுப்பதுண்டு.
 4. ரிஸ்க் எனக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி; நிறைய எடுத்திருக்கிறேன்.
9 சிறந்த முதலீட்டை தேர்ந்தெடுப்பதில், உங்கள்மேல் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளீர்கள்?
 1. எனக்குத் தெரியாது.
 2. ஓரளவுக்கு.
 3. நிறையப் படிக்கிறேன்; என்னால் சரியாகத் தேர்வு செய்ய முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது.
 4. நான் இதில் தேர்ந்தவன்; எனக்கு இதில் முன்னனுபவம் உள்ளது.
10 ரிஸ்க்கும், ரிட்டர்ன்ஸும் ஒன்றோடு ஒன்று கைகோத்து செல்வது. அப்படி இருக்கும்போது, அதிக ரிட்டர்ன் வேண்டும் என்று உங்கள் முதலீட்டில் எத்தனை சதவிகிதம் ரிஸ்க் எடுக்கத் துணிவீர்கள்?
 1. 10%.
 2. 25%.
 3. 40%.
 4. 50%.
11 நீங்கள் 15 ஆண்டுக் காலம் முதலீடு வைத்திருக்க விரும்பினால் வங்கி வைப்பு நிதியைவிட எத்தனை மடங்கு அதிகம் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்?
 1. வங்கி வைப்பு நிதி அளவே.
 2. இரண்டு மடங்கு.
 3. மூன்று மடங்கு.
 4. நான்கு மடங்கு.
12 இன்று வருமான வரிவிலக்குப் பத்திரங்கள் மிகவும் பிரபலம். அதைக் கருத்தில்கொண்டு உங்கள் பணத்தை 15 - 20 ஆண்டு வரை பணவீக்கத்தை அறியாமல் முதலீடு செய்வீர்களா?
 1. எனக்கு பணவீக்கம் பற்றிக் கவலை இல்லை.
 2. 40% சதவிகிதம் முதலீடு செய்வேன்.
 3. 10% முதலீடு செய்வேன்.
 4. கண்டிப்பாக அதில் முதலீடு செய்ய மாட்டேன்.
13 இன்ஷூரன்ஸ் ஒரு சிறந்த முதலீடு. மேலும், அது பாதுகாப்பு. எனவே, வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ் டெபாசிட்களுக்கு அடுத்து அதில்தான் நான் முதலீடு செய்வேன். எனக்கு வருமானம் பற்றிக் கவலை இல்லை.
 1. நிறைய முதலீடு செய்வேன்.
 2. 40% முதலீடு செய்வேன்.
 3. 25% யூலிப் திட்டத்தில் முதலீடு செய்வேன். அது நல்ல வருமானம் மற்றும் இன்ஷூரன்ஸ் கவரேஜையும் தரும்.
 4. பாதுகாப்பையும், முதலீட்டையும் நான் குழப்பிக் கொள்ளமாட்டேன்; டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து, மீதமுள்ளவற்றைப் பிற முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யவே விரும்புவேன்.
14 ஒருவேளை உங்களுக்கு வேலை போய்விடுகிறது எனில், உங்களால் எத்தனை மாதம் அடுத்த வேலை கிடைக்கும் வரை சமாளிக்க முடியும்?
 1. ஒரு மாதம்.
 2. மூன்று மாதம்.
 3. ஆறு மாதம்.
 4. நான் இந்த வேலையே மட்டுமே நம்பி இல்லை. என்னிடம் 3 மாதத்துக்கான பணம் உள்ளது. அதேசமயம் என்னால் மூன்று மாதத்தில் நல்ல வேலை தேடிகொள்ள முடியும் என்கிற தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ளது.
15 இதற்கு முன்னால் இந்தமாதிரி கேள்விகளைச் சந்தித்ததில்லை. எனவே, இப்போது நான் சொல்லும் பதிலும் நாளை சொல்லும் பதிலும்கூட வேறுபடலாம். எனவே, எனக்குக் கொஞ்சம் காலஅவகாசம் வேண்டும்?
