நேற்று... இன்று... நாளை!
குடும்ப நிதி ஆலோசனை
இன்னும் சில மாதங்களில் குழந்தைக்குத் தாயாகப் போகும் சந்தோஷத்துடனும், குடும்பத்தின் மீதுள்ள அக்கறையுடனும் நம்மிடம் நிதி ஆலோசனைக் கேட்டு வந்தார், சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வரும் அனுராதா (வயது 31). எதிர்காலத்தில் தன் குடும்பத்தைச் சிறப்பாக வழி நடத்திச் செல்ல வேண்டும் என்ற பொறுப்புடன் நிதி ஆலோசனை கேட்டு வந்த இந்தப் பெண் வாசகர் நிச்சயம் வரவேற்புக்குரியவர்.
சென்னையில்
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவரது மாதச் சம்பளம் 80,000
ரூபாய். கணவர் ராஜசேகரின் மாதச் சம்பளம் 41,000 ரூபாய். இதுதவிர, இன்னும்
சில மாதங்களில் வீட்டு வாடகையின் மூலம் 4,000 ரூபாய் வருமானம் வரப்
போகிறது.
''மதுரையில் 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு;
சென்னையில் வசித்துவரும் வீட்டின் மதிப்பு 35 லட்சம் ரூபாய். மதுரையில் 3
லட்ச ரூபாய் மதிப்புள்ள 21 சென்ட் மனை; திருப்பூரில் 10 லட்சம் மதிப்புள்ள
17 சென்ட் நிலம் என சொத்துக்கள் இருந்தும் கடன்களும் அதிகம்'' என்றவர்,
கடன்களை சொன்னார்.
''முதலில் கடனை ஒழித்துக் கட்ட வேண்டும். குழந்தைக்கு
நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும். குழந்தையின் கல்விச் செலவுக்காக 25
லட்சம் ரூபாய் தேவைப்படும்.
திருமணத்திற்கு 25 லட்ச ரூபாய் தேவை. 5 லட்ச ரூபாயில்
கார் வாங்க வேண்டும்; ஓய்வு காலத்தில் மாதம் 50,000 ரூபாய் வருமானம் வருகிற
மாதிரி முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும். இதற்கு நீங்கள்தான் நிதி ஆலோசனை
சொல்ல வேண்டும்'' என்றார்.
இந்தக் குடும்பத்தின் நிதி நிலைமையை அலசி ஆராய்ந்த நிதி ஆலோசகர் பத்மநாபன் விரிவான ஆலோசனையைத் தந்தார்.
''நிறைய வருமானம் வர்றப்ப நிறைய கடன் வாங்கத் தோணும்.
அந்த சிக்கல்தான் அனுராதாவுக்கும். கவலைப் படாதீங்க, கொஞ்சம் கஷ்டப்பட்டா
கடன் தொல்லையில இருந்து ஈஸியா வெளியே வந்துடலாம்.
கடன் அடைக்க..!
''ராஜசேகர் பேர்ல 13 லட்சம் ரூபாய்க்கு வீட்டுக் கடன் இருக்கு. இதுக்காக மாதம் இ.எம்.ஐ. 13,000 ரூபாய் கட்டிட்டு வர்றாரு.
இந்தக் கடனை 2025-ம் ஆண்டு வரைக்கும் கட்டணும். அனுராதா
தன் பேருல 28 லட்சம் ரூபாய்க்கு வீட்டுக் கடன் வாங்கியிருக்காங்க.
இதுக்காக மாதம் 38,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்றாங்க. தொடர்ந்து 10 வருஷம்
இ.எம்.ஐ. கட்டினால் தான் கடன் முடியும். பத்து வருஷம் கட்ற வீட்டுக் கடனை
20 வருஷம் வரைக்கும் கட்டுற மாதிரி வச்சுக்கிட்டா, ஒவ்வொரு மாசமும் 28
ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். இப்படி மிச்சமாகிற 10,000 ரூபாயை 15%
வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில்
அடுத்த பத்து ஆண்டுகள் முதலீடு செஞ்சுட்டு வந்தா 2021-ல் 27.52 லட்சம்
ரூபாய் கிடைக்கும்.
