Pages

Sunday, 14 September 2014

My Article In Today's Nanayam Vikatan Dated 14th September 2014


ஸ்டெப் பை ஸ்டெப் ஃபைனான்ஷியல் பிளான்!
கருவிலிருந்து கல்யாணம் வரை...
நீரை.மகேந்திரன்
ஒரு வீட்டில்  குழந்தை பிறந்தவுடன் அந்த வீட்டின் மொத்த சூழலும் மாறி விடுகிறது.  அதுவரையில் எப்படியெப்படியோ செலவாகிவந்த பணமும் நேரமும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்து, குறிப்பிட்ட ஓர் இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்குகிறது.  
பிறந்த குழந்தையை சரியாகப் பராமரித்து, கல்வி புகட்டி, சகல திறமை களையும் பெற்று மிகச் சிறந்த மனிதனாக வளர்த்தெடுப்பது ஒரு பெற்றோரின் கடமை. கல்வி, வேலைவாய்ப்பு, தனித்திறமை, சிறந்த பழக்கவழக்கங்களை அவர்களுக்கு சரியான நேரத்தில் தரவேண்டும். இதற்கு ஒரு பெற்றோரிடம் சரியான நிதித் திட்டமிடல் வேண்டும்.
நம் வீடுகளில் குழந்தை பிறந்ததும் அதனைக் கொண்டாடும் மகிழ்ச்சியில்  ஆடைகள், ஆபரணங்களை வாங்கிக் குவிக்கிறோம். இந்த முக்கியத்துவத்தை  குழந்தையின் எதிர்கால நிதி சார்ந்த விஷயங்களுக்கு தருகிறோமா என்றால் இல்லை. குழந்தை வளர்ந்து கல்லூரிக்குச் செல்லும் காலத்தில்தான் படிப்புக்கு பணம் வேண்டுமே என்று பதை பதைக்கிறோம். கல்விக் கடன் வாங்கி, குழந்தையையும் கடன்காரன் ஆக்கு கிறோம். கல்யாணம் என்று வரும்போது மேலும் கடன் வாங்கி, வாரிசுகளுக்கு சொத்தினை விட்டு செல்வதற்கு பதில் கடனை விட்டுவிட்டுப் போகிறோம்.
மிகச் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத் தேவை களுக்கு நிதி ஒதுக்கினா லும்  மருத்துவம், கல்வி, எதிர்கால சேமிப்பு என பொத்தாம் பொதுவாகவே திட்டமிடுகிறார்கள். இன்றைய நம் குழந்தைகளை முழுமனிதனாக வளர்த்தெடுக்க புதிய அணுகுமுறையுடன் கூடிய நிதித் திட்டமிடல் வேண்டும். இதுபற்றி நிதி ஆலோசகர் பி.பத்மநாபனிடம் கேட்டோம்.    
''இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை வளர்க்க நாம் வழக்கமான நிதி ஆலோசனை தந்துவிட முடியாது. எது உடனடி தேவை, எது நீண்டகால தேவை என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உடனடி தேவையில்கூட தனித்தனி செலவுகள் இருக்கிறது. தவிர, பள்ளியில் சேர்ப்பது, தனித்திறமைகளை வளர்ப்பது, உயர்கல்வி, திருமணம் என அந்தந்த காலகட்டங்களில் செய்ய வேண்டிய நிதித் திட்டமிடலும் நிறைய உள்ளது'' என்றார். பின்னர் அவரே தொடர்ந்தார்.
''முந்தைய தலைமுறையினர் பள்ளி முதல் கல்லூரி வரை படிப்பதற்காக செலவு செய்த பணத்தை இன்றைக்கு ப்ரீகேஜியில் மட்டுமே செலவிட நேரிடுகிறது. தவிர, முன்பு எல்லோருக்கும் தெரிந்த படிப்பு டாக்டர் மற்றும் இன்ஜினீயர்தான். ஆனால், இன்று பல படிப்புகள் வந்துவிட்டன.
உயர்கல்வி மற்றும் திருமணத்துக்கு நீண்ட காலம் இருக்கிறது, அதனால் நாம் மாதாமாதம் சேமிக்கும் சிறிய தொகைகூட கூட்டு வட்டியில் நல்ல பலன் தரும். பெரும்பாலான பெற்றோர்கள் வெளிநாட்டில் படிக்க வைக்க விரும்புகிறார்கள். அப்படி ஆசைப்பட்டால், இப்போதைக்கு ஆகிற செலவு மாதிரி மூன்று மடங்கு சேமிக்க வேண்டும். சம்பளம் உயரும் போதெல்லாம் உங்கள் சேமிப்பும் உயர வேண்டும். இப்படி சேமிப்பதற்கு நிச்சயம் ஓர் ஒழுங்கு வேண்டும். நிதித் திட்டமிடல் இருந்தால் இந்த ஒழுங்கு நிச்சயம் இருக்கும்.  இன்றைக்கு உங்கள் குழந்தை இன்ஜினீயரிங் படிக்க ரூ.13 லட்சம் ஆகுமெனில், 18 வருடம் கழித்து படிக்க ரூ.55 லட்சம் ஆகும்.  அதேமாதிரி, உங்கள் குழந்தைக்கு இன்று திருமணம் செய்ய  ரூ.20 லட்சம் ஆகுமெனில், 23 வருடம் கழித்து திருமணம் செய்துவைக்க ரூ.1.20 கோடி தேவையாக இருக்கும்.  
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் எனில், உங்கள் வீட்டில் குழந்தை பிறக்கப்போகிறது என்கிற தகவல் தெரிந்தவுடனே, அதன் சிறப்பான எதிர்காலத்துக்கு நீங்கள் அவசியம் நிதித் திட்டமிடல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சொல்லத்தான்'' என்றவர், குழந்தை பிறந்ததும் உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன, அடுத்தடுத்த கட்டங்களில் செய்ய வேண்டியது என்ன, தனித்திறமைகளை வளர்த் தெடுப்பது எப்படி, உயர்கல்வி, திருமணம் போன்றவற்றுக்கு செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்.    
மருத்துவக் காப்பீடுகளில் உடனடியாக குழந்தையின் பெயரை சேர்க்க வேண்டும். பல மருத்துவ காப்பீட்டு பாலிசிகளில் குழந்தை பிறந்தவுடன் அதில் சேர்க்கக் கூடிய வசதிகள் இருக்கின்றன. குழந்தைக்கு பிறப்பு குறைபாடுகள் இருந்தால், அதற்கான செலவுகளை ஈடு செய்யும் பாலிசி அல்லது குழந்தைக்கான தடுப்பூசி சார்ந்த மருத்துவ செலவுகளை க்ளைம் செய்துகொள்ளும் பாலிசி என உங்கள் வசதிக்கேற்ப ஏதாவது ஒரு பாலிசியை அவசியம் எடுக்க வேண்டும்.
குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியாக இருந்தால் நிறுவனத்தின் மூலம் பாலிசியில் குழந்தையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாம் ஏற்கெனவே எடுத்துள்ள ஃபேமிலி ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் கூடுதல் பிரீமியம் செலுத்தும்பட்சத்தில் குழந்தையையும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஒரு வேலைக்கு ஓராயிரம் பேர்!
எஸ்பிஐ வங்கியில் உள்ள 1,837 புரபேஷனரி அதிகாரிகளுக்கான காலி பணியிடங்களுக்கு 18.83 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஒரு காலியிடத்துக்கு சுமார் 1,025 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
மேலும், 5,092 கிளெரிக்கல் காலியிடங்களுக்கு சுமார் 23 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதாவது, ஒரு வேலைக்கு 452 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்தப் பணிக்கு அறிவியல், பொருளாதாரம் மற்றும் கலைத்துறை படிப்புகளை படித்தவர்களும், இன்ஜினீயரிங், சட்டம், ஆடிட்டிங் படித்தவர்களும் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பையில் இந்த ஆபீஸர் பதவிக்கு  70 ஆயிரம்  ரூபாயும் கிளெரிக்கல் பதவிக்கு 17,500 ரூபாயும் ஆரம்பத்தில் சம்பளம் கிடைக்குமாம்!
குழந்தை பிறந்தபிறகு, நமது அனைத்து நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் கணவர் அல்லது மனைவி நாமினியாக இருந்தாலும் குழந்தைகளை நாமினியாக நியமித்துக் கொள்வது நல்லது. வங்கிக் கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட், ஃபிக்ஸட் டெபாசிட்டுகள், காப்பீடு போன்றவற்றில் நமக்கான நாமினியாக நியமித்துக் கொள்வது நல்லது. குடும்பத் தலைவரின் பெயரில் எங்கெல்லாம் சொத்துகள் வாங்கப்பட்டு இருந்தாலும், முதலீடுகள் செய்யப்பட்டிருந்தாலும் அல்லது இன்ஷூரன்ஸ் பாலிசிகள் எடுக்கப் பட்டிருந்தாலும் குழந்தையின் பெயரை கட்டாயமாக நாமினியாகச் சேர்க்க வேண்டும். இதனால் பிற்பாடு வரக்கூடிய பல சட்ட சிக்கல்களை எளிதாக தவிர்த்துவிட முடியும்.  
திருமணத்துக்குமுன் எடுக்கப்பட் டுள்ள ஆயுள் காப்பீடு பாலிசியில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும். உங்களை நம்பி புத்தம் புதிய ஜீவன் வந்திருக்கிறது என்கிறபோது அதன் எதிர்காலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே உள்ள பாலிசி யின் பலன் மனைவிக்கு கிடைக்கும் என்றாலும், குழந்தை என்கிற கூடுதல் பொறுப்பை உணர்ந்து பாலிசி முதிர்வு தொகையையும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே எடுத்துள்ள ஆயுள் காப்பீடு பாலிசியோடு ரூ.50 லட்சம் கூடுதலாக எடுத்துக் கொள்வது நல்லது. இந்த சீரமைப்பைத் தான் முதல் வேலையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
காலுக்கு உதவாத செருப்பை கழட்டி எறி என்பார்கள். அதுபோல உபயோகம் இல்லாத பாலிசிகளைவிட்டு உடனே வெளியே வரவேண்டும். வருங்காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டி வருமானம் தராத பாலிசிகளை வைத்திருப்பது வீணான விஷயம்தான். அதற்குப் பதிலாக மியூச்சுவல் ஃபண்டின்  சிஸ்ட்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானில் முதலீடு செய்யலாம்.
 
