Pages

Saturday, 19 April 2014

My Article in Today's Issue (27th April 2014) Cover Storey of Naanayam Vikatan About How To Make Use of VRS Money!!!

  • Bookmark
  • Print
வி.ஆர்.எஸ் பணம்... எப்படி முதலீடு செய்யலாம்?
 
பி.பத்மநாபன், இயக்குநர், ஃபார்ச்சூன் பிளானர்
இன்றைய தேதியில் பலரும் பணிக் காலத்துக்கு முன்பே பணிஓய்வு பெற விரும்புகிறார்கள். கையில் மொத்தமாக, கணிசமானதொரு தொகை கிடைப்பது இப்படி செய்ய ஒரு முக்கிய காரணம்.  நிறுவனங்களும் அவ்வப்போது மாறும்  பொருளாதாரச் சூழலுக்கேற்ப இதை செய்ய நினைக்கின்றன. இதற்காகத்தான் சில நிறுவனங்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தை (வி.ஆர்.எஸ்) நடைமுறைப்படுத்தி வருகின்றன.
வி.ஆர்.எஸ் மூலம் கிடைக்கும் பணத்தைப் பலரும் சரியான விதத்தில் முதலீடு செய்யாமல், ஏதோ ஒரு வழியில் பணத்தைச் செலவழித்துவிட்டு, பிற்பாடு வேலையும் இல்லாமல் கையில் காசும் இல்லாமல் தவிக்கின்றனர். வாழ்க்கையில் கடைசி வாய்ப்பாகக் கிடைக்கும் இந்தப் பெரும்தொகையைச் சரியான வகையில் முதலீடு செய்வது மிக முக்கியம்.
வி.ஆர்.எஸ் பணத்தை எப்படி முதலீடு செய்யவேண்டும் என்பதைத் திட்டமிடும்முன் வி.ஆர்.எஸ் திட்டம் குறித்த சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.
வி.ஆர்.எஸ் திட்டம் கொண்டு வந்ததற்கு முக்கியக் காரணம், தொழிலாளர் சட்ட விதிகளின்படி, ஒரு நிறுவனம் யாரையும் நினைத்தவுடன் வேலையில் இருந்து வெளியே அனுப்பிவிட முடியாது. அவ்வாறு அனுப்பினால், அவருடைய எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.  எனவே, ஒரு நிறுவனத்தில் ஆட்களைக் குறைக்கவும், சரியாக வேலை செய்யாதவர்களை வேலையிலிருந்து நீக்கவும் இந்தத் திட்டம்  கொண்டுவரப்பட்டது.  இந்தத் திட்டத்தில் ஒருவர் தனது சொந்த விருப்பத்தின்பேரில் தானாக முன்புவந்து விருப்ப ஓய்வு பெறலாம் அல்லது நிறுவனமே பார்த்து சிலரை இந்தத் திட்டத்தின் மூலம் வெளியே அனுப்பலாம். இதற்குக் குறைந்தது 10 வருட சர்வீஸ் அல்லது 40 வயதாகி இருக்க வேண்டும்.
இப்படி வி.ஆர்.எஸ் வாங்கி வெளியே செல்கிறவர்கள் மீண்டும் அந்த நிறுவனத்திலோ அல்லது அந்த நிறுவனம் நிர்வகிக்கும் மற்ற அலுவலகங்களிலோ வேலைக்குச் சேர முடியாது. வி.ஆர்.எஸ் திட்டத்தில் ஓய்வு பெறுபவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் பணத்தை சரியாக முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கையை நடத்துவார்கள். இன்னும் சிலர், இந்தப் பணத்தை வைத்து சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்க முயற்சி செய்வார்கள்.
இந்தியாவில் ஒருவருடைய சராசரி ஆயுட்காலம் கிட்டத்தட்ட 70 வருடம். பெரிய நகரங்களில் வசிப்பவர்கள், மருத்துவத் துறையின் வளர்ச்சியினால் 80 வயது வரை வாழ்கிறார்கள். இது ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டே வருகிறது. உதாரணமாக, ஒருவர் 50 வயதில் விருப்ப ஓய்வு பெறுகிறார் எனில், இன்னும் 30 ஆண்டு காலத்தை ஓய்வு ஊதியத்திலோ அல்லது எங்காவது வேலை பார்த்தோ  ஓட்டவேண்டும். வி.ஆர்.எஸ் மூலம் கிடைத்த பணத்தை முதலீடு செய்து ஒவ்வொரு மாதமும் வட்டியை எடுப்பதால், அசல் தொகை உயர வாய்ப்புக் கிடையாது. அதேநேரம், பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதால், சில ஆண்டுகளுக்குப் பிறகு அசலைக்கூட எடுத்துச் செலவு செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட வாய்ப்பு அதிகம்.
