Pages

Monday, 28 April 2014

My 30th Article in the Tamil Hindu Dated 28th April 2014 about "Is it a Good Idea to Buy Gold on Akshya Thrithiyai Day"?

அட்சய திரிதியையில் தங்கம் வாங்கலாமா? பா. பத்மநாபன்


​​ஹிந்து மற்றும் ஜெயின் பிரிவினர்கள் வருடத்தில் உள்ள நான்கு புனித நாள்களில் ஒன்றாக அட்சய திரிதியைக் கருதுகிறார்கள். இந்த தினம் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த தினத்தைக் குறிக்கிறது.

மேலும் இந்த தினத்தில்தான் வேத வியாசரும், விநாயகரும் சேர்ந்து இதிகாசபுராணமான மகாபாரதத்தை எழுத ஆரம்பித்தனர் என்றும் சொல்லப்படுகிறது. “அட்சய” என்பதற்கு சமஸ்கிருத மொழியில் என்றும் குறைவில்லாத என்று ஒரு பொருள் இருக்கிறது. இந்த நாள் ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும். இந்த நாள் நாளடைவில் ஒருவர் புதிதாக தொழில் தொடங்குவது, வீடு ​வாங்குவது​, மொபைல் போன்​ ​வாங்குவது என்று எந்த ஒரு செயல் செய்யவும் மிகவும் உகந்த நாள் என்றும் சொல்லப்படுகிறது. அட்சய திரிதியை மே மாதம் 2-ம் தேதி, அதாவது வரும் வெள்ளிக்கிழமை இந்த ஆண்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு குந்துமணி தங்கம் அதாவது குறைந்த பட்சமாக அரை கிராம் தங்கம் வாங்கினால் கூட, இனி வரும் காலங்களில் நம்மால் நிறைய வாங்க முடியும் என்பது ஒரு நம்பிக்கை.

வியாபார உத்தி

சொல்லப்போனால் 2000-ம் ஆண்டின் ஆரம்பத்தில்தான் அட்சய திரிதியை பற்றி பரவலாக பேச்சு ஆரம்பித்தது. அதாவது கடந்த 10 முதல் 15 வருடங்களாகத்தான் அதி விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு முன்னர் யாரும் இதைப்பற்றி பேசியதில்லை. இது நகை வியாபாரிகளின் ஒரு வகையான வியாபார யுக்தி என்றே சொல்லலாம். நம் வீட்டு பெண்களுக்கும் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இது ஒரு நகை வாங்குவதற்குரிய சந்தர்ப்பமாகவே கருதுகிறார்கள்.

ரூ. 1,940-க்கு ஒரு கிராம் தங்கம்
கடந்த சில தினங்களாக வரும் ஒரு விளம்பரம் சென்னை நகரில் உள்ள எல்லோர் கண்ணையும் உறுத்துகிறது. நீங்கள் ரூபாய் 1,940-க்கு ஒரு கிராம் தங்கம் வாங்கிக் கொள்ளலாம். குறைந்தது 10 கிராம் அதாவது 20,000 ரூபாய் செலுத்த வேண்டும். பிறகு 10,000 ரூபாய் அத்துடன் சேர்த்தும் வாங்கலாம். அதாவது 20, 30, 40 ஆயிரம். ஆனால் அது 5 ஆண்டுகளுக்குப் பின்பே தரப்படும், நடுவில் எக்காரணம் கொண்டும் திருப்பித்தர இயலாது. தங்கம் வாங்குபவர்கள் எல்லோருடைய எண்ணமும் இன்று விற்கிற ஒரு கிராம் தங்கம் 2,800 ரூபாய், இன்னும் 5 வருடத்தில் குறைந்தது 5000 ஆகிவிடும் என்பதே. ஒரு பொருள் தற்போது விற்கும் விலையைவிட 30% டிஸ்கௌன்டில் தருகிறார்கள் ​என்றால், வரும் 5 வருடங்களில் தங்கம் விலை ஏறுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்பதை நாம் உணரவேண்டும். ஆங்கிலத்தில் கூறுவார்கள் THERE IS NO FREE LUNCH IN THE BUSINESS என்று.

10 கிராமுக்கு 14.4 கிராம்
மற்றொரு ஆஃபர் (OFFER), இன்று நாம் 10 கிராம் தங்கம் கொடுத்தால், 5 வருடம் கழித்து 14.4 கிராம் கொடுக்கிறார்கள். இன்று நிறைய பேர் தன்னிடத்தில் உள்ள தங்கத்தில் 20% மட்டுமே அன்றாட வாழ்வில் உபயோகிக்கிறார்கள், 80% தங்கத்தை லாக்கரில் வைக்கிறார்கள். அப்படி வைத்து லாக்கருக்கு பணம் கட்டுவதைவிட, இவர்களிடம் கொடுத்தால், 44% அதிக தங்கம், தங்கம் பாதுகாப்பாக உள்ளது, லாக்கர் செலவும் இல்லை?! சற்று சிந்திக்க வேண்டிய விஷயம்!

தங்கத்தை வைத்து அணிகலன் செய்யும்போது 13 முதல் 27% வரை சேதாரமும், குறைந்தது 2% செய்கூலியும் அந்த தங்கத் தின்மேல் விழுகிறது. நாம் சராசரியாக 20% அதிகம் பணம் செலுத்தினால்தான், நாம் வாங்கும் தங்கத்தை அணிந்து கொள்ளமுடியும். மேலும் அடிக்கடி விதவிதமான டிசைன் அறிமுகப்படுத்துவதால் பழைய டிசைன் நகைகளை வைத்து புதிதாக மாற்ற வேண்டும் என்ற கட்டயாம்.

அப்படி மாற்றும் போது உபயோகத்தில் கொஞ்சம் தங்கம் தேய்ந்து விடும். மீண்டும் 20% அன்றைய தங்கத்தின் மதிப்பைவிட கூடுதலாகக் கொடுத்தாலே நம்மால் புதியது வாங்க முடியும். ஒவ்வொரு முறை நகையின் டிசைன் மாற்றும் போதும் நாம் ஏறக்குறைய தங்கத்தின் அன்றைய விலை யை விட 20% அதிகமாகச் செலவிடவேண்டும் என்பதை மனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த விளம்பரத்தில் நாம் என்ன கவனிக்க வேண்டும் என்று சொல்கிறேன்! அது உங்களுக்கு தேவையா இல்லையா என்பதை நீங்கள் முடிவெடுக்கலாம்.