பெருநகரங்களில் மட்டுமல்ல, சிறு நகரங்களில்கூட இன்று கல்வி கட்டணங்கள் ஏகத்துக்கும் அதிகரித்துவிட்டது. மூன்று வயதில் ப்ரீ ஸ்கூல் தொடங்கி கல்லூரி கல்வி வரைக்குமான பள்ளிக் கட்டணங்களுக்கு திட்டமிட வேண்டும். குழந்தை பிறந்ததும் அடுத்த மூன்று வருடங்களில் ப்ளே ஸ்கூல் சேர்ப்பதற்கே லட்சங்களில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம். அதற்கேற்ப குறுகிய கால முதலீட்டு திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக, இன்று ப்ரீ ஸ்கூலில் 3 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு வருடம் ரூபாய் 50,000 வரை செலவாகிறது. இதற்கான பணத்தை வங்கிகளின்ஆர்.டி, லிக்விட் ஃபண்டுகள், மற்றும் வங்கி வைப்பு நிதிகள் மூலம் சேமிக்க லாம். அதேசமயம், உயர்கல்விக்கு கண்டிப்பாக திட்டமிட வேண்டும்.
குழந்தைகளுக்கு அவர்களது சிறுவயது முதலே சேமிக்க கற்றுத் தருவது அவசியம். இதற்கு குழந்தையின் பேரில் சேமிப்புக் கணக்கு தொடங்கலாம். குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்குகளை தொடங்க சில வங்கிகள் தயாராக இருக்கின்றன. குழந்தைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்களில்  கிடைக்கும் அன்பளிப்பு தொகையை இந்தச் சேமிப்புக் கணக்குகளில் சேமிக்க ஊக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகளின் சேமிப்புக் கணக்கை 10 வருடங்கள் வரை நிர்வகிக்கலாம். இதன்பிறகு அந்தக் கணக்கை அவர்களே நிர்வாகம் செய்யும் திறமையைப் பெற்றுவிடுவார்கள். இன்று நீ சேமிக்கக் கூடிய சின்ன தொகை நாளை பெரிதாக வளரும் என்று சொல்லித்தந்து சேமிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். அப்படி சொல்லித்தந்தால், வீட்டில் பெற்றோர் கள் அநாவசியமாக செலவு செய்தால்கூட அதை் குழந்தைகள் தட்டிக் கேட்க ஆரம்பிக்கும்.  வங்கிக் கணக்கு புத்தகம்கூட குழந்தையின் அடையாள அட்டையாக பயன்படும். இதே காலகட்டத்தில் குழந்தையின் பெயரில் பேபி பான் கார்டு வாங்கலாம்.
இதுபோல பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அதையும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். இதனால் குழந்தையின் பொறுப்புணர்ச்சி பெரிய அளவில் அதிகரிக்கும்.  
 
கு ழந்தை பிறந்தபின் விதவிதமான ஆடைகளை வாங்கி,  அழகுபடுத்திப் பார்ப்பதிலேயே நாம் அதிகம் செலவழிக்கிறோம். குழந்தைக்கு விதவிதமான பொம்மைகளை வாங்கித் தந்து, நன்கு விளையாட வைக்கிறோம்.
இதெல்லாம் குழந்தைக்கு எந்த அளவுக்கு தேவை என்று நாம் யோசிப்ப தில்லை. இது குழந்தைக்கு பிடிக்கும்; பக்கத்து வீட்டுக் குழந்தை அந்த பொம்மை வைத்திருக்கிறான். நம் குழந்தை அதைவிட விலை அதிகமான பொம்மையை வைத்திருக்க வேண்டும் என்று நாமாகவே நினைத்து குழந்தை களுக்கு பலவிதமான பொம்மைகளை வாங்கித் தருகிறோம்.
ஆனால், இதெல்லாம் குழந்தைக்கு பெரிய அளவில் தேவைப்படாமலேகூட இருக்கலாம். உதாரணமாக, குழந்தை பிறந்ததும் முதல் ஆறு மாதங்களுக்கு நன்கு தூங்கும். இந்த நேரத்தில் விலை உயர்ந்த ஆடைகளோ அல்லது பொம்மைகளோ வாங்கித் தருவது வீண்தான். குழந்தை ஓரளவுக்கு வளர்ந்தபின்னும் பார்த்ததை எல்லாம் வாங்கித் தரச் சொல்லும் பழக்கத்தை வளர்க்கக் கூடாது. எந்த ஒரு பொருளை வாங்கித் தரும்போதும் அதன் தேவையை நன்கு உணர வைத்தபின்பே வாங்கித்தர வேண்டும். இதனால் பிற்காலத்தில் அநாவசியமாக செலவு செய்யும் பழக்கம் அந்தக் குழந்தையிடம் வராது.
இன்று நாம் என்ன கற்று தருகி றோமோ, அதுதான் பின்பு குழந்தையின் பழக்கமாகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சிலர், குழந்தை கேட்கிறதே என்று உணர்ச்சி வசப்பட்டு கடன் வாங்கிக்கூட பொருட்களை வாங்கித் தருகிறார்கள். இது தவறான அணுகுமுறை.
 
குழந்தைக்கு மருத்துவக் காப்பீடுஏற்கெனவே எடுத்திருந்தாலும் குழந்தை பராமரிப்புக்கு ஏற்ப அடிக்கடி மருத்துவரை சந்திக்க வேண்டியிருக்கும். குழந்தையின் இரண்டு வயது வரை இதற்கான செலவுகள் கணிசமாக இருக்கும். இதற்கேற்ப மருத்துவமனை சென்றுவரும் செலவுகள் அதிகமாக இருக்கும்.
தவிர, ஒரு அவசரம் எனில், மருத்துவமனை செல்ல எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும். முக்கியமாக, அலுவலக நேரத்தில் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை எனில், விடுப்பு போட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதற்கான பண இழப்பும் நமது நிதித் திட்டமிடலுக்குள் கொண்டு வரவேண் டும். குழந்தைக்கு சிறப்பு சிகிச்சைகள் தேவைப்பட்டால், மருத்துவமனை அருகிலேயே வீடு இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்வது நல்லது.  
 குழந்தை இருக்கும் வீடுகளில் அவசரகால நிதி கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அடிக்கடி வயிற்றுப் பிரச்னைகள், சின்ன சின்ன காய்ச்சல்கள் போன்ற பிரச்னைகள் குழந்தைக்கு வரலாம். இதுபோன்ற சமயங்களில் மருத்துவத்துக்குத் தேவையான பணத்தை வீட்டில் வைத்்திருக்க வேண்டும். அப்போதுதான் காலம் தாழ்த்தாமல் குழந்தைக்கான மருத்துவ சிகிச்சையை செய்ய முடியும். குழந்தைக்கு நாப்கின்கள் வாங்கக்கூட வங்கியிலிருந்து பணம் எடுத்தால்தான் உண்டு என  இருக்கக்கூடாது.
போட்டிகள் நிறைந்த உலகத்தில் நமது குழந்தைகளும் முன்னணியில் இருக்க வேண்டும். அதற்கான செலவு செய்வதும் அவசியம். படிப்பு மட்டும்தான் முக்கியம் என்றில்லாமல் தனித்திறமைகளை ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறான நடவடிக்கைகள் நம்முடைய குழந்தை களிடம் தெரிந்தால் அதற்கென நாம் செலவிட வேண்டும். செஸ், பேட்மின்டன், கிரிக்கெட், அபாகஸ், கணினி பயிற்சிகள் என பல தனித்திறன் வளர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். குழந்தை பிறந்தவுடன் இதற்கென்று ஒரு சிறு தொகையை ஒதுக்கிவிட வேண்டும். காலம் செல்ல செல்ல இதற்கான ஒதுக்கீடு பெருக வேண்டும். இன்று பல குடும்பங்களில் ஒரே ஒரு குழந்தை மட்டும் இருப்பதால், இந்தமாதிரியான செலவுகளை அவர்களால் செய்ய முடிகிறது.
விளையாட்டு தவிர, குழந்தையைக் குறிப்பிட்ட பருவங்களில் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டுகிற விஷயங்களில் உற்சாகப்படுத்த வேண்டும். பள்ளி கல்லூரி காலங்களில் கல்விச் சுற்றுலா, புது மிதிவண்டி அல்லது கல்வி உபகரணங்கள், கல்வி சம்பந்தமாக வெளிமாநிலம் அல்லது வெளிநாடு களுக்குச் சென்றுவருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதில் நாம் தவறக்கூடாது. இதற்கு தேவையான பணத்தை கடனாக வாங்குவதைவிட, குழந்தை பிறந்தவுடனே சேமிக்கத் தொடங்குவது அவசியம்.  
 
