Pages

Sunday, 30 December 2012

When and Where To Invest for Different Goals!!! in Naanayam Vikatan on 30th December 2012


எதில், எப்படி முதலீடு செய்வது?
 
சென்ற இதழில் 'குடும்பச் செலவை சமாளிக்க சூப்பர் ஃபார்முலா’ அட்டைபடக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். கட்டுரையைப் படித்த வாசகர்கள், 'அருமை, அருமை! ஆனால், மிச்சப்படுத்தும் பணத்தை எப்படி சேமிப்பது?, நீண்டகாலத்துக்கான பணத்தை எப்படி முதலீடு செய்வது? அதற்கான வழிமுறைகளையும் சொல்லுங்கள்!’ என்று கேட்க, அதுபற்றி விளக்கமாக இந்த வாரம் சொல்கிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.  
''கடந்த இதழில் நான் தந்த ஃபார்முலாவில், கல்விக்கான செலவு (6%), டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் மெடிக்ளைம் (6%), சுற்றுலா (4%), ஷாப்பிங் (2%) என ஆக மொத்தம் 16 சதவிகித பணத்தை எப்படி சேமிப்பது என்று முதலில் பார்ப்போம். இந்த நான்கு செலவுகளையும் ஆண்டுக்கு ஒருமுறை செய்கிற மாதிரி திட்டமிட்டுக்கொள்ளலாம்'' என்றவர், விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
பள்ளிக்கல்விச் செலவு!
உங்கள் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை ஆண்டின் தொடக்கத்தில் ஒரே தவணையில் கட்டும்படி நீங்கள் திட்டமிடலாம்.  இதனால் சில நூறு ரூபாய்களை மிச்சப்படுத்த முடியும். தவிர, இந்தப் பணத்தை வங்கியில் சேமிக்கும்போது உங்களுக்கு வட்டி வருமானமும் கிடைக்கும். ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காயை எளிதாக நீங்கள் பறித்துவிடலாம்.
உங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு உங்கள் சம்பளத்திலிருந்து 6% பணத்தை எடுத்து, ஆண்டுக்கு 7-8% நிரந்தர வருமானம் தரக்கூடிய வருடாந்திர வங்கி ஆர்.டி.யில் சேமிக்கலாம். இந்த ஆர்.டி.யைக் கல்விக் கட்டணம் கட்டவேண்டிய மே மாதத்திற்கு முன்பே கிடைக்கிற மாதிரி ஆரம்பிக்கலாம். பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு சேரும் பணம் வட்டியோடு நமக்குக் கிடைக்கும்.  
இன்ஷூரன்ஸ்!
லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி இல்லாமல் இருப்பது ஹெல்மேட் போடாமல் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் மோட்டார் பைக்கை ஓட்டுவதற்குச் சமம். இன்ஷூரன்ஸ் பாலிசிகள் இரண்டு வகை. ஒன்று, மெடிக்ளைம் பாலிசி; இன்னொன்று, லைஃப் இன்ஷூரன்ஸ் திட்டமான டேர்ம் பாலிசி. ஒருவர் 6 லட்சம் ரூபாய் ஒரு வருடத்திற்குச் சம்பாதிப்பதாக எடுத்துக்கொண்டால், அவர் 12 முதல் 15 மடங்கு, அதாவது 75 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் பாலிசி எடுக்கவேண்டும்.
30 வயதுடைய ஆண்களுக்கு 30 வருட பாலிசிக்கு ஆண்டுக்கு 17,500 ரூபாய் பிரீமியமாகக் கட்டினால் போதும்; பெண்களாக இருக்கும்பட்சத்தில் 15,000 ரூபாய் பிரீமியம். புகைபிடிக்கும் பழக்கம் இருப்பின் கட்ட வேண்டிய பிரீமியத்தில் 20% அதிகம். மெடிக்ளைமுக்காக 2%, லைஃப் இன்ஷூரன்ஸுக்காக 4% என 6% பணத்தை 7-8% வருமானம் தரக்கூடிய வங்கி ஆர்.டி.யில். சேமிக்கலாம். இதன்மூலம் இன்ஷூரன்ஸுக்கான பிரீமியத்தை ஆண்டுக்கொருமுறை கவலை இல்லாமல் கட்டுவதோடு, வட்டி வருமானத்தை அவசரச் செலவுக்கு ஒதுக்கி வைக்கலாம்.
ஷாப்பிங்!
பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை, தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என பண்டிகைகளை ஒட்டி துணிமணி களை வாங்குவது நம் வழக்கம். நம் சம்பளத்தில் 25% பணத்தை ஆண்டுக்கு ஒருமுறை ஷாப்பிங் செய்ய செலவழிக்கலாம் என்பதால் ஒவ்வொரு மாதமும் 2% பணத்தை ஒதுக்கி வைப்பது நல்லது. இந்தப் பணத்தையும் 7-8% வருமானம் தரக்கூடிய வருடாந்திர வங்கி ஆர்.டி. யில் சேமிக்கலாம்.
சுற்றுலா!
ஆண்டுக்கு ஒருமுறை சுற்றுலாச் செல்ல நினைப்பது இன்றைய பல குடும்பங்களின் வழக்கமான விஷயமாகி விட்டது. சுற்றுலாச் செல்ல வேண்டும் என்று முன்னதாகவே திட்டம் தீட்டும் பொழுது பயண கட்டணத்திற்கென்று அதிகமாகச் செலவு செய்யும் நிலைமை இருக்காது. மேலும், இரவு பிரயாணம் மற்றும் குளிர்காலங்களில் இரண்டாம் வகுப்பில் செல்லலாம். இதனால் மிச்சமாகும் தொகையை சுற்றுலாச் சென்ற இடத்தில் தாராளமாகச் செலவு செய்யலாம்.
சுற்றுலாவில் வெளியில் சுற்றும் நேரம் அதிகம், விடுதி தூங்குவதற்காக மட்டுமே என்று இருந்தால், தங்கும் விடுதிக்கு அதிக செலவு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. சுற்றுலாவிற்காக 4% தொகையை 7-8% வட்டி கிடைக்கும் வருடாந்திர ஆர்.டி.-யில் முதலீடு செய்யலாம். அலுவலகத்தில் எல்.டி.ஏ. கிடைக்கும் என்கிறவர்கள் அந்தப் பணத்தையும் சேர்த்து சுற்றுலாவிற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். சுற்றுலாச் செலவிற்கு எல்.டி.ஏ. மட்டும் போதும் என்கிறவர்கள் மேலே சொன்ன சேமிப்பை மற்ற தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நம்மில் பெரும்பாலானவர் கள் வெளிநாட்டு சுற்றுலா மீது மோகம் கொண்டவர்களாகத் தான் இருக்கிறார்கள். வருமானம் இருப்பவர்கள் வெளிநாட்டுக்கு வருடா வருடம் சென்று வரலாம் என்றாலும், நடுத்தர வர்க்கத்தினர் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தைப் பொறுத்து திட்டம் தீட்டினால் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையேனும் சென்று வர முடியும். இதற்கென்று 10% தொகையை 10% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு 30,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் வெளிநாட்டிற்கு சுற்றுலாச் செல்ல விருப்பப்பட்டால் 10% தொகை, அதாவது மாதம் 3,000 ரூபாயை மூன்று ஆண்டுகள் 10% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். முதலீடு முதிர்வின்போது 1.20 லட்சம் ரூபாய் கிடைக்கும்.  
சேமிப்பு மற்றும் முதலீடு!
இதுவரை ஆண்டுக்கொருமுறை செய்யும் சில முக்கிய செலவுகளுக்கான பணத்தை எப்படி சேமிப்பது என்று பார்த்தோம். இனி எதிர்காலத் திட்டங்களுக்காக நாம் செய்யவேண்டிய முதலீடுகளை எப்படி அமைத்துக்கொள்வது என்று பார்ப்போம்.
செல்லும் வாகனத்தைப் பொறுத்து செல்லும் நேரம் மாறுபடும் என்பதற்கு ஏற்ப, நம்முடைய முதலீட்டுக் கருவியைப் பொறுத்து நமக்குக் கிடைக்கும் லாபம் கூடும் அல்லது குறையும். நீண்டகால தேவைகளான குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் ஓய்வுக்காலத்திற்கு மியூச்சுவல் ஃபண்ட் (எஸ்.ஐ.பி. மூலம்) போன்ற முதலீட்டை பயன்படுத்தலாம்.
சேமிப்பு மற்றும் முதலீட்டிற்காக  ஒதுக்கச் சொல்லியிருந்த 20% தொகையில், 6% குழந்தைகளின் உயர்கல்விக்கு, 4% குழந்தைகளின் திருமணத்திற்கு, 6% உங்கள் ஓய்வுக்காலத்திற்கு மற்றும் இதர தேவைகளுக்கு 4% தொகையையும் முதலீடு செய்ய வேண்டும்.
நீண்டகால முதலீடு என்பதால் ஈக்விட்டி டைவர்சிஃபைட் வகை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. உதாரணத்திற்கு 30 வயதுள்ளவர்கள், 30,000 ரூபாய் சம்பளம் பெறுபவர்களின் சேமிப்பு மற்றும் முதலீட்டிற்கான விவரத்தை மேலே அட்டவணையாகத் தந்திருக்கிறேன். எதிர்பார்க்கும் வருமானம் 15%.
குடும்பச் செலவை சமாளிக்க ஃபார்முலாவை யும், மிச்சப்படுத்தும் பணத்தை எதில் முதலீடு செய்யவேண்டும் என்றும் சொல்லிவிட்டேன். அதன்படி நடக்கவேண்டியது நீங்கள்தான்!''

