ஏன் நமக்கு முதலீட்டு ஆலோசகர் தேவை?
இன்று பெரும்பாலோர் தவறான முதலீட்டை மேற்கொள்வதற்கு மிக மிக முக்கிய காரணம், அந்த முதலீடு ஒரு தகுதியுடைய ஆலோசகரின் உதவியால் செய்யப்படாததே! ஆம்! இப்படிச் சொன்னால் நிறைய பேர் அதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இது பாதி சரி, பாதி தவறு.
பாதி சரி, ஏனெனில் பெரும்பாலான முதலீடு ஒருவரின் உதவியுடன்தான் செய்யப்படுகிறது. பாதி தவறு, ஏனெனில் அவர் ஒரு முகவரா அல்லது ஒரு முதலீட்டு ஆலோசகரா என்பதே.
இன்று நாம் ஒரு மொபைல் போன் வாங்குவதற்கு நிறைய நேரம் செலவிடுகிறோம், அதனுடைய ஆயுள் அதிகபட்சம் ஒரு வருடமோ அல்லது 2 வருடமோதான். ஆனால் நம்முடைய முதலீடுகள் பல ஆண்டுகளுக்கும் பயன் தரக்கூடிய ஒன்று, ஆனால் அதற்கு நாம் சிறிது நேரம் கூட செலவிடத் தயாராக இல்லை என்பது வருந்தத்தக்க உண்மை.
நாம் அனைவரும் முன்பு கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தோம், அப்போது பணத்தை பராமரிப்பது என்பது பெற்றோர்களின் பொறுப்பு. ஏதாவது வேண்டும் என்றால் பெற்றவரிடம் கேட்டுத்தான் செலவு செய்யவேண்டிய நிர்பந்தம். அதாவது நம்முடைய தேவைகள் நியாயப் படுத்தப்படும்போதே, நமக்கு பணம் கிடைக்கும். இன்று தேவைகள் மற்றும் பணம் இரண்டுமே நம் கையில்! இதை நகைச்சுவையாக சொன்னால் திருடன் கையில் சாவி?. மேலும் நம்முடைய தேவைகள் பெரும்பாலும் நம்மைச் சுற்றி வசிப்பவரின் வாழ்க்கை முறையையே சார்ந்துள்ளது, நம்முடைய உண்மையான தேவையை சார்ந்து இல்லாததே இதற்கான காரணம்.
சிலர் சொல்வார்கள், நாங்கள் எந்த ஒரு ஆலோசகரின் உதவியை நாடியதில்லை, நாங்கள் நன்றாகத்தான் இருக்கிறோம் என்று. அந்தக் காலத்தில் ஒரு நிதி ஆலோசகரின் தேவை இல்லாமல் இருந்ததற்கான காரணம், நம்முடைய தேவைகள் கட்டுக்குள் இருந்தது, அதோடு யாரும் சொத்து சேர்ப்பதற்காக தங்களுடைய வாழ்க்கையைத் தொலைக்கவில்லை. பணவீக்கம் கட்டுப்பாட்டிற்குள், மேலும் வங்கியில் கிடைத்த வட்டியும் அதிகம். முதலீட்டு வகைகளும் கொஞ்சம்தான். அந்தக் காலத்தோடு ஒப்பிடுவது சரியானதல்ல.
நம்முடைய கல்வியினால் நமக்கு வேலை கிடைக்கிறது, ஆனால் எந்த ஒரு கல்வியும், பணத்தின் அவசியத்தையும், அதை எவ்வாறு உபயோகிப்பது என்று இது வரை சொல்லித் தந்ததில்லை. ஒரு விஷயம் 23 வருடம் (ஒருவர் வேலைக்கு செல்லும் சராசரி வயது) யாரும் சொல்லிதராதது? நம்முடைய கைக்கு நிறைய பணம் வந்தவுடன் நமக்கு கையும், காலும் புரியமால் அதை எப்படி உபயோகிப்பது எனத் தெரியாமல் மாட்டிகொண்டு முழிக்கவேண்டியதாக உள்ளது.
