Pages

Sunday, 29 July 2012

My Tenth Financial Planning Article in Naanayam Vikatan on 29th July 2012

இனி எல்லாம் வளமே!
''நாணயம் விகடனில் நீங்கள் தரும் நிதி ஆலோசனை பகுதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிகத் தெளிவாக, புரியும் விதத்தில் விளக்கமாகத் தருகிறீர்கள். இதர வாசகர்களின் குடும்ப நிதி ஆலோசனைகளில் இருந்தும்கூட புதுப்புது நிதித் திட்டமிடல் விஷயங்களை எங்களால் கற்றுக்கொள்ள முடிகிறது. அந்த வகையில் எங்கள் குடும்பத்திற்கும் நிதி ஆலோசனை கிடைத்தால் நன்றாக இருக்கும்'' என்று தஞ்சாவூரில் இருந்து போன் செய்திருந்தார் வாசகர் என்.கார்த்திகேயன்.
இவருக்கு இப்போது 52 வயது. இத்தனை காலம் திட்டமிடல் இல்லாமல் இருந்தாலும், இனியாவது திட்டமிட்டு வாழ வேண்டும் என்கிற உற்சாகத்தோடு வந்திருந்தார் கார்த்திகேயன்.
''நான், என் மனைவி சாந்தி, மகன் சித்தார்த் (11-ம் வகுப்பு படிக்கிறான்) என மூன்று பேர் அடங்கிய அளவான குடும்பம். நான் அரசு நிறுவனத்தில் துணை தலைமை பொறியாளராக (பொறுப்பு) வேலை பார்க்கிறேன். என் மாதச் சம்பளம் பிடித்தம் போக 40,000 ரூபாய். வீட்டுச் செலவுகள், கல்விச் செலவுகள், தனிநபர் கடனுக்கான இ.எம்.ஐ., இன்ஷூரன்ஸ் பிரீமியம், மெடிக்ளைம், அலுவலக பி.பி.எஃப். சேமிப்பு, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஆர்.டி. என மாதம் 38,000 ரூபாய் செலவாகிறது. எதிர்காலத் தேவைக்கு சேமிக்க கையில் இருக்கும் தொகை 2,000 ரூபாய்.
எதிர்காலத் தேவைகள் என்னவென்றால், எனது ஓய்வுக்காலத்திற்குத் தேவையான தொகை சேமிப்பு. வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு ஓய்வுக்கால வாழ்க்கையை மனைவி, மகனுடன் சொந்த ஊரான மயிலாடுதுறையில் நிம்மதியாக கழிக்க வேண்டும் என்பது என் ஆசை. அங்கு தங்குமிடம் மற்றும் உணவுச் செலவு குறைவுதான் என்பதால் மாதம் 25,000 ரூபாய் இருந்தால் போதுமானது.
இது தவிர, மகனின் கல்விச் செலவுக்கான பணத்தையும் சேமிக்க வேண்டும். அவனை நன்கு படிக்க வைத்து, ஒரு நல்ல நிலைமைக்கு உயர்த்திவிட்டாலே போதும் அவனது எதிர்காலத்தை அவனே தீர்மானித்துக் கொள்வான்'' என்றவர், தனது குடும்பத்தின்      வரவு - செலவு விவரங்கள், சொத்து விவரங்கள் குறித்தும் விளக்கமாகச் சொன்னார்.
''தஞ்சாவூரில் இருபது லட்சம் மதிப்பிலான வீட்டுமனை, தஞ்சை வல்லம் பகுதியில் இரண்டு லட்சம் மதிப்பிலான வீட்டுமனை மற்றும் மயிலாடுதுறையில் உள்ள பூர்வீகச் சொத்தில் எனது பங்கு 10 லட்சம் ரூபாய் என மொத்தம் 32 லட்ச ரூபாய் சொத்து தற்போது இருக்கிறது. இதிலிருந்து சிறிதளவு வருமானமும் இருக்கிறது. இத்தனை இருந்தும் எங்களுக்கு நிதி தொடர்பான வழிகாட்டல்தான் இல்லை. நீங்கள்தான் எங்களுக்கு நல்ல வழியைக்காட்ட வேண்டும்'' என்றவருக்கு, நிதி ஆலோசனை வழங்கினார் மை அசெட்ஸ்  கன்சாலிடேஷன் இயக்குநர் பி.பத்மநாபன்.
''பெட்டர் லேட் தென் நெவர் என ஆங்கிலத்தில் பழமொழி உண்டு.           52 வயதானாலும் இன்னும்கூட வாழ்க்கையை சீர்படுத்திக்கொள்ள முடியும் என்று முயற்சிக்கும் இவருக்கு முதலில் என் வாழ்த்துகளும், பாராட்டுகளும். அவர் கொடுத்திருக்கும் வரவு-செலவு பட்டியலைப் பார்க்கும்போது வீட்டு நிர்வாகத்தைப் பொருளாதார அடிப்படையில் சரியாக நடத்தி வருகிறார். வரவுக்கு ஏற்ற செலவு என்கிற மாதிரியாகத்தான் இருக்கிறது இவரின் வீட்டு நிர்வாகம். சம்பாதிக்கும் தொகை முழுவதையும் செலவு செய்து விடாமல் எதிர்காலத் தேவை கருதி மியூச்சுவல் ஃபண்ட், ஆர்.டி.யிலும் முதலீடு செய்து வருகிறார். முதலில் இவர் கவனம் செலுத்த வேண்டிய விஷயம் இன்ஷூரன்ஸ்.

