Pages

Monday, 25 November 2013

Common Mistakes In Investments! - My 9th Article Published on 25th November 2013 on The Hindu Tamil



பொதுவான முதலீட்டு தவறுகள் - பி.பத்மநாபன்
·         http://tamil.thehindu.com/multimedia/dynamic/01664/gold3_1664366g.jpg
·         http://tamil.thehindu.com/multimedia/dynamic/01664/realestate2_1664367g.jpg
கடந்த வாரம் எதில் முதலீடு செய்யலாம் என்று பார்த்தோம். இந்த வாரம் பொதுவான முதலீட்டு தவறுகள் என்னவென்று பார்த்தால் அதை நாம் சரி செய்து கொள்ளலாம்.
எந்த ஒரு முதலீடாக இருந்தாலும் நாம் கேட்க கூடிய சில கேள்விகள்
1. எவ்வளவு ரிடர்ன் கிடைக்கும், அது சந்தையின் எற்ற இறக்கத்திற்குட்பட்டதா, எவ்வளவு காலம் அதில் இருக்கவேண்டும்?
2. நடுவில் எடுக்க முற்பட்டால் எவ்வளவு % வெளியேறும் தொகை, இந்த முதலீடு மாதா மாதமா அல்லது வருடா வருடம் கட்ட வேண்டுமா, அல்லது ஒரே ஒரு தடவை தானா?
3. பணத்தை பொறுத்தவரை “பர்ச்சேசிங் பவர்” என்னவென்று பார்க்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக ஒருவர் தான் முதலீடு செய்த தொகை 1 லட்சம் ரூபாய், ஐந்து வருடம் கழித்து திரும்ப கிடைத்தாலும் அவர்கள் வருத்தப்படுவதில்லை. ஆனால் அதனுடைய மதிப்பு வெறும் 50,000 தான் 8% பணவீக்கம் என எடுத்துக்கொண்டால்.
லைப் இன்சூரன்ஸ்
முன்பே சொன்னது போல இன்சூரன்ஸ் ஒரு போதும் இன்வெஸ்ட்மென்ட் ஆக முடியாது. இது தெரியாமல் நிறைய பேர் பாலிசி எடுத்திருக்கிறார்கள், மேலும் மேலும் எடுத்து கொண்டு இருக்கிறார்கள். இன்சூரன்சில் வெளியேறும் தொகை மிக மிக அதிகம். இதனால் நிறைய பேர் தொடர்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை போட்ட பணத்தை விட குறைவாக எடுக்கக் கூடாது. கடைசியாக அவர்களுக்கு கிடைக்கும் தொகைக்கான வட்டி 6 முதல் 7% வரை தான். இதை தவிர்த்து டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்தால் அவரது ரிஸ்கை கவர் செய்து கொள்ளமுடியும்.
இன்றைய பண இழப்பை ஒத்துக்கொள்ளாவிட்டால் அவர்கள் 20 வருடங்களுக்கு தொடரும்பொழுது பெரிய இழப்பையே சந்திக்க நேரிடும். குழந்தை பேரில், பெண்களின் பேரில், ரிடையர்மென்ட் என்று இன்சூரன்ஸ் பிளான் தேர்ந்தெடுப்பதை தவிர்க்கவும்.
மியூச்சுவல் ஃபண்டு
மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்யும் போது செக்டார் ஃபண்டை தவிர்க்கவும். அது அதிக ரிஸ்க், அதிக ரிடர்ன். மேலும் சரியான நேரத்தில் நுழைந்து, சரியான நேரத்தில் வெளியேற வேண்டும். இன்றைய அவசர உலகில் நிறைய பேரால் நேரத்தை அதற்காக ஒதுக்க முடிவதில்லை.
மியூச்சுவல் ஃபண்டில் பணத்தை இழந்தவர்களில் பெரும்பாலோர் இந்த வகையான முதலீடு செய்தவர்களே! இதை போன்று தெள்ளத் தெளிந்த முதலீடு எதுவும் கிடையாது. இதன் பெரிய சவாலே முதலீட்டார் எப்பொழுது வேண்டுமானாலும் உள்ளே வரலாம் மற்றும் வெளியே செல்லலாம் என்பதே. வேறு முதலீட்டில் அவ்வளவு எளிதாக வெளியேற முடியாது, இந்த முதலீடு தான் எல்லோருடைய கண்ணையும் உறுத்தும். நீண்ட காலம் தொடராததால் நிறைய பேரால் பணம் சேர்க்க முடியவில்லை. பொதுவாக 3 வருடத்திற்கு மேல் யாரும் தொடருவதில்லை என்பது வருத்தமான விஷயம், இதிலும் அதிக வெளியேறும் தொகை இருந்தால் நிறைய பேர் கண்டிப்பாக தொடர்ந்திருப்பார்கள்.
தங்கம்
எல்லோராலும் ஒத்துக்கொள்ள கூடிய இன்வெஸ்ட்மென்ட் தங்கமே. தங்கம் கடந்த ஐந்து வருடங்களாக நல்ல ரிடர்ன் கொடுத்ததால் எல்லோரும் அதில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அனைவரும் சொல்லக்கூடிய பொதுவான காரணம் வேண்டும்பொழுது விற்கலாம். ஆனால் ஒருவரும் விற்பதில்லை! மேலும் தங்கத்திற்கு அதிகப்படியான ரிஸ்க் உள்ளது, அது சர்வதேச உலோகம் என்பதால் கரன்சி ரிஸ்க் அதிகம். கடந்த 30 ஆண்டுகளாக நம்முடைய கரன்சியான ரூபாய், 8 மடங்கு வீழ்ந்துள்ளது. அடுத்த 30 வருடங்களில் 64 ரூபாய் 512 ஆக முடியாது. எனவே உங்களுக்கு பெண் குழந்தை திருமணத்திற்கு இருந்தால் கொஞ்சம் தங்கத்தில் சேமிக்கலாம். தங்கத்தை ஒரு பெரிய முதலீடாக கருதி பணத்தை போடுவதைத் தவிர்க்கவும்.