இந்த 27.52 லட்சத்தை 10 வருடங்களுக்கு 15% வருமானம்
தருகிற ஈக்விட்டி ஃபண்டில் போட வேண்டும். அதே சமயத்தில் வீட்டுக் கடன்
தவணைக்கு 28,426 ரூபாயை மேலே போடப்பட்ட ஃபண்டிலிருந்து மாதாமாதம் எடுத்துக்
கட்டி கடனை அடைத்து விடலாம். மீதி இருக்கிற வருமானம் அப்படியே தொடர்ந்தால்
அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2031-ல் கிடைக்கக்கூடிய தொகை 43 லட்சம்
ரூபாயாக இருக்கும். இந்தப் பணத்தை எடுத்து, அடுத்த அஞ்சு வருஷம் 12%
வருமானம் தரக்கூடிய பேலன்ஸ்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், அதாவது
2036-ல் கிடைக்கக்கூடிய தொகை 75.76 லட்சம் ரூபாய்.
இதன் மூலம் மாதம் 75,000 ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும். இந்தப் பணத்தை ஓய்வுக் காலத்துக்குப் பயன்படுத்திக்கலாம்.
இதுதவிர, 10 லட்சம் ரூபாய்க்கு நகைக் கடனும், தனிப்பட்ட
கடன் இரண்டு லட்சம் ரூபாய்க்கும் வச்சிருக்காங்க. தனிப்பட்ட கடனுக்காக
மாதம் 6,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்டிட்டு வர்றாங்க. இன்னும் ஒரு வருஷம்
பாக்கி இருக்கு. இதுபோக 10 லட்சம் ரூபாய்க்கு நகைக் கடன் வாங்கி
வச்சிருக்காங்க. இதுக்காக மாதம் 10,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்டிட்டு
வர்றாங்க. ஏற்கெனவே இருக்கிற மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் சரண்டர்
செய்றதால 7,500 ரூபாய் பிரீமியத் தொகை மிச்ச மாகும். இதிலிருந்து
புதுசாக டேர்ம் பாலிசி தலா 1 கோடி ரூபாய்க்கு எடுத்து மாத பிரீமியம் 3,000
கட்ட வேண்டும். மீதி உள்ள 4,500 ரூபாயுடன் தற்போதைய சேமிப்பான 16,000
ரூபாயிலிருந்து முதலீட்டுக்காக ஒதுக்கியிருக்குற 9,500 போக, பாக்கி
இருக்குற 6,500 ரூபாயையும் சேர்த்து 11,000 ரூபாய் கிடைக்கும். இந்தப்
பணத்தை நகைக் கடன் இ.எம்.ஐ. கட்ட பயன்படுத்திக்கலாம்.
இன்னும் ஒரு வருஷத்துல இந்த நகைக் கடனை அடைக்கணும்னு
சொல்றாங்க அனுராதா. இரண்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்றதால 1.80
லட்சம் ரூபாய் கிடைக்கும். இன்னும் மூணு மாசத்துல கம்பெனி ஃபிக்ஸட்
டெபாசிட்ல போட்டு வச்சிருக்கிற 1.25 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இவை தவிர, கையிருப்பா ஒரு லட்சம் ரூபாய் இருக்கும்.
இந்த வருஷம் கிடைக்குற போனஸ் பணம், கைக்கு வெளியே இருந்து கொஞ்சம் காசு
வரணும்னு சொல்றாங்க. ஆக, எல்லாப் பணத்தையும் சேர்த்து அடுத்த ஒரு வருஷத்துல
நகைக் கடனை நிச்சயமா அடைச்சுடலாம்.''
லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்!
''அனுராதா
தன் பேர்லயும் தன் கணவர் ராஜசேகர் பேர்லயும் மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசி
எடுத்து வச்சிருக்காங்க. இதுக்காக வருஷம் 90,000 ரூபாய் பிரீமியம் கட்டி
வர்றாங்க. இவங்க கட்ற பிரீமியத் தொகைக்கு கிடைக்கக்கூடிய கவரேஜ் வெறும்
ஏழு லட்சம் ரூபாய்தான். அதனால், இதில் ஒரு பாலிசியை சரண்டர் செய்தால்,
75,000 சர்வைவல் பெனிஃபிட் மற்றும் 25,000 ரூபாய் சரண்டர் வேல்யூ
கிடைக்கும். இந்த ஒரு லட்சம் ரூபாயை கார் வாங்கறதுக்கு முன் பணமாக
பயன்படுத்திக்கிட்டு, மீதி 4 லட்சம் ரூபாய்க்கு கார் லோன் வாங்கிக்கலாம்.
இதுக்காக மாதம் 10,300 ரூபாய் இ.எம்.ஐ. கட்ட வேண்டிவரும். இன்னும் ஒரு
வருஷத்துல நகைக் கடன் முடிஞ்சுடும்ங்கறதால நகைக் கடனுக்காக கட்டிட்டு வந்த
இ.எம்.ஐ. 11,000 ரூபாயை கார் லோன் இ.எம்ஐ-க்கு பயன்படுத் திக்கலாம்.