இன்ஷூரன்ஸ்!
ஏற்கெனவே எடுத்து வைத்திருக்கும் ஒன்பது லைஃப் இன்ஷூரன்ஸ் (கவரேஜ் 9 லட்சம் ரூபாய்) பாலிசிகளுக்காக மாதம் 4,300 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார். இதில் ஆறு பாலிசிகள் இன்னும் கொஞ்ச காலத்தில் முடிவடையும் தருவாயில் இருக்கின்றன. அதை அப்படியே தொடரலாம். மீதி இருக்கும் இரண்டு யூலிப் பாலிசிகளை உடனடியாக சரண்டர் செய்துவிடலாம். ஐந்து லட்சம் கவரேஜ் கொண்ட டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை முடியும்போது தொடராமல் அப்படியே விட்டுவிடலாம்.
இதற்குப் பதிலாக,         25 லட்சம் ரூபாய்க்கு தனியாக டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை உடனடியாக எடுக்க வேண்டியது அவசியம். இதற்கு வருடம் 12,500 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டி இருக்கும். அது போக குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து குறைந்தபட்சம் மூன்று லட்சம் ரூபாய்க்கு மெடிக்ளைம் ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துக் கொள்வது அவசியம். இதற்கு வருட பிரீமியம் 14,150 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும்.

மகனின் கல்விக்கு!
மகனை மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தகுதி அடிப்படையில் தேர்ச்சி பெற்றுவிட்டால் 12 லட்சம் ரூபாயும், இல்லாவிட்டால் 20 லட்சம் ரூபாயும் தேவைப்படும் என்றார். கல்லூரிப் படிப்பை ஆரம்பிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் இருக்கிறது என்பதால், இவர் எதிர்பார்க்கும் தொகையை முதலீட்டின் மூலம் குறுகிய காலத்திற்குள் ஈட்ட முடியாது. கல்விக் கடன் பெறுவதன் மூலமாகவோ அல்லது சொத்து இருப்பதால் அதை பயன்படுத்தியோ மகனை மருத்துவம் படிக்க வைக்கலாம்.
ஓய்வுக்காலத்திற்கு..!
ஓய்வுக்காலத்திற்கு இன்னும் ஏழு ஆண்டுகள்தான் பாக்கி இருக்கிறது. அதற்கு மாதம் 25,000 ரூபாய் வருமானம் வருவதற்கு முதலீட்டை இன்றிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
ஓய்வுபெறும்போது அலுவலகத்தில் இருந்து பணிக்கொடை 10 லட்சம், பி.எஃப். 15 லட்சம் என மொத்தம் 25 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் போட்டு வைத்தாலே மாதம் 25,000 ரூபாயை ஈட்டி விடலாம். அதுபோக, இவர் வேலை செய்யும் அலுவலகத்தில் இருந்து மாதம் 3,000 ரூபாய் பென்ஷன் தொகை கிடைக்கும்.  ஏற்கெனவே பென்ஷன் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறார். இதிலிருந்து ஓய்வுக்காலத்தில் மாதம் 1,800 ரூபாய் வருமானம் கிடைக்கும். தவிர, தற்போது வாங்கி இருக்கும் தனிநபர் கடன் 1.1.2014-ல் முடிவடைவதால் அன்றிலிருந்து 31.12.2019 வரை 60 மாதங்கள் அதற்காக கட்டி வந்த இ.எம்.ஐ. 8,800 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் முதலீடு முடிவின்போது 7.25 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
ஏற்கெனவே செய்துவரும் ஆர்.டி. முதலீடு 3,000 ரூபாய் 10% வருமானத்துடன் இன்னும் 88 மாதங்கள் (1.8.12 முதல் 31.12.2019 வரை) தடையில்லாமல் தொடர்ந்தால் முதிர்வின்போது 3.90 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
ஏற்கெனவே செய்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் (அதன் தற்போதைய மதிப்பு 62,000 ரூபாய்) செலவு, சேமிப்பு போக மீதமிருக்கும் 2,000 ரூபாயையும் சேர்த்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் தொடர்ந்து 88 மாதங்கள் (1.8.2012 முதல் 31.12.2019 வரை) முதலீடு செய்து வந்தால் முதலீடு முதிர்வின்போது 5.06 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
ஆக மொத்தம், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருந்து 16.22 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் போட்டு வைப்பதன் மூலம் மாதம் இவர் எதிர்பார்த்த 25,000 ரூபாயைவிட அதிகமாக வருமானம் கிடைக்கும். இதை பயன்படுத்தி ஓய்வுக்காலத்தை சொந்த ஊரில் நிம்மதியாக கழிக்கலாம்!
- செ.கார்த்திகேயன்

No comments:

Post a Comment