தங்கத்தால் நமக்கு மாதா மாதம் எந்த வருமானமும் கிடையாது அதை விற்கும்பொழுது நம்முடைய ரூபாய் மதிப்பு குறைந்து காணப்பட்டாலே ஒருவருக்கு பயன். ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேரும்போழுது அதனுடைய கரன்சி மதிப்பு அதிகரிக்குமே தவிர குறைவதற்கான வாய்ப்பு மிக குறைவு.
ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட் கடந்த 10 வருடத்தில் தாறு மாறாக ஏறி கிடக்கிறது. இன்று பல விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆனதால் நம்முடைய அன்றாட தேவைகளான அரிசி, பருப்பு விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
நான் பல ஆண்டுகளுக்கு முன்பு படித்த கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது.
“விலை நிலங்களெல்லாம் விற்று ரியல் எஸ்டேட்டாக மாற்றினால் வீட்டை இடித்து விவசாயம் செய்பவர் யார்”
இன்று ரியல் எஸ்டேட்டை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று காலி மனை மற்றொன்று அடுக்கு மாடி குடியிருப்புகள். காலி மனையினால் நமக்கு மாத வருமானம் கிடைக்காது, அதை விற்கும்பொழுது தான் நமக்கு பயன் அதுவும் கண்காணாத இடத்தில் தான் வாங்க முடிவதால் அதை பராமரிப்பதும் மிகவும் கடினமான ஒன்று.
அடுத்ததாக அடுக்கு மாடி குடியிருப்பில் வாடகை 2% முதல் 2.5% வரைதான் கிடைக்கிறது, இது மிகவும் குறைவு. எல்லோருக்கும் ஒரே நம்பிக்கை 20 வருடத்தில் அது சொந்தமாகும் என்பதே. வீடு என்பது ஒரு உணர்வு பெருக்கான விஷயம், அதனால் ஒன்று வாங்குவதில் தவறில்லை. ஆனால் இன்று பெண்ணுக்கு ஒன்று, பையனுக்கு ஒன்று என்று மீண்டும் மீண்டும் எல்லா பணத்தையும் அதிலே போடுவதால் அவர்களுக்கு அன்றாட தேவைக்கு பணம் பத்துவதில்லை. இது புலி வாலை பிடித்த கதை. அதிகமாக EMI கட்ட வேண்டி உள்ளதால் அவர்களால் தன்னுடைய வேலையே விட முடிவதில்லை. இதனால் மன அழுத்தம், மற்றும் உடல் வலிமையை இழக்கிறார்கள். பின்பு அதை சரி செய்வதற்கு மருத்துவரிடம் சம்பாதித்ததை கொடுக்கிறார்கள்.
இதற்கு ஆங்கிலத்தில் RAT RACE என சொல்வார்கள், இதில் பெருமைக்குரிய விஷயம் என்னவென்றால், இதில் நீங்கள் ஜெயித்தாலும் கடைசியில் நீங்கள் ஒரு RAT தான், மனிதர் கிடையாது!
பல விஷயங்களுக்கு நாம் நம்முடைய முன்னோர்களை பின்பற்றுகிறோம். ஒருவர் கூட அந்த காலத்தில் இப்படி இடம் இடம் என்று அலையவில்லை. அவர்கள் தனக்கு தேவைக்கு மட்டும் வேலை செய்ததால் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்தார்கள். அதனால் இவ்வளவு வீடு வாங்கியும் வயதானவுடன் பெரும்பாலோர் வயதானவருக்கான ஹோமில் தான் வசிக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தமான விஷயம், முன்பு உறவுகளுக்கும் மனிதர்களுக்கும் மதிப்பு கொடுத்ததால் எல்லோரும் கஷ்டமோ நஷ்டமோ ஒன்றாகவே வாழ்ந்தார்கள்.
இன்று எல்லோருக்கும் நிறைய எதிர்பார்ப்புகள் மற்றும் மற்றவருக்காக வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதற்கு வைப்பு நிதி திட்டங்கள் ஒருபோதும் உதவாது. கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் நல்ல ரிடர்ன் வரும். இங்கு பெரும்பாலும் ரிஸ்க் என்பது பொறுமையாக காத்திருத்தலே. பொறுத்தால் பூமி ஆள்வார் என்பது சந்தையை சார்ந்த நிதி திட்டங்களுக்கு மிகவும் பொருந்தும். இதில் சம்பாதித்தவர்கள் இதை தான் பின்பற்றி இருக்கிறார்கள்!
நம்முடைய நேரத்தில் கொஞ்சம் ஒதுக்கினால் இத்தகைய தவறுகளை தவிர்த்து சிறந்த முறையில் முதலீடு செய்து நிறைய பணம் பண்ணலாம்.

