தெரிந்தது ஒன்று, செயல்படுவது மற்றொன்று?
நாம் எப்போதும் சொல்லக் கூடிய ஒன்று எனக்கு எல்லாம் தெரியும். நமக்கு எல்லாம் தெரிந்தால், நாம் ஏன் இன்று பல்வேறு நிலைகளில் கஷ்டப்படுகிறோம்? அப்படியானால், நமக்கு எல்லாம் தெரியும் என்பது என்னவோ உண்மை. ஆனால் தெரிந்த வற்றின்படி நடக்கிறோமா என்றால், இல்லை என்ற உணர்வே மிஞ்சுகிறது. இந்த இடைவெளிதான், ஒரு வெற்றியாளனுக்கும் மற்றவர் களுக்கும் உள்ள வேறுபாடு என்று சொன்னால் மிகையாகாது.
பண நிர்வாகம்
நான் சந்தித்த மற்றும் சந்திக்கிற எல்லா மனிதர்களிடமும் உள்ள ஒற்றுமை அவர்களிடம் போதிய பணம் இல்லை என்பதே. அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் எந்தப் பதவியில் இருந்தாலும் இதே நிலை. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு நான் வேலையில் சேர்ந்தபோது, அவர்கள் சொன்ன ஒரு வசனம் என்னிடம் போதிய பணம் இல்லை. இன்று அவர்கள் அன்று சம்பாதித்ததைவிட 15 முதல் 20 மடங்கு சம்பாதிக்கிறார்கள், பின் ஏன் இந்த பற்றாக்குறை? பெரும்பாலோருக்கு பணத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை என்பதே உண்மை.
இங்கிருந்து இன்னும் சில ஆண்டுகளில் சம்பளம் உயர்ந் தாலும் இதே வசனம்தான். இதற்கு மற்றொரு காரணம் நம்முடைய விருப்பங்களை நாம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதுதான். வாழ்வில் ஒன்று விருப்பம்; மற்றொன்று தேவை. தேவையை அளவிட முடியும், விருப்பத்திற்கு அளவில்லாததே முக்கிய காரணம்.
வீணாவது ஏன்?
இவ்வளவு சம்பாதிக்கிறீர்களே பின்பு ஏன் பற்றாக்குறை என்றால் அவர்களுடைய வழக்கமான பதில், எனக்கு எந்தவிதமான கெட்ட பழக்கமும் கிடையாது, மேலும் நான் அனாவசியமாக எந்தச் செலவும் செய்வதில்லை என்பதே. அப்படியென்றால் அவர் ஏதோ ஒன்றைக் கவனிக்கத் தவறுகிறார் அல்லது அவர் தேவை என செய்யும் செலவு தேவையற்றதாகவும் இருக்கலாம்.
அப்படி ஒருவர் தான் சம்பாதித்ததைப் பாதுகாக்கத் தெரியவில்லை என உணர்ந்து அதைச் சரி செய்ய வேண்டுமென்றால் ஒரு சிறந்த ஆலோசகரை அணுகலாம். இங்கு நீங்கள் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும் அதாவது உங்களுக்கு என்ன என்ன தேவை, மேலும் உங்களது தற்போதைய செலவு செய்யும் முறை ஆகியவற்றைக் கூறினால் உங்களுக்குக் கண்டிப்பாக நல்ல ஒரு தீர்வு கிடைக்கும்.
ஏன் பாதி நேரம் நமக்கு நல்ல முதலீடுகள் கிடைக்கவில்லை என்றால், அதை விற்பவர் தாம் நம்மைத் தேடி வந்து, நமக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ நம் தலையில் கட்டி விடுகிறார்கள். தன் தேவை அறிந்து ஆலோசகரை நாடிச் சென்ற எந்த முதலீட்டாளரும், தப்பான முதலீட்டில் மாட்டிக் கொள்ளவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
பணத்தை ஈட்டுவது என்பது எல்லோருக்கும் பொதுவாகத் தெரிந்த ஒன்று. ஆனால் ஈட்டிய அந்த பணத்தை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிவதில்லை,
பெற்றோர்களால் ஆலோசனை தர இயலாது
ஒருவர் 10,000 ரூபாய் சம்பாதிப்பதாக எடுத்துக் கொண்டால் அவரால் 11,000 சம்பாதித்ததற்கு ஈடாக பணத்தைச் செலவிட முடியும், அதற்கு அவர் பணத்தை உபயோகிக்கும் முறையை அறிந்து கொள்ள வேண்டும். பலர் செய்யும் மற்றொரு தவறு அவர்களுடைய பெற்றோர்களிடம் முதலீட்டை பற்றி அறிவுரை கேட்பது. எனக்கு பெரியோர் அனைவரிடத்திலும் மரியாதை அதிகமுள்ளது. ஆனால் பெற்றோர்களால், கீழ்க் கண்ட காரணங்களால் நல்ல ஆலோசனை தர முடியாது, தயவு செய்து சண்டைக்கு வர வேண்டாம்.
