காரணம் மற்றும் விளைவு -
பெரிய விளைவுக்குக் காரணம் மிகச் சிறிய செயலாகத்தான் இருக்கும். மகாபாரதத்தில் திரௌபதி மானபங்கம் செய்யப்பட்ட மிகப் பெரிய விளைவுக்குக் காரணம் மிகச் சாதாரணமானது. மாயசூரன் என்ற கட்டிடக் கலைஞர் பாண்டவர்களுக்காக கட்டிய அரண்மனையில் நிறைய மாயத் தோற்றங்கள் இருந்தன. ஒரு நாள் துரியோதனன் பாண்டவர் அரண்மனையில் நுழைந்து பார்ப்பதற்குத் தரை போலத் தோற்றமளித்த இடத்தில் கால் வைத்தால், அது ஒரு நீர் நிலை; அதில் தவறி விழுந்துவிட்டான்.
அதைப் பார்த்து திரௌபதி குருடன் பையன் எப்படி இருப்பான், அவனும் குருடனைப்போலத் தான் என்று கேலி பேசி சிரித்தவுடன் தான் அவமானப்பட்டு விட்டதாக உணர்ந்து அவளை எப்படியும் பழி வாங்க வேண்டும் என்று நினைத்ததன் விளைவுதான், பின்பு அரச சபையில் அனைவர் முன்பாகவும் அவளை துகிலுரிக்க காரணம்.
இந்த காரணம் மற்றும் விளைவு எப்படி ஒருவருடைய முதலீட்டு வாழ்வில் பங்கு வகிக்கிறது என்று பார்க்கலாம். நாம் சாதரணமாக எடுத்து கொள்ளும் பெரும்பாலான காரணங்கள் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்திவிடும். இன்று பலர் தெரிந்தும் தெரியாமலும் லைப் இன்சூரன்சில் பணத்தை செலுத்தி விட்டு அதை இன்வெஸ்ட்மென்ட் என்று கருதுகிறார்கள்.
20 முதல் 25 வருட முடிவில் நமக்கு என்ன கிடைக்கும்? அது போதுமானதுதானா என்றெல்லாம் பார்ப்பதில்லை. மேலும் அந்த தொகையை இடைவிடாமல் கட்டமுடியுமா என்றும் யோசிப்பதில்லை. பின்பு அந்த முகவர் சொன்னார், எனக்கு அந்த நிறுவனத்தின் மேல் நம்பிக்கை உள்ளது என்று நம்முடைய தவறுக்கு சப்பை கட்டு கட்டுவதுண்டு.
நீங்கள் எதில் வேண்டுமானாலும் பணத்தை முதலீடு செய்யலாம், அது உங்களுடைய சுதந்திரம். ஆனால் அதன் பலன் என்னவென்றுதெரியாமல் செய்தால் அதனுடைய விளைவுகள் பயங்கரமாக இருக்கும். அதாவது பணவீக்கத்தை கட்டுபடுத்தாததால், உங்களுடைய தேவை பூர்த்தியடையாது போய்விடும் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.
அடுத்த தவறு, ஒரு முதலீடு கடந்த வருடத்தில் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்று பார்த்து முதலீடு செய்வது. இந்த தகவல் பலர் சொல்லக் கேட்டும், படித்தும், பார்த்தும் நாம் முதலீடு செய்வது. அது வரும் காலத்தில் எப்படி செயல்படும் என்றும் பார்க்க வேண்டும், அதை இலவசமாக யாரும் கூறமாட்டார்கள்! பின்பு அதில் முதலீடு செய்து அதைப் பற்றி தவறாக பேசுவது. சரியான முதலீட்டை கண்டு பிடிப்பது அவ்வளவு எளிதாக இருந்தால், எல்லோரும் செய்து விடலாமே! கண்டிப்பாக எளிதல்ல, அதற்கு கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும், அவ்வளவுதான்.
இன்றைய வேலை பெரும்பாலோருக்கு அதிக மன அழுத்தம் கொடுக்ககூடியதாக உள்ளது. கை நிறைய சம்பளம் பெறுவதால், சாதாரணமாக வேலை செய்யகூடிய 8 மணி நேரத்துக்கும் மேலாக 12 மணி நேரம் உழைப்பதோடு நேரத்துக்கு சாப்பிடுவதும் இல்லை. ஏதாவது அந்த நேரத்துக்கு சாப்பிடுகிறோம். அது பெரும்பாலும் ஜன்க் உணவு, அந்த நேரத்திற்குப் பலன் தரும். அடிக்கடி சாப்பிடுவதால் பல உடல் உபாதைகளுக்கு நாம் வழி வகுக்கிறோம். இதனால் உடல் நலம் பாதிக்கப்படுவது மற்றும் முடிக்க முடியாத அளவுக்கு வேலைப் பளு கொடுப்பதால் மன அழுத்தம் உண்டாகிறது.