Monday, 18 November 2013

What Do You Expect From Your Investments? - My 8th Article on Tamil Hindu dated on 18th November 2013



உங்களின் தேவைக்கு ஏற்ற முதலீடு எது? - பி.பத்மநாபன்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/01656/shares_1656834h.jpg

இன்று எல்லோருக்கும் பணத்தைப் பெருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அதைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டிய எண்ணம் இல்லை. தங்களுடைய பணத்திற்குத் தாம் பொறுப்பெடுத்து கொள்ளாமல் அடுத்தவரை பழி சொல்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள்.
முதலீட்டைப் பற்றி அறிந்து கொள்வது மிக மிக எளிது. ஆனால் கண்டிப்பாக அதற்கு கொஞ்சம் ஆர்வமும் வேண்டும். வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டமான விஷய ங்களை பிடித்தோ பிடிக்காமலோ கற்றுக்கொள்கிறோம். ஆனால் நமக்குப் பெரிதும் உதவக் கூடிய நாம் ஈட்டிய பொருளை முதலீடு செய்வதில் மட்டும் ஏனோ ஓர் அலட்சியம் பெரும்பாலோருக்கு இருக்கிறது.
ரியல் எஸ்டேட் முதலீடு இன்று பல மடங்காக அதிகரித்திருக்கிறது, சில பங்குகள் மற்றும் அல்லது மியூச்சுவல் பண்டு முதலீடுகளும் நல்ல வருமானத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் பலர் இந்த முதலீடுகளை பற்றி மறந்துவிட்டார்கள்அல்லது அதனுடைய வளர்ச்சியை பார்க்காமலோ, கணிக்காமலோ விட்டுவிட்டார்கள்.
இன்று நாம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அடிக்கடிச் செல்ல வேண்டி இருக்கிறது. அதற்கு நமக்குப் பலவிதமான வாகனங்கள் தேவைப்படுகிறது.
இந்த வாகனங்கள், தூரம் மற்றும் அதற்கு ஆகக்கூடிய செலவுகளை பொறுத்தே பெரும்பாலும் தேர்ந்தெடு க்கப்படுகின்றன.
உதாரணமாக நடக்கும் தொலைவில் இருந்தால் நடப்பது அல்லது சைக்கிளில் செல்வது. இதுவே 5 முதல் 10 கிமீ என்றால் இரு சக்கர வாகனம்/ஆட்டோ/ கார்/ மற்றும் பேருந்தை பெரும்பாலும் உபயோகப்படுத்துகிறோம். இந்த தூரம் அதிகரிக்கும் போது நாம் ரயில் மற்றும் விமானத்தைத் தேர்வு செய்கிறோம்.
நாம் வெளிநாட்டிற்கு செல்வதற்கு சைக்கிளோ அல்லது காரிலோ செல்ல முடியாது. அதே போல பக்கத்துக்கு தெருவில் உள்ள மார்க்கெட்டிற்கு விமானத்தைத் தேர்வு செய்ய முடியாது.
இதே போன்று நம்முடைய வாழ்க்கையில் பல இலக்குகள் (குழந்தையின் கல்வி, திருமணம், வெளிநாட்டு பயணம், தொழில் தொடங்குதல், ஓய்வு கால திட்டம்) நாம் ஈட்டக்கூடிய பொருளைச் சார்ந்து உள்ளது.