Sunday, 23 December 2012

How to Control Your Monthly Expenses - A Practical Solution!


சூப்பர் ஃபார்முலா!

இன்றைய நிலையில் நம் வாழ்க்கை வரவு எட்டணா, செலவு பத்தணாவாகத்தான் இருக்கிறது. சம்பாதிப்பதைவிட அதிகமாகச் செலவு செய்வதினாலேயே நம்மில் பலர் நிரந்தர கடனாளிகளாக இருக்கிறோம்.
 காட்டுக்குதிரையைப் போல் தறிகெட்டு ஓடும் இந்த செலவை, கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு மந்திரம் நமக்குத் தெரிந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக் கிறீர்களா?
சிம்பிள். நம் செலவு ஒவ்வொன்றும் எந்த அளவில் இருக்கவேண்டும் என்பதற்கு எல்லோரும் ஒப்புக்கொள்ளும் எளிய ஃபார்முலா இருக்கிறது.
இந்த ஃபார்முலாபடி நீங்கள் உங்கள் செலவை அமைத்துக்கொண்டால், உங்களுக்குக் கடன் பிரச்னையும் இருக்காது. கை நிறைய காசும் இருக்கும். எதிர்காலம் குறித்து எந்த பயமும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கலாம்!
நம் வீட்டின் தேவைகள் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு செலவு செய்யலாம் என்பதை இனி விளக்கமாகப் பார்ப்போம்.

