Pages

Sunday, 1 April 2012

My Seventh Financial Planning Article in Naanayam Vikatan on 1st April 2012


நேற்று... இன்று... நாளை!
''இதுவரைக்கும் எந்தவொரு முதலீட்டையும் செய்யலை. நாணயம் விகடன் படிச்ச பிறகுதான் நமக்கும், நம்ம குழந்தைகளோட எதிர்காலத்துக்கும் முதலீட்டை ஆரம்பிக்கணும்னு தோணுச்சு. அதனாலதான் உங்ககிட்ட நிதி ஆலோசனைக் கேட்டு வந்திருக்கேன்'' என்றார், பண்ருட்டி மேலப்பாளையத்தைச் சேர்ந்த நாராயணமூர்த்தி.
நாற்பத்தாறு வயதான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மாதச் சம்பளம் 25,000 ரூபாய். மனைவி வசந்தி, வீட்டு நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார். மூத்த மகன் புவனேஸ் பிளஸ்-டூவும், இளையவன் நிர்மல் குமார் எட்டாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
''குடும்பச் செலவு, கல்விச் செலவு, மருத்துவச் செலவு, இன்ஷூரன்ஸ் மற்றும் நகைக் கடனுக்கான இ.எம்.ஐ-ன்னு மாதம் 11,600 ரூபாய் செலவாகிறது. இதுபோக மீதம் இருக்குற தொகையைப் பயன்படுத்திதான் குழந்தைகளோட கல்வி, கல்யாணம் மற்றும் என் ஓய்வுகாலத் தேவைகளை பூர்த்தி செஞ்சுக்கணும். சொத்துன்னு பார்த்தா, இப்ப இருக்குற சொந்த வீடு, வாடகைக்கு விட்டிருக்கிற நான்கு வீடுகள், அரை கிரவுண்டு மனை என எல்லாம் சேர்த்து 70 லட்சம் ரூபாய் மதிப்பு வரும்.
இதுபோக, அவசரத் தேவைக்குன்னு வங்கியில ஒரு லட்சம் ரூபாய் கையிருப்பு இருக்கு. ஆனாலும் என் தேவைகளை எப்படி பூர்த்தி செய்யறதுன்னு தெரியலை, நீங்கதான் வழி காட்டணும்'' என்றவருக்கு, நிதி ஆலோசனை சொல்ல தயாரானார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.
''கைவசம் உள்ள மனையில் பத்து வருடத்தில் வீடு கட்ட  30 லட்சம், புவனேஸை பி.இ. சேர்க்க ஆரம்பச் செலவுக்காக மூன்று லட்சம்,  திருமணத்திற்கு இன்னும் ஒன்பது ஆண்டுகளில் பத்து லட்சம், நிர்மல் குமாரின் கல்விக்கு  ஐந்து ஆண்டுகளில் மூன்று லட்சம், கல்யாணத்துக்கு 14 ஆண்டுகளில் 12 லட்சம் என தன் பணத் தேவைகளை குறிப்பிட்டிருந்தார் நாராயண மூர்த்தி.
ஆனால், செலவுகள் போக எதிர்கால முதலீட்டிற்கான தொகை 13,400 ரூபாய்தான். இத்தனை தேவைகளுக்கும் இந்த தொகை போதாது. கைவசம் உள்ள அரை கிரவுண்டு மனையை விற்பதன் மூலம்தான் எதிர்காலத் தேவைகளுக்கான முதலீட்டை மேற்கொள்ள முடியும். ஏற்கெனவே சொந்தமாக வீடுகள் இருப்பதால், இன்னொரு வீடு அவசியமா என்பதை யோசிப்பது நல்லது'' என்றவர்,  அடுத்த விஷயத்திற்குள் நுழைந்தார்.
லைஃப் மற்றும் ஹெல்த்!
ஏற்கெனவே தன் பெயரில் உள்ள நான்கு இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்காக மாதம் 1,800 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார்.
வெறும் மூன்று லட்சம் கவரேஜுக்காக பாலிசிகளை தொடர்வதைவிட, சரண்டர் செய்து விடலாம்.  இதன் மூலம் கிடைக்கும் 1.25 லட்சம் ரூபாயை, அவசர தேவைக்காக ஏற்கெனவே சேமித்து வைத்திருக்கும் ஒரு லட்சம் ரூபாயுடன் சேர்த்து வங்கி கணக்கில் போட்டு வைப்பது நல்லது. மாதந்தோறும் மிச்சமாகும் பிரீமியம் பணத்தையும் எதிர்காலத் தேவைகளுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
நாராயண மூர்த்தி 50 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வது அவசியம். இதற்கு வருட பிரீமியம் 18,000 ரூபாய். அதேபோல் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து ஐந்து லட்சத்துக்கு ஃப்ளோட்டர் ஹெல்த் பாலிசி எடுப்பதும் அவசியம்.
புவனேஸ் கல்வி மற்றும் திருமணத்திற்கு..!
புவனேஸ் இன்னும் சில மாதங்களில் கல்லூரியில் சேரப் போகிறார். பி.இ. சேர ஆரம்பத்தில் மூன்று லட்சம் பத்தாது. இன்றைய நிலையில் எப்படியும் ஆரம்ப செலவுக்கு ஐந்து லட்சம், நான்கு வருட படிப்புக்கு ஐந்து லட்சம் என மொத்தம் பத்து லட்சம் ரூபாயாவது தேவைப்படும். இதற்கு, நான் சொன்னபடி மனையை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் மூலதன ஆதாய வரி கட்டியது போக  20 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று சொல்வதால், அந்த தொகை யிலிருந்து ஐந்து லட்ச ரூபாயை ஆரம்ப கால கல்லூரிச் செலவிற்கும், மீதி இருக்கும் பணத்தில் 2.5 லட்ச ரூபாயை எடுத்து நகைக் கடனையும் அடைத்துவிடலாம்.
கல்லூரிச் செலவுக்குத் தேவைப்படும் மீதிப் பணத்திற்கு நிலத்தை விற்ற பணத்தில் மீதம் இருக்கும் 12.5 லட்ச ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் ஈடுகட்டி விடலாம். 12.5 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்வதின் மூலம்  கிடைக்கும் வருமானத்திலிருந்து வருடா வருடம் 1.25 லட்ச ரூபாயை எடுத்து (10% வருமானம்) கல்லூரி படிப்பு முடியும் வரை (நான்கு ஆண்டுகள்) பயன்படுத்தி பி.இ. படிப்பை நல்லபடியாக முடிக்கலாம். நான்கு வருடம் முடியும்போது 12.5 லட்சம் ரூபாய் 13.70 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.
அதன்பிறகு அந்த 13.70 லட்சம் ரூபாயை பிரித்து தேவைக்குத் தகுந்தபடி 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். புவனேஸின் திருமணச் செலவுக்காக 10 லட்சம் ரூபாயை எதிர்பார்ப்பதால்   13.70 லட்சத்திலிருந்து 5.70 லட்சம் ரூபாயை எடுத்து பேலன்ஸ்டு ஃபண்டுகளில் ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்தால் எதிர்பார்த்த தொகை கிடைத்துவிடும்.