குழந்தைகளுக்காக திட்ட மிடுகிறோம் என்றதும் பலரும் 'சில்ட்ரன்ஸ் பிளான் என்ன இருக்கிறது’ என்று கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள். குழந்தைகளின் சிறப்பான எதிர் காலத்துக்கு சாதாரண முதலீட்டு திட்டங்களே போதும். சில்ட்ரன்ஸ் பிளானில் ஒருவித சென்டிமென்ட் இருப்பதால் அது பிரபலமாக இருக்கிறது. ஆனால், வளர்ச்சியோடு ஒப்பிட்டால்,  மியூச்சுவல் ஃபண்ட்தான் பெஸ்ட். 
   
மேற்சொன்ன விஷயங்களுக்கான இலக்குகளை அடைய பல முதலீட்டுத் திட்டங்கள் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் ரிஸ்க் குறைவாகவும், எளிமையாகவும் இருக்கும் திட்டம் எனில், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்தான். கடந்த 20 வருடங்களில் 20 சதவிகிதத்துக்கும்மேல் கூட்டு வட்டி தந்த பல திட்டங்கள் இருக்கின்றன. வருங்காலங்களிலும் 15% கூட்டு வட்டி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். எந்தத் திட்டம் நமக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை அறிந்து முதலீடு செய்வதோடு, குறித்த கால இடைவெளியில் அந்த ஃபண்ட் பற்றிய கண்காணிப்பும் மறு ஆய்வும் அவசியம் செய்ய வேண்டும்.''
இனியாவது குழந்தையின் சிறப்பான எதிர்காலத்துக்கு திட்டமிடுங்கள்!

Sunday, 24 August 2014

My 47th Article In the Hindu Tamil Dated today on 25th August 2014 About "Cause & Effect, Plays an Important Role in Investments"

காரணம் மற்றும் விளைவு - பா. பத்மநாபன்

 

பெரிய விளைவுக்குக் காரணம் மிகச் சிறிய செயலாகத்தான் இருக்கும். மகாபாரதத்தில் திரௌபதி மானபங்கம் செய்யப்பட்ட மிகப் பெரிய விளைவுக்குக் காரணம் மிகச் சாதாரணமானது. மாயசூரன் என்ற கட்டிடக் கலைஞர் பாண்டவர்களுக்காக கட்டிய அரண்மனையில் நிறைய மாயத் தோற்றங்கள் இருந்தன. ஒரு நாள் துரியோதனன் பாண்டவர் அரண்மனையில் நுழைந்து பார்ப்பதற்குத் தரை போலத் தோற்றமளித்த இடத்தில் கால் வைத்தால், அது ஒரு நீர் நிலை; அதில் தவறி விழுந்துவிட்டான்.

அதைப் பார்த்து திரௌபதி குருடன் பையன் எப்படி இருப்பான், அவனும் குருடனைப்போலத் தான் என்று கேலி பேசி சிரித்தவுடன் தான் அவமானப்பட்டு விட்டதாக உணர்ந்து அவளை எப்படியும் பழி வாங்க வேண்டும் என்று நினைத்ததன் விளைவுதான், பின்பு அரச சபையில் அனைவர் முன்பாகவும் அவளை துகிலுரிக்க காரணம்.

இந்த காரணம் மற்றும் விளைவு எப்படி ஒருவருடைய முதலீட்டு வாழ்வில் பங்கு வகிக்கிறது என்று பார்க்கலாம். நாம் சாதரணமாக எடுத்து கொள்ளும் பெரும்பாலான காரணங்கள் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்திவிடும். இன்று பலர் தெரிந்தும் தெரியாமலும் லைப் இன்சூரன்சில் பணத்தை செலுத்தி விட்டு அதை இன்வெஸ்ட்மென்ட் என்று கருதுகிறார்கள்.

20 முதல் 25 வருட முடிவில் நமக்கு என்ன கிடைக்கும்? அது போதுமானதுதானா என்றெல்லாம் பார்ப்பதில்லை. மேலும் அந்த தொகையை இடைவிடாமல் கட்டமுடியுமா என்றும் யோசிப்பதில்லை. பின்பு அந்த முகவர் சொன்னார், எனக்கு அந்த நிறுவனத்தின் மேல் நம்பிக்கை உள்ளது என்று நம்முடைய தவறுக்கு சப்பை கட்டு கட்டுவதுண்டு.

நீங்கள் எதில் வேண்டுமானாலும் பணத்தை முதலீடு செய்யலாம், அது உங்களுடைய சுதந்திரம். ஆனால் அதன் பலன் என்னவென்றுதெரியாமல் செய்தால் அதனுடைய விளைவுகள் பயங்கரமாக இருக்கும். அதாவது பணவீக்கத்தை கட்டுபடுத்தாததால், உங்களுடைய தேவை பூர்த்தியடையாது போய்விடும் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்த தவறு, ஒரு முதலீடு கடந்த வருடத்தில் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்று பார்த்து முதலீடு செய்வது. இந்த தகவல் பலர் சொல்லக் கேட்டும், படித்தும், பார்த்தும் நாம் முதலீடு செய்வது. அது வரும் காலத்தில் எப்படி செயல்படும் என்றும் பார்க்க வேண்டும், அதை இலவசமாக யாரும் கூறமாட்டார்கள்! பின்பு அதில் முதலீடு செய்து அதைப் பற்றி தவறாக பேசுவது. சரியான முதலீட்டை கண்டு பிடிப்பது அவ்வளவு எளிதாக இருந்தால், எல்லோரும் செய்து விடலாமே! கண்டிப்பாக எளிதல்ல, அதற்கு கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும், அவ்வளவுதான்.

இன்றைய வேலை பெரும்பாலோருக்கு அதிக மன அழுத்தம் கொடுக்ககூடியதாக உள்ளது. கை நிறைய சம்பளம் பெறுவதால், சாதாரணமாக வேலை செய்யகூடிய 8 மணி நேரத்துக்கும் மேலாக 12 மணி நேரம் உழைப்பதோடு நேரத்துக்கு சாப்பிடுவதும் இல்லை. ஏதாவது அந்த நேரத்துக்கு சாப்பிடுகிறோம். அது பெரும்பாலும் ஜன்க் உணவு, அந்த நேரத்திற்குப் பலன் தரும். அடிக்கடி சாப்பிடுவதால் பல உடல் உபாதைகளுக்கு நாம் வழி வகுக்கிறோம். இதனால் உடல் நலம் பாதிக்கப்படுவது மற்றும் முடிக்க முடியாத அளவுக்கு வேலைப் பளு கொடுப்பதால் மன அழுத்தம் உண்டாகிறது.

ஏற்கெனவே அப்பா அம்மா வீடு வைத்திருந்தாலும் தானும் வீடு வாங்கவேண்டும் மேலும் நம்முடைய குழந்தைகளுக்கும் சேர்க்கவேண்டும் என்பதால் ஒரு வீட்டுக் கடன் முடிந்து, அடுத்தது என்று தொடர்ந்து மாட்டிக் கொள்வதால் தேவையற்ற மன அழுத்தத்துக்கு உள்ளாகிறோம்..