Sunday, 25 November 2012

My 12th Financial Planning Article in Naanayam Vikatan on 25th November 2012

இனி எல்லாம் வளமே!
ந்த வாரம் பெரம்பூரிலிருந்து நிதி ஆலோசனைக் கேட்டு வந்திருந்தார் 29 வயதான பாலமுருகன். தனியார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மாதச் சம்பளம் 17,300 ரூபாய். இவரது மனைவி நர்மதா (வயது 24), தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். பிடித்தம் போக மாதச் சம்பளம் 13,500 ரூபாய். இவர்களின் ஒரு வயதான செல்ல மகன் ஸ்ரீஜேஷ்.
இன்ஷூரன்ஸ் விவரம்:
மகன் பெயரில் இரண்டு இன்ஷூரன்ஸ் பாலிசி மற்றும் தன் பெயரில் ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி என எட்டு லட்சம் கவரேஜுடன் மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வைத்திருக்கிறார். இதற்காக மாதம் 2,500 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார்.  
சொத்து விவரம்:
சொந்த ஊரான அரியலூரில் இருக்கும் மூன்று காலி மனைகள்.
1. 2,500 சதுர அடி - தற்போதைய மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய்.
2. 1,040 சதுர அடி - தற்போதைய மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய்.
3. 1,540 சதுர அடி - தற்போதைய மதிப்பு ஆறு லட்சம் ரூபாய்.
தேவைகள்:
மகனின் படிப்பிற்கு இன்றைய நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் சேமித்து வைக்க வேண்டும். இன்னும் 17 வருடம் பாக்கி இருக்கிறது.
25 வயதில் மகனுக்குத் திருமணம் செய்ய திருமண செலவிற்கு இன்றைய நிலையில் மூன்று லட்சம் ரூபாய் சேமித்து வைக்க வேண்டும். இன்னும் 24 வருடம் பாக்கி இருக்கிறது.
ஓய்வுக்காலத்திற்கு இன்றைய நிலையில் 10,000 ரூபாய் மாத வருமானம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
சில ஆண்டுகளுக்குள் வீடு கட்ட வேண்டும்.
மேலே சொன்ன பாலமுருகன் குடும்ப பொருளாதார விவரங்களின்படி நிதி ஆலோசனை சொல்லத் தயாரானார் பி.பத்மநாபன்.

இன்ஷூரன்ஸ் அவசியம்!
ஏற்கெனவே இவர் எடுத்து வைத்திருக்கும் பாலிசிகள் அனைத்தும் குறைந்த கவரேஜ் கொண்ட பாலிசிக்கு அதிக பிரீமியம் செலுத்தும்படியாக இருப்பதால், இந்த மூன்று பாலிசிகளையும் சரண்டர் செய்துவிடுவது நல்லது. இதனால் மாதம் 2,500 ரூபாய் மிச்சமாகும். அதை எதிர்காலத் தேவைகளுக்கான முதலீட்டிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கெனவே முதலீட்டுக்காக மீதம் இருக்கும் தொகை  5,050 ரூபாயுடன் 2,500 ரூபாயையும் சேர்த்து மொத்தம் 7,550 ரூபாய் எதிர்கால முதலீட்டிற்கு மீதம் இருக்கும்.
முதலில் பாலமுருகன் 30 லட்சம் ரூபாய்க்கும் (வருட பிரீமியம் 6,200 ரூபாய்), நர்மதாவுக்கு 25 லட்சம் ரூபாய்க்கும் (வருட பிரீமியம் 4,600 ரூபாய்) டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். இருவருக்கும் சேர்த்து 10,800 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டி இருக்கும். தற்போது இவர்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எதுவும் கிடையாது என்பதால் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து மூன்று லட்சம் ரூபாய்க்கு ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது அவசியம். இதற்கு வருட பிரீமியம் 6,500 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும். ஆக மொத்தம் புதிதாக எடுக்க இருக்கும் பாலிசிகளுக்கு பிரீமியம் கட்ட மாத பட்ஜெட்டில் 1,500 ரூபாய் ஒதுக்கி வைத்தால் போதும்.
மகனின் கல்விக்கு!
மகனை ஒரு நல்ல பட்டதாரியாக்க இன்றைய நிலையில் மூன்று லட்சம் ரூபாய் தேவை என்று கேட்டிருந்தார் பாலமுருகன். இன்று மகனுக்கு வயது ஒன்றுதான் என்பதால் இன்னும் கல்லூரிப் படிப்பை ஆரம்பிக்க 17 வருடங்கள் பாக்கி இருக்கிறது. வருடத்திற்கு 7% பணவீக்க அடிப்படையில் கணக்கிட்டால் மகனின் கல்விக்கு 17 ஆண்டுகள் கழித்து
15.79 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்கு இன்றைய நிலையில் மாதம் 2,000 ரூபாயை ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி ஃபண்டில் 1.12.12 முதல் 31.12.29 வரை முதலீடு செய்துவர வேண்டும். இந்த ஃபண்டில் நாம் எதிர்பார்க்கும் வருமானம் 15% கிடைத்தால் முதலீடு முதிர்வின்போது 18.57 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதை மகனின் கல்விச் செலவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
மகனின் திருமணத்திற்கு!
மகனுக்கு 25 வயதில் திருமணம் செய்துவைக்க இன்றைய நிலையில் மூன்று லட்சம் ரூபாய் தேவை என்று கேட்டிருந்தார். இன்னும் 24 ஆண்டுகள் கழித்து 7% பணவீக்க அடிப்படையில் 25.36 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்கு இன்றிலிருந்து மாதம் 1,000 ரூபாயை முதலீடு செய்துவர வேண்டும். முதலீட்டுக் காலம் 1.12.12 முதல் 31.12.36 வரை. 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ. டிஸ்கவரி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். முதலீடு முதிர்வின்போது கிடைக்கும் தொகை 27.83 லட்சம் ரூபாயைப் பயன்படுத்தி மகனின் திருமணத்தை சிறப்பானதாக முடிக்கலாம்.
வீடு வாங்க!
''வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. காலி மனைகள் ஏற்கெனவே இருக்கிறது என்பதால் அதில் கட்டலாமா? நாங்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதால் பணியிடத்து மாற்றம் இருக்கும்பட்சத்தில் வாடகை வீட்டில் இருப்பதுதான் சரியா? அல்லது சொந்தமாக வீடு கட்டி வாடகைக்கு விட்டு வருமானம் பார்க்கலாமா? அல்லது இடத்தில் முதலீடு செய்வது சரியா?'' என்று பாலமுருகன் பல கேள்விகளைக் கேட்டார்.
சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதுதான் பலரின் கனவு. எனவே, பாலமுருகன் தாராளமாக வீடு வாங்கலாம். ஆனால், அதற்குண்டான பொருளாதாரம்தான் குறைவு. எதிர்காலச் சேமிப்பிற்கு மீதமிருக்கும் தொகை 7,550 ரூபாய் மகனின் கல்வி, திருமணம், ஓய்வுக்கால மற்றும் புதிதாக எடுக்கச் சொல்லி இருக்கும் டேர்ம் மற்றும் ஹெல்த் பாலிசிகளுக்கான பிரீமியம் என அனைத்திற்கும் சரியாக இருக்கும். வங்கியில் கடன்  வாங்கலாம் என்றாலும் இ.எம்.ஐ. கட்ட இன்றைய வருமானத்தில் போதுமான அளவிற்கு தொகை கிடையாது. அதனால் இன்னும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு எங்கு வேலை அமைகிறது என்பதைப் பொறுத்து வீடு வாங்கத் திட்டம் போடுவது நல்லது. அதற்குள் இருவருக்கும் சம்பளம் ஓரளவுக்கு உயர்ந்திருக்கும். நகைக் கடனும் ஓரளவுக்குக் குறைந்திருக்கும்.  
ஓய்வுக் காலம்!
பாலமுருகனுக்கு சம்பளத்தில் எந்தப் பிடித்தமும் இல்லை என்பதால் இவரது சம்பளத்திலிருந்து கண்டிப்பாக ஓய்வுக் காலத்திற்கென்று ஒரு தொகையை ஒதுக்கியே ஆகவேண்டும். இவரின் மனைவிக்கு சம்பளத்தில் பி.எஃப். பிடித்தம் இருப்பதால் ஓய்வுக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை கைக்கு வரும். இவர் இன்றைய நிலையில் மாதம் 10,000 ரூபாய் இருந்தால் போதும் என்று சொல்லியிருந்தார். இவரின் ஓய்வுக்காலத்திற்கு இன்னும் 26 ஆண்டுகள் பாக்கி இருப்பதால் அன்றைய காலகட்டத்தில் மாதம் 58,000 ரூபாய் தேவைப்படும். மாதம் 58,000 ரூபாய் வருமானம் வருவதற்கு இவர் கையில் 1.13 கோடி ரூபாய் இருக்க வேண்டும். இதற்கு இன்றிலிருந்து மாதம் 3,000 ரூபாயை ஃபிராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்டுகளில் 1.12.12 முதல் 31.12.38 வரை முதலீடு செய்ய வேண்டும். முதலீடு முதிர்வின்போது கிடைக்கும் 1.13 கோடி ரூபாய் மற்றும் மனைவியின் அலுவலகத்தில் கிடைக்கும் பி.எஃப். தொகையையும் வருமானம் தரும் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து வைக்க வேண்டும். முதலீட்டுக் காலம் அதிகம் என்பதால் ஃபண்ட் முதலீடுகளை ஆண்டுக்கு ஒருமுறை நிதி ஆலோசகரின் உதவியோடு மறுபரிசீலனை செய்து பார்ப்பது அவசியம். வளம் பெற வாழ்த்துக்கள்!

