உணர்ச்சிவயப்பட்டு வாங்குதல்
இன்று நம்முடைய பொதுவான செலவுகள் யாவும் அந்த நிமிட நேர உணர்ச்சிகளின் வெளிப்பாடே ஆகும். கிரெடிட் கார்டுக்கே அந்த நன்றியை நாம் செலுத்தவேண்டும்.
உணர்ச்சிவயப்பட்டு வாங்குதல் என்று சொன்னால் பல பேர் நான் அப்படி இல்லை என்று சொல்வார்கள், அதே சமயம் நான் சில உதாரணங்களைச் சொன்னால், அனைவராலும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
ஷாப்பிங் மாலில் பொருள்கள் வாங்குவது என்றால் எல்லோருக்கும் அவ்வளவு ஆசை. பெரும்பாலும் நாம் ஒரு சில பொருள்களை வாங்குவதற்கு அங்கு செல்வோம். ஒவ்வொரு நாளும் ஓவ்வொரு தள்ளுபடி தந்து கொண்டே இருப்பார்கள்.
உதாரணமாக 5 பிஸ்கட் பாக்கெட் வாங்கினால் 4க்கு விலை கொடுத்தால் போதும். 4 சாக்லேட் வாங்கினால் ஒன்று இலவசம். பொதுவாக நாம் இவற்றை அவ்வளவாக சாப்பிடுவதில்லை, 20% தள்ளுபடி என்றவுடன் இதை வாங்கி போட்டுக்கொள்கிறோம். 2 சாப்பிடும் நாம் 5 வாங்கியதால் அனைத்தையும் சாப்பிட நேரிடுகிறது. 20% தள்ளுபடி என்று நாம் தேவையை விட 50% பணம் செலவிடுகிறோம். இதில் ஒருவரும் விதிவிலக்கு அல்ல என்பது ஒரு கசப்பான உண்மை.
விமானத்தில் இந்தியா முழுவதும் செல்வதற்கு இன்று 50% தள்ளுபடி, அதுவும் ஏப்ரல் 14க்கு முன்பு. உடனே நிறைய பேர் புக் செய்து விடுகிறார்கள். விமான கட்டணம்தான் குறைவு, நாம் தங்குமிடம், உணவு போன்ற செலவுகளில் தள்ளுபடி கிடையாது. 3 பேர் கொண்ட குடும்பத்தில் கிட்டத்தட்ட Rs. 7,500 தள்ளுபடி என வைத்துக்கொண்டால் நாம் சுற்றுலா சென்று திரும்பி வர ஆகும் செலவு 50 ஆயிரம் ரூபாய். ஏற்கெனவே அதற்கு பணம் நம்மிடம் இருந்தால் இது ஒரு நல்ல வாய்ப்பு, அவ்வாறு இல்லாவிட்டால் இது உணர்ச்சிவயப்பட்டு வாங்குதலில் (Impulsive Buying) அடங்கும்.
ஷாப்பிங் மால்களும் மற்றும் அனைத்து கடைகளிலும் சாக்லேட், பேனா, மாகசின் போன்றவற்றை பில் போடும் இடத்தில் வைத்திருப்பார்கள், நிறைய பேர் இதை பார்த்து உணர்ச்சிவயப்பட்டு வாங்குவதுண்டு.
மற்றொரு உதாரணம் ஒருவருடைய அலுவலகத்தில் எப்போதும் பார்மல் உடை என்று வைத்துகொள்வோம். அவர் கடைக்கு போகும்போது ஜீன்ஸ் மற்றும் TSHIRT எடுப்பதைத் தவிர்க்கவும். நாம் வாங்கும் எந்த பொருளும் எவ்வளவு காலம் அதை உபயோகிக்கமுடியும் என்று ஒரு நிமிடம் நினைத்து வாங்கினால் பலவற்றை எளிதாகத் தவிர்க்கலாம்.
