முதலீட்டில் கால தாமதத்திற்கான விலை என்ன?
முதலீட்டில் மிக முக்கிய விஷயம் எவ்வளவு சீக்கிரம் தொடங்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தொடங்க வேண்டும், அதேபோல எவ்வளவு காலம் காத்திருக்கிறோமோ அவ்வளவு காலம் காத்திருந்தால், நிறைய பயனை அடையலாம்.
மேலும் ஒவ்வொரு கடனுக்கும், ஒவ்வொரு வட்டி விகிதம், எந்த கட னுக்கு அதிக வட்டியோ அதை முதலில் முடிக்க வேண்டும்.
நிறையபேர் தயக்கம் காட்டும் மற்றொரு விஷயம், அவர்கள் முதலீட்டை சரண்டர் செய்யும்போது தான் செலுத்திய தொகையை விட கம்மியாக இருப்பதால் அதை பல காலம் தொடர்ந்து அசலுக்கு நஷ்டமில்லாமல் எடுக்க வேண்டும் என்று நினைப்பது. அசல்தான், நஷ்டமில்லையே தவிர அதற்குண்டான மதிப்பு மிகக் குறைவு, ஏனெனில் சரண்டர் செய்யாவிட்டால் நாம் அந்த முதலீட்டை தொடர்ந்திருப்போம், அதனுடய பலன் முடிவில்தான் தெரியும். அதற்குப் பதிலாக, இப்போது நஷ்டம் அடைந்தாலும் மீதமுள்ள பிரீமியத்தைக் கட்டாமல், அதைவிட அதிகமாக சம்பாதிக்க முடியும்.
நேரத்தின் மதிப்பை அறிந்து கொள்ளவேண்டுமானால் நாம் இவர்களிடம் கேட்கவேண்டும் என்று சொல்வார்கள்.
† ஒரு வருடத்தின் விலை, தேர்வில் தவறிய மாணவனிடம்
† ஒரு மாதத்தின் விலை, ஒரு தாய் குறை பிரசவத்தில் பெற்றெடுத்த குழந்தை
† ஒரு வாரத்தின் விலை, ஒரு வாராந்திர பத்திரிகை ஆசிரியரிடம்
† ஒரு மணி நேரத்தின் விலை, காதலன் காதலிக்காக காத்திருக்கும் சமயம்
† ஒரு நிமிடத்தின் விலை, ரயிலை தவறவிட்டவரிடம்
† ஒரு விநாடியின் விலை, விபத்தில் தப்பிய ஒருவரிடம்
† ஒரு மில்லி விநாடியின் விலை, ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரிடம்.
இன்று நாம் தாமதிக்கும் ஒவ்வொரு மாதமும் நம்முடைய நீண்ட கால முதலீட்டில் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாம் பார்க்கலாம்.
பெரும்பாலோருக்கு இன்று உள்ள பணத்திற்கும் 5 வருடம் கழித்து கிடைக்கும் பணத்திற்கும் வித்தியாசம் தெரிவதில்லை சில உதாரணங்களின் மூலம் அதை தெரிந்து கொள்ளலாம்.
ராஜா, ரவி, மற்றும் ராம் நெருங்கிய நண்பர்கள், அவர்களுக்கு வயது 25. மூவருக்கும் 10,000 சம்பளம். ராஜா அவற்றில் 20% முதலீட்டிற்கு ஒதுக்கிய பின்பு மற்றவற்றை செலவிடுகிறான். ரவி கிடைப்பதோ 10,000 இதில் எங்கு சேமிப்பது, சேமித்தால் நிறைய சேமிக்கவேண்டும். 2000த்தில் என்ன கிடைக்கும் என்று சேமிக்கவில்லை. ராமோ கேட்கவே வேண்டாம், நாளை நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக இன்று கஷ்டப்படமுடியாது, மேலும் எவ்வளவு நாள் நாம் இருப்போம் என்றும் தெரியாது என்ற இன்றைய இளைய சமுதாயத்தின் அடையாளம்.
ரவி 5 வருடம் கழித்து, அடுத்த 25 வருடம், மாதம் 4000 சேமிக்கத் தொடங்குகிறான், ராஜா மாதம் 2000 வீதம் 30 வருடம் சேமிக்கிறான். மொத்தம் ராஜா சேமிப்பது 2000*12*30=7.2 லட்சம். ரவி சேமிப்பது 4000*12*25 = 12 லட்சம். ராமிற்கு 10 வருடம் கழித்துதான் தான் எதுவுமே சேமிக்கவில்லை என்ற எண்ணம் வருகிறது. அதனால் என்ன, அவர்கள் சேர்ப்பதைவிட அதிகம் சேர்க்கிறேன் இன்னும் 20 வருடம் என்று மாதம் 8000 ரூபாய் சேமிக்கதொடங்குகிறான்.
8000*12*20=19,20,000. இவர்களது 55ஆவது வயதில் கிடைக்கும் தொகை, ராஜாவிற்கு 1.40 கோடி, ரவிக்கு கிடைத்ததோ 1.31 கோடி. ராமிற்கு 1.21 கோடி. 15% கூட்டு வட்டியில். அதற்கு மாறாக ரவியும், 5 வருடம் கழித்து மாதம் 2000 சேமித்து தவறிய முதல் 5 வருடத்திற்கான 2000*12*5=1,20,000 த்தையும் சேமித்தால் கிடைக்ககூடியது 39.5 +65.68 =1.05 கோடி. இடைவெளி 35 லட்சம்.