Friday, 9 November 2012

Why Not Your SIP Will Deliver 15% CAGR in the Next 5 Years From Now?

Sensex closed at 19590 exactly on 5th November 2007 and after 5 years it is trading at 18762, which means, it is 4.42% discount till today, if you measure point to point returns!

If you look at the index funds (Passive Funds, Sensex Based) the average returns of 5 funds returns over the same period, close to -1.04% whereas the actively managed funds delivered 3.03%. The difference is 4.07%

If you look at the SIP returns the index funds delivered 7.2% whereas actively managed funds delivered 10.5% in the above said period.

If one assume, the SENSEX will only give 5% CAGR for the next 5 years (as on 5th November 2017), (one can't be more conservative than this assumption), then the lump sum investment would fetch 5.52% which is 5% CAGR for 5 years, (when index gives -1.04%, fund has delivered 4.07%, if the index delivered 5% CAGR then it would be 9.57%). Post tax 9.57% is still a good return in the next 5 years as far as conservative investors are concerned!!!

Whereas the SIP returns in the last 5 years average itself is 10.5% if you add another 5.52% one can easily expect 15% in SIP investments which is very good compared to single digit returns of any type of RDs are concerned.

Based on the above analysis, I would reiterate what I always recommend, one can easily expect 15% CAGR in a well-diversified equity mutual funds.