மிகவும் பாதுகாப்பான முதலீடான, 5 வருட வங்கி டெபாசிட் நமக்கு 8.5% வட்டி தருகிறது. அதற்கு வருமானவரி கிடையாது, அதில் முதலீடு செய்தால் வருமானவரி விலக்கு பிரிவு 80Cல் அதற்கான பயனைப் பெற முடியும். அதாவது 19,400 ரூபாய் முதலீடு செய்தால் 5 வருட முடிவில் 29,171 கிடைக்கிறது. இன்று விற்கிற ஒரு கிராம் தங்கமான 2800 ரூபாய் இன்னும் 5 வருடம் கழித்தும் 2,917க்கு கிடைக்கிறது. மேலும் அடுத்த 5 வருடத்தில் கண்டிப்பாக தங்கம் விலை உயராமல் இருக்காது என்று நினைத்தால், வேறு என்ன நடக்க வாய்ப்பிருக்கிறது என்று பார்க்கலாம்.

உதாரணமாக, இன்னும் 5 வருடத்தில் தங்கம் குறைந்தது 4,000 முதல் 5,000 வரை கண்டிப்பாகச் செல்லும் என்று நீங்கள் கருதினால், நீங்கள் செய்யக் கூடிய முதலீடு 15.57%, முதல் 20.85% வரை கூட்டு வட்டி ஈட்ட வேண்டும். அது சாத்தியமா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கு மேலும் ஒரு தகவல் தருகிறேன் அது உங்களுக்குப்பயனுள்ளதாக இருக்கும்.

இந்தியாவில் மிகப் பெரிய தங்க கடன் நிறுவனங்களான முத்தூட் மற்றும் மணப்புரம் NCD என்று சொல்லக் கூடிய முழுவதும் மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் (நான் கன்வர்டிபிள் டிபெஞ்சர்) இதற்கு பாதுகாப்பு தருகிறார்கள். அவர்கள் கொடுக்கூடிய வட்டி12%, 5 வருடத்திற்கு. அது அந்த அளவிற்கு பாதுகாப்பு இல்லை என்று பலர் அதை வாங்குவதில்லை. ஆனால் மேலே சொன்ன திட்டத்தில், இவர்கள் நாம் கொடுத்ததற்கு ஒரு ரசீது மட்டும் தருகிறார்கள், பாதுகாப்பிற்கென்று எதுவும் கிடையாது. அவர்களிடம் கேட்டால் ரிஸ்க் எங்களுக்குத்தான் உங்களுக்கு எந்தவிதமான ரிஸ்கும் கிடையாது என்ற பதில் வருகிறது!

சாராம்சம்: அட்சய திரிதியை நாள் மேலே சொல்லப்பட்ட காரணங்களைப் பார்க்கும்போது ஒரு நல்ல நாள் என்று புரிகிறது. அத்தகைய நாளில் எந்த ஒரு செயலை செய்வதும் உகந்தது. இதற்கும் தங்கம் வாங்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதே சமயம் நம்மிடம் பணம் இருந்தால் வாங்குவது தப்பில்லை. நாம் புதிய ஆட்சியை எதிர்நோக்கி உள்ளோம், நாம் எல்லோரும் விரும்பும் ஆட்சி வருகிறபோது நம்முடைய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக உயர்ந்து காணப்படவே வாய்ப்புக்கள் அதிகம். அவ்வாறு நடந்தால் தங்கம் விலை மேலே அதிகம் செல்வதற்கான காரணிகள் குறைவு. எந்த ஒரு செயலையும் உணர்வு பூர்வமாக அணுகாமல் அறிவு பூர்வமாக நெருங்கினால் நம்மால் ஒரு சிறந்த வாழ்வை மேற்கொள்ள முடியும் என்று சொன்னால் மிகையாகாது.

Monday, 21 April 2014

My 29th Article In Today's The Hindu Tamil dated 21st April, 2014 about "Knowing is One Thing and Doing is Different Thing"

தெரிந்தது ஒன்று, செயல்படுவது மற்றொன்று? பா. பத்மநாபன்


நாம் எப்போதும் சொல்லக் கூடிய ஒன்று எனக்கு எல்லாம் தெரியும். நமக்கு எல்லாம் தெரிந்தால், நாம் ஏன் இன்று பல்வேறு நிலைகளில் கஷ்டப்படுகிறோம்? அப்படியானால், நமக்கு எல்லாம் தெரியும் என்பது என்னவோ உண்மை. ஆனால் தெரிந்த வற்றின்படி நடக்கிறோமா என்றால், இல்லை என்ற உணர்வே மிஞ்சுகிறது. இந்த இடைவெளிதான், ஒரு வெற்றியாளனுக்கும் மற்றவர் களுக்கும் உள்ள வேறுபாடு என்று சொன்னால் மிகையாகாது.

பண நிர்வாகம்
நான் சந்தித்த மற்றும் சந்திக்கிற எல்லா மனிதர்களிடமும் உள்ள ஒற்றுமை அவர்களிடம் போதிய பணம் இல்லை என்பதே. அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் எந்தப் பதவியில் இருந்தாலும் இதே நிலை. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு நான் வேலையில் சேர்ந்தபோது, அவர்கள் சொன்ன ஒரு வசனம் என்னிடம் போதிய பணம் இல்லை. இன்று அவர்கள் அன்று சம்பாதித்ததைவிட 15 முதல் 20 மடங்கு சம்பாதிக்கிறார்கள், பின் ஏன் இந்த பற்றாக்குறை? பெரும்பாலோருக்கு பணத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை என்பதே உண்மை.

இங்கிருந்து இன்னும் சில ஆண்டுகளில் சம்பளம் உயர்ந் தாலும் இதே வசனம்தான். இதற்கு மற்றொரு காரணம் நம்முடைய விருப்பங்களை நாம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதுதான். வாழ்வில் ஒன்று விருப்பம்; மற்றொன்று தேவை. தேவையை அளவிட முடியும், விருப்பத்திற்கு அளவில்லாததே முக்கிய காரணம்.

வீணாவது ஏன்?
இவ்வளவு சம்பாதிக்கிறீர்களே பின்பு ஏன் பற்றாக்குறை என்றால் அவர்களுடைய வழக்கமான பதில், எனக்கு எந்தவிதமான கெட்ட பழக்கமும் கிடையாது, மேலும் நான் அனாவசியமாக எந்தச் செலவும் செய்வதில்லை என்பதே. அப்படியென்றால் அவர் ஏதோ ஒன்றைக் கவனிக்கத் தவறுகிறார் அல்லது அவர் தேவை என செய்யும் செலவு தேவையற்றதாகவும் இருக்கலாம்.

அப்படி ஒருவர் தான் சம்பாதித்ததைப் பாதுகாக்கத் தெரியவில்லை என உணர்ந்து அதைச் சரி செய்ய வேண்டுமென்றால் ஒரு சிறந்த ஆலோசகரை அணுகலாம். இங்கு நீங்கள் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும் அதாவது உங்களுக்கு என்ன என்ன தேவை, மேலும் உங்களது தற்போதைய செலவு செய்யும் முறை ஆகியவற்றைக் கூறினால் உங்களுக்குக் கண்டிப்பாக நல்ல ஒரு தீர்வு கிடைக்கும்.

