Pages

Sunday, 25 March 2012

SIP - True Wealth Creation


எஸ்.ஐ.பி. முதலீடு; எக்கச்சக்க லாபம்!

இது மார்ச் மாதம் என்பதால் வரிச் சேமிப்புக்காகப் பலரும் பல வகையான முதலீடுகளைப் பற்றி  யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். எது பற்றியும் யோசிக்காமல் அவசர அவசரமாக ஏதோ ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பது அல்லது ஏதாவது ஒரு வரி சேமிப்பு தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் பணத்தைப் போட்டுவிட்டு, வேறு வேலையைப் பார்க்கச் செல்வதுதான் நம்மில் பலரது வழக்கம்.
ரிச் சேமிப்பு என்கிற விஷயத்தில் மட்டும்தான் நாம் இப்படி செய்கிறோம் என்றால்கூட பரவாயில்லை. நீண்டகால முதலீடுகளை செய்யும்போதும் இதேமாதிரி கோட்டைவிடுகிறோம்.  மிகச் சில முதலீட்டாளர்கள் மட்டுமே பலவகையான முதலீட்டுத் திட்டங்களை அலசி ஆராய்ந்து சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். அவர்களும் அந்த முதலீட்டை நீண்ட காலத்திற்குத் தொடர்கிறார்களா என்றால் இல்லை.
உதாரணமாக, 95-ம் ஆண்டு ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200 ஃபண்டில் சுமார் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், அந்த தொகை இந்த நேரம் 56 லட்சத்துக்கு மேல் வளர்ந்திருக்கும். ஆனால், இந்த லாபத்தினை எத்தனை பேர் அடைந்திருப்பார்கள்? பலர் பாதியிலேயே பணத்தை எடுத்து வெளியே வந்திருப்பார்கள். ஒரே ஃபண்டில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக யாரையும் நான் இருக்கச் சொல்லவில்லை. ஆனால், ஒரு சரியான ஃபண்டில் குறைந்தபட்சம் ஐந்து வருடங்களுக்காவது முதலீட்டை தொடர்ந்தால்தான் நல்ல லாபம் பார்க்க முடியும். சரி, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான முதலீடு எது?
100 ரூபாய் மதிப்புள்ள பொருள் 85 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதே ரூபாய் மதிப்புள்ள பொருள் 115 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றால், நாம் எந்தப் பொருளை வாங்குவோம்? 85 ரூபாய்க்கு விற்கும் பொருளைத்தான். அதேபோலதான் முதலீட்டுத் திட்டங்களில் சந்தை மதிப்பைவிட அதிகமான விலையில் இருக்கும் முதலீட்டுத் திட்டங்களிலே முதலீடு செய்கிறோம். தற்போதைய நிலையில் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளை தவிர, மற்ற முதலீட்டுத் திட்டங்கள் அனைத்தும் ஓவர் பிரைஸ்டு-ஆக இருக்கிறது. அதாவது, சமீப காலத்தில் இத்திட்டங்கள் அதிகமாக விலை ஏறி இருக்கிறது.
ஆனால், பங்குச் சந்தை தள்ளுபடி விலையிலேயே வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. 1979-ம் ஆண்டு சென்செக்ஸ் 100 புள்ளிகளுடன் ஆரம்பமானது. 1992-ல் சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்குச் செல்லும் என்று சொன்னால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். தற்போதைய நிலையில் கூட, அடுத்த சில வருடங்களில் சென்செக்ஸ் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்றாலும் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால், உண்மையில் அப்படி நடக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.
அடுத்த கேள்வி, பங்குச் சந்தையே நல்ல வருமானம் கொடுக்கும் என்றால், எதற்கு மியூச்சுவல் ஃபண்ட் பக்கம் வரவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இதுவும் சரிதான். ஆனால், அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பங்குச் சந்தை சரியான இடம் என்று சொல்ல முடியாது. குறிப்பாக, சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைவிட மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
சரியான ஃபண்டினை மட்டும் தேர்வு செய்துவிட்டால் போதும், முதலீட்டை பற்றி கவலைப்படாமல் இருக்கலாம். அதிலும், எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டால், வேறு எது பற்றியும் கவலைப்படத் தேவை இல்லை. சந்தை எப்போது உயரும், எப்போது குறையும் என்பதைக்கூட பார்க்க வேண்டியதில்லை.
சிறு முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்தான் சிறந்த முதலீடு என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. முன்பெல்லாம் மாதம் 10,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள் மிகவும் குறைவாக இருந்தார்கள். இப்போது அந்த எண்ணிக்கை அதிகமாகி விட்டது. மேலும், 4 சதவிகித இந்திய மக்கள் மட்டுமே மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்து வருகிறார்கள். இதன் மதிப்பு சுமார் 5-6 லட்சம் கோடி ரூபாய்.
அதிக எண்ணிக்கையிலான மக்கள், அதிக தொகையை முதலீடு செய்யும்போது இந்தத் தொகை சந்தைக்கு வந்து கொண்டிருக்கிறது. முதலீடாக சந்தைக்கு அதிக பணம் வரும்போது சந்தை உயருவதற்குதான் வாய்ப்பு இருக்கிறது. சந்தை உயரும்போது மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானமும் அதிகரிக்கும்.
(தற்போதைய நிலையில் மாதத்துக்கு 1,600 கோடி ரூபாய் மியூச்சுவல் ஃபண்ட் துறையால் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. அதாவது, சிறு முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி. மூலம் தரும் தொகை இது!)
'சந்தையில் அதிகபட்ச பயம் இருக்கும்போது முதலீடு செய்யுங்கள். சந்தையில் அதிக பேராசை இருக்கும்போது முதலீட்டை திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள்’ என்ற வாரன் பஃபெட்டின் வார்த்தைகளை யோசித்து பாருங்கள். சந்தை இப்போது அதிகபட்ச பயத்தில் இருக்கிறது. உங்களது நீண்ட கால முதலீட்டை தொடங்குவதற்கு சரியான நேரம் இதுதான்!

