நேற்று... இன்று... நாளை!
குடும்ப நிதி ஆலோசனை
மதுரையில்
உள்ள அரசு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஆறுமுகத்தின் மாதச் சம்பளம் 25,000
ரூபாய். பிடித்தம் போக கைக்கு 12,600 ரூபாய் கிடைக்கிறது. மனைவி கோமதி,
வீட்டு நிர்வாகத்தைப் பொறுப்பாக கவனித்துக் கொண்டு, மதுரையில் உள்ள ஒரு
அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மாதச் சம்பளம் 29,500
ரூபாய். பிடித்தம் போக கிடைப்பது 15,500 ரூபாய். ஆக, குடும்பத்தின் மொத்த
வருமானம் 28,100 ரூபாய்.
''சொத்து என்று பார்த்தால், மதுரையில் இருக்கும் சொந்த
வீடு (மதிப்பு 60 லட்சம் ரூபாய்). மனைவியிடம் இருக்கும் கையிருப்பு தங்கம்
35 சவரன் மற்றும் அவசரத் தேவைக்காக கையிருப்பு ரொக்கம் 10,000 ரூபாய்
இருக்கிறது. எட்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து
வைத்திருக்கிறேன். இதுக்காக மாதம் 4,400 ரூபாய் பிரீமியம் கட்டுகிறேன்.
வீடு வாங்குவதற்காக எட்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கி யிருக்கிறேன். அதற்காக 7,800 இ.எம்.ஐ. கட்டி வருகிறேன்.
5.20
லட்ச ரூபாய் பாக்கி இருக்கிறது. எப்படியாவது இன்னும் 10 ஆண்டுகளுக்குள்
கடனை அடைத்து விட வேண்டும். இதற்கெல்லாம் நீங்கள் யோசனை சொல்ல வேண்டும்''
என்றவரின் குடும்ப நிதி நிலைமையை அலசி ஆராய்ந்து விட்டு, அவருக்கான நிதி
ஆலோசனைகளைச் சொன்னார் சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.
''கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து சம்பாதிக்குற 28,100
ரூபாய் சம்பாத்தியத்துல மொத்தம் 26,200 ரூபாய் செலவாயிடுது. எதிர்காலச்
சேமிப்புக்குன்னு பாக்குறப்ப 1,900 ரூபாய்தான் மிச்சமிருக்கு. இந்தத்
தொகையை மட்டும் வச்சிகிட்டு எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது.
எனவே, இ.எம்.ஐ., இன்ஷூரன்ஸ் போன்றவற்றில் போடப்படும் பணத்தைக் கொஞ்சம்
குறைப்பதன் மூலம் எதிர்காலத் திட்டமிடலுக்குத் தேவையான பணத்தை முதலில்
உருவாக்கணும்.
இதுவரைக்கும் வீட்டுக் கடனுக்காக ஒவ்வொரு மாதமும் 7,800
ரூபாய் இ.எம்.ஐ. கட்டிட்டு வந்திருக்கார் ஆறுமுகம். சமீபத்துல 2.25
லட்சம் ரூபாய் கட்டி, வீட்டுக் கடனை கணிசமாக குறைக்கவும் செஞ்சிருக்கார்.
ஆக, இனிமேல் இவர் கட்ட வேண்டிய இ.எம்.ஐ. 5,300 ரூபாய்தான். இதன் மூலம்
மாதம் 2,500 ரூபாய் மிச்சமாகும்.
கணவன் - மனைவி ரெண்டு பேருக்கும் சேர்த்து அலுவலகத்தில்
ஏற்கெனவே பிடிக்கப்படும் பி.எஃப். பணத்தோடு கூடுதலாக பணத்தைப் பிடிக்கச்
சொல்லி இருப்பதால், 12,000 ரூபாய் பி.எஃப்.க்கு போய்விடுகிறது. இந்தத்
தொகையை பாதியாக குறைச்சா, மாதாமாதம் மிச்சமாகிற 6,000 ரூபாயை எதிர்கால
முதலீட்டுக்கு பயன்படுத்திக்கலாம்.
ஆறுமுகம் தன் பேரிலும் மனைவி குழந்தைங்க பேரிலும்
எக்கச்சக்கமா இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வச்சிருக்காரு. இந்த பாலிசியில
எல்.ஐ.சி. வெல்த் பிளஸ் பாலிசி இன்னும் ஒன்றரை வருஷத்துல முடிஞ்சிடும்
என்கிறதால, அந்த பிரீமியத் தொகையை முதலீட்டுக்காகப் பயன்படுத்திக்கலாம்.
இதுபோக, குடும்பச் செலவுகளை குறைத்தால் மாதம் 2,000 ரூபாய் வரைக்கும்
மிச்சப்படுத்த முடியும். இப்படி எல்லாம் மிச்சமாகும் பணத்தை வைத்து
எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்யலாம்'' என்றவர், அதற்கான திட்டங்களையும்
சொல்ல ஆரம்பித்தார்.
லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்!
''ஆறுமுகம் தன் பேரில் ஐந்து லட்சம் ரூபாய்க்கு 20
வருஷம் பிரீமியம் கட்டுற மாதிரி டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து வச்சிருக்கார்.
டேர்ம் இன்ஷூரன்ஸ் இவரோட ஓய்வு காலம் வரைக்கும் இருந்தாலே போதும். அதனால,
இந்த டேர்ம் பிளானை ரத்து செஞ்சுட்டு, 15 வருடம் பிரீமியம் கட்டுகிற மாதிரி
20 லட்ச ரூபாய்க்கு வேறு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது நல்லது. இந்த
பாலிசிக்கு வருட பிரீமியம் 11,000 ரூபாய் கட்டணும். இதேமாதிரி, ஆறுமுகம்
மனைவி பேருலையும் 15 வருஷம் பிரீமியம் கட்டுகிற மாதிரி 20 லட்சம்
ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கணும். இதுக்கு வருடம் 7,000
ரூபாய் பிரீமியம் கட்டணும்.
இதுபோக, குடும்ப உறுப்பினர் கள் எல்லோருக்கும் சேர்த்து
மூணு லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் பாலிசி (மருத்துவ காப்பீடு)
எடுத்துக்கணும். இதுக்கு வருடம் 14,500 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டி
வரும். ஏற்கெனவே அலுவலகத்துல குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு
மருத்துவ செலவு அனுமதிக்கப்படுவதால் மூன்று லட்சம் ஃப்ளோட்டர் பாலிசி
போதுமானது.
குழந்தைகளின் கல்விக்கு!
இன்னும்
ரெண்டு வருஷத்துல கிருஷ்ணப்ரியாவை பி.எட். படிக்க வைக்க இரண்டு லட்சம்
ரூபாய் தேவைப்படும்ன்னு சொல்றாரு ஆறுமுகம். குறுகிய காலத் தேவைங்கறதால
மாதம் அதிகமா முதலீடு செஞ்சாதான் தேவையான பணத்தை ஈட்ட முடியும். இன்னைல
இருந்து மாதம் 7,000 ரூபாயை 8% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய
ஆர்.டி.யில் 24 மாதங்கள் முதலீடு செஞ்சுட்டு வந்தா முதலீடு முதிர்வின்போது
1.82 லட்ச ரூபாய் கிடைக்கும். இதுபோக மீதி தேவைப்படும் பதினாறு ஆயிரம்
ரூபாய்க்கு பி.எஃப். பணத்திலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
கார்த்திக் சங்கரை பி.இ. படிக்க வைக்க இன்னும் ஏழு
வருஷம் கழிச்சு அஞ்சு லட்சம் ரூபாய் தேவைப்படுங்கறாரு. இதுக்கு இன்னைல
இருந்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட்
மியூச்சுவல் ஃபண்டுல மாதம் 3,400 ரூபாயை ஏழு வருஷம் முதலீடு செஞ்சுட்டு
வந்தா, கல்விச் செலவுக்குத் தேவையான பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கு..!
குழந்தைகளின் திருமணத்திற்கு..!
கிருஷ்ணப்ரியாவின் திருமணத்திற்கு இன்னும் ஆறு வருஷம்
கழிச்சு 20 லட்சம் ரூபாய் தேவைப்படும்ன்னு சொல்கிறார். ஆறு வருஷத்துல 20
லட்சம் ரூபாயை புரட்ட முடியுமான்னு கேட்டா, கொஞ்சம் கஷ்டப்பட்டா முடியும்.
இதற்கு ஆறுமுகம் முதல்ல செய்ய வேண்டியது, ஜீவன் முத்ரா மற்றும்
எ.ல்.ஐ.சி. வெல்த் பிளஸ் பாலிசியைத் தவிர, மற்ற பாலிசிகளை சரண்டர்
செய்யணும். அப்படி செய்தால், சரண்டர் வேல்யூ 1.25 லட்சம் ரூபாய்
கிடைக்கும்.