Sunday, 14 October 2012

My 11th Financial Planning Article in Naanayam Vikatan 14th October 2012

இனி எல்லாம் வளமே! 
ஃப்யூச்சர் பிளான் 
இந்த காலத்து இளைஞர்களுக்கு குடும்பத்தின் மீது அக்கறை இல்லை; ஜாலியாக இருக்க நினைத்து, ஊதாரித்தனமாக செலவு செய்வதில்தான் அவர்கள் கவனமாக இருப்பார்கள் என்று யார் சொன்னது. சேலத்திலிருந்து  27 வயதேயான நவநீதகிருஷ்ணன் தன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்கு நிதி ஆலோசனை கேட்டு வந்திருந்தார். அப்பா கந்தசாமி மற்றும் அம்மா மனோன்மணி இருவரும் சொந்த ஊரில் வசிக்க, இவர் சென்னையில் வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரின் மாதச் சம்பளம் 55,000 ரூபாய் (பிடித்தம் போக).
ங்கை பூரணி நாயகி பி.டெக் பட்டதாரி. இன்னும் ஓரிரு மாதங்களில் வேலை கிடைக்கும்பட்சத்தில் அவரது மாதச் சம்பளம் 30,000 ரூபாய் எதிர்பார்க்கலாம். தம்பி சொக்கலிங்கம் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். அவரின் மாதச் சம்பளம் 9,000 ரூபாய், அவரின் தேவைக்கு மட்டுமே சரியாக இருக்கிறது என்பதால், தம்பியின் வருமானத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஆக, இன்றைய நிலையில் குடும்பத்துக்கு கை கொடுப்பது நவநீதனின் மாதச் சம்பளம் மட்டுமே. இதில், அவரின் சென்னை வீட்டு வாடகை, உணவுச் செலவுகள் 10,000 ரூபாய்; வீட்டுக்குத் தருவது 8,000 ரூபாய்; இதுபோக எதிர்காலத் தேவைக்கு மீதமிருக்கும் தொகை 37,000 ரூபாய்.
சொத்து விவரம்!
தந்தையின் பெயரில் உள்ள சொந்த வீடு 20 லட்ச ரூபாய் மற்றும் மனை 1.30 லட்சம் ரூபாய்.
நவநீதகிருஷ்ணனின் பெயரில் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மனை.
தேவைகள்!
ஒரு வருடத்தில் நவநீதகிருஷ்ணன் திருமணம் செய்துகொள்ள ஐந்து லட்சம் ரூபாய் தேவை.
தங்கைக்கு மூன்று வருடத்திற்குள் திருமணம் செய்து வைக்க 14 லட்சம் ரூபாய் தேவை.
தம்பிக்கு திருமணம் செய்ய இன்னும் நான்கு ஆண்டுகள் கழித்து குறிப்பிட்ட தொகை தேவை.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் கார் வாங்க ஐந்து லட்சம் ரூபாய் தேவை.
இன்னும் ஐந்து ஆண்டுகளில் சென்னையில் ஃபிளாட் வாங்க 50 லட்சம் ரூபாய் சேர்க்க வேண்டும்.
ஓய்வுக் காலத்தில் இன்றைய நிலவரப்படி 20,000 ரூபாய் மாத வருமானம் தேவை.
நவநீதகிருஷ்ணன் தந்த விவரங்களை ஆராய்ந்து ஆலோசனை வழங்கினார் மை அசெட் கன்சாலிடேஷன் நிறுவனத்தின் இயக்குநரும், நிதி ஆலோசகருமான பி.பத்மநாபன்.
இன்ஷூரன்ஸ்!
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து வேலை செய்யும் அலுவலகத்திலேயே ஹெல்த் இன்ஷூரன்ஸ் இருக்கிறது. இது தவிர, 3.60 லட்சம் கவரேஜ் கொண்ட யூலிப் பாலிசி எடுத்து வைத்திருக்கிறார். இதற்கு பிரீமியம் கட்டும் காலம் முடிந்துவிட்டது. நவநீத கிருஷ்ணனின் வருமானத்தை மட்டுமே குடும்பம் நம்பியிருப்பதால், அவர் கண்டிப்பாக ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு வருட பிரீமியம் 15,000 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும்.
திருமணம்!
இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் செய்துகொள்ள ஐந்து லட்சம் ரூபாய் தேவை என்று கேட்டிருந்தார். ஏற்கெனவே வேலை செய்த நிறுவனத்தில் இருந்து விலகும்போது கிடைத்த பி.எஃப். தொகை 1.44 லட்ச ரூபாயுடன், எதிர்கால தேவைக்கு மீதமிருக்கும் தொகையிலிருந்து 6,000 ரூபாயை எடுத்து 1.5 லட்சம் ரூபாயாக ஒருமுறை மொத்தமாக தந்தையின் பெயரில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்ய வேண்டும். அப்பாவிற்கு வயது 60 என்பதால் மூத்த குடிமக்களுக்கான எஃப்.டி-ல் 10% வருமானம் கிடைக்கும். ஒரு வருடம் முதலீடு செய்தால் 1.65 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
அதற்கடுத்த மாதத்திலிருந்து எதிர்காலத் தேவைக்காக 37,000 ரூபாய் இருக்கும். அதிலிருந்து 27,000 ரூபாயை எடுத்து ஆர்.டி-ல் மாதாமாதம் ஒரு வருடத்திற்கு முதலீடு செய்து வந்தால், இதற்கு 9% வருமானம் கிடைக்கும்பட்சத்தில் 3.40 லட்சம் ரூபாய் கிடைக்கும். எஃப்.டி. வருமானம் 1.65 லட்சம், ஆர்.டி. வருமானம் 3.40 லட்சம் ரூபாய் என மொத்தம் 5.05 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதை பயன்படுத்தி திருமணத்தை முடிக்கலாம்.
தங்கையின் திருமணம்!
தங்கையின் திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகளில் 14 லட்ச ரூபாயை எதிர்பார்க்கிறார். எதிர்கால தேவைத் தொகை 37,000 ரூபாயிலிருந்து 27,000 ரூபாய் நவநீதகிருஷ்ணனின் திருமணத் தேவைக்கான முதலீடு போக மீதமிருக்கும் தொகை 10,000 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, இதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் 2.72 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.
இன்னும் ஓரிரு மாதங்களில் வேலை கிடைத்து அதன் மூலம் 30,000 ரூபாய் வருமானம் எதிர்பார்ப்பதால், அந்த வருமானத்தில் அவரின் தனிப்பட்ட செலவுகள் 10,000 ரூபாய் மற்றும் கல்விக் கடன் 1.2 லட்சம் இருப்பதாகச் சொல்லியிருந்தார். அதற்கு இ.எம்.ஐ. 5,000 ரூபாய் (இரண்டு ஆண்டுகளில் கல்விக் கடன் முடிந்து விடும்) போக மீதி இருக்கும் 15,000 ரூபாயை இரண்டு ஆண்டுகளுக்கு 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் கிடைக்கும் தொகை 4.08 லட்சம் ரூபாய். ஏற்கெனவே எடுத்து வைத்திருக்கும் யூலிப் பாலிசி இரண்டு ஆண்டுகளில் முதிர்வடைவதால் அதிலிருந்து
2 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆக, மொத்தம் 8.80 லட்சம் ரூபாய் கிடைத்துவிடும். மீதி தேவைப்படும் தொகைக்கு தனிநபர் கடன் எடுத்து தங்கையின் திருமணத்தை முடிக்கலாம். ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் 14% வட்டியில் நான்கு வருடங்களில் மாதம் 13,600 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும். தம்பியின் திருமணத்திற்கு அவர் சம்பாதிக்கும் பணத்தில் செய்யலாம் என்பதால் அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.
கார் வாங்க!
இன்னும் இரண்டு வருடத்தில் கார் வாங்க வேண்டும் என்றார். இன்றைய நிலையில் மற்ற தேவைகள் இருப்பதால் கார் வாங்கும் ஆசையை ஐந்து ஆண்டுகள் தள்ளிப்போடுவது நல்லது. இன்றைய நிலையில் 57,000 ரூபாய் சம்பளம் என்கிறபோது, இரண்டு ஆண்டுகள் கழித்து 10% சம்பளம் வருடத்திற்கு உயர்ந்திருந்தால் 65,000 ரூபாய் சம்பளம் வாங்குவார் நவநீத கிருஷ்ணன். நிகழ்கால செலவு 10,000 ரூபாய் என்பது அன்றைய நிலையில் அவரின் கல்யாணத்திற்கு பிறகு குடும்பத்தின் செலவு 25,000 ரூபாயாக இருக்கும். அம்மா அப்பாவின் செலவிற்கு 8,000 ரூபாய் கொடுத்தாலும் கையில் 32,000 ரூபாய் எதிர்கால சேமிப்பிற்கு மீதம் இருக்கும்.
இதிலிருந்து தனிநபர் கடனுக்கான இ.எம்.ஐ. 14,000 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். மீதமிருக்கும் 18,000 ரூபாயில் 7,000 ரூபாயை எடுத்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இதிலிருந்து கிடைக்கும் வருமானம் 3.19 லட்ச ரூபாய் மற்றும் 2 லட்ச ரூபாய் வாகனக் கடன் மூலம் கார் வாங்கிக் கொள்ளலாம். இதற்கு மாதம் 7,000 ரூபாய் வீதம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இ.எம்.ஐ. கட்ட வேண்டி இருக்கும். அதே நேரத்தில், மீதம் இருக்கும் 11,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்தால்
5.02 லட்ச ரூபாய் கிடைக்கும். இந்த தொகையை முன்பணமாகப் பயன்படுத்தி வங்கியில் வீட்டுக் கடன் 45 லட்ச ரூபாய் வாங்கிக்கொள்ளலாம். 18 வருடத்தில் 11% வட்டி விகிதத்தில் கடனை திரும்பக் கட்டினால் மாத தவணை 48,000 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும்.
ஓய்வுக் காலம்!
நவநீதனின் ஓய்வுக் காலத்துக்கு இன்னும் 18 ஆண்டுகள் இருக்கிறது. அன்றைய நிலையில் இவரின் மாதச் செலவுக்கு மாதம் 95,000 ரூபாய் தேவை. அதற்கு 1.10 கோடி ரூபாய் இவர் கையில் இருக்க வேண்டும். இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து 10% சம்பள உயர்வின்படி 90,000 ரூபாய் சம்பளம் பெறுவார். இதிலிருந்து குடும்பச் செலவுகள் போக, மாதம் இ.எம்.ஐ. போக மீதி இருக்கும் தொகையில் 10,000 ரூபாயை எடுத்து 18 ஆண்டுகள் 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். முதலீடு முதிர்வின்போது 1.10 கோடி ரூபாய் கையில் கிடைக்கும். இதுபோக ஓய்வுபெறும்போது பி.எஃப். மற்றும் பணிக் கொடையாக 70 லட்ச ரூபாய் கிடைக்கும்.
நவநீத கிருஷ்ணனின் வாழ்க்கை இனிதாக அமைய வாழ்த்துகள்!

