முதலீடு
செய்வது எப்படி? - பி. பத்மநாபன்
மியூச்சுவல்
ஃபண்டின் நன்மைகள் என்ன என்று கடந்த வாரம் பார்த்தோம். இனி எப்படி முதலீடு
செய்யலாம் என்று பார்ப்போம்.
முதலீடு
செய்வதற்கு முன்பு உங்களை பற்றிய தகவல்களை (கே.ஒய்.சி) கொடுத்தாக வேண்டும்.
உங்களுடைய போட்டோ, நிரந்தர கணக்கு எண் (பான்கார்டு), முகவரி சான்றிதழ் உள்ளிட்ட
தகவல்கள் போதும். ஒரு முறை கே.ஒய்.சி. கொடுத்துவிட்டால் போதும், அதன்பிறகு எத்தனை
ஃபண்ட்களில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
இரண்டு
வகைகளில் முதலீடு செய்யலாம்.
முதலாவது
மொத்த முதலீடு. அதாவது ஒரு ஃபண்டில் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்வது. இந்த
முறையில் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்சம் 5,000 ரூபாயாவது (செக் கொடுக்க
வேண்டும்) முதலீடு செய்ய வேண்டும். 5000 ரூபாய்க்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும்
முதலீடு செய்யலாம். இன்னொரு வாய்ப்பு சிஸ்டமேட்டிக் இன்வெஸ்மெண்ட் பிளான். ஒவ்வொரு
மாதமும், ஒரு குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது.
செய்த
முதலீட்டை ஒரு வருடத்துக்கு முன்பாக எடுக்கும் பட்சத்தில் கிடைக்கும் தொகையில் ஒரு
சதவிகிதம் வெளியேறும் கட்டணம் செலுத்தியாக வேண்டும். ஒரு வருடத்துக்கு பிறகு
எடுக்கும் போது வெளியேறும் கட்டணம் ஏதும் செலுத்த தேவை இல்லை.
மேலும்,
ஒரு வருடத்துக்கு முன்பு வெளியே எடுக்கும் பட்சத்தில் 15 சதவிகித நீண்ட மூலதன ஆதாய
வரி செலுத்தியாக வேண்டும். உதாரணத்துக்கு ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் 30,000
ரூபாய் லாபம் கிடைக்கிறது என்று வைத்துக்கொண்டால், கிடைக்கும் 30,000 ரூபாய்க்கு
15 சதவிகித வரி அதாவது 4500 ரூபாய் ஆதாய வரி கட்ட வேண்டி இருக்கும். ஒரு வேளை
நீங்கள் முதலீடு செய்திருப்பது பங்குச்சந்தை சார்ந்த ஃபண்டாக இருக்கும் போது ஒரு
வருடத்துக்கு பிறகு முதலீட்டை திருப்பி எடுத்தால் நீண்டகால மூலதன ஆதாய வரி
செலுத்தத் தேவை இல்லை.
குரோத்
(வளர்ச்சி) மற்றும் டிவிடெண்ட் (ஈவுத் தொகை) என இரண்டு முதலீட்டு வாய்ப்புகள்
இருக்கின்றன. நீங்கள் எதுவுமே தேர்வு செய்யவில்லை என்றால் தானாக குரோத் ஆப்ஷனில்
முதலீடு செய்யப்படும். டிவிடெண்டில் சந்தையின் சூழ்நிலைக்கு ஏற்ப லாபத்தை
எடுத்துக் கொடுப்பார்கள். பெரும்பாலும் இந்த வாய்ப்பை ஓய்வு பெற்றவர்கள் தான்
தேர்வு செய்கிறார்கள்.
யாரை அணுகுவது?
கடந்த
9 மாதங்களாக நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் அலுவலகம் சென்று முதலீடு செய்யமுடியும்.
ஆனால் உங்களுக்கு உதவ யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் நேரடியாக முதலீடு
செய்யும்போது 0.50 சதவிகிதம் வரை மிச்சப்படுத்தலாம் என்றாலும், உங்களுக்கு உதவ
யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு வேளை தவறான ஃபண்டில் முதலீடு செய்யும்பட்சத்தில்
அதிகளவு நஷ்டத்தை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் முறையான நிதி ஆலோசகரை
நாடுவது நல்லது.
நிதி
ஆலோசகர் சந்தையை தொடந்து கவனித்துவருவார். மேலும் உங்களுடைய மொத்த முதலீடு எவ்வாறு
இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுவார். மேலும் உங்களுக்கு தேவையான சேவைகளையும்
தருவார்.
சில பொதுவான தவறுகள்.!
பெரும்பாலானவர்கள்
குறைந்த என்.ஏ.வி. (அதாவது ஒரு யூனிட்டின் மதிப்பு) பண்டில் முதலீடு செய்வது
நல்லது என்று நினைக்கிறார்கள். என்.ஏ.வி. குறைவாக இருப்பது முக்கியமல்ல. வருமானம்
தான் முக்கியம்.
உங்களது
நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். நீண்ட கால நோக்கத்தில் முதலீடு செய்துவிட்டு
முதலீட்டின் மதிப்பு குறைகிறது என்று மற்ற முதலீடுகளுடன் ஒப்பிட்டு, முதலீட்டை
வெளியே எடுப்பதும் தவறு. அதேபோல முதலீட்டின் மதிப்பும் அதிகரிக்கும் போது உடனேயே
எடுத்துவிடுவதும் தவறு.