ஒருவருக்கு 50 வயதில் விருப்ப ஓய்வின்போது ரூ.25 லட்சம்  கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். இவரே 55 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் கிடைக்கும் தொகை ரூ. 15 - ரூ.22.5 லட்சம் வரை கிடைக்கும். இந்த ரூ.25 லட்சத்துக்கு அடிப்படை ஆண்டு வருமான வரம்புக்கு ஏற்ப வரி கட்ட வேண்டும்.
அரசு பணியில் விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு பென்ஷன் உண்டு. அரசு வேலையில் பலர் ஆர்வம்காட்ட முக்கியக் காரணமே பென்ஷன்தான். ஒருவருக்குக் கிடைக்கும் பென்ஷன் / கிராஜுவிட்டி மற்றும் அவரது பிஎஃப் போன்றவற்றை வைத்து சுமார் ஆண்டு காலத்தை பெரிய பிரச்னை எதுவும் இல்லாமல் ஓட்ட முடியும்.
பென்ஷன் வசதி உள்ளவர்கள் தனக்குக் கிடைக்கும் வி.ஆர்.எஸ் தொகையில் 60% பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலும் (எதிர்பார்க்கும் வருமானம் ஆண்டுக்கு 12%) மீதமுள்ள 40% தொகையை வங்கி வைப்பு நிதி திட்டத்திலும் போட்டு வைக்க வேண்டும். பேலன்ஸ்டு ஃபண்ட் தொகையிலிருந்து ஒவ்வொரு வருடமும் 10 சதவிகித பணத்தை வெளியே எடுக்க வேண்டும்.
ஒருவர் விருப்ப ஓய்வுக்குப்பின் எந்த வேலைக்கும் போகும் மனநிலையில் இல்லையெனில், அந்தப் பணத்தை வைத்துதான் அடுத்துவரும் 25-30 ஆண்டு வரையிலான வாழ்க்கையை ஓட்ட வேண்டும்.
ஆண்டுக்கு ஆண்டு செலவு அதிகரித்துவருவதால், சில ஆண்டு களுக்குப்பின் ஒருவருடைய அசல் பணத்தை கைவைக்கும் நிலை கண்டிப்பாக வரும். இதைத் தவிர்ப்பதற்கு, அவர் 60 சதவிகித பணத்தை பேலன்ஸ்டு ஃபண்டுகளில் சேமித்து, அதன்மூலம் 12 சதவிகித வருமானம் கிடைத்தால், அசல் தொகை அதிகம் குறையாமல் பாதுகாக்க முடியும்.
வி.ஆர்.எஸ் மூலம் கிடைக்கும் பணத்தை எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதை முன்பக்கம் கொடுக்கப்பட்டுள்ள  அட்டவணையில் விளக்கிச் சொல்லி இருக்கிறேன். முதலில், அதைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்.
அந்த அட்டவணையில் தந்துள்ளபடி வயது அதிகரிக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக ரிஸ்கை குறைத்து கொண்டே வந்தால்தான், அவர்களால் பணவீக்கத்தைக் கட்டுபடுத்த முடியும். முதலில், 60%, அதன்பிறகு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை 10% குறைந்துகொண்டே வரலாம். இது ஓர் உதாரணத்துக்காகச் சொல்லப்பட்டதுதான். அவரவர் ரிஸ்கை பொறுத்து இதை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
சிலர் விருப்ப ஓய்வு பெற்றவுடன் சுயமாக ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என நினைப்பார்கள். சிலர் தாங்கள் வேலை பார்த்த இடத்தில் கற்றுகொண்டதைவைத்து ஏதாவது செய்யவேண்டும் என நினைக்கலாம். அப்படி செய்வதற்குமுன் அதைப் பற்றிய முன்னனுபவம் கட்டாயம் வேண்டும். பல தொழில்கள் பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றும். ஆனால், நடைமுறை அப்படியே தலைகீழாக இருக்கும். மேலும், குடும்பத்தை வழி நடத்துவதற்குத் தேவையான பணத்துக்கு ஏற்பாடு செய்தபின்பே புதிய தொழிலைத் தொடங்குவது பற்றி சிந்திக்க வேண்டும்.