ஏற்கெனவே எடுத்து வச்சிருக்குற இன்ஷூரன்ஸ் பாலிசிகளை
சரண்டர் செய்யுறதுக்கு முன்னாடி தன் பேர்ல ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம்
இன்ஷூரன்ஸ் பாலிசியையும் (வருட பிரீமியம் 16,300 ரூபாய்), ராஜசேகர் பேர்ல
ஒரு கோடி ரூபாய்க்கு இன்னொரு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் (வருட
பிரீமியம் 19,700 ரூபாய்) எடுக்க வேண்டும்.
அனுராதாவும் அவர் கணவரும் தனியா மெடிக்ளைம் எதுவும்
எடுத்து வச்சுக்காம அலுவலகத்துல மட்டுமே எடுத்து வச்சிருக்காங்க. ஒருவேளை
அந்த அலுவலகத்தை விட்டு வந்துட்டா, அந்த பாலிசியால பிரயோஜனமில்லை. எனவே,
குழந்தை பொறந்ததுக்கு பிறகு தனியா மூன்று லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர்
பாலிசி எடுத்து வச்சுக்குறது நல்லது. இதுக்காக வருடம் 6,500 ரூபாய்
பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும்''
குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்துக்கு..!
குழந்தையின் கல்லூரி செலவுக்காக இன்னும் 18 வருஷம் கழிச்சு 25 லட்சம் ரூபாய் வரை வேணும்னு சொன்னாங்க அனுராதா.
அதனால, இன்றிலிருந்து மாசம் 2,500 ரூபாயை 15% வருமானம்
எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்ட்ல 18
வருஷம் முதலீடு பண்ணிட்டு வந்தா, முதிர்வின்போது 27.60 லட்சம் ரூபாய்
கிடைக்கும். இந்த பணத்த வச்சு நல்ல முறையில கல்வியை குடுக்க முடியும்.
24 வருஷம் கழிச்சு செய்யப் போற கல்யாணத்துக்கு 25
லட்சம் ரூபாய் தேவைப்படும் என்கிறாங்க. இதுக்காக மாசம் 1,000 ரூபாயை 15%
வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்ட்ல 24 வருஷம்
முதலீடு செஞ்சுட்டு வந்தா முதிர்வின்போது 28.18 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இதை வச்சு கல்யாணத்தை அமர்க்களமா செஞ்சு முடிச்சிடலாம்.
வெளிநாடுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்கிற
அனுராதாவின் ஆசைக்கு மாதம் 6,000 வீதம் 5 வருடத்திற்கு 12 % வருமானம் தரும்
பேலன்ஸ்ட் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
ஓய்வு காலத்துக்கு..!
அனுராதாவும்,
ராஜசேகரும் 56 வயசுல ரிட்டையர் ஆக ஆசைப்படுறாங்க. ஓய்வு காலத்துல மாசம்
50,000 ரூபாய் வருமானம் போதும்னாங்க. ஆனா, இன்னும் 25 வருஷம் கழிச்சு
பார்க்கும் போது 50,000 ரூபாயை வச்சுகிட்டு குடும்பச் செலவுகளை சமாளிக்க
முடியாது. குறைந்தது 1 லட்சமாவது தேவைப்படும். இதுக்காக மாதம் 5,000 ரூபாயை
12% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சி ஃபைட் மியூச்சுவல் ஃபண்ட்ல 25
வருஷம் முதலீடு செய்துட்டு வந்தா, ஆண்டு கடைசியில 83.63 லட்சம் ரூபாய்
கிடைக்கும். இந்தப் பணத்தை 12% வருமானம் கிடைக்கக்கூடிய பேலன்ஸ்ட் ஃபண்டில்
முதலீடு செய்வதின் மூலம் 75,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இத்துடன்
வீட்டுக் கடனை மாற்றி அமைக்கும் விதத்தில் மேலும் 75,000 ரூபாய்
கிடைக்கிறது. இதை வைத்துக் கொண்டு ஓய்வு காலத்தில் சந்தோஷமாகவே
வாழலாம்! இவர்களுக்கு மேலும் சில வருடங்கள் கழித்து கடன்கள் எல்லாம்
முடிந்து சேமிப்பு கூடும்போது நிதித் திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்வதன்
மூலம் வாழ்க்கை இன்னும் மேம்படும்.