அது குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளைப் பொருத்தது. அதற்கு வங்கி டெபாசிட், போஸ்ட் ஆபீஸ் டெபாசிட், தொடர் சேமிப்பு(ஆர்.டி.), மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை முதலீடு, தங்கம், ரியல் எஸ்டேட் முதலியவை. இன்ஷூரன்ஸ் ஒரு போதும் முதலீடு கிடையாது. நம்முடைய ரிஸ்க்கை குறைப்பதற்கான வழிதான் இன்ஷூரன்ஸ்.
இதில் முறைபடுத்தாதது தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடு. இன்று நிறைய பேருக்கு பங்குச் சந்தை முதலீடு என்பது ஒரு சூதாட்டம் அதில் நாம் பணத்தை இழந்து விடுவோம் என்ற நினைப்பு உள்ளது. அது மிகப்பெரிய தவறான கருத்தாகும். அதைப்பற்றி சிறிது பார்ப்போம்.
அன்றாட வாழ்வில் நமக்கு பல பிசினஸ் லாபகரமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
மேலும் சில பிசினஸ் நாம் பார்க்கும் போதே பல மடங்கு பெரிதாகிறது. நாமும் அதைத் தொடங்க வேண்டுமானால் நமக்கு பணம் மற்றும் அதைப் பற்றிய நீக்கு போக்கு தெரிய வேண்டும். அதோடு நம்முடைய நேரத்தையும் அதற்காக ஒதுக்கவேண்டும். எந்த ஒரு பிசினசிலும் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை. பங்குச்சந்தை முதலீடு என்பதும் நாம் ஒரு பிசினஸ் வாங்குவது போன்றதுதான்.
எப்படி நாம் ஒரு பிசினஸ் தொடங்குவதற்கு முன்பு அது நீண்ட கால அடிப்படையில் இருக்குமா எந்த அளவிற்கு நாம் அதைப்பற்றி அன்றாடம் தெரிந்து கொள்ளவேண்டும் எனப் பார்க்கவேண்டும்.
மேலும் நமக்கு பிடித்த பிசினசில் பார்ட்னாராக யாரும் நம்மை ஏற்று கொள்ளமாட்டார்கள். அப்படி நம்மை ஏற்று கொண்டால் அதற்கு நிறைய முதலீடு தேவைப்படும். ஆனால் அந்த கம்பெனி பங்கை வாங்கும்போது ஒரு சில பங்காக இருந்தாலும் கூட நாம் பார்ட்னராக ஆக முடியும்.
உதாரணமாக, ஒவ்வொருவருக்கும் ஒரு சில வங்கியின் மீது நம்பிக்கை உள்ளது, அந்த வங்கி நமக்கு இரண்டு வாய்ப்பைத் தருகிறது. ஒன்று உங்களிடம் பணம் கொடு அதற்கு ஒரு குறிப்பிட்ட வட்டி தருகிறேன், மற்றொன்று என்னோடு பார்ட்னராக சேர்ந்து கொள், அதனுடைய பலனை எற்றுக்கொள்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக பலர் வட்டிக்காக மட்டுமே வங்கியிடம் பணத்தை கொடுக்கிறோம், அதில் ஒரு சில சதவிகிதத்தை ஒதுக்கினால் அந்த வங்கி பல கிளைகளை திறந்து விரிந்து பெரியதாகும் பொழுது நாமும் அதனுடன் சேர்ந்து பெரிதாக பணம் பண்ண முடியும்.