Sunday, 11 March 2012

My Sixth Financial Planning Article in Naanayam Vikatan on 11th March 2012

நேற்று... இன்று... நாளை!
 
குடும்ப நிதி ஆலோசனை
''ஒரு வழியாகப் பொண்ண படிக்க வச்சு ஆளாக்கியாச்சு. மகன் விருதுநகரில் இன்ஜினீயரிங் இரண்டாம் வருஷம் படிச்சிட்டு இருக்கான். இனி என் தேவையெல்லாம் என்னுடைய ரெண்டு புள்ளைங்களுக்கும் கல்யாணம் செஞ்சு கண் குளிர பார்க்கணும்ங்கறதுதான். அதுக்குத் தேவைப்படும் பணத்துக்கு முதலீட்டை ஆரம்பிக்கணும். எதிர்கால தேவைகளுக்கும் கொஞ்சமா பணத்தச் சேர்த்து வைக்கணும். எதுல முதலீடு செஞ்சா அதிக வருமானம்  கிடைக்கும்னு சொல்லுங்க'' என ஆலோசனைக் கேட்டு வந்திருந்தார் மதுரையில் அரசு நிறுவனமொன்றில் வேலை பார்த்து வரும் வாசுதேவன்.  
வருக்கு மாதச் சம்பளம் 59,000 ரூபாய். பிடித்தம் போக 42,000 ரூபாய் கையில் கிடைக்கிறது. வீட்டு வாடகை மூலம் 12,000 ரூபாய் கிடைக்கிறது. மனைவி சாந்தி குடும்பத்தலைவி. மகள் கார்த்திகாயினி எம்.பி.ஏ. முடித்துவிட்டு, தற்போது 10,000 ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர உள்ளார். ஆக, குடும்பத்தின் மொத்த வருமானம் 64,000 ரூபாய்.  
''எங்களோட மாதச் செலவு 17,000 ரூபாய். ஏற்கெனவே எனக்கும், என் மனைவிக்கும் இரண்டு பாலிசிகளை (கவரேஜ் ரூ.5 லட்சம்) எடுத்து வச்சிருக்கேன். இதுக்காக கட்டும் பிரீமியம் வருஷத்துக்கு 51,000 ரூபாய். பொண்ணு கல்யாணத்துக்காக நாலு லட்ச ரூபாய்க்கு சீட்டு போட்டிருக்கேன். இன்னும்    18 மாதத்துல சீட்டு முடிஞ்சிடும்.
இதுக்காக மாதம் 8,300 ரூபாய் கட்டிட்டு வர்றேன்.
இதுபோக எதிர்காலச் சேமிப்புக்கு மீதமிருக்கக்கூடிய தொகைன்னு பார்த்தா 34,450 ரூபாய். இதை  கொண்டு என்னுடைய எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற நீங்கதான் வழி காட்டணும்'' என்றவருக்கு ஆலோசனை சொல்கிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.
''பொறுப்புகளை ஓரளவுக்கு நிறைவேற்றி வரும் வாசுதேவன் தனது தேவைகளை சுலபமாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.
ஐந்து லட்சம் கவரேஜ் கொண்ட இரண்டு பாலிசிகளுக்கு இவர் கட்டும் பிரீமியம் அதிகம். எனவே, இவற்றை உடனே சரண்டர் செய்துவிடுவது நல்லது.
இன்னும் இரண்டு வருடத்தில் ஓய்வுபெறப் போவதால், இவருக்கு லைஃப் இன்ஷூரன்ஸ்  தேவையிருக்காது. குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து அலுவலகத்தில் ஹெல்த்கவர் இருக்கிறது என்றாலும், இன்னும் 3 லட்ச ரூபாய்க்கு ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க வேண்டும்.
மகளின் திருமணம்!
