எஸ்.ஐ.பி..? சிங்கிள் இன்வெஸ்ட்மென்ட்..?எந்த நேரத்தில், எது சரி?
தொகுப்பு: செ.கார்த்திகேயன்.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு
செய்யும்போது ஒரேநேரத்தில் கையில் இருக்கும் பெருந்தொகையை முதலீடு செய்து
வைப்பதா, இல்லை எஸ்.ஐ.பி. முறையில் ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்சமாக
முதலீடு செய்யலாமா? இப்படி ஒரு சந்தேகம் மியூச்சுவல் ஃபண்ட்
முதலீட்டாளர்கள் பலருக்கும் இருக்கவே செய்கிறது.
இந்தக் கேள்விக்கான பதில் ஒன்றல்ல. ஒவ்வொரு
முதலீட்டாளருக்கும் ஏற்றபடி மாறும். எவ்வளவு பணத்தை முதலீடு
செய்யப்போகிறீர்கள், முதலீட்டின் நோக்கம் என்ன, எவ்வளவு ஆண்டுகளுக்குப்
பணத்தை அப்படியே வைத்திருப்பீர்கள் என்கிற கேள்விகளுக்கான பதிலைப்
பொறுத்து, மேற்சொன்ன கேள்விக்கான பதில் மாறும். ஆனால், ஒரேநேரத்தில்
முதலீடோ அல்லது எஸ்.ஐ.பி. முறையோ, உங்கள் முடிவுக்கு ஏற்றபடி ஃபண்டுகளின்
தேர்வு என்பது மாறும். எனவே, எஸ்.ஐ.பி. முதலீட்டிற்கு ஏற்ற ஃபண்டுகள் எவை?
அதேபோல, மொத்தமாக முதலீடு செய்வதற்கு ஏற்ற ஃபண்டுகள் என்னென்ன? என்பதை இனி
பார்ப்போம். அதை வைத்து முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டு முறையைத்
தேர்வு செய்துகொள்ளலாம்.
மொத்த முதலீடு (Lumpsum Invesment)!
மொத்தமாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது
கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம், அந்த முதலீட்டை எவ்வளவு நாள்
தொடரப்போகிறோம் என்பதுதான். உதாரணமாக, ஒருவர் ஐந்து ஆண்டுகள் வரை முதலீடு
செய்த பணத்தைத் திரும்ப எடுக்கப்போவதில்லை எனில், சந்தை இன்றுள்ள நிலையைப்
பார்க்கவேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சந்தை எந்த ஏற்றத்தையும்
சந்திக்கவில்லை. ஆனால், இப்போதிருக்கும் நிலையிலிருந்து கீழே
இறங்குவதற்கும் வாய்ப்புகள் குறைவே. அப்படி இறங்கினால் ஒருவேளை 15
சதவிகிதம் வரை இறங்கலாம். அதேசமயம், மேலே ஏறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக
உள்ளது. இப்போது ஒருவர் இன்னும் ஐந்து ஆண்டு வரை காத்திருப்பார் என்றால்
இதைவிட ஒரு பொன்னான வாய்ப்பு மீண்டும் கிடைப்பது அரிது.
ஒருவேளை சந்தை அதிக ஏற்றத்துடன் இருந்தால் (உதாரணமாக,
ஜனவரி 2008) மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.டி.பி. (Systematic Transfer
Plan)என்ற முறையைக் கையாண்டிருக்கவேண்டும். இந்த முறையில் நம்முடைய
சிங்கிள் இன்வெஸ்ட்மென்ட் தொகை கடன் சார்ந்த திட்டங்களில் வைக்கப்பட்டு
வாராவாரம் டார்கெட் ஈக்விட்டி ஃபண்டுக்கு மாற்றப்படும். இந்த முறை சந்தை
செல்லும் திசை நமக்கு சரியாகத் தெரியாதபோது அதிக பயன்தருவதாக இருக்கும்.
மூன்று முதல் ஒன்பது மாதம் வரை இத்திட்டத்தைத் தேர்வு செய்யலாம். ஒன்பது
மாதத்திற்கு பிறகும் சந்தை செல்லும் திசை தெரியவில்லை என்றால் மீண்டும்
தொடரலாம்.
எஸ்.ஐ.பி. முதலீடு! (SIP investment)
எப்போது
வேண்டுமானாலும் இந்த முறையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை
ஆரம்பிக்கலாம். ஏனெனில், முதலீடு என்பது பல கட்டத்தில் செய்யப்படுகிறது.
பலமுறை முதலீட்டை செய்யும்போது சராசரியாக நல்ல வருமானம் கிடைக்க
வாய்ப்புண்டு. சந்தைக்கேற்றபடி ஏற்ற இறக்கங்களில் வாங்குவதால் சராசரி
வருமானம் கிடைக்கிறது. கடந்த 10 ஆண்டு அடிப்படையில் 15 சதவிகிதம் ஆண்டு
கூட்டு வளர்ச்சி (CAGR) எஸ்.ஐ.பி. முதலீட்டில் கிடைத்துள்ளது. ஆனால், மொத்த
முதலீட்டு முறையில் 25 சதவிகிதம் ஆண்டு கூட்டு வளர்ச்சி கிடைத்துள்ளது.
