Pages

Sunday, 17 June 2012

My Ninth Financial Planning Article in Naanayam Vikatan on 17th June 2012

நேற்று... இன்று... நாளை!
 
குடும்ப நிதி ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த விவேகானந்தன் தென் ஆப்பிரிக்காவில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஹெச்.ஆர். மேலாளராகப் பணியாற்றி வருகிறார். ''எனக்கு 42 வயதாகிவிட்டது. இனிமேலாவது என் வாழ்க்கையைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் உங்களைத் தேடி வந்திருக்கிறேன்'' என்றார் விவேகானந்தன்.
விவேகானந்தனின் மாதச் சம்பளம் பிடித்தம் எல்லாம்போக, இரண்டு லட்சம் ரூபாய். மனைவி, வசந்தா தனியார் கல்லூரியில் 16 ஆண்டுகள் விரிவுரை யாளராக (ஹெச்.ஓ.டி.) பணியாற்றி யவர், தற்போது இல்லத்தரசியாக இருக்கிறார்.  வேலையில் இருந்தபோது இவருடைய மாதச் சம்பளம் 50,000 ரூபாய். இத்தம்பதியர்களுக்கு பத்து வயதான ஆண் மகன் மிதேஸ். நான்காம் வகுப்பு படிக்கிறான்.  
''சவுத் ஆப்பிரிக்காவில் வசித்து வருவதால் உணவு மற்றும் இதர தேவைகளுக்காக மாதம் 20,000 ரூபாய் செலவாகிறது. கோவில்பட்டியில் வசித்துவரும் மனைவி மற்றும் மகனின் உணவு மற்றும் கல்வித் தேவைகளுக்காக மாதம் 24,200 ரூபாய் செலவாகிறது. வீடு கட்ட வங்கி யில் வாங்கியிருக்கும் 26.5 லட்சம் கடனுக்காக மாதம் 32,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்டி வருகிறேன். இன்னும் 14 ஆண்டுகள் கட்ட வேண்டும். ஏற்கெனவே எடுத்த ஒன்பது இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்காக மாதம் 5,000 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறேன். காருக்கான பெட்ரோல் மற்றும் பராமரிப்புக்காக மாதம் 2,500 ரூபாய் செலவாகிறது.
இது தவிர, ஒரு லட்சம் ரூபாய் சீட்டு இரண்டில் மாதம் 8,000 ரூபாய் சேமித்து வருகிறேன். இன்னும் பத்து மாதங்களில் இந்த சீட்டு முடிந்துவிடும். எனது பெற்றோருக்கு மாதம் 5,000 ரூபாய் கொடுத்து வருகிறேன். ஆக, மொத்தம் மாதம் 96,700 ரூபாய் செலவாகிறது. எதிர்கால முதலீட்டிற்கு மீதமிருக்கும் தொகை 1,03,300 ரூபாய்'' என்று வரவு செலவுக் கணக்கை தந்த விவேகானந்தனுக்கு சில சொத்துகளும் உண்டு.  
''இன்னும் ஓராண்டில் என் மகனது எதிர்காலத் தேவைக்காக சென்னையிலும், குடும்பத் தேவைக்காக கோயம்புத்தூரிலும் வீடு வாங்க வேண்டும். மகனின் கல்விக் கென்று 20 லட்சம் ரூபாய் சேமிக்க வேண்டும். 25 வயதில் நடக்க இருக்கும் அவனது திருமணத்துக்கென்று பத்து லட்சம் ரூபாயைச் சேமிக்க வேண்டும். எனது ஓய்வுக் காலத்தில் மாதம் இரண்டு லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்காக நான் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்'' என்றவருக்கு நிதி ஆலோசனை சொல்லத் தயாரானார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.