அதேபோல விளையாட்டாக ஒருவர் வேலைக்குச் சேர்ந்தவுடன் 22 வயதில் சேமிக்ககூடிய ரூபாய் 2000, 15% கூட்டு வட்டியைக் கணக்கில் கொண்டால், 50 வயதில் ஒரு கோடி ரூபாய்க்கான விளைவைக் கொடுக்கும்.

இந்த 3 உதாரணத்திலும் காரணம் ரொம்ப சிறியது, அதே சமயம் விளைவு வெவ்வேறானவை. மேலும் நாம் அடைய விரும்புவது எதுவென்று முடிவு எடுத்தோம் என்றால் பெரும்பாலும் அடைந்து விடுகிறோம். பலருக்கு அந்த இலக்கு இல்லாததால் அதைப்பற்றி குறை கூறுவதுண்டு. அந்த இலக்கு உள்ளவர்கள் அதைப்பற்றித் தெரிந்து கொள்வதற்கு முயற்சி செய்வதோடு அதில் என்னவிதமான தடங்கல்களைச் சந்திக்க வேண்டும் என்று ஆக்க பூர்வமாக முயற்சி செய்வதால் வெற்றி கிட்டுகிறது. அதற்கு நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய சின்ன சின்ன முயற்சிகளே வெற்றி என்னும் பெரிய விளைவை ஏற்படுத்துகிறது.

சாராம்சம்: நம்முடைய பெரிய பெரிய பிரச்சினைகளுக்கு மேலே சொன்ன மாதிரி சின்னச் சின்ன காரணங்கள்தான். பிறந்த உடன் யாரும் எந்தவித கெட்ட பழக்கங்களுக்கும் அடிமை ஆவதில்லை. பல சமயங்களில் நண்பருடைய வற்புறுத்தல் அல்லது ஒரு ஜாலிக்காக செய்யலாம் என்று ஆரம்பித்த சிகரெட், குடி மற்றும் போதைப் பொருள் மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும்போது, நாளடைவில் அதற்கு அடிமைப் படுகிறோம்.

நமக்கு அந்த நிமிடம்தான் பெரியதாகத் தோன்றுகிறது, வருங்காலத்தைப் பற்றி பலரும் கவலைப்படுவது இல்லை. இதிலிருந்து ஒன்றை நாம் உணர முடிகிறது. நம்முடைய பிரச்சினைகளுக்குப் பொதுவான காரணம் நம்முடைய அலட்சியம் மற்றும் அதனுடைய விளைவு என்னவென்று யோசிக்க முயல்வதில்லை. எந்த ஒன்றையும் நாம் அலட்சியம் செய்தால் அது எப்படி நம்மிடத்தில் இருக்கும்?

முதலீடு செய்வதற்கு முன்பு ஏன் செய்கிறோம், எதற்கு செய்கிறோம், அதனுடைய பலன் என்ன, அந்த பலன் நமக்கு வருங்காலத்தில் போதுமானதாக இருக்குமா, அதில் என்னவிதமான ரிஸ்க். மேலும் ரிஸ்க் என்பது அந்த முதலீட்டுத் திட்டத்திலா அல்லது நாம் கொடுக்கக்கூடிய கால அவகாசத்திலா என்பதை அறிந்து முதலீடு செய்தால், பணம் நாய்க்குட்டி போல வாலை ஆட்டிக் கொண்டு நம்மை பின் தொடர்ந்து வரும். மேலே சொன்ன எதையும் செய்யாமல், விளைவைப்பற்றிக் கவலை கொள்ளாமல் அந்த நிமிடத்திற்கு வாழ்ந்தோம் என்றால் எப்போதும் பணம் பணம் என்று நிம்மதி இல்லாமல் அலைய வேண்டி இருக்கும். வாய்ப்பு நம் கையில், அதைப் புரிந்து கொள்வோம். பணத்தை நம் சொல்படி ஆட்டி வைப்போம். வாருங்கள் பணம் செய்வோம்.

Sunday, 17 August 2014

My 46th Article In The Hindu Dated 18th August, 2014, About How To Attain Financial Freedom, at The Earliest?

பொருளாதார சுதந்திரம் - பா. பத்மநாபன்

நம்முடைய 68 வது சுதந்திர தினத்தை எல்லோரும் மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறோம். ஆனால் பொருளாதார சுதந்திரத்தைப் பற்றி எத்தனை பேர் சிந்தித்திருக்கிறோம்.

அதில் எவ்வளவு பேர் பொருளாதார சுதந்திரத்தை அடைந்திருக்கிறார்கள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். அது என்ன பொருளாதார சுதந்திரம், இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே என்று சொல்பவர்களே மிக அதிகம்.

பொருளாதார சுதந்திரம் என்பது நம்முடைய குழந்தைகள் விரும்பிய மேற்படிப்பைப் படிக்க வைப்பது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கூட, அதற்குப் பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. அதே மாதிரி விமரிசையாக குழந்தைகளின் திருமணம், நம்முடைய ஓய்வு காலத்திற்குத் தேவையான பொருளாதாரம் மற்றும் விரும்பிய வெளி நாடுகளுக்கு சுற்றுலா பயணம் முதலியவை பொருளாதார சுதந்திரத்தின் வெளிப்பாடுகள்.

பலர் பொருளாதார சுதந்திரம் என்பது நாம் விரும்பிய எல்லாவற்றையும் வாங்கு வதற்கான செல்வம் என்று தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு முடிவே இல்லை. நம்முடைய வளர்ப்பு முறை இதைப் பற்றி என்றுமே சொல்லித் தந்ததில்லை. இன்று நான் சந்திக்கும் பலருக்கு தாங்கள் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அதற்கான முயற்சிகள் இல்லை. வெறும் எண்ணம் மட்டும் இருந்தால் போதாது. நம்முடைய எண்ணம் தீவிரமாக இருக்கும்போது நாம் அதை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம், அதுதான் வெற்றிக்கான முதல்படி.

இதை அடைவது மிகவும் சுலபம், அதற்குச் சில கட்டுப்பாடுகள் தேவை அவ்வளவுதான். நமக்கு கால அவகாசம் இல்லாவிட்டால் அதிகம் முதலீடு செய்ய வேண்டும். கால அவகாசம் இருந்தால் குறைந்த முதலீடு போதுமானது. உதாரணமாக ஒருவர் 23 வயதில் வேலைக்குச் சேர்ந்தவுடன் மாதம் ரூபாய் 2000 சேமித்தால் அவருடைய 50 ஆவது வயதில், 15% கூட்டு வட்டியில் ரூ.1 கோடி கிடைத்து விடும். வேலைக்குச் சேர்ந்த புதிதில் நன்றாக செலவு செய்து ஜாலியாக இருந்து விட்டு, 28 ஆவது வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால் அவர் மாதம் ரூபாய் 5,600 சேமிக்க வேண்டும்,
ஏனெனில் அவருக்கு 22 வருடமே கால அவகாசம். உதாரணமாக, உங்களுடைய வங்கி, FD, பங்குகள் மற்றும் மியுச்சுவல் பண்ட் யூனிட் என 50 லட்சம் ரூபாய் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இன்னொருவரிடம் காலி மனை அல்லது வீடு அதன் இன்றைய மதிப்பு 50 லட்சம் ரூபாய் என வைத்துக் கொள்வோம்.

இதில் எது உங்களுக்கு நம்பிக்கை தரும்? கண்டிப்பாக முதலில் சொன்னதுதான், காரணம் என்னை பொறுத்தவரை பணம் என்பது நமக்கு நம்பிக்கை தரக்கூடியது. நம்பிக்கை இழந்து விட்டால் நம்மால் எதிலும் வெற்றி கொள்ள முடியாது. அவ்வாறு இருக்கும் போது நாம் அசையாசொத்தில் அதிகம் நாட்டம் கொள்ளக் கூடாது.

நாம் படிக்கும் அறிவியல், கணக்கு மற்றும் ஆங்கிலம் நமக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பைத் தரவில்லை. அதைப் படித்து உணர்ந்து செயல்படுபவர்களே வெற்றி கொள்கிறார்கள். இது ஒன்றும் கடினம் இல்லை; ஆனால் அதற்கென நேரம் செலவிடவேண்டும்.