 1. முற்றிலும் சரியே.
 2. நான் இதுமாதிரி சிலவற்றைச் சந்தித்த அனுபவம் உள்ளது.
 3. இப்போது தோராயமாகவே பதில் சொல்கிறேன். உண்மையில் என் பதில் வேறுபட வாய்ப்புள்ளது.
 4. நான் எப்போதும் தீர்க்கமாக யோசித்து முடிவு செய்பவன். இப்போது நான் என்ன சொல்கி றேனோ, அதையே நிதர்சனத்திலும் கடைப்பிடிப்பேன்.
எவ்வளவு மார்க்?
கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டீர்களா? இனி, நீங்கள் எவ்வளவு மார்க் எடுத்திருக்கிறீர்கள் என்று பார்ப்போம். முதலில் எந்தெந்த பதில்களுக்கு எவ்வளவு மார்க் என்று பார்த்துவிடுவோம்.
ஒவ்வொரு கேள்வியிலும் நம்பர் 1-ஐ நீங்கள் தேர்வு செய்திருந்தால், 2 மார்க்; நம்பர் 2-ஐ தேர்வு செய்திருந்தால்,
3 மார்க்; நம்பர் 3-ஐ தேர்வு செய்திருந்தால், 4 மார்க்; நம்பர் 4-ஐ தேர்வு செய்திருந்தால், 5 மார்க்.
ஒருவர் 15 கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருந்தால், அவரால் அதிகபட்சமாக 75 மார்க் வாங்க முடியும். குறைந்தபட்சமாக 30 மார்க் வாங்க முடியும்.
நீங்கள் எப்படி?
உங்களது மொத்த மார்க் 35-க்கு கீழே இருந்தால், நீங்கள் கொஞ்சம்கூட ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்; உங்களுக்கு வருமானம் பற்றி எந்தக் கவலையும் இல்லை என்று அர்த்தம்.
உங்களது மொத்த மார்க் 35-க்கு மேலேயும் 50-க்கு கீழேயும் இருந்தால், நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க விரும்புபவர்; உங்களுக்கு வருமானம் பற்றிய கவலை கொஞ்சம் இருக்கிறது.
உங்களது மொத்த மார்க் 50-க்கு மேலேயும் 65-க்கு கீழேயும் இருந்தால், நீங்கள் ரிஸ்க் மற்றும் வருமானத்தை நன்றாகப் புரிந்து, ரிஸ்க்கை அளந்து (சிணீறீநீuறீணீtமீபீ க்ஷீவீsளீ) எடுப்பவர்.
உங்களது மொத்த மார்க் 65-க்கு மேலே இருந்தால், நீங்கள் ரிஸ்க்கை அதிகம் விரும்புபவர். ரிஸ்க்கை மதிப்பிடாமல் வெறும் வருமானத்தை நோக்கமாகக் கொண்டிருப்பவர் என்று அர்த்தம்.
எது சரி?
35-க்கு கீழே மார்க் வாங்குவதும், 65-க்கு மேலே மார்க் வாங்குவதும் சரியானதல்ல. 50 - 65 வரை மார்க் வாங்குபவர்கள் மிகவும் பிராக்டிகலான மனிதர். 35 - 50 வரை மார்க் வாங்குபவர்கள் நடைமுறை வாழ்க்கையை ஏற்கமுடியாமல் கொஞ்சம் திணறுபவர்கள் என்று சொல்லலாம். இந்த இரண்டில் இருந்தால் பணவீக்கத்தையாவது இவர்கள் முதலீடு கண்டிப்பாகக் கட்டுப்படுத்தும்.
35-க்குக் கீழ் மற்றும் 65-க்கும் மேல் இருப்பவர்கள் இதை உணர்ந்து 35-க்குக் கீழ் உள்ளவர்கள் 50-க்கும், 65-க்கும் மேல் உள்ளவர்கள் கொஞ்சம் ரிஸ்க்கை குறைத்து 50 - 65-க்குள் இருந்தால் நிச்சயம் முதலீட்டில் வெற்றி பெற முடியும்.