Sunday, 26 August 2012

Retirement Planning - Innovative Solution in Naanayam Vikatan 26th August 2012

ஓய்வுக்காலத் திட்டம்: இனி தேவை இல்லை பயம்!
ம்ம வீட்ல ஒரு மா மரத்த வெச்சு தினமும் தண்ணி ஊத்துறோம்... எதுக்காக? பின்னாளில் அது காய்ச்சு நமக்கு பழம் கொடுக்கும்ங்குற நம்பிக்கையிலதானே..? - கடைசி காலத்தில் பிள்ளைகளின் கவனிப்பு கிடைக்காமல் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் பெற்றோர்களுக்கு மிகவும் பிடித்த சினிமா வசனம் இது!

''ஆனால், ஓய்வுக்காலத்துக்காக முறையாகத் திட்டமிடாமல் இருந்துவிட்டு, பெற்றோர்கள் பிள்ளைகளை குறை சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. பிள்ளைகளின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றிய பெற்றோர்கள், தமது ஓய்வுக் காலத்திற்கென்று திட்டமிடாமல் இருந்தது அவர்களின் தவறே! தவிர, இன்றைக்கு இருக்கும் விலைவாசி நிலவரம் நாம் ஓய்வுபெறும்போது இருக்குமா என்றால் இருக்காது. நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்துதான் வருகிறது. எனவே, இன்று முதல் ஓய்வுக்காலத்திற்குத் திட்டமிடுவது அவசியம்'' என்கிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.  

அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பென்ஷன் கிடைப்பது போல, தனியார் நிறுவனங்களில் வேலை செய்கிறவர்களும் தமது ஓய்வுக்காலத்தில் தாமாகச் சேமித்து வைத்த தொகையிலிருந்து எப்படி பென்ஷன் பெறலாம்? அது போக அதிலிருந்து ஓய்வுக்காலத்தில் கிடைக்கும் மொத்த வருமானம் எவ்வளவு இருக்கும்? என்பதைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் அவர்.

''இந்திய அரசு சார்ந்த வேலைகளை செய்கிறவர்களுக்கு அவர்களின் மாதச் சம்பளத்தில் 10% தொகை பிடித்தம் செய்து சேமிக்கப்பட்டு அதிலிருந்து பென்ஷன் வழங்கப்படுகிறது. இந்த பென்ஷன் திட்டத்தில் இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று, சேமித்த மொத்தப் பணத்தில் மூன்றில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டு, மீதி இருக்கும் பணத்திலிருந்து மாதாமாதம் பென்ஷன் பெறலாம். அல்லது மொத்தப் பணத்திலிருந்தும் பென்ஷன் வாங்கலாம்.