ஏன் பாதி நேரம் நமக்கு நல்ல முதலீடுகள் கிடைக்கவில்லை என்றால், அதை விற்பவர் தாம் நம்மைத் தேடி வந்து, நமக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ நம் தலையில் கட்டி விடுகிறார்கள். தன் தேவை அறிந்து ஆலோசகரை நாடிச் சென்ற எந்த முதலீட்டாளரும், தப்பான முதலீட்டில் மாட்டிக் கொள்ளவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

பணத்தை ஈட்டுவது என்பது எல்லோருக்கும் பொதுவாகத் தெரிந்த ஒன்று. ஆனால் ஈட்டிய அந்த பணத்தை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிவதில்லை,

பெற்றோர்களால் ஆலோசனை தர இயலாது
ஒருவர் 10,000 ரூபாய் சம்பாதிப்பதாக எடுத்துக் கொண்டால் அவரால் 11,000 சம்பாதித்ததற்கு ஈடாக பணத்தைச் செலவிட முடியும், அதற்கு அவர் பணத்தை உபயோகிக்கும் முறையை அறிந்து கொள்ள வேண்டும். பலர் செய்யும் மற்றொரு தவறு அவர்களுடைய பெற்றோர்களிடம் முதலீட்டை பற்றி அறிவுரை கேட்பது. எனக்கு பெரியோர் அனைவரிடத்திலும் மரியாதை அதிகமுள்ளது. ஆனால் பெற்றோர்களால், கீழ்க் கண்ட காரணங்களால் நல்ல ஆலோசனை தர முடியாது, தயவு செய்து சண்டைக்கு வர வேண்டாம்.

1. அன்று அவர்களுக்குக் கிடைத்த வட்டி விகிதம் அதிகம், பணவீக்கம் அதைவிடக் குறைவு. மேலும் இன்று உள்ளது போல நிறைய முதலீட்டு முறைகளும் கிடையாது, எனவே பாதுகாப்பான முதலீட்டை அதிகம் விரும்பினார்கள். குறிப்பாக அவர்களுடைய தேவைகள் மிக மிகக் குறைவு. 20 முதல் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஹோட்டலில் சாப்பிடுவது ஒரு கௌரவ குறைச்சல். அதனால் பெற்றோர்கள் ஊருக்குச் சென்றால் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கூறி தம் குழந்தைகளுக்கு உணவு தரச் சொல்வார்கள். பாக்கெட் மணி என்ற கலாசாரம் கிடையாது.
2. இன்று எல்லாமே தலைகீழ், ஹோட்டலுக்குச் செல்லவில்லை என்றால் நாம் இந்த உலகத்தில் வாழத் தகுதி இல்லாதவர் போல மற்றவர்கள் நினைப்பார்கள். மேலும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் உள்ளதால் பணத்தை வாரி இறைக்கிறார்கள். இரண்டு கால கட்டங்களும் வேறுபடுவதால் பாதுகாப்பான முதலீட்டில் நீண்ட கால இலக்குகளை அடைய முடியாது.
3. மேலும் சம்பளம் வாங்கியவுடன் பணத்தை பெற்றோரிடம் கொடுத்து ஏதாவது தேவை என்றால் அதை நியாயப்படுத்தினாலே பணம் கிடைக்கும் எனவே, பல தடவை யோசித்த பின்பே கேட்கும் நிலை. அதாவது சம்பாதிப்பது ஒருவர், அதை நிர்வகிப்பது இன்னொருவர் என்பதால் எல்லாம் ஒரு கட்டுக்குள் இருந்தது. இன்று நாம் யாருக்கும் எதுவும் சொல்லத் தேவை இல்லை. நம் கையில் பணம் இல்லாவிட்டால் கூட கிரெடிட் கார்டு உள்ளது அல்லது சுலப தவணை முறையில் இன்று எதையும் வாங்க முடியும். ஏற்கெனவே நமக்கு பணத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை மேலும் நாலா திசைகளிலும் செலவுகள் வந்தால் எப்படிச் சமாளிக்கமுடியும்.

சோம்பேறித்தனம்
இன்று உடற் பயிற்சி செய்வது நம் உடலுக்கு எவ்வளவு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும், நம்மில் எத்தனை பேர் செய்கிறோம்? நம்முடைய சோம்பேறித் தனத்தால் பல பிட்னஸ் மையங்கள் உருவாகிக் கொண்டே வருகின்றன. அதில் சேர்பவர்களில் 20% கூட தொடர்ந்து செல்வதில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். தெரிந்ததை செயல்படுத்துபவர்கள் மிகக்குறைவாக இருப்பதால் நாம் அவர்களை பற்றிய புத்தகங்களைப் படிக்கிறோம்.

சாராம்சம்: இந்த வேறுபாடு ஏன் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்று நான் சந்திக்கும் நபர்களைக் கேட்டபோது எனக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. பொதுவான விஷயங்களைப் பலர் மேம்போக்காக தெரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு எந்த விஷயம் தெரிந்தால் வேலை வாய்ப்பு கிடைக்குமோ அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். இன்று நிறைய தொழில்கள் புதிது புதிதாக தோன்றுவதால் நிறைய ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள் அதனால் அந்த தொழிலுக்கு யார் தேவைப்படுகிறார்களோ அவர்களை வேலைக்கு எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளதால், பொதுவான அறிவை பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.

நாம் தெரிந்து கொண்ட விஷயத்தில் 5 சத விகிதத்தைக் கடைப் பிடித்தால் கூட நம்மால் பெரிய அளவுக்குச் சாதிக்க முடியும். இந்த தமிழ் புத்தாண்டு முதல் நாம் கற்று கொள்கிற எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை 100% செயல்படுத்த முயற்சி செய்யவேண்டும். இந்த எண்ணம் நம்மில் வந்தால் நாம் வாழ்வில் வெற்றிபெறுவதோடு முதலீட்டிலும் வெற்றி பெறலாம். நம்மைப் பற்றி வரும் சந்ததியினர் படிக்கக்கூடும்.
padmanaban@fortureplanners.com

Saturday, 19 April 2014

My Article in Today's Issue (27th April 2014) Cover Storey of Naanayam Vikatan About How To Make Use of VRS Money!!!

  • Bookmark
  • Print
வி.ஆர்.எஸ் பணம்... எப்படி முதலீடு செய்யலாம்?
 