Monday, 24 March 2014

My 26th Article in the Hindu Tamil Dated 24th March 2014 About "Know Your Investments"...

வாருங்கள் தெரிந்துகொள்வோம்!  -  பி. பத்மநாபன்


பல வாரங்களாக நாம் முதலீட்டைப் பற்றியும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றியும், மேலும் எத்தனை வகையான முதலீடு, அதன் ரிஸ்க் மற்றும் ரிடர்ன்ஸ் என்ன என்பது பற்றியும் பார்த்தோம். இந்த வாரம் அவ்வாறு முதலீடு செய்யப்பட்டவைகளில் நாம் என்னவெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று பார்க்கலாம்.

அதற்கு முன்பு நம் தினசரி வாழ்வில் தேவைப்படும் அடையாளச் சீட்டுகளான (DOCUMENTS) பான் கார்டு, வீட்டு முகவரி, வோட்டர்ஸ் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு முதலியவற்றிற்கு போதுமான நகல்களை எடுத்து வைத்திருக்கவேண்டும். இதில் ஏதாவது தொலைந்து போனால் நகலைவைத்து எளிதாக மீண்டும் விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் நம் பர்ஸில் எப்போதும் வைத்திருப்பது நல்லது.

இன்று எல்லாம் இன்டர்நெட் யுகமாக மாறிவிட்டதால், இவைகளை நம்முடைய ஈமெயிலில் அல்லது DROPBOX என்று சொல்லப்படும் ஒரு ப்ரோக்ராமில் நாம் பத்திரபடுத்தி வைத்து உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அதை எடுத்துக்கொள்ளலாம்.

நாம் எதையெல்லாம் அளக்கிறோமோ அது மட்டுமே கண்டிப்பாக வளரும். இன்று வாழ்க்கை இயந்திரத்தனமாக மாறிவிட்டதால் நமக்கு பல விஷயங்களைக் கவனிக்க நேரமுமில்லை, மனமுமில்லை. இதனால் எது மிகவும் அவசியமோ அதைக்கூட சரிவர செய்வதில்லை. நண்பர் ஒருவர் அவருக்கு வந்த டிவிடெண்ட் செக்கை கூட வங்கியில் போடுவதற்கு நேரமில்லாமல் இருக்கிறார்.

நாம் தேடிய ஒரு செல்வத்தை பாதுகாக்க நேரமில்லை என்றால் எதற்காக மீண்டும் மீண்டும் கஷ்டப்பட்டு வேலை செய்யவேண்டும். இன்று எல்லோரும் பிஸியாக, பொருளை தேடுவதால் அதை அனுபவிக்க யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை என்பது வருந்தக்கூடிய ஒரு விஷயம்.

எல்லோரும் சொல்லும் பொதுவான பதில் என்னிடம் பணம் இல்லை, அல்லது என்னிடம் பணம் தங்குவதில்லை. இதை சற்று உள்நோக்கி பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் பணத்தை மதிப்பதில்லை. தன்னை மதிக்காததால் பணம் அவர்களிடத்தை விட்டு உடனே ஓடிவிடுகிறது. இதை படிப்பதற்கு நகைச்சுவையாக தோன்றினாலும் இது முற்றிலும் உண்மை. முன்பு ஒவ்வொரு வருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருந்தது.

இன்று இல்லாததால் அலுவலகத்தில் செலவிடும் நேரம்தான் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நம் வாழ்வில் அடிக்கடி எதிர் நோக்கும் சில முதலீடுகளில் நாம் என்ன கவனிக்கவேண்டும் என்று பார்க்கலாம்.

கிரெடிட் கார்டு
இன்று கிரெடிட் கார்ட் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதை சரிவர உபயோகப்படுத்த தெரியாதவர்கள் 90 சதவீதத்துக்கு மேல். நாம் வாங்கும் பொருளுக்கு 30 முதல் 50 நாட்களுக்குள் பணம் செலுத்தினால் கிரெடிட் கார்ட் போல ஒரு உபயோகமானது எதுவும் இல்லை. ஆனால் பலருக்கும் இதை உபயோகிக்கத் தெரியாததால் இதை குறை கூறுகின்றனர்.

நாம் வாங்கிய பொருளில் 5% பணம் கொடுத்தாலே நாம் தொடர்ந்து உபயோகிக்கலாம், ஆனால் மீதமுள்ள பணத்திற்கு மாதம் 3% வரை வட்டி கட்ட வேண்டி இருக்கும். இதைப்புரிந்து கொள்ளவேண்டும். அதே போல ஏதாவது ஒரு இன்சூரன்ஸ் பாலிசியையும் நம் தலையில் கட்டி விட்டு மாதா மாதம் பணம் எடுப்பார்கள் பலர் இதை முதல் மாத பில்லிங்கிலே பார்க்காமல் விட்டுவிட்டால் ஒரு வருடம் கட்ட வேண்டி வரும்.

இன்சூரன்ஸ் பாலிஸி
பாலிஸி நம் கைக்கு வந்த தினத்திலிருந்து 15 நாட்களுக்குள் நமக்கு பிடிக்காவிட்டால் உடனே சரண்டர் செய்ய முடியும். பலர் ஏதாவது பிரச்சினை என்று வரும் போதுதான் அதைப் பிரித்துப் பார்ப்பார்கள். மேலும் அதில் நம்முடைய பெயர், வயது, ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர் மற்றும் வீட்டு முகவரி எல்லாம் சரியாக இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். நாமினியின் பெயர் சரியாக இருக்கிறதா, நம்முடைய முகவர் சொன்னதற்கும் பாலிசியின் வார்த்தைகளுக்கும் சம்பந்தம் உள்ளதா என்றும் பார்க்கவேண்டும்.

பாலிசி ஒரிஜினல் எப்போதும் வைத்திருக்கவேண்டும். அது தொலைந்தால் மீண்டும் வாங்க வேண்டும், இல்லாவிட்டால் நடுவில் நாம் கொஞ்சம் பணம் எடுப்பதாக இருந்தாலும் அல்லது சரண்டர் செய்வதாக இருந்தாலும் ஒரிஜினல் இல்லாவிட்டால் ஒன்றும் செய்யமுடியாது.