இன்றைக்கு ஓய்வுபெறுபவர்களோ அல்லது விருப்ப ஓய்வு  பெறுகிறவர்களோ பலரும் சேர்ந்து, விவசாய நிலத்தை வாங்கிப்போட்டு அதைச் சில ஆண்டுகள் கழித்து, பிளாட் போட்டு விற்று லாபம் சம்பாதிக்கலாம் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் வரக் காரணம், கடந்த பத்து வருடங்களில் ரியல் எஸ்டேட் தந்த லாபம்தான்.  ரியல் எஸ்டேட்டில் ஊக வணிகம் என்பது ரிஸ்க் நிறைந்தது. இதனால் நம் பணத்தை இழப்பதற்கான வாய்ப்பே அதிகம். எனவே, ஆவணங்கள் தொடங்கி அனைத்து விஷயத்திலும் உஷாராக இருப்பது அவசியம்.
ஆனால், வீடு கட்டி அதை வாடகைக்கு விடுவதன் மூலம் வாழ்க்கை நடத்தத் தேவையான குறைந்தபட்ச வருமானத்தை நிச்சயம் பெற முடியும். புறநகர் பகுதிகளில் சுமார் 1,200 சதுர மனை 8-10 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கிறது. இதில் 10 லட்சம் ரூபாய் செலவு செய்து மொத்தம் 20 லட்சத்துக்குள் வீட்டைக் கட்டி முடித்துவிடலாம். இன்று அதன்மூலம் மாதம் ரூ. 8,000 - 10,000 வரை வாடகை கிடைக்க வாய்ப்புள்ளது. நாளடைவில் வீட்டின் விலை உயரும். வீட்டு வாடகையை இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஏற்றலாம். ஓரளவுக்கு வசதியும் கொஞ்சம் ரிஸ்க்கும் எடுக்க விரும்புபவர்கள், இவ்வளவுநாள் வீடு வாங்கவில்லையே என்ற ஏக்கமுடையவர்கள் இதை முயற்சிக்கலாம்.
இன்று நம்மில் பலர், நமக்குப் பிடிக்காத அல்லது நாம் அதிகம் விரும்பாத ஒரு வேலையைத்தான் செய்கிறோம். ஆனால்,  நாமாக விருப்ப ஓய்வு மேற்கொள்ளும்போது அல்லது நிறுவனம் ஆட்குறைப்புக்காக நம்மை நீக்கும்போதோ நமக்குப் பிடித்த நாம் மனதார நேசித்த ஒரு தொழிலை மேற்கொள்வது நல்லது. இதை ஆங்கிலத்தில் 'செகண்ட் இன்னிங்ஸ்’ என்று சொல்வார்கள். பலருக்கு இந்த வாய்ப்பு அமைவதில்லை; அமைந்தவர்கள் இதைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.
விருப்ப ஓய்வுக்குப்பின் ஒருவர் ரிஸ்க்கான விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்க வைத்து மீதமுள்ள காலத்தை ஓட்ட முயற்சி செய்ய வேண்டும். ரிஸ்க்கான முதலீட்டை விட்டு விலகியே இருக்கவேண்டும். ஓய்வு காலம் என்பது பணத்தைப் பெருக்குவதற்கு உகந்த காலமல்ல என்பதை மனத்தில்கொண்டு செயல்படுவது நல்லது.
ஓய்வூதியத்தை வைத்து அடுத்த 5-7 ஆண்டுகளுக்கு ஒருவரால் சமாளிக்க முடியும் என்றால், அவர்கள் 50 - 75% வரை பேலன்ஸ்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம். மீதமுள்ள தொகையை சீனியர் சிட்டிசன் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 9.2% வட்டி வருமானம் கிடைக்கும். ஐந்தாண்டுகள் முதலீட்டை வெளியே எடுக்கவில்லை எனில், வருமான வரிப் பிரிவு 80சி பிரிவின் கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு வரிச் சலுகை பெற முடியும்.
வி.ஆர்.எஸ் மூலம் 50 - 75 லட்சம் ரூபாய் பெறுகிறவர்களுக்குப் பெரிதாக வேறு எந்தக் கமிட்மென்டும் இல்லாவிட்டால் கொஞ்சம் பணத்தை அவர்கள் விரும்பிய தொழிலில் முதலீடு செய்ய முடியும். இதன் மூலம் தங்களுக்குப் பிடித்த தொழிலை அனுபவித்துச் செய்ய முடியும்.
உதாரணமாக, ஒருவர் ஆங்கிலத்தில் நல்ல புலமை உள்ளவராக இருந்தால், டியூஷன் சொல்லிகொடுத்துப் பணம் சம்பாதிக்க முடியும். தான் கற்றதை மற்றவர்களுக்குச் சொல்லித் தருவதில் ஒருவருக்கு ஆத்மதிருப்தி ஏற்படலாம். இதனால் மற்றவர்களின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வருவதோடு, தங்களுக்கு ஒரு வருமானத்தையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
இத்தனை காலம் ஏதோ ஓர் அலுவலகத்தில் யாரோ ஒருவரின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் சொல்லும் வேலையை அரைமனதோடு செய்திருப்போம். வி.ஆர்.எஸ் பெற்றபிறகு நமக்கு நாமே முதலாளி என்பதால் நமக்குப் பிடித்த வேலையை விரும்பி செய்யலாம்.
இஷ்டப்பட்டத்தைச் செய்தால் இனி வாழ்க்கையில் என்றும் கஷ்டமில்லையே!
padmanaban@fortuneplanners.com

No comments:

Post a Comment