மேலே சொன்னவை பெரிதாக நம் பர்சை பாதிக்காதது. ஆனால் இன்று இந்த வகையான உணர்ச்சிவயப்பட்டு வாங்குதல், மொபைல் போனில் தொடங்கி, வீடு வரை வந்து நிற்கிறது. பொருள்தான் EMI ல் கிடைக்கிறதே ஏன் வாங்குவதற்கு தயங்குகிறாய் என்று வீட்டிலும், நண்பர்களும் சொல்வதுண்டு. EMI ஒன்றும் இலவசம் கிடையாது, நாம் தான் பின்னர் பணம் கட்டவேண்டும் அது வாங்குபவர்களுக்குத்தான் தெரியும் நம்மால் எது முடியும் எது முடியாதென்று.
எனக்கு ஒரு பழைய சினிமா பாடல் வரி நினைவுக்கு வருகிறது. “நீ உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்”. இன்று மிகப்பெரிய சவால் நமக்கு என்ன தேவை என்று நமக்குத் தெரிவதில்லை அல்லது நாம் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவதில்லை. நமக்கு தேவை என்னவென்று தெரியாததால், பலரும் அவர்களுடைய தேவைகளை நம் மூலம் நிறைவேற்றிக்கொள்கிறார்கள். பின்பு நம்முடைய தவற்றிற்கு அடுத்தவரை பழி கூறுகிறோம்.
ஏற்கெனவே ஒருவருக்கு ஒரு வீடு உள்ளது அதுவும் மாதா மாதம் கடனில், பல விளம்பரங்கள் டிவி மற்றும் தினசரிகளில் வந்து நம்மை மீண்டும் வாங்க தூண்டுவதோடு, மேலும் மேலும் கடனில் கொண்டு தள்ளிவிடு கிறார்கள்.
நாமும் ரியல் எஸ்டேட், என்று இருந்தாலும் நமக்கு நல்ல ரிடர்ன் தரும் என்று அதை பொருட்படுத்தாமால் வாங்கி பின்பு முழி பிதுங்கி அன்றாட வாழ்விற்கே கஷ்டப்படுகிற சூழ்நிலை ஏற்படுகிறது. கடன் வாங்கி முதலீடு செய்யக் கூடாது என்று பலரும் சொல்வார்கள். இன்று ஒரு வீடு என்பது அடிப்படை தேவை. ஆனால் 2, 3 என்று கடன் வாங்கி முதலீடு செய்யும் போது அது தவறாக முடிவதற்கு இன்று நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு.
உதாரணமாக ஒருவருடைய அலுவலகம் வீட்டிலிருந்து 5 முதல் 8 கிலோமீட்டர் தூரத்தில் என வைத்துகொள்வோம். ஒரு காரில் நான்கு பேர் வசதியாக செல்லமுடியும். அந்த காரில் ஒருவர் சென்றால் நாம் 25% கொள்ளளவு தான் உபயோகிக்கிறோம். மேலும் நம்மை போன்று பலரும் அவ்வாறு செய்வதால் நிறைய கார்கள் பெருகியவண்ணம் உள்ளது. இதனால் நிறைய டிராபிக் ஜாம் ஆகிறது. யாரும் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு இடத்திற்கு செல்லமுடிவதில்லை. இதில் மிகபெரிய ஹைலைட் என்னவென்றால் பெரும்பாலோர் சின்ன கார் வைத்துக் கொள்வது அவர்களுடைய ஸ்டேடஸ்க்கு இழுக்கு என்று பெரிய கார் வேறு வாங்குகிறார்கள்.
அரசாங்கம் ஒருவருக்கு வருடா வருடம் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதி வரை, வருமான வரிக்கான முதலீட்டை மேற்கொள்ளலாம் என சொல்கிறது.