இன்று பணத்தை சிறந்த வழியில் எப்படி முதலீடு செய்வது என்பதைவிட, தேவை இல்லாததை செய்யாமல் இருந்தாலே நம்முடைய வாழ்க்கை நன்றாக இருக்கும். இன்று எவ்வளவு தான் கரடியாக கத்தினாலும் பணவீக்கத்தை பற்றியோ அதனுடைய வாங்கும் திறன் (பர்சேஸிங் பவர்) பற்றியோ இன்னும் விழிப்புணர்வு வரவில்லை என்பது மிகவும் கசப்பான உண்மை.
இன்று தொலைக்காட்சியின் கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலம் மற்றும் நம்மை இடை விடாமல் நம்முடைய மொபைல் மூலம் தொடர்பு கொண்டு நம்மை இதை வாங்கிக்கொள், அதை வாங்கிக்கொள் என்று அடிக்கடி தொந்தரவு செய்வதால் நாம் ஏதாவது ஒன்றில் மாட்டிக் கொள்கிறோம். இன்று சில முதலீட்டாளர்கள் இந்த மாதிரி தொந்தரவிலிருந்து தப்பிப்பதற்கு தங்களுடைய ஆலோசகரின் நம்பரைக் கொடுத்து அவர் ஓகே சொன்னால் நான் வாங்கிகொள்கிறேன் என்று சொல்வதால் நிறைய தேவையற்ற முதலீட்டில் இருந்து எளிதாக தப்பித்துக்கொள்கிறார்கள்.
நம்முடைய பெரும்பாலான தேவைகளுக்கு அதில் யார் நிபுணரோ அவரையே நாடுகிறோம், ஆனால் முதலீடு என்று வரும்போது நாமே செய்து கொள்ளலாம் அல்லது தெரிந்தவர்களிடம் கேட்பது என்று தவறான முடிவையே மேற்கொள்வதால் எவ்வளவு சம்பாதித்தும் போதவில்லை என்ற வார்த்தையே மிஞ்சுகிறது. காரணம் கை நிறைய பணம், 4 பக்கங்களிலும் அதற்கு வேட்டு வைப்பதற்கு பலர் முயற்சிக்கிறார்கள், நம் கல்வியில் இந்த ஒரு சூழ்நிலையை பற்றி சொல்லித்தந்ததில்லை, அதனால் பலரும் மாட்டிக்கொள்கிறோம்.
இன்று நமக்குத் தேவையான மருந்தை நாம் நேரடியாக பார்மசியில் வாங்கிக்கொள்ள முடியும், ஆனால் ஒரு டாக்டரிடம் செல்லும்போது அவர் பல கேள்விகளைக் கேட்பதன் மூலம் நம்முடைய உடலின் உண்மை நிலையை அறிந்து அதற்கேற்ப தகுந்த மருந்தை பரிந்துரைப்பதால் நாம் எளிதில் குணமடைவதோடு, அதன் காரணம் கண்டும் நம்மிடம் சொல்வதால் வருங்காலங்களில் சிறப்பாகச் செயல்பட முடிகிறது. இந்த அத்தனை விஷயங்களும் நம்முடைய முதலீட்டிற்கும் பொருந்தும்.
நம்முடைய செலவுகள் யாவும் நம்மை பொறுத்தவரை நியாயமானது, ஆனால் ஆலோசகர் என்பவர் நம்முடைய விருப்பத்தைவிட நம் நீண்ட கால இலக்குகள் பெரிதாக இருந்தால் சிலவற்றை குறைத்துக்கொள்ளச் சொல்வார்கள். எப்படி ஒருவரின் உடலைப் பற்றி மருத்துவர் நன்கு அறிவாரோ அதே போல, நமது வெல்த் பற்றி முதலீட்டு ஆலோசகர் நன்கு அறிவதால் இன்று அவர்களை ஃபைனான்சியல் டாக்டர் என்றும் அழைக்கிறோம்.