ஏற்கெனவே அப்பா அம்மா வீடு வைத்திருந்தாலும் தானும் வீடு வாங்கவேண்டும் மேலும் நம்முடைய குழந்தைகளுக்கும் சேர்க்கவேண்டும் என்பதால் ஒரு வீட்டுக் கடன் முடிந்து, அடுத்தது என்று தொடர்ந்து மாட்டிக் கொள்வதால் தேவையற்ற மன அழுத்தத்துக்கு உள்ளாகிறோம்..
அதேபோல விளையாட்டாக ஒருவர் வேலைக்குச் சேர்ந்தவுடன் 22 வயதில் சேமிக்ககூடிய ரூபாய் 2000, 15% கூட்டு வட்டியைக் கணக்கில் கொண்டால், 50 வயதில் ஒரு கோடி ரூபாய்க்கான விளைவைக் கொடுக்கும்.
இந்த 3 உதாரணத்திலும் காரணம் ரொம்ப சிறியது, அதே சமயம் விளைவு வெவ்வேறானவை. மேலும் நாம் அடைய விரும்புவது எதுவென்று முடிவு எடுத்தோம் என்றால் பெரும்பாலும் அடைந்து விடுகிறோம். பலருக்கு அந்த இலக்கு இல்லாததால் அதைப்பற்றி குறை கூறுவதுண்டு. அந்த இலக்கு உள்ளவர்கள் அதைப்பற்றித் தெரிந்து கொள்வதற்கு முயற்சி செய்வதோடு அதில் என்னவிதமான தடங்கல்களைச் சந்திக்க வேண்டும் என்று ஆக்க பூர்வமாக முயற்சி செய்வதால் வெற்றி கிட்டுகிறது. அதற்கு நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய சின்ன சின்ன முயற்சிகளே வெற்றி என்னும் பெரிய விளைவை ஏற்படுத்துகிறது.
சாராம்சம்: நம்முடைய பெரிய பெரிய பிரச்சினைகளுக்கு மேலே சொன்ன மாதிரி சின்னச் சின்ன காரணங்கள்தான். பிறந்த உடன் யாரும் எந்தவித கெட்ட பழக்கங்களுக்கும் அடிமை ஆவதில்லை. பல சமயங்களில் நண்பருடைய வற்புறுத்தல் அல்லது ஒரு ஜாலிக்காக செய்யலாம் என்று ஆரம்பித்த சிகரெட், குடி மற்றும் போதைப் பொருள் மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும்போது, நாளடைவில் அதற்கு அடிமைப் படுகிறோம்.
நமக்கு அந்த நிமிடம்தான் பெரியதாகத் தோன்றுகிறது, வருங்காலத்தைப் பற்றி பலரும் கவலைப்படுவது இல்லை. இதிலிருந்து ஒன்றை நாம் உணர முடிகிறது. நம்முடைய பிரச்சினைகளுக்குப் பொதுவான காரணம் நம்முடைய அலட்சியம் மற்றும் அதனுடைய விளைவு என்னவென்று யோசிக்க முயல்வதில்லை. எந்த ஒன்றையும் நாம் அலட்சியம் செய்தால் அது எப்படி நம்மிடத்தில் இருக்கும்?
முதலீடு செய்வதற்கு முன்பு ஏன் செய்கிறோம், எதற்கு செய்கிறோம், அதனுடைய பலன் என்ன, அந்த பலன் நமக்கு வருங்காலத்தில் போதுமானதாக இருக்குமா, அதில் என்னவிதமான ரிஸ்க். மேலும் ரிஸ்க் என்பது அந்த முதலீட்டுத் திட்டத்திலா அல்லது நாம் கொடுக்கக்கூடிய கால அவகாசத்திலா என்பதை அறிந்து முதலீடு செய்தால், பணம் நாய்க்குட்டி போல வாலை ஆட்டிக் கொண்டு நம்மை பின் தொடர்ந்து வரும். மேலே சொன்ன எதையும் செய்யாமல், விளைவைப்பற்றிக் கவலை கொள்ளாமல் அந்த நிமிடத்திற்கு வாழ்ந்தோம் என்றால் எப்போதும் பணம் பணம் என்று நிம்மதி இல்லாமல் அலைய வேண்டி இருக்கும். வாய்ப்பு நம் கையில், அதைப் புரிந்து கொள்வோம். பணத்தை நம் சொல்படி ஆட்டி வைப்போம். வாருங்கள் பணம் செய்வோம்.