பென்ஷன்தாரர் இறந்த பின்னர் அவருக்கு கிடைத்த மாத பென்ஷனிலிருந்து, மனைவியின் வாழ்க்கைக் காலம் வரை மாதாமாதம் 50% தொகை கிடைக்கும். அவருக்குப் பிறகு அவர்களின் பிள்ளைகளுக்கு பென்ஷன் தொகை எதுவும் கிடைக்காது. மறைமுகமாகச் சேமிக்கப்படும் இந்த தொகை அவர்களின் ஓய்வுக்காலத்தில் நிச்சயம் பேருதவியாக இருக்கிறது.

ஆனால், தனியார் நிறுவனங்களில் வேலை செய்கிறவர்களுக்கும், சொந்தமாகத் தொழில் செய்பவர்களுக்கும் இந்த வசதி இல்லை. இவர்கள் ஓய்வுக்கால நிதித் திட்டமிடலைச் செய்யாமல் விடும்போது, பிள்ளைகளின் தயவை எதிர்பார்த்து நிற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். அவர்களால் கைவிடப்படும்போது பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். எதிர்காலத்தில் வரப்போகிற இந்த சிக்கலைத் தவிர்க்க இப்போதே ஓய்வுக்கால வாழ்க்கைக்குத் திட்டமிடுவது அவசியம்.

இதற்கு ஒரேவழி, அரசு பணியாளர்களைப் போலவே தனியார் நிறுவன ஊழியர்களும் தங்களது மாதச் சம்பளத்திலிருந்து 10 சதவிகிதத் தொகையை ஓய்வுக்காலத்திற்காக ஒதுக்குவதே! இந்த முதலீட்டை ஓய்வுக்காலம் வரை தொடரவேண்டும். இதன்மூலம் கிடைக்கும் தொகையிலிருந்து அவரவர் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. உதாரணத்திற்கு ஒருவருக்கு இதுபோன்று வந்த முதலீட்டுத் தொகை 12 லட்சம்  ரூபாயை கீழே தரப்பட்டிருக்கும் திட்டத்தின் அடிப்படையில் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம்.

கடந்த 17 ஆண்டுகளில் ஏற்ற இறக்கத்திலும் லாபம் ஈட்டி தந்திருக்கும் இரண்டு பேலன்ஸ்டு ஃபண்டுகளை எடுத்துக்கொள்வோம். ஒன்று, ஹெச்.டி.எஃப்.சி. புரூடென்ஸ் ஃபண்ட், மற்றொன்று பிர்லா சன் லைஃப் 95. இந்த இரண்டு ஃபண்டுகளும் கடந்த பதினேழு ஆண்டுகளாக பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருந்தாலும், இறுதியில் இன்று நல்ல வருமானத்தைக் கொடுத்து வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு மேலே சொன்ன ஹெச்.டி.எஃப்.சி. புரூடென்ஸ் ஃபண்டுகளில் 12 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருந்தால், வருடத்திற்கு 10 சதவிகிதம் என்ற கணக்கில் மாதா மாதம் சிஸ்டமெட்டிக் வித்டிராயல் பிளான் (ஷிகீறி) முறையில் 10,000 ரூபாய் அதிலிருந்து பென்ஷன் தொகையாக (அனுமானம்) எடுத்தது போக, பத்தாண்டு இறுதியில் 79.72 லட்சம் ரூபாய் மொத்த வருமானம் கிடைத்திருக்கும்.
அதேபோல் பிர்லா சன் லைஃப் 95 ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தால், பென்ஷன் தொகையாக எடுத்ததுபோக 51.96 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். 

அதேபோல் 1995-2005, 1996-2006 என்கிற பத்தாண்டு அடிப்படையில் முதலீடு செய்திருந்தால் மாதா மாதம் 10,000 ரூபாய்  எடுத்தது போக, குறைந்தபட்சம் 40 லட்சம் ரூபாயும், அதிகபட்சம் ஒரு கோடி ரூபாயும் வருமானமாக கிடைத்திருக்கும். இந்த தொகை முதலீட்டாளருக்குப் பயன்படுவது மட்டுமல்லாமல் அவரின் மனைவி மற்றும் வாரிசுகளுக்கும் பயன்படும்.
பொதுவாக அனைவருக்குமான சமீபத்திய முதலீடு தங்கமும், ரியல் எஸ்டேட்டுமாகத்தான் இருக்கிறது. கண்ணுக்குத் தெரியும் பொருட்கள் என்பதால் அந்த இரண்டில் மட்டுமே காசை கொட்டி முதலீடு செய்கிறார்கள் மக்கள். பங்குச் சந்தையில் எப்படி ஏற்ற இறக்கம் சகஜமோ, அதேபோலத்தான் இதுபோன்ற முதலீடுகளிலும் ஏற்ற இறக்கம் உண்டு. அதற்காக அதில் முதலீடு செய்யக் கூடாது என்று சொல்லவில்லை. அதில் மட்டுமே முதலீடு செய்வது தவறு!

ஓய்வுக்காலத்தில் பெரும்பாலானவர்கள் ரிஸ்க் குறைவு என்பதால், அஞ்சலக ஆர்.டி, பேங்க் எஃப்.டி. போன்ற முதலீட்டு இடங்களையே தேர்வு செய்கிறார்கள். அதை மட்டுமே தேர்வு செய்யாமல் மேலே சொன்னதுபோல பேலன்ஸ்டு ஃபண்டுகளையும் தேர்வு செய்து நமது வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளலாம்.
ஓய்வுக்காலத் தொகையிலிருந்து  (பி.எஃப்., பணிக் கொடை) 50% தொகையை இதுபோன்று பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்துவிட்டு, மீதி தொகையை அஞ்சலக ஆர்.டி, ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற ரிஸ்க் குறைவானவற்றில் முதலீடு செய்யலாம்.

