கடன் வாங்கி முதலீடு?
பொதுவாக எல்லோரும் சொல்லக்கூடிய அறிவுரை கடன் வாங்கிய பணத்தை முதலீடு செய்வது தவறு. அதனால்தான் நாம் தனி நபர் கடன் (Personal Loan) வாங்கும்போது கேட்கப்படும் ஒரு கேள்வி, இந்தப் பணத்தை நீங்கள் உங்களுடைய எந்தத் தேவைக்கும் செலவழிக்கலாம். ஆனால் இந்தப் பணத்தைக் கொண்டு எதிலும் முதலீடு செய்யக்கூடாது, ஆனால் அதைக் கண்டு பிடிப்பது கடினம். இருந்தாலும் அவர்கள் இந்தக் கேள்வியை கேட்கத் தவறியதில்லை. பலர் கடன் வாங்கி முதலீடு செய்வதும் உண்டு.
கவிச்சக்கரவர்த்தி கம்பனின் "கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற வரிகள் எனக்கு நினைவுக்கு வருகிறது. கடன் சுமை இருந்தால் நமக்கு நிம்மதியாகத் தூக்கம் வராது. அது தொண்டையில் மாட்டிக்கொண்ட முள் போன்றது. ஒரு நாட்டின் அரசனே கடன் இருந்தால் கலங்குகிறான் என்றால் நாம் எல்லோரும் எம்மாத்திரம்!
முதலீடு என்பது ரிஸ்க்கான விஷயம். அப்படி இருக்கும்போது நாம் வாங்கும் கடனுக்கு வட்டி கட்ட வேண்டும். அந்த வட்டிக்கு மேல் நமக்கு ரிடர்ன் கிடைக்குமா, கிடைக்காதா என்பது நம் கையில் இல்லை. அதனால்தான் அது தவறு என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு என்பது அவர்களின் கனவு, அதை லோனில் வாங்குவதில் தவறில்லை. ஆனால், 2, 3 வீடு என கடனில் வாங்குவது தவறு.
உதாரணமாக நாம் இரண்டாவது வீடு ஒன்று 50 லட்சத்தில் வாங்குகிறோம் என எடுத்துக்கொண்டால் அதற்கு மாதம் 50 ஆயிரம் கட்டவேண்டும். இன்று சராசரியாக Rs. 10,000 தான் நமக்கு கிடைக்கும் வாடகை. 50-10=40. மாதம் 40 ஆயிரம் வீதம் வருடம் 5 லட்சம் கட்டுகிறோம். ஒருவேளை வீடு இன்னும் 5 வருடத்தில் நல்ல விலை ஏறாமல் 65 லட்சம் தான் விலை போகிறது என எடுத்து கொண்டால் நமக்கு 10 லட்சம் நஷ்டம். மேலும் அதில் கிடைக்கும் அணைத்து பணமும் வரி இல்லாமல் நமக்கு கிடைக்காது.
இன்று EMI ல் வாழ்வது என்பது நிறைய பேருக்கு ஒரு போதை மாதிரி. ஒரு EMI முடிந்தால் அடுத்த EMI என மாறி மாறி தங்களை கமிட் செய்து கொள்கிறார்கள். பெற்றோர்களும், அவர்களுடைய பையனோ, பெண்ணோ வேலைக்குச் சேர்ந்தவுடன் ஒரு வீட்டை வாங்கி கடனாளி ஆக்கிவிடுகிறார்கள். பின்பு வீடு வாங்கிவிட்டேன் அதனால் வேலையை விட முடியாது எனக் கடினமாக உழைத்து தங்களுடைய உடல் வலிமையை இழக்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உள்ளது, ஆனால் நம்முடைய சமூக அமைப்பின்படி, படித்தவுடன் வேலைக்குச் சேரவேண்டும் என்பது, இங்கு எழுதப்படாத சட்டம். இதை மாற்றுவது என்பது கடினம், ஒத்துக்கொள்ளவேண்டிய விஷயம். இப்படி வேலைக்குச் சேர்ந்தவுடன் கடனில் மாட்டிகொள்ளாவிட்டால், நமக்கு பிடித்த வேலையையோ அல்லது ஒரு சிறு தொழில் முனைவராகவோ ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால் ஒருவருடைய திறமையை அறிந்து கொள்ளாமலே போவதற்கு வாய்ப்பு அதிகம். கடந்த 30 ஆண்டுகளில் ஓரளவிற்கு சிலர் அதை உணர்ந்து கொண்டதால்தான் இந்தியா இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது. இதில் நிறைய பேர் ஆர்வம் காட்டினால், தான் உயர்வதுடன் நம் நாடும் நலம் பெற வாய்ப்புள்ளது.
பெரும்பாலும் நம்முடைய தந்தையை விட நாம் நல்ல வசதியில் இருக்கிறோம், நம்முடைய குழந்தைகள் நம்மை விட கண்டிப்பாக நன்றாக இருக்கும்போது நாம் நமக்காக வாழவேண்டும், நம் குழந்தைகளுக்கு சொத்து சேர்க்கிறேன் என்று நம் வாழ்வை தொலைத்து விடக்கூடாது. ஆனால் மீண்டும் மீண்டும் கடனில் மாட்டிக்கொண்டு ஒரு வீடு, மற்றொன்று என்று நிறைய பேர் காலம் தள்ளுகிறார்கள்.