கடந்த 10 முதல் 11 வருடங்களில், பல வங்கியின் பங்குகள் 20 முதல் 45 மடங்கு வளர்ந்துள்ளது. வட்டிக்கு விட்டிருந்தால் 10% கூட்டு வட்டியில், அதனுடைய மதிப்பு 11 வருடங்களில் 2.85 மடங்கே. அவரவர் எடுக்கும் ரிஸ்க்-கிற்குத் தகுந்தாற்போல் சிறிய அளவாவது பங்குக்கென்று ஒதுக்கினால் நம்முடைய நாடும் பொருளாதாரத்தில் முன்னேறும் நமக்கும் நல்ல பணம் கிடைக்கும்.
பிசினஸ் ஆக இருக்கட்டும் அல்லது ஒரு பங்கை தேர்ந்தெடுப்பதாக இருக்கட்டும் அதற்கான ஹோம் வொர்க்கை நிறைய பேர் செய்வதில்லை, அதனால் தோல்வி ஏற்படுகிறது. இது ஒரு வேலை சூதாட்டமாக இருந்தால் எப்படி எல்லா நாட்டிலும் அதை ஒத்துக்கொள்வார்கள். மேலும் இது 'செபி' என்று சொல்லக்கூடிய பங்கு, நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்கு படுத்தும் கட்டுபாட்டு அமைப்புக்குள் உள்ளது.
ஒரு சில பங்குகளை வாங்கும் போது நமக்கு மிக அதிகமான ரிஸ்க் உள்ளது. எனவே முதன் முறையாக பங்கு சந்தைக்குள் வருபவர்கள், மியூச்சுவல் பண்டு மூலம் வந்தால் ரிஸ்க் குறைகிறது.
ஏனெனில் அதை ஒரு அனுபவம் வாய்ந்த ஃபண்ட் மேனெஜர் 50 முதல் 60 பங்குகளை நிர்வகிப்பதால் ரிஸ்க் கணிசமாகக் குறைகிறது.
இதில் உத்தரவாத வருமானம் கிடையாது என்பதால், பலர் இதை ’பொன்சி’ திட்டத்தோடு ஒப்பிடுகிறார்கள், அது பெரிய தவறு. உதாரணமாக பங்கு சந்தை 34 ஆண்டுகளுக்கு முன்பாக சென்செக்ஸ் குறியீடு எண் 100 என தொடங்கி இன்று 20,400 புள்ளியில் உள்ளது. அதாவது கூட்டு வட்டியின் படி 16.93%!
ஒரு பாதுகாப்பான முதலீடு 8% முதல் 10% கொடுக்கும்பொழுது, கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் அந்த முதலீடு 15% வருமானம் கிடைக்கும் சாத்தியமும் இருக்கிறது. ஆனால் ஓரிரு வருடங்களில் பணம் இரட்டிப்பாகும் என்று யாராவது உறுதி தந்தால் நம்ப வேண்டாம்.
மற்றொரு முக்கியமான விஷயம் லிக்விடிட்டி என்பது, அதாவது எவ்வளவு விரைவில் அந்த முதலீட்டை பணமாக மாற்றுவது, அந்த வகையில் ரியல் எஸ்டேட் மிகவும் ரிஸ்க். மேற்சொன்ன மற்ற இன்வெஸ்ட்மென்ட்டில் நாம் வேண்டிய போது பணத்தை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.
நீண்ட கால அடிப்படையில் மியூச்சுவல் பண்டு மற்றும் பங்குச் சந்தை முதலீடு லாபகரமாக இருக்கும், ரிஸ்கும் குறைவு.
குறைந்த கால அடிப்படையில் வங்கி டெபாசிட், போஸ்ட் ஆபீஸ் டெபாசிட், தொடர் சேமிப்பு மற்றும் தங்கம் ரிஸ்க் குறைவு.
ஆனால் நீண்ட காலம் வைத்திருக்கும்பொழுது பணவீக்கத்தை கட்டுபடுத்தாமால் போகக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இதைப் புரிந்து கொண்டு, உங்களின் தேவையையும் கருத்தில் கொண்டு முதலீடு செய்தால் தேவைக்கு ஏற்ப நிறைய பணம் பண்ணலாம்.