மியூச்சுவல் ஃபண்ட்
நாம் முதலீடு செய்தவுடன் நமக்கு ஒரு ஸ்டேட்மெண்ட் வரும். அதில் நம்முடைய பெயர், பான் நம்பர், பேங்க் கணக்கு எண், விலாசம் மற்றும் ஈமெயில், மொபைல் நம்பர், நாமினி எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்க்கவேண்டும். இதில் ஒரிஜினல் என்பது கிடையாது, நாம் ஒரு சாதாரண காகிதத்தில் நம்முடைய FOLIO NO –ஐ குறிப்பிட்டு பணத்தை எடுக்கவோ அல்லது வேறு ஃபண்டில் சுவிட்ச் செய்வதோ எளிது. நம்முடைய பான் நம்பர் அல்லது ஈமெயில் ஓர் மொபைல் நம்பரை வைத்து நம் அனைத்து முதலீட்டையும் நம்மால் எளிதாக எடுக்க முடியும். ஒவ்வொரு முதலீட்டிற்கும் (FOLIO NO) தருவார்கள் அதை ஒரு நோட்டில் குறித்து வைத்தாலே போதுமானது.

ஒருவர் எப்போது வேண்டுமானாலும் நாமினியின் பெயரை மாற்றிக் கொள்ள முடியும். முன்பு கொடுத்த பேங்க் கணக்கை நாம் க்ளோஸ் செய்தால் புது பேங்க் பற்றிய தகவலை உடனடியாக தர வேண்டும் இல்லாவிட்டால் அது பழைய வங்கிக் கணக்கிற்கு சென்று விடும்.

பங்குச் சந்தை முதலீடு
எப்படி பணத்திற்கு வங்கி கணக்கு எண் உள்ளதோ அதே மாதிரி பங்குகளுக்கு தரக்கூடியது டீமேட் கணக்கு எண். இதற்கு கண்டிப்பாக ஈமெயில் மற்றும் மொபைல் நம்பர் தர வேண்டும். அன்று ஏதாவது நம்முடைய கணக்கில் வர்த்தகம் நடந்திருந்தால் உடனடியாக அலெர்ட் மெசேஜ் வந்துவிடும். மறுநாள் டெலிவரி நோட் நம் மெயிலுக்கு வரும். இதில் என்ன சார்ஜ் செய்கிறார்கள் என்று பார்க்கவேண்டும். நாம் பவர் ஆப் அட்டார்னி (POWER OF ATTORNEY) கொடுத்திருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வீட்டுப் பத்திரம்
அதே போல வீட்டுப் பத்திரத்தில் நம்முடைய பெயர் சரியாக எழுதப்பட்டுள்ளதா, வில்லங்க சான்றிதழ் சரியாக பெறப்பட்டிருக்கிறதா அது ஏதாவது அடமானத்தில் உள்ளதா போன்றவற்றை சரியான நபரிடம் கொடுத்து சரிபார்க்க வேண்டும். வங்கிதான் கடன் கொடுக்கிறார்களே அவர்கள் பார்த்திருப்பார்கள் என்று அசட்டையாக இருக்க வேண்டாம். இன்றைய தொழில்நுட்பத்தில் யாரை வேண்டுமானாலும் எளிதாக ஏமாற்ற முடியும்.

பேங்க் ஸ்டேட்மென்ட்
ஒவ்வொரு காலாண்டு ஸ்டேட் மென்டும், நமக்கு வீட்டிற்கு தபாலிலும், மாதா மாதம் ஈமெயிலிலும் வரும். அதில் ஏதாவது தேவையற்ற சார்ஜ் செய்துள்ளார்களா என்று பார்க்க வேண்டும். முன்பு பேங்க் பாஸ்புக் ரெகுலராக அப்டேட் செய்வார்கள். இன்று நம் வீட்டைத் தேடி வருவதால் அதைப் பார்ப்பதற்கு சோம்பல் படுகிறோம். ஆனால் அது மிகவும் அவசியமானது.

சாராம்சம்
மேலே சொன்ன யாவும் ஒருவரால் எளிதாகக் கடைபிடிக்கக் கூடியதே. அதற்கு கொஞ்சம் நேரம் செலவிட வேண்டும், அவ்வளவுதான். இதைச் சரிவரசெய்தால் நம்மால் எங்கு ஓட்டை உள்ளது என்று கண்டறிய முடியும், அப்போதுதான் நம்மால் அதிலிருந்து வெளிவர முடியும். இப்படி செய்வதால் நாம் பல இடங்களில் கொஞ்சம் கொஞ்சம் சேமிக்க முடியும்.