இந்த சம்பளத்தில் என்னால் எந்த முதலீடும் செய்ய முடியாது என்ற வாக்கியத்தை, முதலீடு செய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று மாற்றிக் கேட்டுப்பாருங்கள். உங்களுடைய வாக்கியம் மாறுபடும்போது உங்களுடைய வாழ்க்கையும் மேம்படும். நாம் என்றாவது ஒரு பெரிய பணக்காரன் நன்றாக படித்தான் அல்லது பெரும் பணக்காரன் ஆனான் என்று கேள்விப்பட்டதைவிட, தெரு விளக்கில் படித்தவன் மற்றும் மிகவும் ஏழை ஆகியோர்தான் வாழ்வில் முன்னேறினார்கள் என்று மீண்டும் மீண்டும் படிக்கிறோம். வெற்றி பெறவேண்டும் என்ற தாகம் இருக்கவேண்டும். இதைத்தான் ஆங்கிலத்தில் (FIRE IN A BELLY) என்று சொல்வார்கள்.

ஒருவர் கடந்த 10 ஆண்டுகளில் மிட்கேப் குறியீட்டு (2004-2014) பங்குச் சந்தையோடு இணைந்திருந்தால் அவருக்குக் கிடைத்திருக்கும் ரிடர்ன்ஸ் 18.09%. அவர் அந்த 10 வருடத்தில் சந்தையின் குறியீடு அதிகரித்த சிறந்த 5 நாட்களைத் தவற விட்டிருந்தால் கிடைத்திருப்பது 13.71%, அதுவே 10 நாட்களாக இருந்தால் அவருக்கு 10.54%, 15 நாட்களாக இருந்திருந்தால் 8.04%, மேலும் 20 நாட்களாக இருந்திருந்தால் வெறும் 5.90% தான். சந்தையைக் கணிக்க முயல்வது என்பது முடியாத ஒன்று என்பதற்கான உதாரணம் இது. அதனால் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு நீண்ட கால அடிப்படையில் இணைந்திருந்தால் நாம் பணம் செய்வதை யாராலும் தடுக்க முடியாது.

நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பதை விட அதில் எவ்வளவு நீங்கள் சேமித்து அதை முதலீடு செய்கிறீர்கள் என்பது முக்கியம். முறையாக முதலீடு செய்யாத எதுவும் ஓட்டை வாளியில் நீர் இறைப்பதற்குச் சமம்.

சாராம்சம்: பொருளாதார சுதந்திரத்தை பற்றித் தெரியாததாலும், அதை அடைவதற்கு நிறைய விஷயங்கள் கடை பிடிக்க வேண்டும் என்பதாலும் இதை அடைந்தவர்கள் மிகக்குறைவு.

நம்முடைய தேவைகள் அதிகரித்துக் கொண்டுவரும் இன்றைய சூழலில்​பொருளாதார சுதந்திரம்​ மிகவும் அவசியமாகிறது. சுதந்திரம் என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. எவ்வளோவோ பேர் செய்த தியாகங்கள், முயற்சிகள் ஆகியவற்றால்தான் இன்று நாம் சுதந்திரக் காற்றினை சுவாசித்துக் கொண்டி ருக்கிறோம்.

அதுபோல பொருளாதார சுதந்திரத்திற்கு நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். இங்கு அர்ப்பணிப்பு என்பது எல்லாவிதமான முதலீட்டைப் பற்றியும் உள்ள அடிப்படை அறிவு இதைத் தெரிந்து கொள்வது சுலபம். ஆனால் நாம் மனம் வைப்பதுதான் கடினம். அந்த அறிவு நம்மைத் தேவையற்ற முதலீட்டில் இருந்து காப்பாற்றுவதோடு சிறந்த முதலீட்டில் நம்பிக்கைகொண்டு நிறைய முதலீடு செய்யத் தூண்டும்.

ஒவ்வொருவரும் இந்த சுதந்திர தினத்தில் கூடிய விரைவில் நான் பொருளாதார சுதந்திரம் அடைவேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு செயல்பட்டோமேயானால் இன்னும் சில வருடங்களில் பொருளாதார சுதந்திரத்தை அடைவதில் எந்தத் தடங்கலும் இருக்காது. அனைவரும் பொருளாதார சுதந்திரத்திற்கு பாடுபடுவோம், பொருளாதார நெருக்கடி இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று உறுதி கொள்வோம், வாருங்கள்.​

My Article in Todays Naanayam Vikatan 24/8/14 dated, About The Importance of Husband and Wife Together To Decide About All The Finance

குடும்ப நிதித் திட்டமிடல்... கணவன் - மனைவி இணைந்தே செய்யலாமே! -
பி.பத்மநாபன் நிதி ஆலோசகர்
இன்று கணவன் மற்றும் மனைவி வேலைக்குச் செல்வது என்பது இன்றியமையாத ஒன்று. இன்றைய பொருளாதார நெருக்கடி உள்ள உலகில் ஓரளவுக்குத் தாக்குபிடிக்க இருவரது சம்பளமும் முக்கியம். மேலும், இன்று பெண்களும் ஆணுக்கு நிகராக எல்லா துறை களிலும் சிறந்து விளங்குகிறார்கள். அப்படி இருக்கும்போது அவர்களது படிப்பு மற்றும் திறமையை வீடு, குடும்பம் மற்றும் குழந்தைகளை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கச் சொல்வது சரியான செயலாக இருக்க முடியாது. வீட்டு பட்ஜெட் போடுவதிலிருந்து முதலீடு தொடர்பான எந்தவொரு முடிவை எடுப்பதுவரை பெண்களை இணைத்துக் கொண்டு செய்யும்போது குடும்பம் பணக்கஷ்டத்தில் சிக்காமல் குதூகலமாக இருக்கும்.
கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து நிதித் திட்டமிடலை செய்யும்போது, நிறைய நன்மைகள் கிடைக்கும். உதாரணமாக, பார்ப்பதை யெல்லாம் வாங்குவதை (இம்பல்சிவ் பையிங்கை) செய்வதிலிருந்து ஒருவர் நிச்சயம் தப்பிக்க முடியும். இம்பல்சிங் பையிங் என்பது ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு அந்த நிமிடம் எடுக்கக்கூடிய முடிவு. அய்யோ, இந்தப் பொருளை தேவை இல்லாமல் வாங்கிவிட்டேனே; இதை வாங்காமலே தவிர்த்திருக் கலாமே என பல சமயங்களில் நாம் நினைப்பது உண்டு. இந்த வருத்தம் உண்டாக்கும் பர்ச்சேஸிங்தான் இம்பல்சிவ் பையிங். கணவனும் மனைவியும் சேர்ந்து முடிவெடுக்கும்போது இந்தத் தவறு தவிர்க்கப்படுகிறது. தேவைக்கு மட்டுமே பொருட்கள் வாங்கப்படுகிறது. ஆசைகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதால், நியாயமான ஆசைகளே நிறை வேற்றப்படுகிறது. மற்ற ஆசைகள் நிராகரிக்கப்படுகிறது.

பொதுவாக, சேமிப்பு விஷயத்தில் நம் செயல்பாடு இப்படி இருக்கும்; 
வருமானம் - செலவு = சேமிப்பு. 
இதை, 
வருமானம் - சேமிப்பு = செலவு 
என மாற்றினால், உங்களுக்கு பணப்பிரச்னை என்றைக்கும் வராது. விரலுக்கேத்த வீக்கம் என்று சொல்வதுண்டு. யாராவது ஒருவர் கடன் கொடுக்கிறார் எனில், அது இலவசம் இல்லை; ஒவ்வொரு மாதமும் நாம்தான் அதை வட்டியுடன் திரும்பக் கட்ட வேண்டும். இப்படி எளிதாகக் கிடைக்கக்கூடிய பணம், நம்முடைய தேவைகளை வெகு விரைவாக அதிகரித்துவிடும்; பின்பு அதிலிருந்து மீள்வது கடினம்.
கணவன் - மனைவி இணைந்து செயல்பட கீழே தரப்பட்டுள்ள பிராக்டிகலான விஷயங்களை  கடைப்பிடிப்பது நல்லது.