1. அன்று அவர்களுக்குக் கிடைத்த வட்டி விகிதம் அதிகம், பணவீக்கம் அதைவிடக் குறைவு. மேலும் இன்று உள்ளது போல நிறைய முதலீட்டு முறைகளும் கிடையாது, எனவே பாதுகாப்பான முதலீட்டை அதிகம் விரும்பினார்கள். குறிப்பாக அவர்களுடைய தேவைகள் மிக மிகக் குறைவு. 20 முதல் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஹோட்டலில் சாப்பிடுவது ஒரு கௌரவ குறைச்சல். அதனால் பெற்றோர்கள் ஊருக்குச் சென்றால் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கூறி தம் குழந்தைகளுக்கு உணவு தரச் சொல்வார்கள். பாக்கெட் மணி என்ற கலாசாரம் கிடையாது.
2. இன்று எல்லாமே தலைகீழ், ஹோட்டலுக்குச் செல்லவில்லை என்றால் நாம் இந்த உலகத்தில் வாழத் தகுதி இல்லாதவர் போல மற்றவர்கள் நினைப்பார்கள். மேலும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் உள்ளதால் பணத்தை வாரி இறைக்கிறார்கள். இரண்டு கால கட்டங்களும் வேறுபடுவதால் பாதுகாப்பான முதலீட்டில் நீண்ட கால இலக்குகளை அடைய முடியாது.
3. மேலும் சம்பளம் வாங்கியவுடன் பணத்தை பெற்றோரிடம் கொடுத்து ஏதாவது தேவை என்றால் அதை நியாயப்படுத்தினாலே பணம் கிடைக்கும் எனவே, பல தடவை யோசித்த பின்பே கேட்கும் நிலை. அதாவது சம்பாதிப்பது ஒருவர், அதை நிர்வகிப்பது இன்னொருவர் என்பதால் எல்லாம் ஒரு கட்டுக்குள் இருந்தது. இன்று நாம் யாருக்கும் எதுவும் சொல்லத் தேவை இல்லை. நம் கையில் பணம் இல்லாவிட்டால் கூட கிரெடிட் கார்டு உள்ளது அல்லது சுலப தவணை முறையில் இன்று எதையும் வாங்க முடியும். ஏற்கெனவே நமக்கு பணத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை மேலும் நாலா திசைகளிலும் செலவுகள் வந்தால் எப்படிச் சமாளிக்கமுடியும்.
சோம்பேறித்தனம்
இன்று உடற் பயிற்சி செய்வது நம் உடலுக்கு எவ்வளவு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும், நம்மில் எத்தனை பேர் செய்கிறோம்? நம்முடைய சோம்பேறித் தனத்தால் பல பிட்னஸ் மையங்கள் உருவாகிக் கொண்டே வருகின்றன. அதில் சேர்பவர்களில் 20% கூட தொடர்ந்து செல்வதில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். தெரிந்ததை செயல்படுத்துபவர்கள் மிகக்குறைவாக இருப்பதால் நாம் அவர்களை பற்றிய புத்தகங்களைப் படிக்கிறோம்.
சாராம்சம்: இந்த வேறுபாடு ஏன் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்று நான் சந்திக்கும் நபர்களைக் கேட்டபோது எனக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. பொதுவான விஷயங்களைப் பலர் மேம்போக்காக தெரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு எந்த விஷயம் தெரிந்தால் வேலை வாய்ப்பு கிடைக்குமோ அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். இன்று நிறைய தொழில்கள் புதிது புதிதாக தோன்றுவதால் நிறைய ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள் அதனால் அந்த தொழிலுக்கு யார் தேவைப்படுகிறார்களோ அவர்களை வேலைக்கு எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளதால், பொதுவான அறிவை பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.
நாம் தெரிந்து கொண்ட விஷயத்தில் 5 சத விகிதத்தைக் கடைப் பிடித்தால் கூட நம்மால் பெரிய அளவுக்குச் சாதிக்க முடியும். இந்த தமிழ் புத்தாண்டு முதல் நாம் கற்று கொள்கிற எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை 100% செயல்படுத்த முயற்சி செய்யவேண்டும். இந்த எண்ணம் நம்மில் வந்தால் நாம் வாழ்வில் வெற்றிபெறுவதோடு முதலீட்டிலும் வெற்றி பெறலாம். நம்மைப் பற்றி வரும் சந்ததியினர் படிக்கக்கூடும்.
padmanaban@fortureplanners.com
No comments:
Post a Comment