ஒரு டாக்குமென்ட் நம் பெயருக்கு வந்தால் அதில் நாம் சொன்னவை எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்ப்பது நம்முடைய கடமை, அதை விட்டு இதைக் கூட தவறாக ஒருவர் செய்வாரா என்று குறை கூறினால் அவதிப்படுபவர் நம்மைத்தவிர வேறு யாரும் இல்லை.

இன்று எவ்வளவோ (APPS) நம்முடைய ஸ்மார்ட் போனில் வந்து நம் வாழ்வை எளிமைப் படுத்தினாலும் முந்தைய தலைமுறைபோல நிம்மதி யான வாழ்க்கை இல்லை, காரணம் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக எப்படி வாழ்வது என்பதை மறந்து கொண்டே இருக்கிறோம்.

Sunday, 16 March 2014

My 25th Article In The Hindu Dated 17th March 2014 About "Ten Important Steps for Successful Investing"



முதலீட்டில் வெற்றி பெறுவதற்கான சிறந்த 10 வழிகள் - பா.பத்மநாபன்





இன்று முதலீடு செய்பவர்களுக்கு உள்ள பெரிய சவாலே அதை எப்படி திறம்படச் செய்வது. அதற்கு ஏதாவது எளிய வழிகள் பின்பற்றுவதற்கு உள்ளதா என்பதுதான். நம்முடைய வாழ்க்கையில் எதில் வெற்றி பெறவேண்டுமானாலும் நாம் சில எளிய முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். ஆனால் எளிய வழி என்பதாலேயே நிறைய பேர் அதைச் செய்வதற்கு தயங்குகிறார்கள்.


1. டேர்ம் இன்ஷூரன்ஸ்

டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது தான் முழுமையான இன்ஷூரன்ஸ். ஒருவருடைய வருமானத்துக்கு ஏற்ற வாறு எடுக்கவேண்டும். உதராணமாக ஒருவருடைய வருட சம்பளத்தில் 10 முதல் 15 மடங்குவரை எடுத்துக்கொள்வது நல்லது. ரூ.5 லட்சம் சம்பாதித்தால் அவர் 75 லட்சம் ரூபாய் அளவுக்கு எடுக்க வேண்டும். மற்ற இன்ஷூரன்ஸ் பாலிசிகளை தவிர்ப்பது நல்லது.

2. மெடிக்கல் இன்ஷூரன்ஸ்

நம்முடைய வாழ்க்கைமுறை முழுவதுமாக மாறிவிட்டது. இதனால் பல வழிகளில் நமக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏகப்பட்ட செலவு ஆகும். நம் முன்னோர்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லி இருக்கிறார்கள். நாம் சேர்த்த அத்தனை செல்வத்தையும் நமக்கு வரக்கூடிய நோய் அழித்துவிடும் வாய்ப்புகள் அதிகம். அதைத் தவிர்க்கவே நாம் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுக்கவேண்டும். நாம் வேலை பார்க்கும் நிறுவனத்தில் அதற்கான கவரேஜ் இருந்தாலும் நாம் தனியாக எடுத்து கொள்வது நல்லது.

3. சேமிப்பை உடனடியாக தொடங்கவும்

வேலைக்கு சேர்ந்தவுடன் சேமிப்பை தொடங்கவும். உங்களது முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும். அந்த முதலீடு எவ்வளவு சிறியதாய் இருந்தாலும் சரி, அந்த ஒழுக்கம் மிகவும் அவசியம். வேலைக்கு சேர்த்தவுடன் வரக்கூடிய பழக்கம் கடைசி வரை இருக்கும். மேலும் கூட்டு வட்டியின் பலனை அனுபவிக்கும் போதுதான் புரியவரும். கூட்டு வட்டியை 8-ஆவது உலக அதிசயம் என்றும் பலர் அழைக்கிறார்கள்.

4. ரியல் எஸ்டேட்

ஒவ்வொருவருக்கும் வீடு என்பது ஒரு கனவு, அது தப்பில்லை. அதே சமயம் மண்ணில் போட்டால் எப்போதும் நட்டம் இல்லை என்று மீண்டும் மீண்டும் வாங்குவது தவறு. நம்முடைய தினசரி வாழ்க்கைக்குத் தேவையான பொருள் இருந்தால்தான் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். இல்லாவிட்டால் ஏகப்பட்ட சொத்து இருந்தும் மற்ற எதையுமே உபயோகிக்க முடியாத நிலை ஏற்படும்.