பி.பத்மநாபன், இயக்குநர், ஃபார்ச்சூன் பிளானர்
இன்றைய தேதியில் பலரும் பணிக் காலத்துக்கு முன்பே பணிஓய்வு பெற விரும்புகிறார்கள். கையில் மொத்தமாக, கணிசமானதொரு தொகை கிடைப்பது இப்படி செய்ய ஒரு முக்கிய காரணம்.  நிறுவனங்களும் அவ்வப்போது மாறும்  பொருளாதாரச் சூழலுக்கேற்ப இதை செய்ய நினைக்கின்றன. இதற்காகத்தான் சில நிறுவனங்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தை (வி.ஆர்.எஸ்) நடைமுறைப்படுத்தி வருகின்றன.
வி.ஆர்.எஸ் மூலம் கிடைக்கும் பணத்தைப் பலரும் சரியான விதத்தில் முதலீடு செய்யாமல், ஏதோ ஒரு வழியில் பணத்தைச் செலவழித்துவிட்டு, பிற்பாடு வேலையும் இல்லாமல் கையில் காசும் இல்லாமல் தவிக்கின்றனர். வாழ்க்கையில் கடைசி வாய்ப்பாகக் கிடைக்கும் இந்தப் பெரும்தொகையைச் சரியான வகையில் முதலீடு செய்வது மிக முக்கியம்.
வி.ஆர்.எஸ் பணத்தை எப்படி முதலீடு செய்யவேண்டும் என்பதைத் திட்டமிடும்முன் வி.ஆர்.எஸ் திட்டம் குறித்த சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.
வி.ஆர்.எஸ் திட்டம் கொண்டு வந்ததற்கு முக்கியக் காரணம், தொழிலாளர் சட்ட விதிகளின்படி, ஒரு நிறுவனம் யாரையும் நினைத்தவுடன் வேலையில் இருந்து வெளியே அனுப்பிவிட முடியாது. அவ்வாறு அனுப்பினால், அவருடைய எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.  எனவே, ஒரு நிறுவனத்தில் ஆட்களைக் குறைக்கவும், சரியாக வேலை செய்யாதவர்களை வேலையிலிருந்து நீக்கவும் இந்தத் திட்டம்  கொண்டுவரப்பட்டது.  இந்தத் திட்டத்தில் ஒருவர் தனது சொந்த விருப்பத்தின்பேரில் தானாக முன்புவந்து விருப்ப ஓய்வு பெறலாம் அல்லது நிறுவனமே பார்த்து சிலரை இந்தத் திட்டத்தின் மூலம் வெளியே அனுப்பலாம். இதற்குக் குறைந்தது 10 வருட சர்வீஸ் அல்லது 40 வயதாகி இருக்க வேண்டும்.
இப்படி வி.ஆர்.எஸ் வாங்கி வெளியே செல்கிறவர்கள் மீண்டும் அந்த நிறுவனத்திலோ அல்லது அந்த நிறுவனம் நிர்வகிக்கும் மற்ற அலுவலகங்களிலோ வேலைக்குச் சேர முடியாது. வி.ஆர்.எஸ் திட்டத்தில் ஓய்வு பெறுபவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் பணத்தை சரியாக முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கையை நடத்துவார்கள். இன்னும் சிலர், இந்தப் பணத்தை வைத்து சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்க முயற்சி செய்வார்கள்.
இந்தியாவில் ஒருவருடைய சராசரி ஆயுட்காலம் கிட்டத்தட்ட 70 வருடம். பெரிய நகரங்களில் வசிப்பவர்கள், மருத்துவத் துறையின் வளர்ச்சியினால் 80 வயது வரை வாழ்கிறார்கள். இது ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டே வருகிறது. உதாரணமாக, ஒருவர் 50 வயதில் விருப்ப ஓய்வு பெறுகிறார் எனில், இன்னும் 30 ஆண்டு காலத்தை ஓய்வு ஊதியத்திலோ அல்லது எங்காவது வேலை பார்த்தோ  ஓட்டவேண்டும். வி.ஆர்.எஸ் மூலம் கிடைத்த பணத்தை முதலீடு செய்து ஒவ்வொரு மாதமும் வட்டியை எடுப்பதால், அசல் தொகை உயர வாய்ப்புக் கிடையாது. அதேநேரம், பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதால், சில ஆண்டுகளுக்குப் பிறகு அசலைக்கூட எடுத்துச் செலவு செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட வாய்ப்பு அதிகம்.
ஒருவருக்கு 50 வயதில் விருப்ப ஓய்வின்போது ரூ.25 லட்சம்  கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். இவரே 55 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் கிடைக்கும் தொகை ரூ. 15 - ரூ.22.5 லட்சம் வரை கிடைக்கும். இந்த ரூ.25 லட்சத்துக்கு அடிப்படை ஆண்டு வருமான வரம்புக்கு ஏற்ப வரி கட்ட வேண்டும்.
அரசு பணியில் விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு பென்ஷன் உண்டு. அரசு வேலையில் பலர் ஆர்வம்காட்ட முக்கியக் காரணமே பென்ஷன்தான். ஒருவருக்குக் கிடைக்கும் பென்ஷன் / கிராஜுவிட்டி மற்றும் அவரது பிஎஃப் போன்றவற்றை வைத்து சுமார் ஆண்டு காலத்தை பெரிய பிரச்னை எதுவும் இல்லாமல் ஓட்ட முடியும்.
பென்ஷன் வசதி உள்ளவர்கள் தனக்குக் கிடைக்கும் வி.ஆர்.எஸ் தொகையில் 60% பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலும் (எதிர்பார்க்கும் வருமானம் ஆண்டுக்கு 12%) மீதமுள்ள 40% தொகையை வங்கி வைப்பு நிதி திட்டத்திலும் போட்டு வைக்க வேண்டும். பேலன்ஸ்டு ஃபண்ட் தொகையிலிருந்து ஒவ்வொரு வருடமும் 10 சதவிகித பணத்தை வெளியே எடுக்க வேண்டும்.
ஒருவர் விருப்ப ஓய்வுக்குப்பின் எந்த வேலைக்கும் போகும் மனநிலையில் இல்லையெனில், அந்தப் பணத்தை வைத்துதான் அடுத்துவரும் 25-30 ஆண்டு வரையிலான வாழ்க்கையை ஓட்ட வேண்டும்.
ஆண்டுக்கு ஆண்டு செலவு அதிகரித்துவருவதால், சில ஆண்டு களுக்குப்பின் ஒருவருடைய அசல் பணத்தை கைவைக்கும் நிலை கண்டிப்பாக வரும். இதைத் தவிர்ப்பதற்கு, அவர் 60 சதவிகித பணத்தை பேலன்ஸ்டு ஃபண்டுகளில் சேமித்து, அதன்மூலம் 12 சதவிகித வருமானம் கிடைத்தால், அசல் தொகை அதிகம் குறையாமல் பாதுகாக்க முடியும்.
வி.ஆர்.எஸ் மூலம் கிடைக்கும் பணத்தை எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதை முன்பக்கம் கொடுக்கப்பட்டுள்ள  அட்டவணையில் விளக்கிச் சொல்லி இருக்கிறேன். முதலில், அதைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்.
அந்த அட்டவணையில் தந்துள்ளபடி வயது அதிகரிக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக ரிஸ்கை குறைத்து கொண்டே வந்தால்தான், அவர்களால் பணவீக்கத்தைக் கட்டுபடுத்த முடியும். முதலில், 60%, அதன்பிறகு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை 10% குறைந்துகொண்டே வரலாம். இது ஓர் உதாரணத்துக்காகச் சொல்லப்பட்டதுதான். அவரவர் ரிஸ்கை பொறுத்து இதை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
சிலர் விருப்ப ஓய்வு பெற்றவுடன் சுயமாக ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என நினைப்பார்கள். சிலர் தாங்கள் வேலை பார்த்த இடத்தில் கற்றுகொண்டதைவைத்து ஏதாவது செய்யவேண்டும் என நினைக்கலாம். அப்படி செய்வதற்குமுன் அதைப் பற்றிய முன்னனுபவம் கட்டாயம் வேண்டும். பல தொழில்கள் பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றும். ஆனால், நடைமுறை அப்படியே தலைகீழாக இருக்கும். மேலும், குடும்பத்தை வழி நடத்துவதற்குத் தேவையான பணத்துக்கு ஏற்பாடு செய்தபின்பே புதிய தொழிலைத் தொடங்குவது பற்றி சிந்திக்க வேண்டும்.