அந்த பணத்தை 6 வருஷத்துக்கு 12% வருமானம்
எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செஞ்சா 2.89 லட்சம்
ரூபாய் கிடைக்கும். கிருஷ்ணப்ரியாவோட கல்விக்காகச் செஞ்சிட்டு வந்த 7,000
ரூபாய், இன்னும் இரு வருடத்தில் முடிந்துவிடும். அந்த தொகையை பேலன்ஸ்டு
ஃபண்டுகளில் நாலு வருஷம் முதலீடு செஞ்சா 4.62 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இந்த பணத்தையும், ஏற்கெனவே இவர் எடுத்து வச்சிருக்குற ஜீவன் முத்ரா பாலிசி 2017-ல் மெச்சூரிட்டி ஆகுறதால இதன் மூலம் கிடைக்கக்கூடிய
2.25 லட்சத்தையும் சேர்த்து 9.76 ரூபாயை திருமணச்
செலவுக் காக பயன்படுத்திக்கலாம். இதுபோக தேவைப்படும் மீதி பணத்துக்கு
கையிருப்பா இருக்குற தங்கத்தைப் பயன் படுத்தியும், பி.எஃப். மூலம் அஞ்சு
லட்சம் ரூபாய்க்கு கடன் வாங்கியும் திருமணத்தைச் செஞ்சு முடிச்சிடலாம்.
கார்த்திக் சங்கருக்கு 26 வயசுல திருமணம் செய்து
வைக்கணும்னு ஆசைப்படுறாரு. இந்த நேரத்தில கார்த்திக் சங்கர் பி.இ. படிப்பை
முடிச்சு நாலு வருஷம் ஆகியிருக்கும். இந்த இடைப்பட்ட வருஷத்துல வேலைக்குப்
போயி சம்பாதிச்சு அந்த வருமானத்தையும் முதலீடு செஞ்சா கல்யாணச் செலவுக்குத்
தேவையான ஏழு லட்சம் ரூபாயை கார்த்திக் சங்கரே சம்பாதிச்சுடலாம். இதுக்காக
ஆறுமுகம் மனசை போட்டு உருட்டிக்காம இருக்குறது நல்லது.
ஓய்வு காலத்துக்கு..!
இன்றைய நிலவரப்படி தன்னோட ஓய்வு காலத்துக்கு 15,000
ரூபாய் வருமானம் இருந்தா போதும்னு சொல்றாரு. ஆனா, இன்னும் 12 வருஷம்
கழிச்சு குறஞ்சது 50,000 ரூபாயாவது இருந்தாதான் இவரால இன்னைக்கு செய்யுற
செலவுகள் மாதிரியே அன்னைக்கும் செஞ்சு சந்தோஷமா வாழ முடியும். இதுக்கு
இன்னையில இருந்து 1,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி
டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் 12 ஆண்டுகள் முதலீடு செஞ்சா, 4.03
லட்சம் ரூபாய் கிடைக்கும்.
எல்.ஐ.சி.
வெல்த் பிளஸ் பாலிசியை சரண்டர் செஞ்ச பிறகு கிடைக்கக்கூடிய பிரீமியத் தொகை
2,000 ரூபாயை ஓய்வு காலத்துக்காக மாதாமாதம் 15% வருமானம் தரக்கூடிய
ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் 10 ஆண்டுகள் முதலீடு
செஞ்சுட்டு வந்தா 5.57 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதுபோக, பாலிசியை சரண்டர்
செய்யும்போது 70,000 ரூபாய் சரண்டர் வேல்யூ கிடைக்க வாய்ப்பிருக்கு. இந்த
பணத்தை வேறெதுக்கும் பயன்படுத்திக்காம ஓய்வு காலத்துக்காக பேலன்ஸ்டு
ஃபண்டுல முதலீடு செய்யணும். இந்த பணத்துக்கு 12% வருமானம் கிடைச்சா 10
ஆண்டுகள் கழிச்சு 2.17 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
கார்த்திக் சங்கரோட கல்விக்கான முதலீடு முடிஞ்சதும்
3,400 ரூபாயை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் 15% எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி
டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துட்டு வந்தால் 3.04
லட்சம் ரூபாய் கிடைக்கும். இதே மாதிரி கிருஷ்ணப்ரியாவோட கல்யாணத்துக்காக
செய்துட்டு வந்த முதலீடு 7,000 ரூபாயை கல்யாணத்துக்குப் பிறகும் தொடர்ந்து
15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல்
ஃபண்டுல ஆறு ஆண்டுகள் முதலீடு செஞ்சுட்டு வந்தா, முதலீடு முதிர்வின்போது
8.20 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கக்கூடிய
மொத்த முதலீட்டு தொகை 23.35 லட்சம் ரூபாயை மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட்
டெபாசிட்டில் போட்டு வைப்பதன் மூலம் ஆறுமுகத்தோட ஓய்வுகாலத்துல மாதா மாதம்
23,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
இதுபோக, கணவன் - மனைவிக்கு அரசு வேலை என்பதால், இன்னும்
12 வருஷம் கழிச்சு கவர்மென்ட் பென்ஷன் மாதம் 30,000 ரூபாய் கிடைக்கும்.
தவிர, பி.எஃப். பணமும் கிடைக்கும். இந்த பணத்தை எல்லாம் வச்சுகிட்டு ஓய்வு
காலத்துல சந்தோஷமா வாழலாம். வாழ்த்துகள்!