Monday, 11 November 2013

Children's Education and Parents Investments? - My 7th Article in the Hindu Tamil Dated on 11th November 2013



குழந்தைகளின் கல்வியும் பெற்றொர்களின் முதலீடும் - பி.பத்மநாபன்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/01648/school4_1648851h.jpg

ஒருவருக்கு என்றும் அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வி தவிர மற்றசெல்வம் எல்லாம் உயர்ந்தது அல்ல என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சொன்னது. பலர் தம் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கும் தொகையில் பெரும் பகுதியைத் தனது குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவதே இதன் சிறப்பினை உணர்த்துகிறது.

இதை புரிந்து கொண்டதால்தானோ என்னவோ இன்று கல்வி நல்ல வியாபாரமாகிவிட்டது.படிக்காத பலர் இன்று பெரிய பெரிய கல்வி நிறுவனங்களை நடத்துகிறார்கள் அதில் பல படித்தவர்கள் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்! கல்வியின் பேரில் என்ன சொன்னாலும்பெற்றோர்கள் பணத்தை செலவிடுவதற்குத் தயங்குவது இல்லை.

ஒருவரின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் கல்வியாக நம்பப்படுவது மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற தொழில் சார்ந்த துறைகளே. முந்தைய காலங்களில் கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் அரசாங்கம் மற்றும் சேவை நிறுவனங்களால் நடத்தப்பட்டு வந்ததால், தரமான கல்வி, சேவை நோக்குடன் வழங்கப்பட்டு வந்தது. மேலும்குறைவான கல்வி நிறுவனங்கள் இருந்ததால் நிறைய திறமைசாலிகள் உருவானார்கள்.