1. பட்ஜெட் போட்டு செலவு செய்வது
2. வங்கியில் ஜாயின்ட் அக்கவுன்ட் தொடங்குவது
3. பெரிய செலவுகளை இருவரும் சேர்ந்து முடிவெடுப்பது
4. எந்தக் கடன் என்று கலந்தாலோசித்து முடிவெடுப்பது. வாங்குகிற கடனை ஒருவரது பெயரில் வாங்கினால் என்ன நன்மை, இருவரும் சேர்ந்து வாங்கினால் என்ன நன்மை என்று பார்த்து முடிவெடுப்பது.
5. முதலீட்டு முடிவுகளை இருவரும் சேர்ந்தே எடுப்பது.
6. யாருக்கு எந்தப் பொறுப்பு எளிதாக வருகிறதோ, அதை மனம் மகிழ்ந்து செய்வது.
7. நமக்கு என்ன தேவை, நம் இலக்கு என்ன என்பது போன்றவை எளிதில் கண்டுகொள்ளப்படுவதால், அதை நோக்கி பயணிக்க முடிகிறது.
 இதற்கான வழிமுறைகள் என்ன?
முதலில் எல்லாவிதமான வங்கிக் கணக்குகளையும் ஜாயின்ட் அக்கவுன்ட்டாக மாற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் ஒருவர் மேல் ஒருவர் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அடுத்து, பொறுப்புகள் பிரிக்கப்பட்டு எது ஒருவருக்கு எளிதாக வருகிறதோ, அதை அவரிடமே விட்டுவிட வேண்டும். உதாரணமாக, பட்ஜெட் போடுவது பெண்களுக்கு எளிதாக வரக்கூடிய ஒன்று. ஒவ்வொன்றையும் அவர்கள் யோசித்துச் செய்வார்கள். எனவே, அந்த வேலையை அவர்களிடம் தந்துவிட்டு, பின்பு அதை இருவரும் கலந்தாலோசிக் கலாம். அதேமாதிரி முதலீடுகள் பற்றி ஆண்கள் நிறையத் தெரிந்து வைத்திருப்பார்கள்; அந்த முதலீட்டு யோசனைகளை இருவரும் கலந்தாலோசித்துவிட்டு ஒரு நல்ல முடிவை எடுக்கலாம்.
இந்த விஷயத்தில் யார் எந்தப் பொறுப்பு எடுத்துகொண்டாலும் இருவரும் இணைந்துதான் முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லாவற்றையும் நானே பார்க்க வேண்டுமா என்ற சலிப்பான வார்த்தை கள் எழுந்து, குடும்ப அமைதி கெடுவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடும்.

ஒரு பிசினஸில் இரண்டு பார்ட்னர் ஒவ்வொரு செயல்களையும் கலந்தாலோசித்து முடிவு செய்கிற மாதிரி எல்லா விஷயத்திலும் மனைவி யையும் கலந்து முடிவு செய்யலாம். ஒருவர் முடிவைவிட இருவரது முடிவு பெரும்பாலான நேரத்தில் பிளஸ் மற்றும் மைனஸ்களை அலசுவதால் சரியாக அமைய வாய்ப்பு அதிகம். பொறுப்புப் பகிர்ந்தளிக்கப்படும்போது அவரவர் தங்களுடைய பொறுப்பை சரியாகவும் காலம் தவறாமலும் நிறைவேற்ற முடிகிறது. பல சமயங்களில் கணவன் - மனைவியிடையே ஏற்படும் சின்னச் சின்ன சச்சரவுகளுக்கு காரணம், ஒருவரை ஒருவர் கலந்தாலோசிக்காமல் சுயமாக முடிவெடுப்பது. இந்த முடிவு பிற்பாடு கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ தெரியவரும்போது அது பெரிய பிரச்னையாக மாறிவிடுகிறது.
நிதித் திட்டமிடல் மற்றும் முதலீடு சார்ந்த விஷயங்களில் கணவன் - மனைவி இருவரும் இணைந்து செயல்படுவதால் கிடைக்கும் நன்மைகள் பலப்பல. முதல் நன்மை ஒருவருக் கொருவர் தினசரி அல்லது வாரத்துக்கு ஒருமுறையோ மனம்விட்டுப் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைக்கிறது. இன்று பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம், நாம் கலந்து பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதே இல்லை. அடிக்கடி நேரம் ஒதுக்கி மனம்விட்டு பேசுவதால், உறவுகள் பலப்படுவதோடு ஒருவர் மீது ஒருவருக்குள்ள நம்பிக்கை அதிகரிக்கிறது. இந்த நம்பிக்கை அமைதியான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம். இரண்டு பேர் சேர்ந்து முடிவு எடுப்பதால் ஒருவருடைய விருப்பத்தைவிட அந்த முடிவினால் ஏற்படக்கூடிய விளைவு களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இது கண்டிப்பாக நல்ல பலனையே தரும்.
இருவர் இணைந்து கடன் வாங்குவதால் கிடைக்கும் வசதியும் சலுகைகளும் இருமடங்கு உயர்கிறது. அதேசமயம் பொறுப்பு என்று வரும்போது பகிரப்படுகிறது. இன்று நம்முடைய வாழ்க்கை தரம் உயர்ந்து காணப்படுவதற்கு மிகப் பெரிய காரணமே இருவரும் சேர்ந்து செயல்படுவதுதான். குழந்தைகளுக்கும் நல்ல கல்வி தரமுடிகிறது. இருவரும் இணைந்து இப்படி செயல்படுவதை ஆங்கிலத்தில் ‘சினர்ஜி’ என்று சொல்வார்கள். அதற்கு அர்த்தம், ஒன்று பிளஸ் ஒன்று, இரண்டு அல்ல. எப்போதுமே இரண்டுக்கும்மேல் என்று அர்த்தம். இங்கு ஒருவருடைய குறைகள் மற்றவரால் நிறையாக்கப்படுகிறது.
இதன் சாதக மற்றும் பாதகங்கள்?
சாதகங்கள்:
1. இதில் மிகப் பெரிய சாதகம் உறவுகள் மேம்படுவது. ஒருவர் மற்றொருவரின் பேரில் வைத்திருக்கும் மதிப்பும் கூடுகிறது.
2. கலந்தாலோசிக்கும்போது பிளஸ் மற்றும் மைனஸ் நன்றாக அலசப்படுகிறது. உணர்ச்சிமயமான முடிவுகள் தவிர்க்கப் படுகிறது.
3. மூலதனம் ஒரே இடத்தில் இருப்பதால், கண்காணிப்பது மிகவும் சுலபமாகிவிடுகிறது.
4. தனித்தனியாக வீட்டுக் கடன் வாங்குவதைவிட, இருவரது சம்பளமும் சேரும்போது நமக்குக் கூடுதல் பலம் கிடைப்பதால் பெரிய வீடு அல்லது கொஞ்சம் வசதி அதிகமானது கிடைப்பதற்கு சாத்தியம்.
5. பொறுப்புகள் பகிரப்படுவதால் சுமைகள் குறைகின்றன. அது மன அழுத்தத்தைப் பெருமளவு குறைப்பதால் தரமான வாழ்வு மேம்படுகிறது.
பாதகங்கள்:
1. இன்று யாருக்கும் பொறுமையோ மற்றவருக்கு விட்டுக்கொடுக்கும் குணமோ நாளுக்குநாள் குறைந்த வண்ணம் இருக்கிறது. இப்படிப்பட்ட இயந்திரத்தனமான வாழ்வில் பெரும்பாலான உறவுகள் சிறிய விஷயங்களுக்காகக்கூட முறிந்து விடுகிறது. அப்படி இருக்கும்போது நாம் வாங்கிய ஒரு வீட்டுக் கடனோ அல்லது மற்ற கடனோ மிகப் பெரிய கேள்விக்குள்ளாவது தவிர்க்க முடியாத ஒன்று.
2. இதில் புரிதல் மிகவும் அவசியம். வாழ்வின் நீண்ட கால கமிட்மென்ட்டான வீட்டுக் கடன் அல்லது வேறு சில கடன்கள் திருமணமான உடனே தொடங்காமல் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு முடிவு எடுத்தால் பல பாதகங்களில் இருந்து தப்பிவிட முடியும்.
3. இதனால் நாம் கருதக்கூடிய பாதகங்கள் நம்முடைய கட்டுக்குள் உள்ளது. இங்குப் பாதகம்  என்பது நம்பிக்கை இன்மை மற்றும் ஆதிக்கம் முதலியவற்றால்தான் வரும். நாம் நினைத்தால்  இதை எளிதில் சமாளிக்க முடியும்.
பெரும்பாலான பிசினஸ் பல மடங்கு பறந்து விரிந்து காணப்படுவது ஒருவரால் மட்டும் சாத்தியம் இல்லை. இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இணைந்து செய்வதால்தான். அதேபோல,  குடும்பத்தில் செல்வம் செழிக்கவேண்டு மானால் இருவரும் இணைந்து செயல்படும்போது மிகுந்த நன்மை பயக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கும்.
தொடர்ந்து முன்னேற வேண்டுமானால் இருவரும் சேர்ந்து யோசித்து முடிவு எடுக்க வேண்டும். நிறைய பிசினஸில் மனைவியிடமிருந்து ஒத்துழைப்புக் கிடைக்கும்போது மன அழுத்தம் குறைகிறது; உறவுகள் வலுப்படுகிறது. நல்ல தரமான வாழ்வும் கிடைக்கிறது.

Monday, 11 August 2014

My 45th Article In The Hindu Tamil Dated 11th August 2014, About Delayed Gratification, How Influences In our Investments?