5. தங்கம்

தங்கம் நம் வாழ்வில் இன்றியமையாத ஒரு உலோகம். மேலும் அது ஒருவருடைய சமூக அந்தஸ்தை பெரும்பாலான இடங்களில் பறை சாற்றுகிறது. திருமணத்திற்கு மிகவும் அவசியம். அதே சமயம் அதைப் பாதுகாப்பது மிகவும் சவாலான விஷயம். நம்மால் தினசரி அணிந்து கொள்ளமுடியாத தங்கத்தை வாங்கி அதை லாக்கரில் வைத்து பாதுகாப்பதைக் காட்டிலும் டீமேட் முறையில் அதை வாங்குவதும் எளிது; பாதுகாப்பதும் எளிது. தங்கம் முதலீட்டிற்கு உகந்ததா என்பது கேள்விக்குறியே?

6. இலக்கு தழுவிய முதலீடு

எந்த ஒரு முதலீடாக இருந்தாலும் அதற்கு ஒரு இலக்கு இருந்தால் நம்மை அறியாமலேயே கடமை உணர்வு வரும், அந்த உணர்வு நம்மை தொடர்ந்து அந்த முதலீட்டில் இணைந்திருப்பதற்கு ஒரு உத்வேகத்தை தரும். முதலீட்டின் கால அளவிற்கேற்ப நாம் தகுந்த முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுத்து பயன் பெறவேண்டும். நீண்ட கால முதலீட்டிற்கு கொஞ்சம் ரிஸ்க் அதிகமான முதலீட்டை தேர்ந்தெடுக்கலாம்.

7. தாமதமாக திருப்தி அடைதல் (DELAYED GRATIFICATION)

பெற்றோர்கள் குழந்தைகளிடம் நீ தேர்வில் அதிக மார்க் வாங்கினால் உனக்கு அதை வாங்கி தருவேன், இதை வாங்கி தருவேன் என்று சொல்வார்கள். குழந்தைகளும் மிகவும் சிரத்தையுடன் படிப்பார்கள். அப்படி கிடைக்கும் பொருளுக்கு மதிப்பு மிக அதிகம். இன்று நாம் பார்த்தவுடன் எல்லாவற்றையும் வாங்க நினைப்பதால் பல தேவையற்ற பொருளை வாங்குவதோடு அதனுடைய மதிப்பையும் நாம் அறிவதில்லை. ஒருவர் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால் இந்த தாமதமாக திருப்தி அடைதல் மிகவும் முக்கியமான ஒன்று.

8. மியூச்சுவல் ஃபண்ட்

எல்லோராலும் முதலீடு செய்யக்கூடியது. 5 முதல் 7 வருடங்களில் நல்ல பலன் தந்திருக்கிறது. நம்மில் பலர் மாதாந்திர சம்பளக்காரர்களாக இருப்பதால் சிறிது சிறிதாக சேமிக்க முடியும். இந்திய அரசால் ஒழுங்குமுறை படுத்தப்பட்டது; செபி என்ற அமைப்பின் கீழ் செயல்படுகிறது. சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது. நீண்ட கால அடிப்படையில் நல்ல பயன் தந்துள்ளது. ஃபைனான்சியல் ப்ளானிங்கில் மிகவும் இன்றியமையாத முதலீடு. நீண்ட கால அடிப்படையில் நல்ல வருமானம் கிடைப்பதற்கான வாய்புகள் அதிகம்.

9. பங்கு சந்தை முதலீடு

இதை முதலீடாக நினைத்து செயல்பட்டால் நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபம் தரும். அதே சமயம் தினசரி வர்த்தகம் செய்தால் நிறைய நஷ்டம் வருவதற்குத்தான் அதிக வாய்ப்புள்ளது. இதில் முதலீடு செய்பவர்கள் இதற்காக தங்களுடைய நேரத்தை ஒதுக்கவேண்டும். வாங்கிய பங்கின் செயல்பாட்டை அடிக்கடி கவனிக்க வேண்டும். அதிக ரிஸ்க் அதிக லாபம்.

10. வைப்பு நிதி, போஸ்ட் ஆபிஸ் திட்டம்
இந்த முதலீடுகள் பெரும்பாலும் நம்முடைய குறுகிய கால முதலீடுகளுக்கு பெரிதும் உதவக்கூடியது. பணவீக் கத்தை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தக்கூடியது, நீண்ட காலத்தில் கட்டுப்படுத்தாது. இதில் ரிஸ்க் கிடையாது, எப்போது வேண்டுமானாலும் நம்மால் எடுத்துக்கொள்ள முடியும். ரிஸ்க் இல்லை. நிரந்தர வருமானம்.

சாராம்சம்: வாழ்க்கையில் மிக கடினம் எளிதாக இருப்பதுதான். மேலே சொன்ன அனைத்தும் எளிதானவை, ஆனால் நாம் எப்போதுமே எல்லாவற்றிற்கும் கடினமான தீர்வையே எதிர்நோக்கி உள்ளோம். அதனால்தான் எல்லாவித சங்கடங்களும்.