இன்று கல்வி வியாபாரமாகி விட்டபடியால் நிறைய பொறியியல் பட்டதாரிகள்இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு நடைமுறை பயிற்சி இல்லாததால் கஷ்டப்படுகிறார்கள்.

பாசமுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு மிகச் சிறந்த கல்வியே அளிக்க விரும்புவீர்கள். உங்கள் குழந்தையின் கல்வியின் கனவை நினைவாக்க மற்றும் பாதுகாப்பான அவர்களின் எதிர்காலத்திற்கு பொருளாதாரத் திட்டமிடுதல் மிக மிகஅவசியமானது.

வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதற்கேற்ப, உங்கள் குழந்தையின் கல்விக்கான செலவுகளும் அதிகரிக்கிறது. முன்னதாகவே உங்கள் குழந்தையின் கல்விச் செலவுக்காக திட்டமிட அல்லது சேமிக்க பெரும்பாலோர் செய்யும் ஒரு தவறான காரியம் குழந்தை பிறந்தவுடன் ஒரு இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது தான். அவர்களை பொறுத்தவரை அந்தபணம் அவர்களது குழந்தைகளின் எதிர்கால கல்விக்கு உதவும் என்பது தான். அது கொஞ்சம்கூட பத்தாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

தாத்தா, பாட்டி பெரும்பாலும் தன்னுடைய பேரன் மற்றும் பேத்திக்கு எதாவது செய்யவேண்டும் என விரும்பி இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள் அல்லது வைப்பு நிதியில் பணம்போடுவார்கள்.

நீண்ட கால அடிப்படையில் அந்த பணம் தேவைப்படுவதால் அதை மியூச்சுவல் பண்டு திட்டங்களில் சேமிப்பது நல்லது அல்லது நல்ல ஷேர் வாங்கினால் அது பிற்காலத்தில் கை கொடுக்கும். விலை குறைவாக கிடைக்கும் தருணத்தில் ஒருபிளாட்டை வாங்கினாலும் நல்லது.

முன்பு 4 அல்லது 5 குழந்தைகள் உள்ள குடும்பத்தில் கூட பெற்றோர்கள் குழந்தைகளின் படிப்பிற்காக நேரம் ஒதுக்கி தனிப்பட்ட கவனம் செலுத்தினார்கள். ஆனால் இன்றைய பெற்றோர்கள் பொருள் ஈட்டுவதிலேயே கவனம் கொள்வதால் சரிவர குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்தமுடிவதில்லை மேலும் இன்று 2 குழந்தைகள் தான்அதிகப்படியாக உள்ளது. அதிக பொருள் ஈட்டுவதால் அதிக கல்விக் கட்டணம் கேட்கும் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்ற மனப்பான்மையும் உள்ளது. இதற்காக குழந்தைகள் ஒரு மணி நேரம் பிரயாணத்திலேயே செலவிட நேரிடுகிறது.

குழந்தைகளின் கல்விக்கு என சேமிக்கும்பொழுது இன்றைய கல்விக்கான செலவு என்ன அது 8% பணவீக்கத்தில் எவ்வளவு பிற்காலத்தில் என்று கண்டு கொண்டால் நமக்குஅதற்கான தொகை தெரிந்து விடும். உதாரணமாக குழந்தைகளின் கல்வி நீண்ட காலஅடிப்படையில் இருப்பதால் நாம் இன்சூரன்சை தவிர்ப்பது நல்லது. இன்று ஒரு குழந்தை பொறியியல் படிக்க குறைந்தது 6 லட்சம் 4 ஆண்டுகளில்தேவைப்படும். இதே படிப்பு இன்னும் 18 வருடத்தில் ஏறக்குறைய 24 லட்சம் தேவைப்படும்.மாதம் 3 ஆயிரம் சேமித்தால் 18 வருடங்களில் அதை அடைந்து விட முடியும். அதற்கு நாம் இன்றிலிருந்தே பிளான் செய்ய வேண்டும் அவ்வளவுதான்.