மகளுக்கு இன்னும் ஓரிரு வருடங்களில் திருமணம் செய்ய நினைக்கிறார். அதற்காக தங்க நகைகளை ஏற்கெனவே சேர்த்து வைத்துவிட்டதால், திருமணச் செலவுக்காக எட்டு லட்சம் தேவை என்றார். எதிர்கால முதலீட்டிற்காக மீதமிருக்கும் 34,450 ரூபாயிலிருந்து 32,000 ரூபாயை எடுத்து 8% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய லிக்விட் ஃபண்டுகளில் ஓராண்டுக்கு முதலீடு செய்யலாம். இதன் மூலம் கிடைக்கும் வருமானம் நான்கு லட்சம்,  சீட்டிலிருந்து கிடைக்கும் நான்கு லட்சம் என எட்டு லட்சம் ரூபாயில் திருமணத்தை  முடிக்கலாம்.
மகனின் திருமணம்!
மகன் விஸ்வநாத் கல்விக் கடன் மூலம் படிப்பதால் தனக்கு பெரிய செலவு எதுவுமில்லை என்றார் வாசுதேவன். இன்னும் இரண்டு வருடத்தில் மகன் வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கும்போது கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை பயன்படுத்தி கல்விக் கடனை அடைத்துவிடலாம். அந்நேரத்தில் மகளுக்கு திருமணம் நடந்திருக்கும் என்பதால், மகனுடைய வருமானம் குடும்பத்துக்கு கை கொடுக்கும்.  
மகனுக்கு 27 வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதால், கார்த்திகாயினியின் திருமணத்திற்கான முதலீடு முடிந்ததும் அந்த 32,000 ரூபாயிலிருந்து 7,000 ரூபாயை எடுத்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் தொடர்ந்து     76 மாதங்கள் முதலீடு செய்துவர வேண்டும். இதன் மூலம் 9 லட்ச ரூபாய் கிடைக்கும். இதை பயன்படுத்தி மகனின் திருமணத்தை முடிக்கலாம்.

ஓய்வுகாலத்திற்கு..!
மகனின் திருமணத்துக்கான முதலீடு 7,000 ரூபாய் போக மீதமிருக்கும் 25,000 ரூபாயை ஓய்வுகாலத்திற்காக முதலீடு செய்ய வேண்டும். 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில்     36 மாதங்கள் முதலீடு செய்தால் 10.87 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்து விடுவதால் அதற்காக கட்டி வந்த மாத பிரீமியம் 4,250 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் 48 மாதங்கள் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் வருமானம்         2.62 லட்சம் ரூபாய்.
இன்னும் 18 மாதங்களில் சீட்டு முடிந்த பிறகு 8,300 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் 30 மாதங்கள் முதலீடு செய்வதன் மூலம்   2.91 லட்ச ரூபாய் கிடைக்கும். ஆக, ஓய்வுகாலத்தின்போது ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் மொத்த வருமானம் 16.40 லட்சம் ரூபாய்.
இத்தொகையை              பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்வதால் மாதம் 15,000 ரூபாய் கிடைத்துக் கொண்டிருக்கும். தவிர, மாதம் பென்ஷனாக 30,000 ரூபாயும், வீட்டு வாடகை மூலம் 12,000 ரூபாயும் கிடைக்கும். இதை பயன்படுத்தி ஓய்வுகாலத்தை நிம்மதியாக கழிக்கலாம்.
ஓய்வுகாலத்திலும் மகனின் திருமணத்திற்காக முதலீடு செய்ய வேண்டியிருப்பதால் முதலீடு செய்தது போக மீதமிருக்கும் தொகையில் செலவு செய்து கொள்வது உத்தமம். வாழ்த்துக்கள்!