ஒவ்வொரு முதலீடும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தது. எனவே நம் முதலீட்டை மேற்கொள்வதற்கு முன்பு நாம் செய்யும் முதலீடு நம்முடைய இலக்கை அடைவதற்கு உதவுமா என்று பார்த்து முதலீடு செய்யவேண்டும். பணத்திற்கென்று எந்த மதிப்பும் கிடையாது, அது ஒரு காகிதம். ஆனால் அந்த காகிதத்தால் சிலவற்றை நாம் வாங்க முடியும். அதற்கு ’பர்ச்சேசிங் பவர்’ என்று பெயர். அதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். வெறும் வார்த்தையில் இது கஷ்டப்பட்டு சேர்த்த பணம் என்று சொல்வதைவிட, ஒரு படி மேலே சென்று அந்த பணத்தை முதலீடு செய்தால், நாம் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பதோடு அதனை பல மடங்கு பெரிதாக ஆக்கவும் முடியும்.

Monday, 10 March 2014

My 24th Aricle In The Hindu Tamil dated 10th March 2014 About "Tax Free Bond - Is It A Good Investment?"

வருமான வரி விலக்கு பத்திரம் - சிறந்த முதலீடா? - பா.பத்மநாபன்

 

செய்தித்தாள்களை திறந்தாலே வரி விலக்கு பத்திரங்களைப் பற்றி பக்கம் பக்கமாய் விளம்பரங்கள் இருக்கின்றன. 10 வருடத்திற்கு 8.5%, 15 வருடத்திற்கு 8.93% மற்றும் 20 வருடத்திற்கு 8.9% வருவாய் அளிப்பதாக அந்த விளம்பரங்கள் ஈர்க்கின்றன. இதற்கு முந்தைய வருடங்களில் 8% க்கும் குறைவாக கொடுத்தார்கள், இப்பொழுது கிடைக்கக்கூடிய வாய்ப்பு மிக அரியது என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது.

ஆண்களிடம் ஒரு முதலீட்டை விற்க வேண்டுமானால் அதற்கு வருமான வரி விலக்கு என்று சொன்னால் போதும், அதேபோல பெண்ணிடம் ஒன்றை விற்க வேண்டுமானால் தள்ளுபடி தருகிறார்கள் என்றால் போதும்’ என்ற நகைச்சுவை இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. இது நகைச்சுவையையும் தாண்டி நிதர்சனம் என்றே தோன்றுகிறது.

இதை செகண்டரி மார்க்கெட்டில் விற்கலாம் என்று சொல்கிறார்கள், எவ்வளவு பேர் வாங்குவார்கள், அப்படி வாங்கி னால் நியாயமான விலை கிடைக்குமா என்பது ஒரு கேள்விக்குறிதான். இருந்தாலும் இந்த மாதிரி பத்திரங்கள் நிறைய பேர் முதலீடு செய்ய போவதும் உண்மை. மேலும் இந்த வருவாய் 10 லட்சத் திற்கு கீழ் முதலீடு செய்பவருக்குத்தான், அதற்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு மேற்சொன்ன சதவீதத்தில் இருந்து 0.25% இன்னும் குறைவு.

விளம்பரங்கள் நமக்கு என்ன தேவை என்று உணர்வதற்கு எப்போதும் வாய்ப்பு தருவதில்லை, அதனால் ஒரு பொருளை வாங்குவதிலிருந்து, முதலீடு வரை நாம் விளம்பரத்தின் உந்துதலின் பெயரில் முடிவெடுக்கிறோம். இன்னும் 10 வருடம் கழித்து நம்முடைய தேவைகள் என்ன, பணவீக்கம் என்னவென்று தெரியாமல் இந்த மாதிரி நீண்டகால கடன் பத்திரத்தில் மாட்டிகொள்ளகூடாது. உங்கள் நிறுவனத்தில் 10% சம்பள உயர்வு இன்னும் 10 ஆண்டுகளுக்கு, அதுவரை நீங்கள் அங்கு தான் வேலை செய்யவேண்டும் என்றால் எத்தனை பேர் உடன்படுவீர்கள். கண்டிப்பாக நிறையபேர் ஒப்புக்கொள்ள மாட்டார் கள். அப்படி இருக்கும்போது இந்த வகையான திட்டங்களில் எப்படி துணிந்து முதலீடு செய்கிறீர்கள் என்று புரியவில்லை. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை காத்திருக்கும் முதலீடுகளை நேரடியாக சந்தையிலோ அல்லது மியூச்சுவல் ஃபண்டிலோ முதலீடு செய்தால் அதைவிட அதிக வருமானம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

மேலும் இந்த முதலீட்டினை உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் வெளியே எடுக்க முடியும். நீண்டகாலத்தில் முதலீடு செய்யும்பட்சத்தில் இதில் வரும் வருமானத்துக்கு நாம் வருமான வரி கட்ட தேவை இல்லை.ஒருவருக்கு சிறந்த ஃபண்டை தேர்ந்தெடுக்க தெரியவில்லை என்றால் இண்டெக்ஸ் ஃபண்ட்களில் (சென் செக்ஸ் அல்லது நிஃப்டியில் இருக்கும் பங்குகளில் மட்டும் முதலீடு செய்வது.