ஓகே, நீங்கள் சொல்வதெல்லாம் சரி, எப்படி ஒரு சிறந்த ஆலோசகரை இனம் கண்டு கொள்வது?
1. நம்முடைய முதல் சந்திப்பில் அவரது கவனம், நம்மைப் பற்றியும் நம்முடைய முதலீடு எவ்வாறு செய்யப்பட்டது என்பதைப் பற்றி பேசுகிறார்களா அல்லது என்னிடம் ஒரு சிறந்த முதலீட்டுத் திட்டம் உள்ளது என்று அவரிடம் உள்ள திட்டத்தை நம்மிடம் திணிக்கிறார்களா என்று கண்டு கொள்ளவேண்டும்.
2. அவருடைய அணுகு முறை ஒரு தீர்வை ஒட்டி இருக்கிறதா அல்லது நம்மிடம் அது வலுகட்டாயமாகத் தள்ளப்படுகிறதா?
3. அவர் முழு நேர ஆலோசகரா அல்லது பார்ட் டைம் ஆலோசகரா? அவர் எவ்வளவு காலம் இதில் ஈடுபட்டிருக்கிறார், அவரிடம் அதற்கான தகுதிச் சான்றிதழ் மற்றும் அவரது முன் அனுபவம் என்ன என்பதெல்லாம் நாம் கண்டறியவேண்டும்.
4. ஒரு ஆலோசகர் எல்லோருக்கும் பொருந்துவது கடினம், எனவே அவர் நமக்கு ஒத்துவருவாரா என்பதை நாம் ஒரு இரண்டு அல்லது மூன்று ஆலோசகரை சந்தித்தபின் முடிவு செய்வது நல்லது. ஏனெனில் நாம் நம்முடைய ஃபைனான்சியல் பற்றி எல்லா தகவலையும் தெரிவிக்கவேண்டும். நாம் அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தால் நாம் நிறைய பேருக்கு அதைத் தெரிவிக்க வேண்டி வரலாம் அது நல்லதல்ல.
5. கடைசியாக நாம் அவருடைய சர்வீசை உபயோகிக்கும்போது அவருக்கு சர்வீஸ் சார்ஜ் கொடுக்கவேண்டும்.
நம்முடைய உடலை நாமே பார்த்துக்கொள்வது என்பது ஒரு சவாலான விஷயம், அது முடியாததால் இன்று பிட்னஸ் (Gym) என்று சொல்லகூடிய ஒரு புதிய தொழிலே உருவாகியுள்ளது. நிறைய பேர் அதில் தினந்தோறும் சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். நம்முடைய இன்றைய வேலை முறை, அதனுடைய டென்ஷன், மேலும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது, மற்றும் Junk Food இதெல்லாம் காரணம்.
எல்லோருக்கும் இது சவாலான விஷயம். அதே போல நமக்கு நிதி ஆலோசகரின் உதவி இருந்தால் நம்முடைய வெல்த் நன்றாக பராமரிக்கப்படும்.
சாராம்சம்: மேலை நாடுகளில் கடந்த 20 ஆண்டு காலமாக நிதி ஆலோசகர் மூலம் செய்த முதலீடே சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. அது நமக்கும் பொருந்தும்.
நம்முடைய செலவில் ஒரு ஒழுங்குமுறை, தேவையற்றவற்றை தவிர்த்தல், நம் இலக்குகளை இனம் கண்டு அதற்கு ஒரு ரோடு மேப் போட்டு தருவதால் நாம் டென்ஷன் தவிர்த்து அனைத்தையும் அடைய முடிகிறது. ஒரு ஆலோசகரின் உதவியுடன் பயணிக்கும்போது அந்த பயணம் ஒரு சுகமான அனுபவத்துடன் நம்முடைய இடத்தை அடைய முடிகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
No comments:
Post a Comment