இது குறைந்த அளவே.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சந்தை 3 சதவிகிதம் ஆண்டு கூட்டு
வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், எஸ்.ஐ.பி. முதலீட்டு முறையில் 10 முதல் 15
சதவிகிதம் வரை வருமானம் கிடைத்துள்ளது. சந்தை 3 சதவிகிதம் ஏறும்போது 10
சதவிகிதம் கிடைத்தால், வரும் காலங்களில் சந்தை 8 சதவிகிதம் உயரும்போது 15 சதவிகித லாபம் கிடைக்க நிறைய வாய்ப்புண்டு.
எஸ்.ஐ.பி. முதலீட்டு முறையில் பலருக்கும் உள்ள
சந்தேகம், எந்த குறிப்பிட்ட தேதியை முதலீட்டிற்கு தேர்வு செய்வது என்பது.
எஸ்.ஐ.பி. முறையைத் தேர்வு செய்வது முதலீட்டாளர்களின் வசதியைப் பொறுத்தது.
அதேசமயம், மற்ற தேதிகளைவிட 5 முதல் 10 வரை உள்ள தேதிகளின் முதலீடுகள் 0.5
சதவிகிதம் அதிக வருமானம் கொடுத்துள்ளது.
வருமான அட்டவணை!
மேலே தரப்பட்டுள்ள அட்டவணையில் கடந்த பத்து ஆண்டுகளில்
ஃபண்ட் பெர்ஃபார்மன்ஸ் காட்டப்பட்டுள்ளது. எஸ்.ஐ.பி. முறையில் மாதம் 2,000
ரூபாயும் (2,000ஜ்120 மாதங்கள் = ரூ.2,40,000), மொத்தமாக 2.40 லட்சம்
ரூபாயையும் 28.5.03 முதல் 27.5.13 வரையில் முதலீடு செய்திருந்தால்
கிடைக்கும் வருமானம் எஸ்.ஐ.பி. முறையைவிட மொத்த முதலீட்டில் அதிகம்.
காரணம், சந்தையின் போக்கு முதலீடு செய்யும்போது குறைவாக இருந்து பின்னர்
அதிக ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது. இந்த முதலீட்டு விவரத்தை நன்றாக
கவனித்தால், மொத்தமாக முதலீடு செய்யும் முறையில் நல்ல பலன் தந்துள்ளது
தெரியும்.
எதற்கு என்ன ஃபண்ட்?
ஒருவருடைய முதலீட்டின் தேவைக்கேற்ப ஃபண்டுகளைத் தேர்வு
செய்யவேண்டும். தேர்வு செய்தபின்பு நீண்டகால அடிப்படையில் காத்திருப்பது
அவசியம். எஸ்.ஐ.பி. மற்றும் மொத்த முதலீடு என இரண்டுக்கும் பொதுவானதாக
ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி, ஐ.டி.எஃப்.சி. ஸ்டெர்லிங் ஈக்விட்டி,
ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல்
டிஸ்கவரி, ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் ஃபோகஸ்டு புளூசிப், யூ.டி.ஐ.
ஆப்பர்ச்சூனிட்டீஸ் போன்ற ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம்.
எஸ்.ஐ.பி. மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திற்காக மட்டும்
என்றால் எஸ்.பி.ஐ. எமெர்ஜிங் பிசினஸ், ரிலையன்ஸ் ஈக்விட்டி
ஆப்பர்ச்சூனிட்டீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் டிஸ்கவரி, ஐ.டி.எஃப்.சி.
ஸ்டெர்லிங், ஐ.டி.எஃப்.சி. பிரீமியர், மிரே அசெட் இந்தியா
ஆப்பர்ச்சூனிட்டீஸ் போன்ற மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம்.
மொத்தமாக முதலீடு செய்யும்போது சந்தையின் போக்கு குறைவானதாக இருந்து
பின்னர் அதிகரித்திருந்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
சென்செக்ஸ் புள்ளிகள் அதிகமாக இருக்கும்போது, ஒருவர்
மொத்தமாக முதலீடு செய்து, அதை குறுகியகால அடிப்படையில் எடுப்பதாக இருந்தால்
நிச்சயமாக நஷ்டம் ஏற்படும். அதனால் மொத்தமாக முதலீடு செய்யும்போது
சந்தையின் எதிர்கால போக்கினை கணக்கில்கொண்டு முடிவு எடுப்பது நல்லது.
இதே சந்தையின் போக்கைப் பார்த்து எஸ்.ஐ.பி. முறையில்
மாதாமாதம் முதலீடு செய்தால், இறங்கும் சந்தையில் நஷ்டம் குறைவாக இருக்கும்.
மேலும் சந்தையைக் கணிக்க முடியாதவர்களுக்கு எஸ்.ஐ.பி. முறை சிறந்தது.
முதலீட்டாளர்களுக்கு மொத்தமாக ஒரு தொகை கிடைக்கிறது
என்கிறபட்சத்தில் அன்றைய சந்தை நிலவரத்தையும் எதிர்காலத்தில் சந்தையின்
அனுமானத்தைக் கணக்கிட்டும் சிங்கிள் இன்வெஸ்ட்மென்ட் முறையில் மொத்தமாக
முதலீடு செய்வதில் தவறு இல்லை.
No comments:
Post a Comment