மேலும் அதே விகிதத்தில் அந்த பங்குகளில் முதலீடு செய்வது. ஒரு வேளை சென்செக்ஸ், நிப்டி பட்டியல் மாற்றம் செய்யப்பட்டால் அதற்கேற்றது போல இந்த ஃபண்ட் களிலும் மாற்றம் செய்யப்படும்) முதலீடு செய்யும் பட்சத் தில்கூட நல்ல வருமானம் கிடைக்கும்.

நிதி ஆலோசகரின் உதவியோடு முதலீடு செய்யும்பட்சத்தில் இண்டெக்ஸ் ஃபண்ட்களை விடவும் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொருவரும் மாதம் 2 மணி நேரம் அவரவருக்கென நேரத்தை ஒதுக்கி, வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை, நாம் அதை நோக்கி தான் சென்று கொண்டிருகிறோமா அல்லது வேறு திசையில் சென்றிருந்தால் எவ்வளவு விரைவில் நாம் போகும் பாதைக்கு திரும்பவேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டால் நாம் தேவையற்ற விரய முதலீட்டை தவிர்க்க முடியும்.

மேலும் எல்லாவிதமான முதலீடு திட்டமும் எல்லோருக்கும் பொருந்தாது, காலுக்கேற்ற செருப்பு என்பதுபோல நம்முடைய தேவை அறிந்து முதலீடு செய்தால் கண்டிப்பாக நன்கு பயன்பெற முடியும் என்பது முற்றிலும் உண்மை.

சாராம்சம்: எந்த ஒரு முதலீட்டையும் விளம் பரத்தை மட்டும் நம்பி இறங்கா தீர்கள். முதலில் அந்த முதலீடு நமக்கு ஏற்றதா என்று பார்க்கவேண்டும், இது முதல் வடிகட்டுதல். வலைத்தளத்தில் நமக்கு தேவையான எல்லாவற்றையும் பற்றி ஓரளவிற்கு அறிந்து கொள்ள முடியும், இது இரண்டாவது வடிகட்டு தல். மூன்றாவது உங்களுடைய நிதி ஆலோசகரிடம் இதைப்பற்றி விவாதியுங்கள். இதை செய்யும் பட்சத்தில் தேவையற்ற முதலீடுகளை தவிர்க்க முடியும்.

எந்த முதலீடும் இன்றைய சூழ்நிலை களை மட்டும் பார்க்காமல் அது முதிர்வு அடையும் நேரத்தில் அதனுடைய மதிப்பு, பணவீக்கத்தை கட்டுபடுத்துமா, இல்லை இதை விட சிறந்த முதலீடு உள்ளதா அதில் என்ன ரிஸ்க் என்று அலசவேண்டும்.

உங்களுடைய முதலீடு கால அவகாசம் 5 முதல் 10 ஆண்டுவரை என்றால், பங்குசந்தையிலோ அல்லது அது சார்ந்த மியூச்சுவல் ஃபண்டிலோ முதலீடு செய்யாமல் இருந்தால், எதிர்காலத்துக்கு தேவையான, பணவீக் கத்தை தாண்டிய வருமானம் கிடைப்பது கடினம். உலகின் தலை சிறந்த முதலீட்டாளரான வாரன்ஃபபெட் ரிஸ்கை பற்றி இவ்வாறு கூறுகிறார். ’ரிஸ்க் என்பது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று தெரி யாமலே ஒரு வேலையைச் செய்து கொண்டிருப்பது.

இது நம் எல்லோருக்கும் பொருத்தமான ஒன்று, இன்று பல பேர் எதற்கு முதலீடு செய்கிறோம் அதில் என்ன வருமானம், அது பணவீக்கத்தை கட்டுபடுத்துமா என்று தெரியாமல் எல்லாவற்றிலும் முதலீடு செய்கிறார்கள். முதலீட்டை தேர்ந்தெடுக்கும் போது அதனுடைய கால அளவை பொறுத்துதான் ரிஸ்க் மற்றும் வருமானம் மாறுபடுகிறது. பத்து ஆண்டு காத்திருப் பதற்கு ஒரு பலன் வேண்டும், அது கண்டிப்பாக வருமான வரி விலக்கு பத்திரத்தில் இல்லை.