இன்ஷூரன்ஸ்!
''ஏற்கெனவே ஒன்பது லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வைத்திருக்கிறார் விவேகானந்தன். இதில் சமீப காலத்தில் எடுத்திருக்கும் ஐந்து இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்துவிடலாம். குறைவான கவரேஜுக்கு அதிக பிரீமியம் செல்வதால்தான் இந்த பாலிசிகளை சரண்டர் செய்யச் சொல்கிறேன்.
மீதமிருக்கும் நான்கு இன்ஷூரன்ஸ் பாலிசிகளோடு, இரண்டு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது. இதற்கு வருட பிரீமியம் 63,500 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும்.
அதேபோல், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து ஐந்து லட்சம் ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துக் கொள்வது அவசியம். இதற்கு வருடம் 11,700 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டி இருக்கும். இந்த இரண்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கும் சேர்த்து மாதம் 6,300 ரூபாய் எடுத்து வைத்தால் போதுமானது.
மகனின் கல்விக்கு..!
மகனை பி.இ. அல்லது எம்.பி.பி.எஸ். படிக்க வைக்க 20 லட்சம் ரூபாயைச் சேர்த்து வைக்க வேண்டும் என்கிறார்.  இத்தொகையைச் சேமிக்க மாதம் 11,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் எட்டு ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். முதலீடு முதிர்வின்போது கிடைக்கக் கூடிய 20.45 லட்சம் ரூபாயை பயன்படுத்தி மகனுக்கு தரமான கல்வியைக் கொடுக்கலாம்.
மகனின் திருமணத்துக்கு!
மகனுக்கு 25 வயதில் திருமணம் செய்து வைக்க 10 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்கிறார். அந்தத் தொகையை சேமிக்க மாதம் 1,500 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் 17 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். முதலீடு முதிர்வின்போது கிடைக்கக்கூடிய 14.10 லட்சம் ரூபாயை பயன்படுத்தி மகனின் திருமணத்தைச் சிறப்பாக முடிக்கலாம்.

வீடு வாங்க..!
இன்னும் ஆறு மாதத்துக்குள் சென்னையிலும், ஒரு வருடத் துக்குள் கோயம்புத்தூரிலும் வீடு வாங்க வேண்டும் என்கிறார்.
வங்கியில் வீட்டுக் கடன் வாங்குவதன் மூலம் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதற்கு ஆரம்பத் தொகை நிச்சயம் தேவைப்படும். தென் ஆப்பிரிக்காவில் செய்யும் வேலை தவிர, இதர வகையில் வருமானம் கிடைத்தாலோ அல்லது மனைவி வேலைக்குச் சென்று வருமானம் வர ஆரம்பித்தாலோ ஆறு மாதத்திற் குள் வீட்டுக் கடன் வாங்கத் தேவையான முன் பணத்தை புரட்டி விட முடியும்.
அந்த முன்பணத்தை வைத்து,  சம்பள அடிப்படையில் சென்னையில் வீடு வாங்க 25 லட்சம் ரூபாயும் (மாத இ.எம்.ஐ. 28,000 ரூபாய் கட்ட வேண்டும் - வட்டி விகிதம் 10.75%), கோவையில் வீடு வாங்க 23 லட்சம் ரூபாயும் (மாத இ.எம்.ஐ. 25,800 ரூபாய் - வட்டி விகிதம் 10.75%) வங்கியில் கடனாகப் பெற முடியும். இந்த இரண்டு கடன்களும் கடன் வாங்கிய நாளிலிருந்து 180 மாதங்களுக்குள் அடைப்பதாக இருக்கும்.

ஓய்வுக் காலத்துக்கு..!
இவரது ஓய்வுக் காலத்துக்கு இன்னும் 13 ஆண்டுகள் இருக் கிறது. அதற்குள் இவர் 2.09 கோடி ரூபாயைச் சேமித்து வைக்க வேண்டும். அப்போதுதான் இந்த தொகையிலிருந்து மாதம் இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும். இன்றிலிருந்து மாதம் 35,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்தால்,  1.68 கோடி ரூபாய் கிடைக்கும்.
தவிர, மகனின் கல்வித் தேவை முடிந்ததும் அதற்காக சேமித்துவந்த தொகை 11,000 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்தால், 9 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
பத்து மாதங்களில் சீட்டு முடிந்துவிடும் என்பதால் அதற்காகச் சேமித்து வந்த தொகையை ஓய்வுக் காலத்திற்காக 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் 12 ஆண்டுகள் முதலீடு செய் தால், 32 லட்சம் ரூபாய் கிடைக் கும். ஆக, ஓய்வுக் காலத்துக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் தொகை 2.09 கோடி ரூபாய் கிடைத்துவிடும்.
இந்த தொகையை 10% வருமானம் கிடைக்கக்கூடிய பாதுகாப்பான முதலீட்டில் போட்டு வைப்பதன் மூலம் மாதம் இரண்டு லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இந்த பணத்தை வைத்துக் கொண்டு நிம்மதியாக இருக்கலாம்.