ஒருவர் அதிகபட்சமாக ஒரு வீட்டில்தான் வசிக்க முடியும். மேலும் காலத்திற்கு தகுந்த மாதிரி ஒருவருடைய விருப்பம் வேறுபடுகிறது. மேலும் நம் குழந்தைகள் எங்கு வாழப்போகிறார்கள் என்று தெரியாது. தெரியாத இடத்தில் வாழப்போவதற்குத் தெரிந்த இடத்தில் கடன் வாங்கி முதலீடு செய்வது சரியான முயற்சியாக இருக்காது!
மேலும் நாம் முதலீடு செய்யத் தொடங்கும்போது கடந்த கால முதலீட்டை பற்றி மட்டும் சிந்திக்காமல் வரும் காலம் எவ்வாறு இருக்கும் என்றறிந்து முதலீடு செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலோர் முதலீடு செய்யும்போது கடந்த காலத்தில் எது செயல்பட்டதோ அதிலேயே முதலீடு செய்கிறார்கள். அது முடிந்து போன கதை. நடக்கபோவதைப் பற்றி யோசித்து செயல்படவேண்டும்.
உதாரணமாக நீங்கள் ஒரு கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்கிறீர்கள் என்றால் டெண்டுல்கரை தேர்வு செய்ய முடியாது. ஏனெனில் அது கடந்த காலம், வரும் காலத்தில் விராத் கோலியை தேர்வு செய்ய வேண்டும். அதே போல நம்முடைய முதலீட்டை மேற்கொள்ளும்போது இருக்கின்ற எல்லா முதலீட் டையும் பற்றி அறிந்து அது வருங்காலங்களில் எவ்வாறு செயல்படும் என்று யோசித்து நாம் முதலீடு செய்ய வேண்டும்.
நாம் பணத்தை நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ தரும்போது நான் அவருக்குக் கடன் கொடுத்திருக்கிறேன் என்று அவரைப் பற்றிக் குறைவாகவும் நம்மைப் பற்றி உயர்வாகவும் எண்ணுவோம். அதே சமயம் அந்த பணத்தை வங்கிக்கு கடன் கொடுத்தால் அதற்கு பெயர் டெபாசிட். யாரும் வங்கிக்கு நான் கடன் கொடுத்துள்ளேன் என்று சொல்வதில்லை. மாறாக, அந்த வங்கியில் டெபாசிட் செய்துள்ளேன் என்று அந்த வங்கியைப் பற்றி உயர்வாகச் சொல்வோம். வங்கி உங்களிடத்தில் கடன் வாங்கியுள்ளது அதற்கு வட்டி தருகிறது அவ்வளவுதான். யாரும் கடன் வாங்கினால் வெளியில் சொல்லுவதற்கு சங்கடப்படுவார்கள். ஆனால் வீட்டுக்கடன் வாங்கும்போது மட்டும் நாம் நம் கடனை பெருமையாக நினைத்துக் கொண்டாடுகிறோம்.
எல்லோரும் வீடு, கடனில் தான் வாங்கி இருக்கிறோம். அதிலும் 2 அல்லது 3 வீடு என்றால் சொல்லிக்கொள்ளவே வேண்டாம். வெளி நாட்டில் யாரும் இந்த மாதிரி கடன் வாங்கி நிறைய வீடுகள் வாங்குவதில்லை.
சாராம்சம்: கடன் வாங்கி முதலீடு செய்வது என்பதை நாம் முதலீடு என்று எண்ணலாமே தவிர அது கண்டிப்பாக முதலீடாகாது. மேலும் ஒரு முதலீட்டை விற்று மற்றொன்றுக்குச் செல்லும்போது, அது வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
தேவையான பொருளுடன், கடனில் மாட்டிக்கொள்ளாமல் வாழ்ந்ததால் போன தலைமுறையினர் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இன்று நிறைய பொருள், அதற்குமேல் கடன். ஆனால் மகிழ்ச்சி என்பது இல்லை. எதையோ பறி கொடுத்தவர்போல்தான் பலர் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.
இன்று பெரிய பெரிய நிறுவனங்கள் நொடித்து போனதற்கான காரணம், நிறைய கடன் வாங்கி தொழிலை பெருக்குகிறேன் என்று கடனில் மாட்டிகொண்டதுதான். பணத்தை தேடுவதில் வாழ்கையைத் தொலைப்பதில் அர்த்தமில்லை. நீங்கள் இறந்த பின்பு உங்கள் பெயரிலோ, வங்கியிலோ அதிக பணம் இருந்து பயனில்லை. எந்த ஒரு பொருளும் நமக்கு எளிதாகக் கிடைத்தால் அதற்கு மதிப்பு கிடையாது. நாம் குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பையும் அதனுடைய பயன்பாட்டையும் கற்றுத் தரவேண்டுமே ஒழிய நாம் கஷ்டப்பட்டு பணத்தைத் தருவது அவர்களைக் கெட்ட வழியில் அதிகம் தள்ளுமே தவிர நன்மை பயக்காது.
நாம் வருங்கால சந்ததிக்கு மீன் பிடிக்க கற்று தரவேண்டுமே தவிர, மீனை இலவசமாகத் தரக்கூடாது. கடன் இல்லாமல் சேர்க்கப்படும் செல்வமே உண்மையான செல்வம் என்று சொன்னால் அது மிகையாகாது. கடனை தவிர்ப்போம், தரமான வாழ்வை எதிர்கொள்வோம்.
பி. பத்மநாபன் - padmanaban@fortuneplanners.com
No comments:
Post a Comment