நிர்மல்குமாரின் கல்வி மற்றும் கல்யாணம்!
நிர்மல் குமாரை டிகிரி படிக்க வைக்க வேண்டும் என்கிறார். இதற்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து  மூன்று  லட்சம் ரூபாய் தேவைப்படும். எதிர்காலத் தேவைக்காக இருக்கும் 15,200 ரூபாயில் 3,400 ரூபாயை எடுத்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் எதிர்பார்த்த தொகை கிடைத்துவிடும்.
நிர்மல் குமாருக்கு 27 வயதில் திருமணம் செய்து வைக்க 12 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்றார். இதற்கு இன்னும் 14 ஆண்டுகள் இருக்கிறது என்பதால் நிர்மல் குமாரின் கல்விக்கான முதலீடு முடிந்தபிறகு அந்த 3,400 ரூபாயை தொடர்ந்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் ஒன்பது ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கக் கூடிய தொகை 7.68 லட்சம் ரூபாய்.
13.70 லட்சம் ரூபாயிலிருந்து புவனேஸின் திருமணத்திற்கான முதலீடு போக மீதமிருக்கும் தொகையிலிருந்து 1.50 லட்சம் ரூபாயை எடுத்து 10 ஆண்டுகளுக்கு 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டின் மூலம் 4.65 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆக, நிர்மல் குமாரின் திருமணத்திற்காக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கக்கூடிய மொத்த தொகை 12.33 லட்சம் ரூபாய். இதை பயன்படுத்தி திருமணத்தை முடிக்கலாம்.  
ஓய்வுகாலத்திற்கு..!
இன்றுபோலவே ஓய்வு காலத்திலும் சிறப்பாக வாழ மாதம் 50,000 ரூபாய் தேவைப்படும். அதற்கு எதிர்கால முதலீட்டில் மீதமிருக்கும் 11,800 ரூபாயில் 7,000 ரூபாயை எடுத்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீடு 14 ஆண்டுகள் தொடர்ந்தால் கிடைக்கக்கூடிய தொகை 39.54 லட்சம் ரூபாய்.
அதேபோல் 13.70 லட்சம் ரூபாயிலிருந்து புவனேஸ் மற்றும் நிர்மல்குமாரின் திருமணத் திற்கான முதலீடு போக மீதமிருக்கும் 6.50 லட்சம் ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்தால் 10 ஆண்டுகள் கழித்து கிடைக்கும் வருமானம் 20.19 லட்சம் ரூபாய். ஆக, ஓய்வுகாலத்தில் மியூச்சுவல் ஃபண்டின் மூலம் கிடைக்கும் மொத்த தொகை 59.73 லட்சம் ரூபாய்.
இந்த வருமானத்தை 10% வருமானம் தரக்கூடிய பாதுகாப்பான முதலீட்டில் போட்டு வைப்பதன் மூலம் மாதா மாதம் 50,000 ரூபாய் வருமானம் வந்து கொண்டிருக்கும். இதைக் கொண்டு ஓய்வுகாலத்தை வளமாக கழிக்கலாம்.
எதிர்கால முதலீட்டிற்காக மீதமிருந்த 15,200 ரூபாய் தொகையிலிருந்து மேலே சொன்ன மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மற்றும் புதிதாக எடுக்கச் சொல்லியிருக்கும் லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸுக்காக கட்ட வேண்டிய பிரீமியம் போக  கையில் 2,200 ரூபாய் பாக்கி இருக்கிறது. இதை இதரத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். வாழ்த்துகள்!

No comments:

Post a Comment