இன்றைக்கு ஓய்வுபெறுபவர்களோ அல்லது விருப்ப ஓய்வு  பெறுகிறவர்களோ பலரும் சேர்ந்து, விவசாய நிலத்தை வாங்கிப்போட்டு அதைச் சில ஆண்டுகள் கழித்து, பிளாட் போட்டு விற்று லாபம் சம்பாதிக்கலாம் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் வரக் காரணம், கடந்த பத்து வருடங்களில் ரியல் எஸ்டேட் தந்த லாபம்தான்.  ரியல் எஸ்டேட்டில் ஊக வணிகம் என்பது ரிஸ்க் நிறைந்தது. இதனால் நம் பணத்தை இழப்பதற்கான வாய்ப்பே அதிகம். எனவே, ஆவணங்கள் தொடங்கி அனைத்து விஷயத்திலும் உஷாராக இருப்பது அவசியம்.
ஆனால், வீடு கட்டி அதை வாடகைக்கு விடுவதன் மூலம் வாழ்க்கை நடத்தத் தேவையான குறைந்தபட்ச வருமானத்தை நிச்சயம் பெற முடியும். புறநகர் பகுதிகளில் சுமார் 1,200 சதுர மனை 8-10 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கிறது. இதில் 10 லட்சம் ரூபாய் செலவு செய்து மொத்தம் 20 லட்சத்துக்குள் வீட்டைக் கட்டி முடித்துவிடலாம். இன்று அதன்மூலம் மாதம் ரூ. 8,000 - 10,000 வரை வாடகை கிடைக்க வாய்ப்புள்ளது. நாளடைவில் வீட்டின் விலை உயரும். வீட்டு வாடகையை இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஏற்றலாம். ஓரளவுக்கு வசதியும் கொஞ்சம் ரிஸ்க்கும் எடுக்க விரும்புபவர்கள், இவ்வளவுநாள் வீடு வாங்கவில்லையே என்ற ஏக்கமுடையவர்கள் இதை முயற்சிக்கலாம்.
இன்று நம்மில் பலர், நமக்குப் பிடிக்காத அல்லது நாம் அதிகம் விரும்பாத ஒரு வேலையைத்தான் செய்கிறோம். ஆனால்,  நாமாக விருப்ப ஓய்வு மேற்கொள்ளும்போது அல்லது நிறுவனம் ஆட்குறைப்புக்காக நம்மை நீக்கும்போதோ நமக்குப் பிடித்த நாம் மனதார நேசித்த ஒரு தொழிலை மேற்கொள்வது நல்லது. இதை ஆங்கிலத்தில் 'செகண்ட் இன்னிங்ஸ்’ என்று சொல்வார்கள். பலருக்கு இந்த வாய்ப்பு அமைவதில்லை; அமைந்தவர்கள் இதைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.
விருப்ப ஓய்வுக்குப்பின் ஒருவர் ரிஸ்க்கான விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்க வைத்து மீதமுள்ள காலத்தை ஓட்ட முயற்சி செய்ய வேண்டும். ரிஸ்க்கான முதலீட்டை விட்டு விலகியே இருக்கவேண்டும். ஓய்வு காலம் என்பது பணத்தைப் பெருக்குவதற்கு உகந்த காலமல்ல என்பதை மனத்தில்கொண்டு செயல்படுவது நல்லது.
ஓய்வூதியத்தை வைத்து அடுத்த 5-7 ஆண்டுகளுக்கு ஒருவரால் சமாளிக்க முடியும் என்றால், அவர்கள் 50 - 75% வரை பேலன்ஸ்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம். மீதமுள்ள தொகையை சீனியர் சிட்டிசன் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 9.2% வட்டி வருமானம் கிடைக்கும். ஐந்தாண்டுகள் முதலீட்டை வெளியே எடுக்கவில்லை எனில், வருமான வரிப் பிரிவு 80சி பிரிவின் கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு வரிச் சலுகை பெற முடியும்.
வி.ஆர்.எஸ் மூலம் 50 - 75 லட்சம் ரூபாய் பெறுகிறவர்களுக்குப் பெரிதாக வேறு எந்தக் கமிட்மென்டும் இல்லாவிட்டால் கொஞ்சம் பணத்தை அவர்கள் விரும்பிய தொழிலில் முதலீடு செய்ய முடியும். இதன் மூலம் தங்களுக்குப் பிடித்த தொழிலை அனுபவித்துச் செய்ய முடியும்.
உதாரணமாக, ஒருவர் ஆங்கிலத்தில் நல்ல புலமை உள்ளவராக இருந்தால், டியூஷன் சொல்லிகொடுத்துப் பணம் சம்பாதிக்க முடியும். தான் கற்றதை மற்றவர்களுக்குச் சொல்லித் தருவதில் ஒருவருக்கு ஆத்மதிருப்தி ஏற்படலாம். இதனால் மற்றவர்களின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வருவதோடு, தங்களுக்கு ஒரு வருமானத்தையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
இத்தனை காலம் ஏதோ ஓர் அலுவலகத்தில் யாரோ ஒருவரின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் சொல்லும் வேலையை அரைமனதோடு செய்திருப்போம். வி.ஆர்.எஸ் பெற்றபிறகு நமக்கு நாமே முதலாளி என்பதால் நமக்குப் பிடித்த வேலையை விரும்பி செய்யலாம்.
இஷ்டப்பட்டத்தைச் செய்தால் இனி வாழ்க்கையில் என்றும் கஷ்டமில்லையே!
padmanaban@fortuneplanners.com

Sunday, 13 April 2014

My 28th Article About Guarantee At What Cost Today's The Hindu Tamil 14th April 2014

உத்திரவாதம்-உன் விலை என்ன? பா. பத்மநாபன்


இன்று நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் உத்திரவாதம் இருக்கிறதா என்று பார்க்கிறோம். அவற்றில் பெரும்பாலானவற்றிற்கு ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ இருக்கும். இதற்கு நாம் ஒரு விலை கொடுக்கவேண்டும். உதாரணமாக, ஒரு பொருளுக்கு 10% பழுதாக வாய்ப்பு என எடுத்துக்கொண்டால், அந்தப் பொருளின் விலையில் 10% அதிகரித்து விற்று விடுவார்கள்.