ஆனால் இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளி நாடுகளில் படிக்க வைக்கவேபெரிதும் விரும்புகிறார்கள். இன்று அதற்காக ஆகக் கூடிய செலவு குறைந்தது 25 லட்சம் 2வருடத்திற்கான தொகை. இந்த பணம் 8% பண வீக்கத்தில் இன்னும் 18 வருடங்களில் 1கோடி ஆகும்!

குழந்தை பிறந்தவுடன் 9 ஆயிரம் மாதா மாதம் சேமிக்க தொடங்கினால் அவர்கள் 18வருடத்தில் 15% கூட்டு வட்டியில் ஒரு கோடியை எளிதாக அடைந்து விடலாம். நீங்கள்வெளிநாட்டில் படிக்க வைக்க விரும்பினால் மட்டுமே. உள்ளுரில் படிப்பதற்கு 40 லட்சம் மட்டுமே தேவைப்படும் அதற்கு மாதம் 4 ஆயிரம் சேமித்தால் போதுமானது.

இன்று பெரும்பாலோர் ஓரிடத்தில் வேலை செய்வதால் ஒரே சமயத்தில் முதலீடு செய்யமுடியாது ஆனால் எல்லோராலும் மாதா மாதம் ஒரு தொகையை சேமிக்கமுடியும். அந்தவகையில் மியூச்சுவல் பண்டு பயனுள்ளதாக இருக்கிறது. SIP முறையில் ஒருவரால் எளிதாக சேமிக்க முடிகிறது மேலும் நம்முடைய சம்பள உயர்விற்கேற்ப வருட வருடம் SIPதொகையை அதிகப்படுத்திக் கொள்ளவும் முடியும்.


RULE 72

ஒரு முதலீடு இரண்டு மடங்கு ஆகவேண்டும் என்றால் நமக்கு கிடைக்கும் வட்டியை 72ல் வகுத்தால் கிடைக்க கூடிய எண் எத்தனை ஆண்டு என்பதை குறிக்கும் அதே போல வருடத்தை 72ல் வகுத்தால் கிடைக்க கூடியது வட்டி ஆகும்.

உதாரணமாக ஒருவருக்கு 8% வட்டி கிடைத்தால் அவருடைய பணம் 9 ஆண்டுகளில்இரட்டிப்பாகும். 72/8=9 வருடம். அதே போல ஒருவருக்கு 6 வருடத்தில் பணம் இரட்டிப்பாகவேண்டும் என்றால் அவருக்கு 12% வட்டி கிடைக்க வேண்டும். அதாவது 72/6=12% வட்டி.

நமது பணவீக்கம் 8% என்று எடுத்துக்கொண்டால் ஒருவருக்கு குழந்தை பிறந்ததில் இருந்து18 வருடத்தில் என்றைய கல்வியின் மதிப்பு 4 மடங்கு ஆகி விடும்.

கல்விக்கான முதலீட்டை தேர்ந்தேடுக்கும்பொழுது அந்த முதலீடு நம்முடைய இலக்கை அடைய உதவுமா, அதில் என்ன ரிஸ்க், குறைந்த கால முதலீடா அல்லது நீண்ட கால முதலீடா முதலியவற்றை பற்றி அறிந்து செயல் பட வேண்டும். அதை விடுத்து அந்த முகவர் சொன்னார் இவ்வளவு கிடைக்கும் அவ்வளவு கிடைக்கும் என்று செய்தால் நாம் நம்முடைய குறிக்கோளை அடைய முடியாது.
பி.பத்மநாபன் - padhu73@gmail.com