தாமதமாக திருப்தி அடைதல் (Delayed Gratification) - பா. பத்மநாபன்

ஒருவருடைய வாழ்கையின் வெற்றிக்குப் பெரிதும் உறுதுணையாக இருப்பது தாமதமாக திருப்தி அடைதல் என்று சொன்னால் அது மிகையாகாது. 1960-ம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான வால்டர் மைக்கேல் என்பவர் உளவியல் சம்பந்தமாக சில சோதனைகள் மேற்கொண்டார். அவற்றில் மிகவும் பிரபலமான ஒன்று மார்ஷ் மெல்லோ சோதனை.

4 முதல் 5 வயது உள்ள சிறு குழந்தைகளை தனித்தனியான அறையில் சாக்லேட்டை அவர்கள் முன்னால் வைத்து நான் வெளியே சென்று 15 நிமிடம் கழித்து வருவேன்; இதை சாப்பிடாமல் இருந்தால் உனக்கு 2 தருவேன். ஒருவேளை சாப்பிட்டுவிட்டால் அந்த ஒன்றுதான் என்று சொல்லப்பட்டது.

100 குழந்தைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சோதனையில் பல குழந்தைகள் அவர் வெளியே சென்ற வுடன் அதை சாப்பிட்டுவிட்டனர். சிலர் கொஞ்ச நேரம் பொறுத்து பின்னர் அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்தாமல் சாப்பிட்டுவிட்டனர். அவற்றில் 5 குழந்தைகளே 15 நிமிடம் காத்திருந்து 2 சாப்பிட்டனர். மிக முக்கிய காரணம், ஒரு வேளை நமக்கு 2 கிடைக்கவில்லை என்றால் நாம் காத்திருந்தது வீணாகி விடுமோ என்ற எண்ணமும்தான்.

இத்துடன் இந்த பரிசோதனை முடியவில்லை. 10 ஆண்டுக் காலம் கழித்து அவர்களுடைய வாழ்கையைப் பார்க்கும்போது அந்த 5 பேர் மற்றவர்களைக் காட்டிலும் எல்லா விதத்திலும் சிறந்து விளங்குகிறார்கள் என்று தெரிய வந்தது.

இத்தகையான நிகழ்வுகளை நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் கண்கூடாக பார்க்கலாம். ஒரு குழந்தை டி.வி. பார்க்காமல், ஹோம் வொர்க் செய்து அன்றாடம் படித்தால் நல்ல மதிப்பெண் வாங்க முடியும். இங்கு தாமதப்படுதல் என்பது ஒரு பெரிய வெற்றிக்கு உண்டான அடித்தளம்.

நீங்கள் எதில் வெற்றி பெறவேண்டு மானாலும் ஒழுக்கம், அதற்கான செயல்பாடு முக்கியம், பல இடையூறுகள் வரும் அதைக் கண்டு கொள்ளக்கூடாது. இதற்கு நாம் சிறிது அட்ஜஸ்ட் செய்து கொள்ளவேண்டும் அவ்வளவுதான். 1. பொறுத்திருந்தால் பெரிய பலன் கிடைக்கும் 2. எனக்கு அந்த வலிமை உள்ளது, அப்படி கொஞ்சம் குறைந்தாலும் என்னால் அந்த வலிமையை உருவாக்கிக் கொள்ள முடியும்.

மேலே சொன்ன தாமதமாக திருப்தி அடைதல் எவ்வாறு நம்முடைய முதலீட்டில் பயன்படக்கூடியது என்று பார்க்கலாம்.

ஒருவரிடம் பணம் இருந்தால் செய்யக் கூடிய எளிதான செயல், அதை செலவு செய்வது. அப்படி பழக்கப்பட்டவர்களை எப்போதுமே நாம் கட்டுப்படுத்த முடியாது. அதேசமயம் ஒருவருக்கு பணம்கம்மியாக இருக்கும்போது அதை மிகவும் பொறுப்பாக செலவு செய்வார்கள்.

ஒருவர் வேலைக்குச் சேர்ந்தவுடன் எல்லாவிதமான பொருளுக்கும் ஆசைப்படாமல், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேமிக்க ஆரம்பித்து விட்டால் அவருக்கு சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கும். அவ்வாறு உள்ளவர்கள் வாழ்வில் எந்த கடன் தொல்லையும் இல்லாமல் பணத்தை பல மடங்கு பெருக்குகிறார்கள் என்பதை நம்மால் உணர முடியும்.

பலரும் முதலீடு செய்தவுடன் பணம் பெருக வேண்டும் என நினைக்கிறார்கள்; அது முடியாத ஒன்று. மேலே சொன்ன மார்ஷ்மெல்லோ சோதனையில் வெகு சிலரே பொறுமையுடன் இருந்ததுபோல, நீண்டகால அடிப்படையில்தான் அந்த பணம் வேண்டும், மேலும் என்னால் முடிந்தவரை சேமிப்பேன் என்ற மன உறுதி உள்ளவர்கள் பணத்தை பல மடங்கு பெருக்கி இருக்கிறார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த, புரிந்த ஒன்று. அப்படி இருக்கும்போது ஏன் செய்வதில்லை என்றால் அவர்களுக்கு உடனடியாக ரிசல்ட் வேண்டும்.

10 வருடம் காத்திருந்தால் நல்ல ரிடர்ன்ஸ் கிடைக்கும் என்றாலும் பலருக்கு அவ்வளவுகாலம் பொறுமை இல்லை மற்றும் நம்பிக்கை இல்லை.

2003ன் தொடக்கத்தில் 900 இருந்த நிப்டி இன்டெக்ஸ், இன்று 11 வருடங்களில் 7700. 8 மடங்கிற்கும் மேல். நாம் கவனிக்க வேண்டியது சதவிகிதமே தவிர அதன் நம்பர் இல்லை. 2003ம் ஆண்டு முதலீடு செய்த பல முதலீட்டு திட்டங்கள் சுமார் 15 முதல் 25 மடங்கு வரை 2014 ஜூன் மாத முடிவில் ரிடர்ன்ஸ் தந்திருக்கிறது. எந்தவிதமான வரியும் கட்ட வேண்டிய அவசியமில்லை.

எந்த ஒரு கால கட்டமாக இருந்தாலும் 10 முதல் 15 வருடம் முடிவில் சந்தையின் ஏற்றத் தாழ்வை சந்தித்து இத்தகைய ரிடர்ன்ஸ் சாத்தியப்படுகிறது. ஆனால் எல்லோருக்கும் பெரிய சந்தேகம் நான் இன்று முதலீடு செய்தால் இதே மாதிரி வருமா?

இதற்கு ஒரே பதில், நிச்சயமில்லை; ஆனால் உங்களுடைய பாதுகாப்பான முதலீடு என்பது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாது. அப்படி இருக்கும்போது இதில் பாதி கிடைத்தால் கூட நல்ல பலன் தான். இன்று ஆரம்பிக்கப் படக்கூடிய பல நிறுவனங்கள் முன்பு பல காலம் இருந்த நிறுவனங்களை விட நன்றாக செயல் படுவதோடு பல மடங்கு விரைவாக வளர்ந்து வருகின்றன. சந்தை முதலீடு என்பது அவ்வகையான நிறுவனங்களில் பங்குதாரர் ஆவதுதான்.

மேலே சொன்ன உதாரணம் கூட்டு வட்டியில் கணக்கிட்டால் 26.5% முதல் 32.3% வரைதான். ஒரு பாதுகாப்பான முதலீடு 8 முதல் 10% கொடுக்கும்போது, ரிஸ்க்கான முதலீடுகடந்த 6 வருட காலம் வெறும் 3% கூட்டு வட்டியே தந்திருப்பதால் 15% ரிடர்ன்ஸ்கிடைப்பது என்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.

சாராம்சம்: தாமதமாக திருப்தி அடைதல் என்பது எல்லோராலும் பின்பற்றக்கூடிய ஒன்று. பல ஆண்டுகளாக நம்மிடம் இருந்தது, கடந்த 10 ஆண்டுகளாக மேல் நாட்டுமோகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து கொண்டிருக்கிறோம். அதனால் தான் நிறைய பேர் நன்றாக சம்பாதித்தும் இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தேவைகளும், பணவீக்கங்களும் தினசரி அதிகரித்து கொண்டிருக்கிற இன்றைய சூழலில் நாம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று தாமதமாக திருப்தி அடைதல். ஒருவேளை அதற்கு கிடைக்கும் பலனில் நம்பிக்கை இல்லை என்றால் கொஞ்சம் நேரம்ஒதுக்கி அந்த முதலீட்டை உற்றுநோக்கினால் நமக்கு தாமதமாக திருப்திஅடைதலின் முக்கியத்துவம் தெரியும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது போலகாத்திருப்போம், நிறைய பணம் செய்வோம் வாருங்கள்.