10% க்குக் கீழ் பழுது ஏற்பட்டால் விற்பவருக்கு லாபம். எப்படி இருந்தாலும் உத்திரவாதம் என்ற ஒன்றை வைத்து பலர் நிறைய பணம் பண்ணுகிறார்கள்.

உத்திரவாதம் நம்மால் புரிந்து கொள்ள முடியாதது மற்றும் அது கடந்த காலங்களில் எவ்வாறு செயல்பட்டது என அறிந்து கொள்வது கடினம் என எடுத்துக் கொண்டால் அதை நாடுவது நல்லது. அதைத் தவிர்த்து நம்மால் உணரக்கூடிய ஒன்று என வைத்துக் கொண்டால் அதற்கு முக்கியத் துவம் தரத் தேவையில்லை. நம்முடைய பயத்தை மற்றும் பலவீனத்தை சிலர் முன்னுரிமை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை. அதைப் புரிந்து தேவைக்கு மட்டும் உத்திரவாதத்தை நாடினால், நாம் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

உத்தரவாத முதலீடு

உதாரணமாக நாம் பிராண்டிற்கு என்று ஒரு விலை கொடுக்கிறோம். இது எந்த நிறுவனம் என்பதைப் பொறுத்து, அதற்கு நாம் கொடுக்கக்கூடிய ப்ரீமியம் வேறுபடும். அதேபோல நாம் சேமிக்கும் பணத்திற்கு யாராவது உத்திரவாதம் தந்தால் அவர்கள் எல்லாவிதமான ரிஸ்க்கையும் அளவிட்டு குறைவான தொகையே தரமுடியும். முதலீட்டில் பெரும் பாலான திட்டங்கள் உத்திரவாதம் தருவதால் அது பணவீக்கத்தைக் கட்டுபடுத்த முடிவ தில்லை.
முதலீடு நீண்ட காலமாக இருந்தால் நாம் உத்திர வாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவை யில்லை.

ஏனெனில் முதலீட்டில் ரிஸ்க் என்பது நாளடைவில் குறைந்து விடும். அதே சமயம் குறுகிய கால முதலீடு அல்லது கண்டிப்பாக அந்த பணம் முக்கியமாகத் தேவைப்படும் என்றால் நாம் கண்டிப்பாக உத்திரவாத முதலீட்டையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

பல முதலீட்டார்களின் கவலை அவர்களின் முதலீடு உத்திரவாதமுள்ளதாக இருக்குமா என்பது பற்றிதான் அவர்களுக்கு ரிடர்ன்ஸ் பற்றி அதிக கவலை இல்லை, பாதுகாப்பு ஒன்றே முக்கியம். 10 வருடங்களுக்கு முன்பு உத்திரவாத வட்டியே அதிகம், மேலும் பணவீக்கம் குறைவு, அவர்களுடைய வருமானம் குறைவு, யாரும் தேவை இல்லாமல் செலவு செய்ய மாட்டார்கள். அது கடந்த காலம், மீண்டும் வராது. ஆனால் பலர் அதையே பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் வட்டி குறைவு, பணவீக்கம் அதிகம், யாரும் செலவு செய்வதற்கு அஞ்சுவதில்லை.

இலவசமாகக் கிடைத்த தண்ணீருக்கு வெளியே செல்லும்போது லிட்டருக்கு 20 ரூபாய் தரவேண்டி உள்ளது. மேலும் குடிநீருக்காக 500 ரூபாய் வரை மாதா மாதம் செலவு செய்ய நேரிடுகிறது. இதேபோல், மொபைல் பில், இன்டர்நெட், அடிக்கடிமொபைல் போன் மாற்றுவது, பெரிய கார், வீடு என செலவுகள் புதிது புதிதாக தோன்றிய வண்ணம் இருக்கின்றன.

மேலும் உத்திரவாதம் அவர்கள் தரக்கூடிய வட்டிக்குத்தான், ஆனால் பணவீக்கத்திற்கோ அல்லது நம்முடைய மற்ற தேவைகளுக்கோ யாரும் உத்திரவாதம் தருவதில்லை. எனவே நம்முடைய வாழ்க்கை மற்றும் எப்போதுமே அதிகரித்துக் கொண்டிருக்கும் தேவை ஆகியவற்றுக்கு உத்திரவாத மில்லாதபோது, பெரும்பாலான முதலீட்டை பாதுகாப்பான முதலீட்டில் வைப்பது சரியான செயல் இல்லை.

3 வகை முதலீடு
நாம் முதலீட்டை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. உத்திரவாத முதலீடு 2. இந்திய அரசால் ஒழுங்கு கட்டுபாட்டுக்குள் செயல்படுவது, குறைந்த கால முதலீடு ரிஸ்க் அதிகம், நீண்ட கால முதலீடு ரிஸ்க் இல்லை. 3. எந்த கட்டுப்பாட்டுக்குள்ளும் வராதது, ஒரு சில வருடம் நன்றாக செயல்பட்டது என்பதை நம்பி முதலீடு செய்வது. இதில் ரியல் எஸ்டேட், போன்சி (PONZI) திட்டங்கள் அடங்கும்.

முதலீட்டாளர்கள் எப்போதும் இரண்டு துருவங்கள் 1. பணத்தை உத்திரவாத முதலீட்டில் மட்டுமே தேர்ந்தெடுப்பது 2. அதிக ஆசைப்பட்டு ரியல் எஸ்டேட் மற்றும் போன்சி திட்டங்களைத் தேர்வு செய்து அதில் எந்தவித ரிஸ்க்கும் இல்லை என நினைப்பது, அல்லது அவர்களாகவே தான் செய்த முதலீட் டிற்கு உத்திரவாதம் தருவது.