நிறைய பேர் அதற்கு முக்கியத்துவம் சிறிதும் தராமல் அவர்களது அலுவலகத்தில் இன்னும் இரண்டு நாளில் முதலீட்டிற்கான ரசீது தராவிடில் உங்களது சம்பளத்தில் பிடிக்கப்படும் என்று சொன்னவுடன், யார் கண்ணில் அகப்படுகிறார்களோ அவரிடத்தில் எதையும் கேட்காமால் ரசீது கொடுத்தால் போதும் என்று ஏதாவது ஒன்றில் மாட்டிகொள்கிறார்கள். ஒரு வருடம் தெரியாமல் தப்பு செய்யலாம், மீண்டும் மீண்டும் அதே தப்பை செய்பவரை நாம் என்னென்று சொல்வது. இதுவும் ஒருவகையான உணர்ச்சிவயப்படுதலின் வெளிப்பாடே.
நம்முடைய தினசரி செலவுகளை ஒரு நோட்டிலோ அல்லது உங்கள் கையில் உள்ள ஸ்மார்ட் போனிலோ குறித்துகொள்ளுங்கள். அதை ஒரு மாதம் கழித்து திரும்பிப் பார்க்கும்போது நம்முடைய தேவையற்ற செலவுகள் என்னவென்று அடையாளம் காண முடியும்.
அலுவலகத்திற்கு மதிய சாப்பாடு கையில் எடுத்து செல்லும்போது, நாம் உண்ணும் உணவின் அளவு தெரியும். கையில் உணவு கொண்டு சென்றால் வீட்டின் உணவை சாப்பிடுவதோடு இல்லமால் வெளியில் அதிக விலை கொடுத்து உண்டு காசையும் வயிற்றையும் புண்ணாக்கி கொள்ளாமல் தவிர்க்கமுடியும்.
அதே சமயம் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடும்போது நாம் அதிகமாக சாப்பிட நேரிடுகிறது. சுவையாக இருந்தால் இன்னும் கொஞ்சம் கூட சாப்பிடுவோம். கையில் எடுத்து சென்றால் அது முடியாது. இது உணர்ச்சிவயப்பட்டு சாப்பிடுவது, இதுவும் தவறு.
சாராம்சம்: உணர்ச்சிவயப்பட்டு வாங்குதல் என்பது சிறு பொருளில் ஆரம்பித்து இன்று விலை உயர்ந்த பொருள்களைக் கூட நினைத்தவுடன் வாங்கவேண்டும் என்ற இடத்தில் போய் நிற்கிறது. சிலர் சொல்லுவார்கள் உங்களுக்கு கோபம் வந்தால் 100 வரை எண்ணுங்கள், கோபம் குறைந்தோ அல்லது காணாமலோ போகிவிடும்.
இந்த கோபம் என்பது உணர்ச்சிவயப் படுதலின் ஒரு வகையான வெளிப்பாடே! அதே போல நாம் வாங்க நினைக்கும் எந்த ஒன்றையும் உடன் வாங்காமல் அடுத்த நாளோ அல்லது கொஞ்ச காலமோ தள்ளிப்போட்டால் 80 சதவிகிதம் நாம் வாங்கமால் தப்பித்து கொள்ளலாம்.
நம் வாழ்வில் பணம் செய்வதற்கு இந்த மாதிரி சிலவற்றை நாம் கடைபிடித்ததற்கு பின்பு செயல்பட்டால் (ஆங்கிலத்தில் இதற்கு Behaviour Finance என்று சொல்வார்கள்) நாம் மற்றவர்களை விட நிறைய சம்பாதிப்பதோடு, நம் மனமும் ஒரு நல்ல நிலையில் இருக்கும். உணர்ச்சிவயப்பட்டு வாங்குதலை (Impulsive Buying) தவிர்ப்பது என்பது நாம் பணம் ஈட்டக்கூடிய பாதைக்கு எடுத்து வைக்கும் முதல் படி என்றால் மிகையாகாது.
No comments:
Post a Comment