Monday, 4 August 2014

My 44th Article In The Hindu Tamil Dated 4th August, 2014 On Chinese Bamboo Story About Long Term Investments and Its Benefits

சீன மூங்கில்போல் பலன் தரும் முதலீடு!
​ - 
பா. பத்மநாபன்

இது ஒரு வகையான மூங்கில். இது நமக்கு பல அர்த்தங்களை உணர்த்துகிறது. உதாரணமாக நாம் சீன மூங்கில் மரத்தின் விதையை எடுத்துக் கொள்வோம். வருடம் முழுவதும் அதற்குத் தினசரி தண்ணீர் விட்டு, உரம் இட்டாலும் எந்த ஒரு வித வளர்ச்சியையும் முதலாம் ஆண்டு காண முடியாது.

இரண்டாவது வருடமும் அதே மாதிரி தினசரி தண்ணீர் பாய்ச்சி, உரத்தை இட வேண்டும்; நம் கண் முன்னால் எந்த ஒரு வளர்ச்சியையும் அது வெளிக்காட்டாது.

மூன்றாவது வருட முடிவிலும் அதே நிலை, நம்மில் பலர் பொறுமை இழந்து விடுவோம்; சிலர் 4 வது வருடம் தொடரும் போதும் அதேநிலை கண்டு நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

ஐந்தாவது வருடம் தண்ணீர் பாய்ச்சி, உரம் இட்டு அதை உற்றுக் கவனித்தால் அது வளர ஆரம்பிக்கும். அதனுடைய உயரம் 6 வாரங்களில் எவ்வளவு தெரியுமா? ஒரு நிமிடம் உங்களது மூச்சை பிடித்துக் கொள்ளுங்கள், ஆமாம் 90 அடி; உங்களால் கண்டிப்பாக இதை நம்ப முடியாது, ஆனால் இது முற்றிலும் உண்மை.

நான்கு வருடங்களாக சீன மூங்கில் சும்மா இருக்கவில்லை, அது உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தைக் கடந்தவுடன், அது உள்ளிருந்து வெளியே விஸ்வரூப வளர்ச்சியைக் கொடுக்கிறது. இதற்கு ஆங்கிலத்தில் PATIENCE PAYS என்று சொல்வார்கள்.

நம் அன்றாட வாழ்வில் பலரைப் பார்த்து இருப்போம். அவர்கள் உழைத்த உழைப்பு, அவர்களுக்குத் தாங்கள் செய்கிற செயல்களின் மேல் இருந்த தீராத நம்பிக்கை ஆகியன விஸ்வரூபம் எடுக்கும்போது அந்த வளர்ச்சியைப் பார்த்து பலர் அவருக்கு அதிர்ஷ்டம் என்று கமென்ட் சொல்வதுண்டு.

சிலருக்கு அவ்வப்போது அதிர்ஷ்டம் அடிக்கலாம். உங்களுக்கு உண்மையாகவே தகுதி இல்லை என்றால் மற்றவர்களால் சொல்லக்கூடிய அதிர்ஷ்டத்தை உங்களால் தக்க வைத்துக் கொள்ள முடியாது.

பங்குச் சந்தை முதலீடு என்பது நாம் ஒரு நிறுவனத்தின் பங்குதாரர் ஆவது. அவ்வாறு இருக்கும்போது அதற்குக் கொஞ்ச கால அவகாசம் தர வேண்டும். சீன மூங்கில் மரத்தைப்போல இதற்கு குறைந்தது 5 முதல் 7 ஆண்டு கால அவகாசம் தர வேண்டும்.

2008 ஜனவரி சரிவிற்குப் பிறகு சந்தை இப்போதுதான் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 2003 முதல் 2007 வரை சந்தை மேலே சென்று கொண்டிருந்ததைப் பார்த்து பலர் அதிக முதலீடு செய்தது அப்போதுதான். அவ்வாறு செய்தவர்கள் இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.

கடந்த ஒரு வருடத்தில் பல பங்குகள் 1 முதல் 4 மடங்கு வரை உயர்ந்திருக்கிறது. மியுச்சுவல் பண்ட் திட்டங்கள் 30% முதல் 100% வரை ரிடர்ன்ஸ் கொடுத்துள்ளது. பலர் நம்பிக்கை இழந்து பணத்தை எடுத்து வேறு இடத்தில் போட்டிருப்பார்கள்.

பலருக்கு மியுச்சுவல் பண்ட் திட்டத் துக்கும் இன்சூரன்ஸ் திட்டத்துக்கும் உள்ள வேறுபாடு தெரிவதில்லை. இன்சூரன்ஸ் திட்டத்தில் நமக்குக் கொடுக்கக்கூடிய டாக்குமெண்டிற்கு பாலிசி என்று பெயர். இது வருடா வருடமோ, அல்லது மாதா மாதமோ அல்லது காலாண்டிற்கு ஒரு முறையோ கட்ட வேண்டும். ஒரே நிறுவனம் இன்சூரன்ஸ் மற்றும் மியுச்சுவல் பண்ட் திட்டத்தை நடத்துவதால் இரண்டும் ஒன்று என பலரும் நினைப்பதுண்டு.

டைவர்சிபைட் மியுச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் 5 வருட முடிவில், 12 முதல் 15% ரிடர்ன்ஸ் சந்தை சரி இல்லாத சமயத்தில் கூட கிடைத்திருக்கும். செக்டார் பண்டில் முதலீடு செய்திருந்தால் பண இழப்பிற்கு வாய்ப்பு உள்ளது. ஒன்று தெரிந்து முதலீடு செய்ய வேண்டும் அல்லது ஒரு நிதி ஆலோசகரின் உதவியோடு செயல்படுத்த வேண்டும்.

அரசாங்கத்தில் கிடைக்கக்கூடிய பென்ஷன் மற்றும் பிராவிடண்ட் பண்டுகள் யாவும் நீண்ட கால அடிப்படையில் தான் நமக்கு பலன் தருகிறது. அதை விட்டு விட்டு நாளைக்கே பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக பணத்தை இழக்க நேரிடும்.

பங்குச் சந்தையைப் பற்றித் தெரியாதவர்கள் முதலில் மியுச்சுவல் பண்ட் திட்டத்தின் மூலம் அது எவ்வாறு செயல்படுகிறது என்று தெரிந்து கொண்டு பிறகு நேரடியாக முதலீடு செய்யலாம்; அல்லது உங்களுக்கு நேரம் ஒதுக்க முடியும். மேலும் உங்களுக்கு வழி காட்ட ​யாராவது இருந்தால் நீங்கள் நேரடியாக முதலீடு செய்யலாம்.

1979 ல் ஆரம்பிக்கப்பட்ட மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண் 100 அது 1984 ஏப்ரல் 1ம் தேதி 245, 1989 ஏப்ரல் 1ம் தேதி 714, 1994 ஏப்ரல் 1ம் தேதி 3779, 1999 ஏப்ரல் 1ம் தேதி 3740. அதாவது 5 வருடமாக சந்தை எந்தவித ஏற்றத்தையும் கொடுக்கவில்லை பலரும் இதைவிட்டு வெளியே வந்திருப்பார்கள். 2004 ஏப்ரல் 1ம் தேதி 5591, 2009 ஏப்ரல் 1ம் தேதி 9708, கடந்த 2014 ஏப்ரல் 1ம் தேதி 22386. 35 வருடத்தில் 223 மடங்கு.கூட்டு வட்டியில் கணக்கிட்டால் வெறும் 16.71% தான்.​

சாராம்சம்: சீன மூங்கில் மரம் கதைபோல இருந்தாலும் அதில் கூறப்பட்ட யாவும் நிதர்சன உண்மை. பணம் செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல; அதற்குத் தேவை பொறுமை, நம்பிக்கை, நேரம் ஒதுக்குவது.

எந்த ஒரு முதலீடும் அது வளருவதற்கு கால அவகாசம் தந்து அதை அவ்வப்போதுகவனிக்கவேண்டும். நாம் பணம் ஈட்டக்கூடிய வேலைக்கு ஒரு நாளில் எவ்வளவுநேரத்தை செலவிடுகிறோம் அப்படி இருக்குபோது ஒரு பணம் தானாக பெருகவேண்டுமானால் நாம் கொஞ்ச நேரமாவது அதற்கென ஒதுக்கவேண்டும்.

நமக்குத் தேவை போக மீதமுள்ள பணத்தைச் சிறிது சிறிதாக சேமித்தால் சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கேற்ப பல மடங்கு பணத்தை பெருக்கலாம்.

நேரம் ஒதுக்குங்கள், முதலீட்டைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் வேண்டாம் என்று சொன்னால் கூட நீங்கள் பணம் செய்வதை யாராலும் தடுக்கமுடியாது.