இன்னொரு விஷயம், நீண்ட கால முதலீடு (10-15 ஆண்டுகள்) என்கிறபோது ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்கள் தாராளமாக ரிஸ்க் எடுக்கலாம். என்னதான் பங்குச் சந்தை ஏறி இறங்கினாலும் நீண்ட கால அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் கிடைக்கிற லாபம் ஆர்.டி., எஃப்.டி. அளிக்கும் லாபத்தைவிட அதிகமாகவே இருக்கும்!

குறிப்பு: கடந்த 10, 15 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிலவரங்களின் அடிப்படையில் மேலே சொல்லப்பட்டிருக்கும் வருமானம் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் சந்தை நிலவரப்படி இந்த வருமானம் மாற்றத்துக்குட்பட்டது.

Sunday, 12 August 2012

My Article on Credit Card in Naanayam Vikatan 12th August 2012

கிரெடிட் கார்டு கட்டணம்: கவனமா இருந்தா காசு மிச்சம்!
''இன்றைக்கு கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பலருக்கு அதன் கட்டண முறை பற்றி சரியாகத் தெரியவில்லை. தெரிந்துகொள்ள கவனம் செலுத்துவதுமில்லை. இதனாலேயே பலவகையான மறைமுக கட்டணத்தைச் செலுத்தி, பின்பு புலம்புகிறார்கள். இந்த கட்டண விவரங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டால், கண்டிப்பாக காசை மிச்சப்படுத்தலாம்'' என்கிறார் நிதி ஆலோசகர் பத்மநாபன். கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வசூலிக்கும் பல வகையான கட்டணங்கள் பற்றி அவரே விளக்கிச் சொன்னார்.
   கட்டணங்களின் வகை!
சேர்க்கைக் (அறிமுகக்) கட்டணம், ஆண்டுக் கட்டணம், பணம் எடுத்தலுக்கான கட்டணம், வட்டி, நிதிக் கட்டணம், காலதாமதக் கட்டணம், சேவைக் கட்டணம் என பல கட்டணங்கள் உண்டு. இனி ஒவ்வொரு கட்டணத்தையும் பார்ப்போம்.
அறிமுகம் மற்றும் ஆண்டுக் கட்டணம்!
பெரும்பாலான வங்கிகள் இந்த இரண்டு கட்டணங்களும் இல்லாமல் கிரெடிட் கார்டுகளை தருகின்றன. ஆனால், சில கார்டுகளில் நாம் குறிப்பிட்ட அளவு செலவு செய்யாவிட்டால் அதற்கு அடுத்த ஆண்டில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த கட்டணத்தைத் தவிர்க்க கிரெடிட் கார்டு வாங்கியவுடன் கட்டணம் குறித்த விவரங்களை உறுதிபடுத்திக்கொள்வது நல்லது.
சில கார்டுகளுக்கு முதலில் நாம் 5,000 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும். அதற்கு தேவையான அளவு கூப்பன்கள் தருவார்கள். இது மாதிரியான விஷயங்கள் அதிக வருமானம் பெறுபவர்களுக்குத்தான் பொருந்தும் என்பதால் கூப்பன் தருகிறார்கள் என்பதற்காக எல்லோரும் இதில் ஈடுபாடு காட்டுவது நல்லதல்ல.

நகல் ஆவணக் கட்டணம்!
பெரும்பாலான கிரெடிட் கார்டுகளின் ஸ்டேட்மென்ட்கள் தபால் மற்றும் மின்னஞ்சலில் வரும். இதை பத்திரப்படுத்தாமல் தொலைத்துவிட்டால் தேவை என்கிறபோது வங்கியில் நகல் ஆவணம் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், இதை பெற 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

வட்டி மற்றும் சேவைக் கட்டணம்!
ஸ்டேட்மென்ட் வந்த இருபது நாட்களில் நாம் பணத்தைக் கட்ட வேண்டும். தவறினால் அதற்கு 2.5% முதல் 3.5% வரை மாதந்தோறும் தினசரி கூட்டு வட்டி முறையில் கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக. ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு பொருள் வாங்கியிருந்தால் அவருக்கு வருடத்திற்கு 35% முதல் 52% வரை வட்டி கட்ட வேண்டி இருக்கும். வட்டிகளிலேயே மிகவும் அதிகமான வட்டி என்றால் அது கிரெடிட் கார்டு வட்டிதான்.
தாமதக் கட்டணம்!
நாம் குறிப்பிட்ட தேதியில் பணத்தைச் செலுத்தாவிட்டால் தாமதக் கட்டணமாக 300-600 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, நீங்களும் உங்களது நண்பரும் உணவு விடுதியில் 200 ரூபாய் செலவழித்திருக்கிறீர்கள் என்றால் அதற்குகூட கட்டணமாக 300 ரூபாய் தாமதக் கட்டணமாகக் கட்ட வேண்டி இருக்கும். இதனால் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் முடிந்த மட்டில் தாமதமாகப் பணம் செலுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

பணம் எடுக்க கட்டணம்!
எக்காரணத்தைக் கொண்டும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கக் கூடாது. அதற்கு 2.55% வட்டி வசூலிக்கப்படுகிறது அல்லது 250 ரூபாய் மினிமம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். நமக்கு ஒதுக்கப்பட்ட தொகையைத் தாண்டி செலவு செய்ய சில கிரெடிட் கார்டுகள் உதவுகின்றன. ஆனால், இதற்கு 300 முதல் 600 வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
மறைமுகக் கட்டணம்!
ஒரு லட்சம் மதிப்பிலான கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களால் முழுமையாகப் பணம் செலுத்த முடியவில்லை என்றால் 80% உபயோகத்தை மற்ற கார்டுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். இதனால் கூடுதல் கால அவகாசம் கிடைப்பதுடன், சில கார்டுகளில் குறைந்த வட்டியுடன் அந்த பணத்தை தவணை முறையிலும் செலுத்தலாம். இதற்கு மறைமுக கட்டணங்கள் இருக்கும். அதை உறுதிப்படுத்திய பிறகு மாற்றுவது அவசியம்.
கிரெடிட் கார்டுகளை சரியாக பயன்படுத்தினால் அது எமன் அல்ல,  நண்பன்தான் என்பதை உணர்வீர்கள்!