ராம் 10 வருடம் தவறிய 2.40 லட்சமும் அதை தொடர்ந்து 20 வருடத்திற்கு மாதம் 2000 சேமித்தால் அவருக்குகிடைக்கக்கூடிய தொகை 39.27+30.31=70 லட்சம். மூவரும் சேமிக்க கூடிய தொகை ஒன்று ஆனால் கால கட்டம் வேறு சேமிப்பது சிறிய தொகையானாலும் சீக்கிரம் ஆரம்பித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது இதிலிருந்து தெளிவாகப் புரியும்.
30 வருடம், மாதம் 2000 ரூபாய் முதலீட்டை ஒருவர் ஒரு மாதம் தள்ளிப் போடுகிறார் என்றால் அவரது இழப்பு 1.75 லட்சம். ஒரு வருடம் தள்ளிபோடுகிறார் என எடுத்துக்கொண்டால் 19.64 லட்சம்!
இதேபோல் ஒருவர் தாமதிக்கும் ஒவ்வொரு வருடமும் இன்சூரன்ஸ் ப்ரீமியம் அதிகரிக்கும். உதாரணமாக 500 ரூபாய் எடுத்துக்கொண்டால் 20 வருடத்திற்குஅதுவே 10,000 ஆகிவிடும். முதலீட்டில் முதலீட்டின் அளவை விட அதில் எவ்வளவு காலம் இணைந்திருக்கிறோம் என்பதுதான் மிகப்பெரிய விஷயம். கூட்டுவட்டியின் மகத்துவமே நீண்ட கால அடிப்படையில் தான் தெரியும்.
நமது மும்பை பங்கு சந்தை கடந்த 34 வருடங்களாக 17% கூட்டு வட்டியில் இன்று 20,700. அதாவது 207 மடங்கு. மடங்கை பார்க்கும்போது பெரிதாக உள்ளது. ஆனால் கூட்டு வட்டியை கணக்கில் கொண்டால் பெரிதாக தோன்றவில்லை.பெரிய மடங்குகளை எளிதாக அடையலாம், நாம் சீக்கிரமே முதலீட்டை தொடங்கினால். மேலும் நீண்ட கால முதலீட்டை செய்யும்போது நாம் வைப்பு நிதி திட்டத்தை தேர்வு செய்ய கூடாது ஏனெனில் நமக்கு பணவீக்கம் எவ்வளவு என்று தெரியாது. தெரியாத பணவீக்கத்திற்கு தெரிந்த வட்டியிடம் சரண் ஆகக்கூடாது. நீண்ட கால முதலீடுகள் பணவீக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய முதலீட்டில்தான் இருக்கவேண்டும் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் வரக்கூடாது.
சாராம்சம்:
முதலீடு செய்வதற்கு அளவு தேவை இல்லை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு, வேலைக்கு சேர்ந்த உடன் சேமிக்கத் தொடங்க வேண்டும். நம்முடைய மிகப்பெரிய தேவைகள் யாவும் நீண்ட கால அடிப்படையில் உள்ளதால் அதையாவும் எளிதாக அடையமுடியும். மியூச்சுவல் ஃபண்ட் தவிர எந்த ஒரு முதலீடும் தெளிவாக இருப்பதில்லை. யார் எங்கு வாங்கினாலும் ஒரே விலை. ஆனால் மற்ற முதலீட்டில் அப்படி இல்லை. தினசரி அதனுடைய செயல்பாட்டை தெரிந்து கொள்வதால் பலருக்கு பயம். ஒரு நிர்வாகத்தில் கூட ஒருவருடைய வேலைத்திறனை வருடத்திற்கு ஒருமுறை தான் எவ்வாறு செயல்பட்டார்கள் என்று பார்கிறார்கள்.
ஆனால் நம்முடைய முதலீட்டின் செயல்பாட்டை நாம் முடிந்தவரை தினசரி பார்க்க முயல்கிறோம். இது எவ்வளவு தவறான விஷயம். அதனால், நீண்ட கால அடிப்படைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தவிர்க்க முடியாதது.
சென்செக்ஸ் ஜனவரி 14, 2008ல் 20,728. கடந்த வெள்ளிக்கிழமை அதாவது, பிப்ரவரி 21, 2014ல் 20,700. சந்தை 6 வருடத்திற்கு மேல் அதே இடம். ஆனால் சந்தை மேலும் கீழும் சென்றதால்தான் இந்த அளவிற்கு ரிடர்ன்ஸ் கிடைத்துள்ளது. இந்த கால கட்டத்தில் SIP முறையில் 10 முதல் 15% வரை கூட்டு வட்டி கிடைத்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் ஒழுங்குடுத்தப்பட்ட நிர்வாக கட்டுப்பாட்டிற்குள் உள்ள முதலீடு ஆகும்.
இதை தகுந்த ஆலோசகரின் பெயரில் செய்தால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். மேலும் ஒரு மாத தாமதம், சில லட்சம் 1 வருட தாமதம். பல லட்சம் ரூபாய். குறைந்தபட்சமாக 1000 ரூபாய்க்கு கூட சேமிக்க தொடங்கலாம், அதனால் சிறிய தொகை என்று அலட்சியப்படுத்தவேண்டாம். கூட்டு வட்டியை, எட்டாவது உலக அதிசயம் என்று சொன்னால் அது மிகையாகாது.
இதில் இன்னுமொரு பயன், சிறுவயதிலேயே நாம் பணத்தின் அருமையை உணர்வதால் தேவையற்ற செலவுகளை கண்டிப்பாக குறைக்கமுடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நேரத்தைமதிப்போம், உடனடியாக செயல்படுவோம், தரமான இந்தியாவை உருவாக்குவோம்.
padmanaban@fortuneplanners.com