உத்திரவாதத்திற்கு முக்கியத் துவம் தருவதைவிட, நாம் செய்யப் போகும் முதலீடு கடந்த 10 முதல் 25 ஆண்டுகளில் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்று பார்த்தால் நம்மால் அந்த முதலீட்டைப் பற்றிக் கண்டிப்பாகப் புரிந்து கொள்ள முடியும். மேலும் நாம் செய்கிற எந்த முதலீடாக இருந்தாலும் அதை நாம் நினைக்கும்போது உடனடியாக காசாக்கிக் கொள்ளும் தன்மை இருக்க வேண்டும். மேலும் அதற்கு எதுவும் வரி (LONG TERM CAPITAL GAIN) உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

நான் ஒரு முதலீட்டைப் பற்றிச் சொல்லும்போது, அது கடந்த 20 வருடங்களில் இவ்வாறு செயல்பட்டுள்ளது, வரும் காலங்களிலும் நன்றாக செயல்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னால் பெரும்பாலோர் அதை நம்புவதில்லை. அதே சமயம் அவர்களுடைய வருமானம் கடந்த 10 வருடங்களில் உயர்ந்ததை வைத்து எப்போதும் இதே அளவு இருக்கும் என்று எண்ணி அவர்களுடைய வருங் கால தேவைகளை பிளான் செய்கிறார்கள், இது மிகவும் தவறு. அதன் விளைவு, நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள், ஆனால் அது பல வகையான முதலீட்டில் முடக்கப்படுவதால், எவ்வளவு சம்பாதித்தாலும் எப்போதும் பணம் இல்லை என்ற உணர்வே மிஞ்சுகிறது. இந்த உணர்வுதான் மன அழுத்தத்திற்கான முதல் படி.

ரிஸ்க்கான முதலீடு
ஒரு சின்ன உதாரணம். நம்முடைய பர்சில் 1000 ரூபாய் எப்போதுமே உள்ளது உங்களுடைய மனநிலை எவ்வாறு இருக்கும், அதே சமயம் 200 ரூபாய் தான்உள்ளது, அது எப்படி இருக்கும். பணம் என்பது நமக்கு மற்றும் நம்முடைய வாழ்க்கைக்கு நம்பிக்கை தரக்கூடிய ஒரு சாதனம், அதை உணராமல் கொஞ்சமும் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லாத முதலீட்டைத் தேர்ந் தெடுக்கும்போது, அதிக ரிஸ்க்கி ற்கு உள்ளாகிறோம்.

அந்த முதலீட்டை வேண்டிய போது எடுக்க முடியாமல் திணறும்போது, நாம் ஒரு வெற்றிடத்தை உணர்கிறோம்.

​​அது நமக்கு நாமே செய்து கொள்கிற தீங்கு. இன்று எல்லோராலும் சொல்லக்கூடிய ஒரு வாசகம் "சொந்த பணத்தில் சூனியம் வைத்துக்கொள்வது" என்று சொன்னால் மிகையாகாது.

சாராம்சம்: உத்திரவாதம் நாம் அதிக விலை கொடுத்து வாங்கக் கூடிய பொருளுக்கு மிகவும் அவசியம், அது பழுது பட்டால் நாம் அதிக விலை தரவேண்டி வரும்.

நாம் செய்யும் நீண்ட கால முதலீட்டிற்கு உத்திரவாதம் தேவை இல்லை, அது கடந்த காலங்களில் செயல்பட்டதை வைத்து நன்றாகக் கணிக்க முடியும். இன்னும் பலர் எண்டோவ்மென்ட் பாலிசியில் உத்திரவாதம் தருகிறார்கள் (அது எவ்வளவு சதவிகிதம் என்று பார்ப்பதில்லை) என்று அவர்களுடைய நீண்ட கால சேமிப்பை தொடர்வது, எதிர்வரும் காலத்தில் பேரிழப்பாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Monday, 7 April 2014

My 27th Article In The Hindu Tamil Dated 7th April 2014 about, Section 80C Investments and its Importance

வருமான வரியை சேமிப்பது எப்படி?


வருமான வரிப்பிரிவில் 80C பிரிவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அடுத்த வருடம் 31 மார்ச் வரை. ஆனால் நம்மில் பலர் 10 அல்லது 11 மாதம் எந்தவித முயற்சியும் எடுக்காமல், கடைசி இரண்டு மாதங்களில் அந்த சமயம் கண்ணில் யார் படுகிறாரோ அவரிடம் எதையாவது வாங்கி அலுவலகத்தில் ரசீது கொடுப்பதையே பெரிய விஷயமாக நினைக்கிறார்கள்.

பின்பு அதைச் சொன்னார், இதைச் சொன்னார் என்று முகவரைக் குறை கூறுவதுண்டு.
80 சி பிரிவில் எந்தெந்த முதலீடுகள் உள்ளன, அவற்றின் பயன் என்னவென்று தெரிந்தால் நாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

1. வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்)
இது நம்முடைய வருமானத்தில் நாம் வேலை செய்யும் நிறுவனத்தால் பிடிக்கப்படுவது. நம்முடைய அடிப்படை சம்பளத்தில் 12% பிடிக்கப்பட்டு, அதற்கு 8.75% வட்டி வழங்குகிறார்கள். இது ஒரு நீண்ட கால சேமிப்பு, நாம் அறியாமலேயே சேமிப்பது. இதில் நாம் விரும்பினால் 12% க்கும் மேலே சேர்க்கலாம். ஒரு லட்சம்வரை இதில் சேமிக்க முடியும்.

2. ஆயுள் காப்பீடு
இதிலேயும் ஒரு லட்சம் வரை சேமிக்க முடியும். இதில் எண்டோவ்மென்ட் பாலிசி மற்றும் யூலிப் திட்டங்கள் பிரசித்தி பெற்றவை. முறையே 6% முதல் 10% வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. நடுவில் பாலிசியை சரண்டர் செய்யும்போது பெரிய அளவு இழப்பு நேரிடும். நாம் கட்டிய தொகையைவிட குறைவாக கிடைக்க நிறைய வாய்ப்புள்ளது.

3. வீட்டுக்கடன் அசல்
நாம் வீட்டுக்கடன் வாங்குபோது மாதா மாதம் EMI கட்டவேண்டும். இதை இரண்டாக பிரிப்பார்கள் 1. அசல் 2. வட்டி. ஆரம்பத்தில் அசலை குறைவாக எடுப்பார்கள், வட்டி அதிகம் எடுக்கப்படும். ஒருவர் கட்டக்கூடிய அசலை இந்த வருமான வரி விலக்கில் காண்பிக்க முடியும்.

4. தேசிய சேமிப்புத் திட்டம் (NSC)
இதில் முதலீடு செய்தால் ஐந்து வருடம் கழித்து பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். இதில் கிடைக்கும் வட்டி 8.5%. குறைந்தது 100 ரூபாய் முதல், ஒரு லட்சம் வரை சேமிக்க முடியும். இதை தபால் நிலையத்தில் வாங்கலாம்.

5. பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
இதில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். பாதுகாப்பு அதிகம் விரும்புவர்கள் இதில் முதலீடு செய்வார்கள். இதில் குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1 லட்ச ரூபாய் வரை சேமிக்கமுடியும். 8.7% தற்போதைய வட்டி. ஒவ்வொரு வருடமும் வட்டியை புதிதாக நிர்ணயம் செய்வார்கள். இதில் 3 வருடத்துக்கு பிறகு, 5 வருடத்திற்குள் கடன் வாங்க முடியும். அதே மாதிரி 6 வருடத்திற்கு பிறகு சிறிது பணம் எடுத்துக்கொள்ளலாம், நிபந்தனைக்குட்பட்டது. இந்த கணக்கை தபால் நிலையம் மற்றும் வங்கியில் தொடரலாம்.

6. தபால் நிலைய வைப்பு நிதி
இதற்கு ஒருவர் ஐந்து வருடம் காத்திருக்கவேண்டும், அத்துடன் 8.5% வட்டி கிடைக்கும், இதிலும் ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். இது ஒரே ஒரு தடவை செய்யக்கூடிய முதலீடு.

7. முதியோர் சேமிப்பு திட்டம் (SENIOR CITIZEN SAVINGS SCHEME)
இதில் முதலீடு செய்பவர்களுக்கு வயது குறைந்தது 60 வருடம். விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு 55 வருடம். ஒவ்வொரு காலாண்டும் வட்டி கிடைக்கும், வருடத்திற்கு 9.2% இதில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை ஒருவர் முதலீடு செய்யலாம். வருமான வரி விலக்கு ஒரு லட்சம் ரூபாய்க்குதான். இதில் செய்யப்படும் முதலீட்டை ஐந்து ஆண்டு வரை எடுக்க முடியாது.

8. 5 வருட வங்கி டிபாசிட்
பாதுகாப்பு கருதுபவர்கள் ஐந்து வருடம் இதில் முதலீடு செய்யலாம், இதற்கு வருமான வரி விலக்கு ஒரு லட்சம் வரை உண்டு. இதில் குறைந்தது ஐந்து வருடம் இணைந்திருக்க வேண்டும். இதுவும் அஞ்சலக டெர்ம் டிபாசிட்டும் ஒரே மாதிரியானவை.

9. கல்விக் கட்டணம் (TUITION FEES)
ஒருவர் தன் குழந்தைக்கு செலவிடும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆகும் கல்வி பயிற்றுக் கட்டணத்தை (டியூஷன் பீஸ்) இந்த பிரிவில் எடுத்துகொள்ளலாம். இது வருடா வருடம் வேறுபட வாய்ப்புள்ளது. நாம் செலவிடும் கல்விக் கட்டணம் எல்லாவற்றையும் இதில் காண்பிக்கமுடியும்.

10. முத்திரைத் தாள் பதிவு கட்டணம்
ஒருவர் நிலம்,வீடு வாங்கும்போது, இந்த செலவுகள் இன்றியமையாதவை. அதற்கு ஆகக்கூடிய செலவுகளான ஸ்டாம்ப் டூட்டி, பதிவு கட்டணம் ஆகியவற்றை இந்த 80c பிரிவின் கீழ் வருமான வரி விலக்கில் (1 லட்சம் வரை) காண்பிக்கமுடியும்.

11. மியூச்சுவல் ஃபண்ட் (ELSS)
இதில் ஒரு லட்சம் வரை சேமிக்க முடியும். 3 வருட காலம் முதலீட்டை திரும்ப எடுக்க முடியாது. இது பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது. குறைந்தது 500 ரூபாய் முதலீடு செய்யலாம். ஒரு வேளை 3 வருடத்திற்கு பிறகு, நாம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போக கூட வாய்ப்பு இருக்கிறது. மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் கட்டாயம் தொடர வேண்டிய முதலீட்டு காலம்(லாக் இன் காலம்) குறைவு.

சாராம்சம்
மேலே சொன்ன 11 வகையான திட்டத்தில் அந்த ஒரு லட்ச ரூபாயை ஒரே திட்டத்திலோ, பல திட்டத்திலோ சேர்ந்து சேமிக்கலாம். வேலைக்கு சேர்ந்தவுடன் ஒருவர் இதை திட்டமிட்டு சேமித்தால், நம்முடைய வருமான வரியை ஓரளவிற்கு குறைக்க முடியும்.

இதில் சில நாம் செய்யக்கூடிய செலவுகளை காண்பிக்கவும், சில பிரிவுகள் மேலும் நாம் சேமிக்கவும் உதவுகிறது. அவ்வாறு சேமிக்கக்கூடிய திட்டங்களில் அதனுடைய கால அவகாசம், அதற்கு கிடைக்கும் வருமானம் பார்த்து நாம் வருட ஆரம்பத்திலேயே திட்டமிட்டால், வருமான வரி கட்டுவதை ஓரளவுக்கு குறைக்க முடியும். சிறிது சிறிதாக சேமிக்கக்கூடிய தொகை நாளடைவில் நல்ல பலன் தரும். இதை ஒரு தொல்லையாக கருதாமல் நமக்கு சேமிக்க கிடைத்த வாய்ப்பாக நினைத்து செயல்படுவது நல்லது.

வேலைக்கு சேர்ந்தவுடன் பெரும்பாலோர் சொல்லும் சொல், எனக்கு வருமானம் போதவில்லை, அதுவே சில வருடங்களுக்கு பிறகு, என்னுடைய வருமானத்தில் பெரும் பங்கு வருமான வரியிலேயே போய் விடுகிறது என்கிறார்கள். இதைப்பற்றி நான் படித்த ஒரு வரி எனக்கு நினைவுக்கு வருகிறது, அது ஆங்கிலத்தில் சொல்வது எளிது, நான் தமிழிலும் முயற்சித்திருக்கிறேன்.

“A fine is a tax for doing wrong. A tax is a fine for doing well.”

நகைச்சுவையாக சொன்னால் "அபராதம் என்பது ஒருவர் செய்யும் தவறுக்கான வரி, அதே சமயம் வரி என்பது ஒருவர் நன்றாக செயல்பட்டால் அரசாங்கம் நமக்கு விதிக்கும் அபராதம்”

எப்படி பணம் சம்பாதிப்பது நம்முடைய கடமை என்று நினைக்கிறோமோ அதே மாதிரி சம்பாதித்த பணத்தை சரியாக சேமிப்பதும் நம் கையில் தான் உள்ளது. இதற்கு சோம்பல்பட்டு தேவையற்றவைகளை முதலீடு செய்து அடுத்தவர்களைக் குறை கூறுவதில் எந்தவித பிரோயோஜனமும் இல்லை. சேமிப்போம், நன்கு பயன் பெறுவோம்.